ஒரு நாளின் டைரி

காலையிலேயே ஒரு அழைப்பு வந்து எழுந்துவிட்டேன். ஒரு நண்பர் ஆசிரியர்தின வணக்கம் சொல்லியிருந்தார். அதன்பின் தொடர்ச்சியாக செய்திகள், மின்னஞ்சல்கள். இத்தனை பேர் ஆசிரியராக எண்ணுவது மகிழ்ச்சிதான். எழுத்தாளன் ஒரு கணக்கில் ஆசிரியன். இந்த வணக்கங்களை என் ஆசிரியர்களை எண்ணி ஏற்றுக்கொள்ளலாம். இது நான் சுந்தர ராமசாமியை, ஆற்றூர் ரவிவர்மாவை, ஞானியை, பி.கே.பாலகிருஷ்ணனை, எம்.கோவிந்தனை எண்ணிக்கொள்ளும் நாள். குருபூர்ணிமாவுக்கு நித்யாவை.

சென்ற பத்துநாளாக ஒரே உளஅலைச்சல். விகடனில் இருந்து நா.கதிர்வேலன் கதை கேட்டிருந்தார். நாலைந்து நாளுக்கு ஒருமுறை நினைவூட்டவும் செய்தார். ஆனால் கதை வரவில்லை. ஐந்து கருக்களை எடுத்து நாலைந்து பத்தி எழுதி அப்பால் வைத்தேன். கருக்களே தோன்றவில்லை. தோன்றி எழுத ஆரம்பித்தால் எழுத எழுத சிறுத்துக்கொண்டே சென்றன. என்னை கொண்டு செல்லாதவற்றை நான் எழுதுவதில்லை. தூக்கி அப்பால் வைத்துவிட்டு சம்பந்தமில்லாமல் வாசித்துக் கொண்டிருந்தேன். H.P.Lovecraft எழுதிய கதைகளை இந்த உலகில் நானன்றி எவராவது வாசிக்கிறார்களா?

H.P.Lovecraft

அதன்பின் கொஞ்சம் மாடஸ்டி பிளெய்ஸ், டின்டின். அதன்பின் கொஞ்சம் மலையாள சினிமா. மலையடிவாரத்தில் சைதன்யாவுடன் நடை. மசால்வடை வாங்கிக்கொண்டு வந்து அதை ரசவடையாக ஊறப்போட்டு சாப்பிடுவது. இப்படியே நாட்கள் செல்கின்றன. தூங்க ஆரம்பித்தால் மனிதனால் பன்னிரண்டு மணிநேரம் தூங்கமுடியும் என்று கண்டடைந்தேன். ஆனால் எழுத முடியவில்லை. ஒரு மாறுதலுக்காக ஒரு கொடூரக்கதைகூட எழுதிப்பார்த்தேன்.

இதே நான் நாளுக்கு ஒரு கதை என மூன்றுமாதம் எழுதியவன். அன்றெல்லாம் கருவே தேவையில்லை. சும்மா அமர்ந்து தட்டச்சிட்டாலே போதும், கதையாகிவிடும். என்ன கதை என்பது எழுதியபிறகுதான் எனக்கே தெரியும். ”ஓ! அதெல்லாம் ஒரு பொற்காலம்’ என்று சொல்லும் நாள் வந்துவிட்டதா? பார்வைக் கோணத்தை மாற்றினால் என்ன? ஒருவேளை முற்போக்காக மாறினால் ஒன்றாம் வகுப்பிலிருந்து மீண்டும் ஆரம்பிக்க முடிந்தாலும் முடியலாம்.

அவ்வளவுதானா? இந்த அச்சமும் பதற்றமும் எத்தனையோ முறை ஏற்பட்டிருக்கின்றன. பெரும் கொண்டாட்டத்துடன், கொந்தளிப்புடன் உடைந்திருக்கின்றன. ஆனாலும் அந்த அச்சம் நீடிக்கிறது. காலையில் எழுந்து அமர்ந்தேன். வழக்கம்போல நினைவுகள் எங்கோ சென்று எதையோ தொட்டுச் சலித்துக் கொண்டிருந்தன. மின்னஞ்சல்களை வாசித்தேன். நாலைந்துநாள் பழைய மின்னஞ்சல்கள்.

நண்பர் ஒருவர் சில சமீபத்தைய காதல்கவிதைகள் சேகரித்து அனுப்பியிருந்தார். ஏற்கனவே பட்டினத்தார் அந்தப்பாணியில் எழுதியிருக்கிறார்.

தோடவிழும் பூங்கோதைத் தோகை உனை இப்போது
தேடினவர் போய்விட்டார் தேறியிரு – நாடி நீ
என்னை நினைத்தால் இடுப்பில் உதைப்பேன் நான்
உன்னை நினைத்தால் உதை.

தமிழின் உச்சகட்ட காதல்கவிதைகளில் ஒன்று இது.

என்னை நினைத்தால்
இடுப்பில் உதைப்பேன்
நான்
உன்னை நினைத்தால்
உதை!

என்ன அற்புதமான புதுக்கவிதை!

சட்டென்று ஓர் எண்ணம். உடனே ஒரு கதை எழுதி பதினொரு மணிக்கு முடித்தேன். நல்ல கதை எழுதி முடித்ததுமே வரும் நிறைவு. மலர்ந்த முகத்துடன் வெளியே கிளம்பினேன். மழைத்தூறல் இருந்தது. ஆகவே மலையடிவாரம் வரை ஒரு நடை சென்றேன். மதியநடை. நடுவே சட்டென்று பளிச்சிடும் வெயில். உடனே கொஞ்சம் மழை. மீண்டும் வெயில்.

பருப்புவடை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தேன். நவரசங்களில் ஒன்பதாவது ரசம் ரசவடை என்பது குமரி மாவட்டத்தினருக்கு தெரியும். ஒருநாள் நிறைவாக முடிந்தது. அதாவது சாப்பிட்டுவிட்டு மதியத்தூக்கம் போட்டால் ஒருநாள். மாலை ஐந்துமணி முதல் இன்னொரு விடியல், இன்னொருநாள். அது வேறு கணக்கு,

ஏன் கதைகள் வரவில்லை? சொல்லத் தெரியவில்லை. ஆனால் எனக்குத் தோன்றிய காரணம் இது. வாழ்க்கையின் துக்கங்கள், கொடுமைகள் பற்றியெல்லாம் எழுதினால் பெரியதாக ஈர்க்கவில்லை. ஏகபட்டது எழுதிவிட்டேன். இன்று மானுட வாழ்க்கையின் மழைவெயிலொளி மட்டுமே இனிதானதாகத் தெரிகிறது. அது மட்டுமே என்னை கொண்டு செல்கிறது.

தன்குறிப்புகள்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைதியானமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும்
அடுத்த கட்டுரை சின்ன வாக் போலாமா? – இரம்யா