பப்படம்

கன்யாகுமரி மாவட்ட எழுத்தாளர்களில் நான் நாஞ்சில்நாடன் தோப்பில் முமமது மீரான் ஆகியோரின் எழுத்துக்களை படிப்பவர்களுக்கு மூவரும் மூன்று தேசத்தவர்களாகத் தோன்றலாம். நாஞ்சில் மருதம், நான் குறிஞ்சியும் முல்லையும் என்றால் தோப்பில் நெய்தல். இருபது கிலோமீட்டர் நீளமும் பதினைந்து கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்தச் சின்ன நிலப்பகுதியில் எல்லாவகையான நிலங்களும் உண்டு– பாலையைத்தவிர.

இதில் நாஞ்சில்நாடு பண்பாட்டால் அதிகமும் நெல்லைச்சாயல் கொண்டது. எங்கள் பகுதி கேரளப்பண்பாட்டுக்கு உள்பட்டது. தமிழ்நாட்டாரை ஒட்டுமொத்தமாக பாண்டிக்காரர்கள் என்றும் நாஞ்சில்நாட்டுக்காரர்களை அரைப்பாண்டிக்காரர்கள் என்றும் சொல்வோம். பந்தியில் பாயசத்துக்கு முன்னரே ரசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம்.

ஆகவே தமிழ்நாட்டு சினிமா ரசனைக்கும் எங்களுக்கும் ரொம்ப தூரம். எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருமே விளவங்கோடு கல்குளம் வட்டங்களில் பொருட்படுத்தப்படவில்லை. தமிழ் ஞானம் இல்லாமல் சிவாஜி பேசும் வசனம் புரிவதில்லை. எம்.ஜி.ஆரின் குரலே புரிவதில்லை [மயக்கின மரச்சீனிக் கெழங்க வாயில வச்சுகிட்டுல்லா பேசுகான்] பொதுவாக எங்களூர்காரர்கள் இழுத்துப்பேசுவோம். [ எடீ யம்மா, அப்பன் செல்லிச்சூ ,உப்பன் மீனெங்கீ, கெளங்கு கிண்டாண்டாம்] மாறாக தமிழ் சரசரவென போவதாக ஒரு எண்ணம்[ ‘எளவு சாரைப்பாம்பு போன போக்காட்டுல்லாடே பேசுகான்? பாம்பு போச்சு, தடமிருக்குண்ணு அவன் பேசி முடிஞ்சுத்தான் நாம பொறத்தால போயி ஓரோண்ணாட்டு நெனைச்சு எடுக்க வேண்டியிருக்கு].

அத்துடன் எங்களூர் பேச்சில் உவமைகள் அணிகள் நக்கல்கள் மௌன அழுத்தங்கள் அதிகம்.”அண்டி தாங்கினாலும் ஆனைக்க அண்டி தாங்கணும்லே மச்சினா” என்பதுபோல உள்ளூர் பழமொழிகள். ”ஆனைக்கு வடம் வைக்கச் சொன்னா சேனைக்கு தடம் வச்சானாம்” என்பதுபோன்ற சொலவடைகள். எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாக பன்னிப்பன்னிச் சொல்லும் திராவிடத்தமிழ் ருசிப்பதில்லை. ”எளவு அது கொலசேகரத்தில பேண்டுட்டு களியலில ஒண்ணுக்கு போறதுமாதிரி ஒரு விருத்திகெட்ட பேச்சுல்லா”என்றார் என் தமிழாசிரியர் ஞானசொரூபம்.அடித்தொண்டையில் பேசும் கருணாநிதி வசனம் [ஓடினாள் ஓடினாள்…] கேட்டால் ”என்னெளவுக்கு கெடந்து காறுதான்? சுக்குபொட்டு இம்பிடு சூடு வெள்ளம் குடிச்சப்பிடாதா?” என்று கேட்பார்கள்.

