மலையாளப் பாடல்களில் சம்ஸ்கிருதம்

எழுத்தச்சன்

அன்பு ஜெயமோகன்,

நீங்கள் விரும்பும் பழைய மலையாள திரைப்பாடல்களில் நிறைய சமஸ்க்ருத சொற்கள். நீங்கள் அதை மொழி பெயர்த்து தராவிட்டால், தமிழர்களுக்கு சுத்தமாக புரியாது.

ஆனால் புதிய மலையாள பாடல்களில் அங்கிங்கு சில சமஸ்க்ருத சொற்கள் இருந்தாலும், கிட்டத்தட்ட ஒரு சராசரி தமிழனால் புரிந்து கொள்ளும் அளவிற்கு உள்ளன. ஒரு சில மலையாள பாடல்கள் தமிழோ என்று மயங்கும் அளவிற்கு உள்ளன.

இது ஏன்? மலையாளத்தில் தமிழின் தாக்கம் (தமிழில் ஆங்கில தாக்கம் போல) அதிகரிக்கிறதா? அல்லது தமிழர்களுக்கும் (பெரிய சந்தை) புரிய வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படுகிறதா?

நன்றி.

ஸ்ரீராம் 

உண்ணாயி வாரியர்

அன்புள்ள ஸ்ரீராம்,

நீங்கள் சொல்வது உண்மை. அதைப் புரிந்துகொள்ள மலையாள இலக்கிய வரலாற்றை அறியவேண்டும். மலையாளத்தின் படிநிலைகள் என அறிஞர் வகுத்தவை நான்கு.

அ. கொடுந்தமிழ் காலகட்டம். அதாவது ஒரு தனித்தன்மைகொண்ட தமிழ் புழங்கிய காலம். இது பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி வரை.

ஆ, மலையாண்மை காலகட்டம். கொடுந்தமிழ் பல்வேறு பழங்குடிமக்களின் உச்சரிப்புகள் கலந்து மலையாளத்தின் முன்னோடியான ஓர் அரைத்தமிழ் மொழி உருவான காலகட்டம். பதினேழாம் நூற்றாண்டுவரை.

இ. மலையாளம் உருவான காலம். பதினேழாம் நூற்றாண்டு.

பதினேழாம் நூற்றாண்டில் உருவான மலையாளம்  எளிமையானது. நேரடியானது. துஞ்சத்து எழுத்தச்சன் அதன் பிதா. அது மக்கள் மலையாளம். நாட்டார்ப் பண்புகள் கொண்டது. அதை அங்கே நாட்டுபாஷா என்கிறார்கள்.

மலையாண்மைக் காலகட்டத்தில் அந்த மொழிக்கு இணையாகவே கேரளத்தில் இருந்த மொழி இயக்கம் மணிப்பிரவாளம் எனப்படுகிறது. அன்று உயர்குடிகளின் மொழியாக சம்ஸ்கிருதம் இருந்தது. மதம் சார்ந்த படைப்புகளும் சம்ஸ்கிருதத்தில் இருந்தன. சம்ஸ்கிருதமும் மலையாளமும் கலந்த மொழியே மணிப்பிரவாளம். மணிமிடைபவளம் என்று தமிழில் சொல்லப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டே மணிப்பிரவாள இயக்கத்தின் உச்சம்.

வள்ளத்தோள்

குமாரனாசான்

உள்ளூர்

பல்வேறு கூறுகளை ஒருங்கிணைத்துக்கொண்டு மலையாளம் உருவான பின்னர் மணிப்பிரவாளம் மலையாளத்திற்குள் ஓர் செவ்வியல் இழையாக நீடித்தது. அன்றுமுதல் இன்றுவரை மலையாளத்தில் இவ்விரு போக்குகளும் முயங்கியும் முரண்கொண்டும் செயல்படுகின்றன. செவ்வியல்தன்மை மணிப்பிரவாளச் சாயல்கொண்டது. புழக்கமொழி நாட்டுமலையாளத்தில் அமைந்தது.

எழுத்தச்சன் எழுதிய மொழி நாட்டுமலையாளம். அவர் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இருநூறாண்டுகளுக்கு பின் வாழ்ந்த உண்ணாயி வாரியர் எழுதியது மணிப்பிரவாள மலையாளத்தில். இருவரும்தான் மலையாளத்தின் பெருங்கவிஞர்கள்.

நவீன மலையாளம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவானபோது இந்த இரண்டு போக்குகளும் இணைந்து ஓரு நவீன மொழியை உருவாக்கின. அடிப்படையில் நாட்டு மலையாளத்தின் கட்டமைப்பும் கலைச்சொற்கள் மற்றும் அணிச்சொற்களில் சம்ஸ்கிருதமும் நவீன மலையாளத்தின் இயல்புகளாயின.

இன்றைய செய்திகள் புழங்கும் மலையாளத்தை பார்த்தாலே இந்த இயல்பு தெரியும்.”ராஷ்ட்ரபோதத்தின்றே உஜ்வல ப்ரகடனம்” இன்றைய ஒரு செய்தி. இது அப்படியே சம்ஸ்கிருதம், மலையாளமாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதுதான் உயர்மட்ட மலையாளம். மார்க்ஸியக் கட்டுரைகளும் பின்நவீனத்துவக் கட்டுரைகளும்கூட இந்தமொழியில்தான் எழுதப்படுகின்றன. ’உத்தராதுனிகதையுடே விஸ்லேஷணமோ அபநிர்மாணம்?” [பின்நவீனத்துவத்தின் வெளிப்பாடா கட்டவிழ்த்தல்?] ஒரு கட்டுரையின் தலைப்பு. அப்படியே சம்ஸ்கிருதம்.

