அன்று ஓர் அழகிய நாள். காலையிலிருந்தே ஜெ எங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். புதிய வாசகர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் கதை கட்டுரைகளை விவாதித்துக் கொண்டிருந்தோம். அந்த அழகிய மாலையில் “சின்ன வாக் போய்ட்டு வந்து மீண்டும் தொடரலாம் என்று கதிர் அண்ணா சொன்னார்… “
சின்ன வாக் என்றால் அந்த கேம்ப் ஃபார்மின் நுழைவாயில் வரை என்று துள்ளி குதித்து நடந்து கொண்டிருந்தேன்.
கேட்டை தாண்டி நடந்தார்கள்.. சரி ஏதோ இன்னும் ஒரு ஐந்து நிமிடங்கள் என்று நினைத்தேன். எப்படியாவது ஜெ வின் பக்கத்தில் நடக்கலாம் என்று நினைத்து வேகமாக நடந்தேன். மன்னிக்கவும். ஓடினேன் என்று செல்ல வேண்டும்.. இந்த விக்கிக்கும் ஸ்ரீநிக்கு இன்னொரு சுருள் மண்டை பையனுக்கும் இதே எண்ணம் இருந்திருக்க வேண்டும்.. அவர்கள் என்னை ஜெ வை நெருங்க விடாமல் பாடி கார்டு போல அவருடன் நடந்து கொண்டிருந்தார்கள். இதில் கிஷ்ணன் சார் வேறு… அவர்கள் நடுவில் நுழைந்து ஆசானை நெருங்க நினைத்தபோது விக்கி திரும்பி “இது என்ன ஜென்மம்” என்பது போல் பார்த்தார்.. “ஜெ பேசறது கேக்கல அதான்” என்று சொல்லி சிரித்து வைத்தேன்.
நதி கரை புரண்டு ஓடுவது போல நீண்ட சாலையில் ஜெ நடக்கும் பாவனையில் ஓடிக் கொண்டிருந்தார்.. எனக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. மூன்றாவது ரோ சென்றேன். பார்கவி சின்ன செடி கொடி பூச்சிகளை ஃபோட்டா எடுப்பதில் மும்முரமாயிருந்தார். “என்ன ரம்யா டயர்டா.. அவர பிடிக்க முடியாது. ரொம்ப ஃபார்ஸ்டா போனா டயர்டு ஆகிடுவோம்” என்றார். மூன்றாவது வரிசைக்காரர்களின் மனநிலையில் அங்கு கொஞ்ச நேரம் இருந்தேன். சாலை முடியவே இல்லை.
மேலும் பிந்தி நான்காவது வரிசை தில்லை சாருடன் பேச்சுக் கொடுத்தேன்.. அவர் வாசிப்பு புத்தகம் பற்றி பேசினேன்.. “முடியவில்லை… சார் இப்படினு தெரிஞ்சா ஒரு தண்ணி பாட்டில் எடுத்து வந்திருப்பேன்” என்றேன். “இடைல கடை வந்தா வாங்குவோம்” னார்.. “சார் இங்க கடை இருக்க மாதிரியே தெரில” என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே கடை வந்தது… தண்ணீர் வாங்கி மண்டும் போதே முன்னால் சென்று கொண்டிருந்த கதிர் அண்ணா ஓடி வந்து “ஆசானுக்கு தண்ணி பாட்டல் ஒன்னு” என்றார். “அப்ப ஜெ க்கும் தண்ணி தவிக்குது. அவரும் மனிதப்பிறவி தான்” என்றேன். “அப்படியில்லை.. அவர் தண்ணிய குடுத்தா தான் குடிப்பார்… இல்லைனா மறந்திடுவார். நாமலே குடுத்தா தான் உண்டுன்னு” சொல்லிவிட்டு அங்கு நாங்கள் வாங்கிக் கொண்டிருந்த மாங்காயில் இரண்டை அபேஸ் செய்துவிட்டு அதுவும் ஆசானுக்கே என்று ஓட்டமாக ஓடிவிட்டார்… ‘இவரெல்லாம் மனுஷனா சார்’ என்றேன். கடையில் கூட்டமாக தண்ணீர் மண்டிவிட்டு.. ஒரு மாங்காயை முழுவதுமாக வழிநெடுக தின்று கொண்டே பிற நண்பர்களுடன் பேசிக் கொண்டே சென்றேன். மேலும் நடக்க முடியாது திரும்பி பார்த்தேன்.. பின்னால் நவீனும் நிகிதாவும் வந்தனர். நமக்கு பின்னாடியும் இரண்டு பேரா…ஆஹா… என்று நினைத்து.. ‘நடக்க முடியலைலல’ என்றேன்…
“அப்படியில்ல. எங்களுக்கெல்லாம் இது சாதாரணம். பாவம் பின்னாடி யாரும் தொலைந்து போகக்கூடாதே என்று வருகிறோம்” என்றனர்.
