பசுமைக் கொள்ளை

அண்ணா,

பாம் ஆயில் உற்பத்தி செய்ய அந்தமான் நிக்கோபார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் அடர் வனப்பகுதிகளை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

தினமணியில் இருந்து

“1993 – 94 இல் இந்தியாவின் சமையல் எண்ணெய் மொத்தத் தேவையில் 97% உள்நாட்டு உற்பத்தியாக இருந்தது போய், இப்போது உலகில் மிக அதிகமாக சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக நமது நாடு மாறியிருப்பதன் காரணம் என்ன? விவசாயத்துக்கான சா்வதேச வா்த்தக நிறுவன (டபி ள்யூ.டி.ஓ.) உடன்படிக்கையின்படி, சோயாபீனைத் தவிர, ஏனைய எண்ணெய்களுக்கு 300% வரை இறக்குமதி வரி விதிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் இறக்குமதி வரியைக் கடுமையாகக் குறைத்து, சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பதை ஊக்குவித்து, உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தியைக் குறைத்துவிட்டோம். இறக்குமதி வணிகா்களின் அழுத்தத்துக்கு உள்ளான ஆட்சியாளா்கள், 1994-இல் தொடங்கி இன்றுவரை நமது விவசாயிகள் எண்ணெய் வித்து பயிரிடுவதை முன்னுரிமை கொடுத்து ஊக்குவிப்பதில்லை.

“பாமாயில் உற்பத்தியாளா்களுக்கு வழங்கப்படும் உத்தரவாத விலை நிா்ணயம், பாரம்பரிய எண்ணெய் வித்து விவசாயிகளுக்கு வழங்கப்படுமானால் அவா்கள் – போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பஞ்சாப் விவசாயிகள் உள்பட – அதிகமான தண்ணீரை உறிஞ்சும் நெல், கரும்பு, கோதுமை சாகுபடியில் இருந்து எண்ணெய் வித்து சாகுபடிக்கு மாறக்கூடும். பாம் விவசாயத் தோட்டங்கள் போல அல்லாமல், லட்சக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு ஊக்கமளித்து மீண்டும் இந்தியா சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படுவதற்கும் அது வழிகோலும்.

பன்னீர்செல்வம் ஈஸ்வரன்

அன்புள்ள பன்னீர்செல்வம்,

ஒற்றை வார்த்தையில் சூழியல் அராஜகம் என்று சொல்லத்தக்க ஒரு செயல்பாடு இது. மலேசியா முதலிய நாடுகள் உலகின் பசுமைச்செல்வம் என்று சொல்லத்தக்க மாபெரும் மழைக்காடுகளை மூர்க்கமாக அழித்து எண்ணைப்பனை விவசாயம் செய்து வருகின்றன. அடர்காடுகள் மேல் எண்ணையைக் கொட்டி தீவைத்து எரித்து மொட்டையாக்கித் தோட்டங்களை உண்டு பண்ணுகிறார்கள். அந்தச் சூழியல் பேரழிவை உலகம் கண்டு வருகிறது. ஆனால் ஒன்றும் சொல்லமுடியாத் நிலை. ஏனென்றால் தனியார் பெருநிறுவனங்கள் அரசுகளை கையகப்படுத்திக் கொண்டு செய்யும் சட்டபூர்வமான கொள்ளை அது.