கலைச்சொல், அணிச்சொல் இரண்டுமே சம்ஸ்கிருதத்தைச் சார்ந்தே உள்ளன மலையாளத்தில். ஆகவே மலையாளத்தின் சிந்தனைச் செயல்பாடும் கற்பனாவாத இலக்கியமும் சம்ஸ்கிருதம் மண்டியவைதான். சிந்தனைத் தளத்திலேயே இரண்டு போக்குகள் உண்டு. இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு, எம்.கோவிந்தன் இருவரும் நாட்டுமலையாளத்தில் எழுதியவர்கள். எம்.கோவிந்தன் நாட்டுமலையாள இயக்கத்தையே நடத்தியவர். ஆனால் கே.சச்சிதானந்தனோ கே.வேணுவோ கடுமையான சம்ஸ்கிருதக் கலப்புமொழியில் எழுதுபவர்கள்.

எம் கோவிந்தன்

 

இ.எம்.எஸ்

 

பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டில் மலையாளத்தில் கற்பனாவாதக் கவிதைகளின் ஒரு காலகட்டம் தொடங்கி இன்றும் நீடிக்கிறது. அதன் மையப்பெருக்கு சம்ஸ்கிருத மணிப்பிரவாளம்தான். ஏனென்றால் முதன்மையாக சம்ஸ்கிருத கற்பனாவாதத்தின் செல்வாக்கு. அடுத்ததாக அணிச்சொற்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்திலேயே இருந்தன. இன்னொன்று உண்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் கேரளத்தில் மொழிக்கல்வியில் சம்ஸ்கிருதக்கல்வி கட்டாயமாக இருந்தது.

கற்பனாவாதக் கவிதைகளிலும் இரண்டு போக்குகள் உண்டு. கற்பனாவாதக் கவிஞர்களில் இடச்சேரி கோவிந்தன் நாயர் போன்றவர்கள் எளிய நாட்டுமொழியில் எழுதியவர்கள். ஜி.சங்கரக்குறுப்பு போன்றவர்கள் சம்ஸ்கிருத மணிப்பிரவாளத்தில் எழுதியவர்கள். முதல் மூவர் எனப்படும் வள்ளத்தோள் நாராயணமேனன், உள்ளூர் பரமேஸ்வர அய்யர், குமாரன் ஆசான் ஆகியோரில் பொதுவாக மணிப்பிரவளச் சாயல் ஓங்கியிருந்தது. ஆனால் குமாரனாசான் நாட்டார்மொழியிலும் வலுவான படைப்புகளை எழுதியவர்.

சினிமாப்பாட்டு என்பது மலையாளத்தின் கற்பனாவாத கவிதை இயக்கத்தின் நீட்சியாக உருவானது. ஆகவே சம்ஸ்கிருத மணிப்பிரவாள மொழியே மைய இடம் வகித்தது. ஆனால் கூடவே நாட்டுமொழியிலும் பாடல்கள் இயற்றப்பட்டன. பொதுவாகச் சொன்னால் வயலார் ராமாவமா மணிப்பிரவாளத்தில் அதிகமாக எழுதியவர். பி.பாஸ்கரன் நாட்டுமொழியில் அதிகமாக எழுதியவர். ஆனால் இருவருமே இரு மொழிகளிலும் எழுதியிருக்கிறார்கள்.

வயலார் ராமவர்மா

பி.பாஸ்கரன்

சென்ற இருபதாண்டுகளில் கேரளத்தில் மலையாளக்கல்வி குறைந்து வருகிறது. மொழிக்கல்வி தளர்ச்சி அடைந்து புழக்கமொழியே போதும் என்னும் நிலை உருவாகிவிட்டது. பேச்சுமொழி மேலெழும்போது கொஞ்சம் கொஞ்சமாக சம்ஸ்கிருதம் மறைகிறது. இன்று பழைய செவ்வியல் படைப்பாளிகளை பாடப்புத்தகங்களில்கூட எவரும் படிப்பதில்லை.

அதுவே சினிமாவில் தெரிகிறது. பொதுவாக எளிமையான பேச்சுமொழியில் பாடல்கள் எழுதப்படுகின்றன. ஆனால் அவ்வப்போது செவ்வியல் மணிப்பிரவாள மொழியும் பாடல்களில் தோன்றுவதுண்டு. ஆனால் அந்த வகையான கதைத்தருணங்கள் மிகக்குறைவு.

இந்த மாற்றம் தமிழிலும் உண்டு. சினிமாப்பாட்டில் இங்கே அச்சுமொழி பயன்படுத்தப்படுவது மிக அரிதாகிவிட்டது. அன்றாடப் பேச்சுமொழியிலேயே சினிமாப்பாடல்கள் எழுதப்படுகின்றன. ஏனென்றால் அச்சுமொழித் தமிழ் இன்றைய தலைமுறைக்கு புரிவதில்லை. ஏனென்றால் அவர்கள் தமிழில் வாசிப்பது குறைவு. தமிழ் அவர்களுக்குப் பேச்சுமொழி மட்டுமே.

ஜெ

கேரளமும் பக்தி இயக்கமும்

முந்தைய கட்டுரைசொல் தெளியா இசை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஸ்டாலின் ராஜாங்கத்துக்கு விருது