“ரோடு முடிஞ்சு போச்சு… இதுக்கும் மேல எங்க போறாங்க” என்று கேட்டேன்.
“அங்க மலைல ஒரு கோவில் இருக்கு அங்க தான்” என்றார்.
“சும்மா வெளையாடாதீங்க” என்றேன்.
“உண்மையாத் தான்” என்று சொன்ன நவீன்.. “நாங்க முன்னாடி போறோம் கோவிலுக்குள்ள ஆசான் பக்கத்துல இருக்கனும்”னு சொல்லிவிட்டு சட்டுனு ஓடிவிட்டார். நிகிதாவும் அவருடன் ஓடிவிட்டார்.
பின்னாடி சரவணன் மற்றும் பாலாஜி இருந்தார்கள். அவர்களுடன் தான் இறுதியாக இணைந்து பயணத்தைக் கடந்தேன். இருவரும் “என்னங்க ஆரம்பத்துல ஆசான் பின்னாடி ஓடிட்டு இருந்தீங்க… ” என்று நக்கலடித்தனர்.
“சார் நமக்கெல்லாம் வயசாகிடுச்சோ.. மூச்சு வாங்குது” என்றேன்.
“அதுவும் உண்மை தான். 90s கிட்ஸ் னதும் கிட்ஸ்னே இன்னும் நினைக்கக் கூடாது” என்றார்.
“ஆமாம் நமக்கு வயசாகிடுச்சு” என்று ஒரு சாக்கு மண்டைக்குள் வந்து சேர்ந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை. ஏதோ ஓர் கொண்டை ஊசி வலைவில் திரும்பி ஜெ எங்களைப் பார்த்தார். கையில் மாங்காய் வைத்திருந்தார். அது தான் நான் கடைசியாக அவரைப் பார்த்தது… அதற்குப் பிறகு எல்லா படத்தையும் ஃபோட்டோவில் தான் பார்த்தேன்.
அதுவரை திரும்பிப் போவதைப் பற்றிச் சிந்தித்து வந்திருந்தேன். அதன் பிறகு அது என்றோ வாய்ப்பிருக்கும் என்று நினைத்து நடக்கலானேன். போகும் வழியில் ஒரு கொண்டை ஊசி வளைவில் இரண்டு பேர் மல்லாக்க படுத்து மூச்சு வாங்கிக் கொண்டிருந்தனர். வரல. நீங்க போங்க என்ற சொன்ன அவர்களுக்கு ஆறுதல் கூறி தண்ணீர் கொடுத்து உடன் அழைத்துச் சென்றோம்.
ஒரு வழியாக கோவிலை அடைந்தோம். ஜெ ஏற்கனவே வழிபட்டு சென்றுவிட்ட கோவில்… பார்த்து ரசித்தவிட்டுச் சென்ற இயற்கை எழிலையும் ரசித்தோம். இறுதியாகச் சென்ற அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்…
திரும்பும் வழியில் இருட்டு கவ்வி விட்டது. ஏங்க இங்கல்லாம் பேய் இருக்குமாம்னு ஒருத்தர். அதான் ரம்யா இருக்காங்கல்ல பேய் பயந்து ஓடிரும்னு இன்னொருத்தர்… ஒரு பயத்துலயே ஒன்பது மணிக்கு ஃபார்ம் வந்து பார்த்தால்.. வந்த கையோடு மீண்டும் ஜெ உரையாற்றத் தொடங்கி விட்டார்… ஐஞ்சு மணிக்கு டீ பிரேக்குல ஒரு சின்ன வாக்னு சொன்ன கதிரின் முகம் நினைவிற்கு வந்தது மங்கலாக…
வியர்த்து நனைந்து அதிலேயே குளித்து மீண்டும் அவர் முன் உட்கார்ந்தால் களைப்பு நீங்கிவிட்டது… நடு ராத்திரி தூங்கப் போகும் போது ஜெ பேய்க் கதை சொல்லி அனுப்பி வைத்தார்… போகும் போது என்னை அழைத்து “எங்க தூங்கற” என்று கேட்டார்.
“ஜெ மாடில இடம் எங்களுக்கு ஒதுக்கியிருக்காங்க” என்றேன்.
‘சரி அங்க பேய் நடமாட்டம் இருக்கும்’ என்று வித்தியாசமான குரலில் சொன்னார். நான் ‘ஐயோ’ என்றேன்.
