கோவை வாசகர், கடிதம்

ஒரு கோவை வாசகர்

அன்புள்ள ஜெ வணக்கம்…

ஒரு கோவை வாசகர் என்ற பதிவு வெளியான அன்றே திரு வேலுமணி அவர்களை தொடர்பு கொண்டேன். தாமதமாக பதில் அனுப்பியிருந்தார். அழைத்துப் பேசினேன் தேவையான நூல்களை தருகிறேன் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன்.

விஷ்ணுபுரம் நாவல் வாசிக்க வேண்டுமென்பது நெடுநாள் விருப்பம் என்றார். சந்தித்துக் கொடுத்தேன்.

தன்னுடைய 13வது வயதில் இருந்து வாசித்து வருகிறார். தற்போது 55 வயது நடக்கிறது.  மனம் கவர்ந்த எழுத்தாளர்களுக்கு தனது மகள்களின் உதவியுடன் மின்னஞ்சல் அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்.

தமிழ் இந்துவில் பாலசுப்பிரமணியம் முத்துசாமி அண்ணா கட்டுரைகளைப் படித்துவிட்டு தொடர்புகொண்டு அவர் எழுதிய நூல்களையும் பெற்றிருக்கிறார். எழுத்தாளர் இமயம் அவர்களின் படைப்புகளை படித்து அவர் நூல்களையும் பெற்றிருக்கிறார்.

உங்களுக்கு எழுதிய கடிதத்திற்கு நீங்கள் நிறைய நூல்களையும் கருப்பட்டி கடலை மிட்டாயும் அனுப்பி  இருந்ததில் பெருமகிழ்ச்சி அவருக்கு.

வாசிக்கும் பழக்கம் உள்ள ஒருவரை சந்தித்து பேசிய அனுபவமே அவருக்கு இதுவரை இல்லை. மொழி தெரியாத அன்னிய தேசத்தில் நெடுங்காலம் வாழ நேர்ந்த ஒருவர்  தன் தாய் மொழியை பேசி கேட்ட பரவசம் அவரிடம் இருந்தது.

உங்களை நூல்கள் மூலமாக மட்டுமே அறிந்து இருக்கிறார். உங்கள் இணையதளம் பற்றிய அறிமுகமே இல்லை. அவரின் கைப்பேசியை வாங்கி உள்ளே செல்ல கற்றுக் கொடுத்தேன். இத்தனை காலம் கையிலேயே புதையலை சுமந்தலைந்திருக்கிறேனே இனி தவற விட மாட்டேன் என்றார்.

நாற்பதாண்டுகளுக்கு மேல் தனித்த வாசிப்புத்தவத்தில் ஈடுபட்டு இருந்திருக்கிறார். அதன் பலன்களான நல்ல மொழி சிந்தனத்திறன் அவரிடம் தெரிகிறது. எனினும் குழுவாக நண்பர்களோடு இணைந்து செயல்பட்டிருந்தால் சென்றடைந்து இருக்கவேண்டிய உயரமே வேறு நண்பர்கள் வட்டத்தின் வாசகர்கள் குழுவின் முக்கியத்துவத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

கோவையில் தொடர்ந்து நடக்கும் சந்திப்புகள் நண்பர்கள் பற்றியெல்லாம் கூறினேன். நீங்கள் அடுத்து கோவை வரும்பொழுது அவசியம் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினேன்.

விடைபெற்று தன்னுடைய வாகனத்தில் ஏறி சிறிது நகர்ந்தவர்  வண்டியை நிறுத்தி நீங்கள் எனக்கு ஏதாவது சொத்து வாங்கிக் கொடுத்திருந்தாலும் பணம் கொடுத்து இருந்தாலும் இவ்வளவு மகிழ்ந்திருக்க மாட்டேன் என்று நெகிழ்ந்து  சென்றார்… என்னிடமும் அதே நெகிழ்ச்சி .

மு.கதிர் முருகன்

கோவை

முந்தைய கட்டுரைஅயோத்திதாசரின் அந்தர – அர்த்த வாசிப்பு
அடுத்த கட்டுரைபசுமைக் கொள்ளை