அதையே இங்கும் செய்ய நினைக்கிறார்கள். இந்த அரசு தனியார் முதலாளிகளின் கையாளாகவே செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கு அவர்கள் அள்ளிக்கொடுக்கும் நிதிக்கு வட்டியுடன் கப்பம் கட்டுவதை மட்டுமே ஆட்சி என இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் மழைக்காடுகள் தொடக்க காலத்தில் சூழியல் எண்ணங்கள் இல்லாத நிலையில் அணைக்கட்டுகளுக்காக கட்டுப்பாடில்லாமல் அழிக்கப்பட்டன. அதன் விளைவுகளை கண்டபின் எழுபதுகளில் இருந்து வனவளம் பேணுவதற்கான நடவடிக்கைகள் வந்தன. படிப்படியாக பல்வேறு சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு வழியாக நம் வனவளம் இன்று ஓரளவு பேணப்படுகிறது. ஆனாலும் சுரங்கத்தொழில் உட்பட பல காரணங்களுக்காக சூறையாடல் தொடர்கிறது. அதற்கு எதிராகவே நாம் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

ரப்பர், எண்ணைப்பனை போன்றவை சூழியல் அழிவுகள். அவை பசுமைப் பாலைவனங்கள். அவை உருவானால் பசுங்காட்டைச் சார்ந்து உருவாகியிருக்கும் சிக்கலான மாபெரும் உயிர்ச்சூழலே அழிந்துவிடும். அழிந்தவற்றை மீட்கவே முடியாது. மெல்லமெல்ல அந்த தோட்டப்பயிர்கள் லாபமில்லாமல் ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவாகி வந்திருக்கும் காடுகளை அழித்து அதிகம் போனால் ஐம்பதாண்டுகள் சிலர் லாபம் சம்பாதிக்கலாம். குமரிமாவட்டத்தில் ரப்பர் தொழில் கண்கூடாக காட்டியிருக்கும் உண்மை இது. மகத்தான மழைக்காடுகள் அழிந்தன. இன்று ரப்பர் லாபகரமான பயிர் அல்ல. ஆகவே வெற்றுமரங்களாக தோட்டங்கள் நின்றிருக்கின்றன. காடு அழிந்து நீர்வளம் அழிந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் எண்ணை உற்பத்திக்கு பல விவசாயங்கள் உள்ளன. கங்கைச் சமவெளியில் உள்ள கடுகெண்ணை, சூரியகாந்தி போன்றவை மிக லாபகரமான எண்ணை வித்துக்கள். குறைவான நீரில் விளைபவை. எண்ணைப்பனை மழைக்காடுகளில் மட்டுமே வளர்வது. இந்தியச்சூழலில் அது லாபகரமாக வளருமா என்று நிரூபிக்கப்படவுமில்லை. நமது மரபான எண்ணை வித்துக்களை ஊக்கப்படுத்தினாலே போதும்.

இந்தத் திட்டம் பொய்யானது. இது எண்ணைப் பனைக்காக அல்ல. மழைக்காடுகளை அழிக்கும் இந்தத்திட்டம் எண்ணை வித்துக்களுக்காக அல்ல. மலேசியா  முதலிய நாடுகளில் நிறுவனங்கள் காடுகளை அழித்து, நூற்றாண்டு வளர்ச்சி கொண்ட மரங்களை வெட்டி விற்று முக்கால்பங்கு லாபத்தை அடைந்த பின்னரே எண்ணைப் பனை விவசாயத்தை தொடங்குகின்றன. எந்த துறைமுகத்திற்கும் சென்று பாருங்கள் மலேசிய மரங்கள்தான் குவிந்து கிடக்கும். நாம் கட்டும் வீடெல்லாம் மலேசிய மரத்தால்தான். இங்கும் இவர்களின் கொள்ளை நோக்கம் மரங்கள்தான்.

அப்பட்டமான சூறையாடல் மட்டும்தான் இது. இதற்கு எதிராக இந்தியாவின் குரல் எழாவிட்டால் நாம் நம் தலைமுறைகளை பலிபீடத்தில் வைக்கிறோம் என்றே பொருள். ஆனால் இங்கே மெய்யான சூறையாடல்கள் மிகத்திறமையாக ஊடகங்களாலேயே மறைக்கப்படுகின்றன.

ஜெ

***

முந்தைய கட்டுரைகோவை வாசகர், கடிதம்
அடுத்த கட்டுரைகுழந்தைகள் தேவையா?