எனவே தமிழ் சினிமா எங்களுக்குப் புரியவேயில்லை. அந்த இடத்தை தெலுங்கு டப்பிங் சினிமாக்கள் எடுத்துக் கொண்டன. அவற்றில் வசனம் நல்ல நிதானமாக நிறுத்தி நிறுத்தித்தான் ஒலிக்கும். தெலுங்கில் ஆரம்பத்திலேயே வாயை திறந்து விடுவார்கள்போல. பாதிவசனம் ”பாரப்பா”என்றுதான் தொடங்கும். அதை உள்வாங்கி எங்களூரிலும் ”பாரப்பா”என்று சொல்ல ஆரம்பித்தோம். ”பாரப்பா- நான் ரௌடி- ஆனாலும்- ரொம்ப நல்லவன்-. ஏழைகளை – உதவி செய்வேன்.’ ஒரு சிக்கலும் இல்லை, தெள்ளத்தெளிவு. அத்துடன் அந்தக்கால தெலுங்குப்படங்களில் வசனமே இல்லாத படங்கள்தான் எங்களூருக்கு வரும். நாங்கள் நாகேஸ்வர ராவை அறிந்ததே இல்லை. ராமராவ் பழக்கமில்லை. இங்கே ஓடும் படங்களில் கதாநாயகன் நாயகியுடன் பாட்டு பாடுவான். சண்டை போடுவான். நகைச்சுவை நடிகர்கள் தடுக்கி விழுந்து அடிவாங்குவார்கள். மிச்சம் காட்சிகள் நாலைந்துதான் இருக்கும்.

எங்களூரின் முதல் சூப்பர் ஸ்டார் ‘காந்தராவ்’ தான். அறுபதுகளில் அவரது மாயஜாலப்படங்கள் குலசேகரம், அருமனை, தொடுவட்டி, குழித்துறை ,மார்த்தாண்டம், களியிக்காவிளை அரங்குகளில் ‘செம்மே’ ஓடின. காந்தராவுக்கு பெண்மை மிளிரும் முகம். அதன்மேல் இணைசேரத்துடிக்கும் இரு பூரான்களைப்போல கோடுமீசை. பளபளா அங்கி. அதைவிட பளபளக்கும் கால்சராய். பேசும்போது அவரது வாய் பலவாறாக நெளியும். ‘மணிமகுடம் எனக்கு. கையில் உள்ளது மந்திரவாள். கொடியவனே உன்னை விடமாட்டேன் ‘ பேசி முடித்தபின் சாணியிட்டு முடித்த எருமையின் குதம்போல ஓர் அசைவும் எஞ்சும். புருவங்களால் நடனமிட்டபடியே காதல் வசனங்களைப் பேசுவார்.

காந்தராவுக்கு எங்களூரில் சேனைத்தண்டன் என்று பெயர். அவரது கால்கள் இறுக்கமான சராய்க்குள் சேனைக்கிழங்கின் தண்டுபோல இருப்பதிலிருந்து வந்தது. இரண்டாவது சூப்பர் ஸ்டாரான கிருஷ்ணா. இளைஞர் மத்தியில் ‘லிப்ஸ்டிக்’ கிருஷ்ணா என்று அறியப்பட்டார். கிராமங்களில் ‘நாரங்கா மிட்டாய்’. வாயில் புளிப்பு மிட்டாயை சப்புவதுபோன்ற உதட்டசைவின் காரணமாக.கதாநாயகர்களுக்கு இணையாக புகழ்பெற்றிருந்த ‘டுபான்குயின்’ விஜயலலிதா ‘சூண்டி’ என்று சொல்லப்பட்டார். சூண்டிப்புழு இலையில் இருந்து இலைக்கு தெறித்துச் செல்வதுபொல சண்டைக்காட்சிகளில் பாய்ந்துசெல்வதனால். பெண்களுக்கு வழக்கமாக இருப்பதற்கு மாறாக அவளது இருமுலைகளும் சமமான அளவில் இருப்பதைக் கண்ட எங்கள் ஊர் தேவாசீர்வாதம் புலவர் இட்ட பெயர் ‘சோசலிசம்’.