‘நீ கவல படாத. இப்ப பாடுனியே அந்தப் பாட்ட பாடு. அது ஓடிடும்’ என்று அறிவுரை கூறினார். அதுவே உகந்த வழி என்பது போன்ற பாவனையில் ‘சரிங்க ஜெ. அப்படியே செய்றேன். குட் நைட்’ என்று சொல்லிவிட்டு தைரியமாக கிளம்பினேன்.
சரி.. தூங்கலாம்னு போனா.. இந்த பார்கவி வந்து ‘ஜெ இன்னும் பசங்க கூட பேசுறார்.. நாமலும் போவமா’ என்றார். அங்க பனில மாடிப்படில திருட்டுத்தனமா உட்கார்ந்து அவரைக் கேட்டோம். அப்பவும் இந்த விக்கி எங்களைக் கண்டு கொண்டு விசித்ர ஜந்துகள் என்பது போல பார்த்தார். ஜெ இரண்டு மணி வரை பேசிக் கொண்டிருந்தார்…
காலையில் எழுந்து பார்த்தால் மீண்டும் இந்த பார்கவி எழுந்து இயற்கையை ஃபோட்டா எடுக்க கிளம்பிக் கொண்டிருந்தார்.. ஆறு மணிக்கு ஜெ எழுந்திரித்திருப்பார் என்று நினைத்து கீழே போய் பார்த்தேன். ஜெ மட்டும் முழுப் போர்வையும் கண் வரை மூடி படுத்திருந்தார். சரி.. அவர் லைட்டா மனிதப் பிறவி தான் என்று ஆறுதல் கொண்டேன். அந்தப் பக்கம் கிஷ்ணன் நாலு பேரோடு பேசிக் கொண்டிருந்தார். நம்மை சேர்த்துக் கொள்வார்களா என்ற தயக்கம் இருந்தது. சரி வெ. மா. சூ. சொ இலக்கியத்தில் எதற்கு என்று அங்கு சென்று ஐக்கியமானேன். கிஷ்ணனிடம் ‘ஜெ காலைல டீ குடிக்க நடந்து போவாறாமே’ என்றேன்.
‘இப்ப நாமெல்லாம் ஜெ எழுந்திரிக்கறதுக்குள்ள பக்கத்துல டீ குடிச்சிட்டு வந்திடுவோம் என்றார்..
‘சரி ஜெ எந்திரிக்கறதுக்குள்ள வந்திடலாம்ல’ என்றேன். கதிரும்.. கிஷ்ணனும் சிரித்துக் கொண்டனர். ‘வந்துடலாம் வாங்க.. ‘ ‘என்ன புத்தகம் படிக்கிறீங்க.. நீங்க வாசிக்கறத விட அதிகமா எழுதுவீங்களோ’ என்று கலாய்த்துக் கொண்டே டீ க்கடையை நோக்கி நடந்தனர். நாம தேவையில்லாம அதிகமா எழுதுறோம் போல கொஞ்சம் குறைச்சிக்கனும் என்று நினைத்தேன். அவர்கள் கலாய்த்தார்கள் என்றே பின்னர் தான் தெரிந்தது. டீக்கடை நல்லவேளையாக மூன்று கிலோ மீட்ருக்குள் வந்துவிட்டது. கிஷ்ணனுக்கு அது நிமித்தமாக வருத்தம் இருந்திருக்க வேண்டும். ‘என்னவாம் குறை பட்டுக்கிறாரே’ என்று சரவணனிடம் கேட்டேன்.. ‘சீக்கிரமா கடை வந்திடுச்சாம் அதான்’ என்று சொல்லி சிரித்தார்..
அட கொல காரப் பாவிகளா!!! என்று நினைத்தேன். திரும்பி வந்து பார்த்தால் ஜெ டிஷ்கஷன் ஆரம்பித்துவிட்டார். இப்ப டீ ரொம்ப அவசியமோனு அவர் திட்டுவது போல இருந்தது அவரின் பார்வை..
ஓட்டமும் நடையுமாக இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை… போகும் போது அனைவர் முகத்திலும் வாட்டத்தைக் கண்டேன். பார்கவி தொட்டாலே உடைந்து அழுது விடுவார் என்று நினைத்தேன்.. எனக்கும் அழுகையாய் வந்தது.. அடக்க வேண்டியிருந்தது.. தவிப்போடே ஜெ கிளம்பும் வரை நின்றிருந்தேன்…
இரண்டு நாட்களாக அவரின் குரலில் வார்த்தைகள் காதை நிறைத்திருந்தது..
என் ஆசிரியரை நான் கண்டு கொண்டேன் என்று நினைத்தேன். அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சியோடே அதே மனநிலையில் இருந்தனர்…
ஐந்து மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. அதற்குள் நீண்ட பொழுதுகள் ஆகிவிட்டது போல இருக்கிறது.
அன்பு ஆசிரியருக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
பிரேமையுடன்
இரம்யா