டப்பிங் படங்கள் அக்காலகட்டத்தில் அதிகமும் புரட்சிதாசன் என்பரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு குத்துமதிப்பாக டப்பிங் செய்யப்பட்டு வரும். தெலுங்கு பொதுவாக படுவேகமாக வாயை அசைத்து பேசவேண்டிய மொழி. ஆகவே ஆடு தழை தின்பதுபோன்ற வாயசைவுக்கு மேல் வசனம் மெதுவாகவே ஓடிப் போகும். பப்படத்தை தின்றபடியே பேசும் வசனம் என்ற பொருளில் டப்பிங் படங்களை ஒட்டுமொத்தமாக பப்படம் என்று சொல்வது வழக்கம். ”மக்கா தொடுவட்டியில என்னலே பப்படம்?”. ”சேனைத்தண்டன் சாதனமாக்கும் அம்மாச்சா… பாம்பு பாடுத பாட்டு கொள்ளாம் கேட்டுதா?”என்ற வசனத்தை பிறர் புரிந்து கொள்வது எளிதல்ல.

இதேபோல எங்களுக்கே உரிய கலைச்சொற்களும் ஏராளமாக இருந்தன. ‘சீலைமாத்து’ என்றால் கற்பழிப்புக் காட்சி. கிருஷ்ணா டூயட் பாடல்களில் தவறாமல் கதாநாயகியின் இரு கால்கள் நடுவே தன் கால்களை நுழைத்து அவளது ஒருகாலை தூக்கி அவள் காலையில் சாப்பிட்டதென்ன என்று முகர்ந்து பார்க்க முயல, அவள் அவர் சாப்பிட்டதை ஊகித்து முகத்தை திருப்பிக் கொள்வாள். இந்த காட்சி இல்லாத போஸ்டரே இல்லை. இதற்கு குலைத்த வாழைக்கு ஊன்றுகோல் நாட்டுவது என்றபொருளில் ‘ஊணுதாங்கு’ என்று பெயர். டூயட் பாடலுக்கு ‘மகர எளக்கம் ‘. இளக்கம் என்றால் தறிகெட்ட துள்ளல். மகரம் என்றால் கார்த்திகைமாதம். அப்போதுதான் நாய்கள் ஒன்றை ஒன்று துரத்தி ஓடும். இதுபின் சுருங்கி ‘எளக்கம்’ ஆகியது

சண்டைக்காட்சிகளுக்கு ‘தொளிசவுட்டு’ . பிற ஊர்களிளில் இல்லாத ஒரு அம்சம் எங்களூர் வயல்களில் உண்டு. சதுப்பு நிலம். சேறு முழங்காலை தாண்டி தொடைவரை ஆழமிருக்கும். அதில் தழை வெட்டிப்போட்டுவிட்டு நிலைதடுமாறாமல் இருக்க நாலைந்துபேர் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு சேற்றை மிதிப்பார்கள். உணர்ச்சி பிரவாகமான உச்சகட்ட காட்சி [பாரப்பா, இவ உன் மனைவி. நீ இவ கணவன். இதுதான் என் கடைசீ ஆசை…] இங்கே ‘துட்டி’ என்று சொல்லப்பட்டது. தெலுங்குப்படங்களில் எவராவது குண்டடிபட்டு நீள்வசனம் பேசி விலுக் விலுக் என துடித்துச் செத்தபடியே சாவார்கள். காக்காய் வலிப்பு என்ற பொருளில் அது ‘சொழலி ‘ என்றழைக்கப்பட்டது. வில்லன்கள் பொதுவாக ‘மீசை’ என்றும் கதாநாயகன் ‘பெய’ என்றும் கதாநாயகி ‘குட்டி’என்றும் சொல்லப்பட்டார்கள். பின்னழகு சக்கை [பலாப்பழம்] என்றும் முன்னழகு பனங்கா.

”எளுத்து நிறுத்தினப்பம் ஒடனே ஒரு நல்ல எளக்கம் மச்சினா. குட்டி நிண்ணு ஆடுதா. சக்கை கொள்ளாம். அப்பம் மீசை கேறிவந்து போட்டான். சீலைமாத்துக்கு அவன் பிடிச்சப்ப பய வந்ததனால ஒரு உசிரன் தொளிசவிட்டு….’ இப்படியே செல்லும் ஒரு கதைச்சுருக்கத்தை இரண்டாவது ஆட்டம் விட்டு நடந்து செல்லும் இருவர் சொல்லக்கேட்டால் பாண்டிக்காரர்களுக்கு பருப்பு கலங்கிவிடும்.

திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்து பாடத்திட்டங்கள் மூலம் எங்களூரிலும் பைந்தமிழ் பாகு காய்ச்சி ஊற்றப்பட்டபோது மெல்ல மெல்ல அடுத்த தலைமுறை ரஜினி,கமல் ரசிகர்களாக ஆனார்கள். தெலுங்குப்படங்கள் மறக்கப்பட்டன. நெற்றி மயிர் தார் போல அசையாமல் ஒட்டியிருக்கும் லிப்ஸ்டிக் கிருஷ்ணா கூலிங்கிளாஸ் தவறி விழாமலேயே அந்தர்பல்டி அடித்து சண்டை போடுவதும், டூயட் பாடலில் காலைத்தூக்கி கதாநாயகன் தோளில் அன்பாக வைக்கும் விஜயலலிதாவின் நளினமும் பழங்கதை. இப்போது அஜித் விஜய் படங்கள் போடப்பட்டு சுவரெல்லாம் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில் கல்யாண வாழ்த்துக்கள் பிறந்தாள் புல்லரிப்புகள்.’மலருக்கு மணமுண்டு! மணத்துக்கு குணமுண்டு!. குணத்துக்கு டென்னிசன்!!! குலத்துக்கு மரிய செல்வி !!!. மணநாள் காண வாழ்த்துகிறோம்!!!!! ‘ போன்ற நெகிழ்ச்சிகள்’. ‘இல்லறச் சோலையிலே நல்லறப்பூக்களிலே மெல்லறத்தேன் குடித்து சொல்லற வாழ்த்துகிறோம்’ போன்ற வாழ்த்துக்கள் கண்ணில் படும்போது எங்களூர் சீரிளமைத்தமிழ் எங்கே போயிற்று என்று ஏங்குவதுண்டு

ஆனால் தமிழை அழிக்க ஆகுமோ தகவிலோரால்? சென்ற நாளில் பேருந்தில் செல்லும்போது ஒருகுரல் ‘மக்கா,லே சினிமாவுக்கு வாறியாலே? பக்கறைக்க புதிய படம் கொள்ளாம்ணு சொன்னானுக”. ”போலே, மனுசன் பாப்பானா அதை? அதுக்கு பேசாம போயி கிளிக்க படம் பாத்தா டான்ஸெங்கிலும் உண்டு…” ”மக்கா லே அவன் கொளுத்துக்க ரசிகனாக்கும்லே. அவன நீ அல்லாம மனியன் விளிப்பானா?”

சுத்தமாக புரியவில்லை என்பதே ஆழ்ந்த பரவசம் அளித்தது. விசாரித்து தெளிவடைந்தேன். தாடைக்கு கீழே சதை தொங்குவதனால் கமலஹாசன் பக்கறை [பை]. எல்லா போஸிலும் கோணலாக நிற்பதனால் ரஜினிகாந்த் கொளுத்து [சுளுக்கு]. மழலை பேசுவதனால் விஜய் கிளி. வாழ்க எந்தமிழர். வாழிய வேணாடெனும் மணித்திருநாடு. வாழிய வாழியவே.

முந்தைய கட்டுரைஇயல் விருது – ஒரு பதில்
அடுத்த கட்டுரைஎஸ்ரா