கல்குருத்து [சிறுகதை]

“எங்க நாகருகோயிலிலே எல்லாம் இப்டி இல்ல” என்று அழகம்மை சொன்னாள். “வண்டியக் கட்டிக்கிட்டு மைலாடி போனா அம்மியும் குழவியுமா வாங்கிப் போட்டு அந்தாலே கொண்டு வரலாம்.”

“அது இப்பமும் அப்டியாக்கும் அம்மிணியே… வண்டியக் கட்டிட்டு மைலாடிக்கு வாங்க, நாங்களே எடுத்து தாறோம்” என்று கல்லாசாரிச்சி காளியம்மை சொன்னாள். வரிசையான பற்களுடன் அவளுடைய சிரிப்பு அழகாக இருந்தது. “கொண்டு வந்து சேக்க ரெட்டமாடு ஒரு முழுநாளும் இளுக்கணும்லா?”

கல்லாசாரி தாணுலிங்கம் “அம்மிணியே, அது சந்தைக்குப் போயி பசுவையும் குட்டியையும் வாங்கிட்டு வாறது மாதிரியாக்கும். இது நம்ம வீட்டிலே பிறந்த கன்னுக்குட்டி கொம்பும் குலையுமா பசுவா மாறி வயறு தெறண்டு ஈனுகது மாதிரியில்லா?”

அழகம்மை அந்த பாறையைக் கூர்ந்து பார்த்தாள். “இதையா அம்மியாக்கப் போறிய?”

“ஆமா அம்மிணி. நல்ல கருங்கல்லாக்கும். நூறுவருசம் கிடக்கும்.”

அவள் அந்தக் கல்லை அம்மியாகப் பார்க்க முயன்றாள். அது அவள் அங்கே வந்தநாள் முதல் தோட்டத்தில் மாமரத்தடியில் கிடந்தது. உருளை வடிவமான பாறை. அவர்களின் தோட்டமே எங்கிருந்தோ சரிந்து எங்கோ செல்வது போலிருந்தது. கண்ணப்பன் அங்கே எல்லா தோட்டங்களும் ஆற்றை நோக்கி சரிவனதான் என்று சொல்வான்.

“சரிவிலே அந்தாலே ஏறிப் போனாக்க?” என்று அவள் கேட்டாள்.

“மலை வந்துபோடும். தலையிலே மொட்டைப்பாறையை சுமந்துட்டு. பச்சைச்சேலை கெட்டி தலையிலே தயிருபானை வைச்ச இடைச்சியம்மையாக்கும் மலை”

கண்ணப்பன் இரவில் அவளுடன் தனியாகப் பேசும்போது வேறு ஆள். கொஞ்சல் குலாவல் சிரிப்பு எல்லாம் வரும். அவள் கைகளைப் பற்றி விரல்களை சொடக்கு எடுத்தபடியே பேசுவது அவன் வழக்கம். ஆனால் கதவைத்திறந்து வெளிச்சம் பார்த்துவிட்டானென்றால் சீற்றம்கொண்ட நாய் போலத்தான் இருப்பான். “வெந்நி எங்கடி? மாட்டுக்கு வெள்ளம் வச்சியா? மாடசாமி வந்தானா?” என்று அதட்ட ஆரம்பித்தால் அந்திவரை அதுவேதான்

“அம்மிணிக்கு அம்மியப் பாக்க முடியல்ல” என்று காளியம்மை சிரித்தபடி சொன்னாள்.

”இந்த பாறைக்குள்ள அம்மி இருக்கு அம்மிணி” என்றார் தாணுலிங்கம். “கொஞ்சம் கண்ணுநிறுத்திப் பாத்தா தெரியும்.”

“அம்மிணிக்க உடம்புக்குள்ள பூமிக்கு வரப்போற மூணு பிள்ளைகள் இருக்குல்லா, அது மாதிரி” என்றாள் காளியம்மை.

அழகம்மைக்குச் சிலிர்த்தது. அவள் உடல் ஒடுங்குவதுபோல் ஓரு மெல்லிய அசைவு கொண்டது. பொய்ச்சீற்றத்துடன் “உனக்கென்ன சோசியமா தெரியும்?” என்றாள்.

“எல்லா கலைக்கும் உண்டு அதுக்கான சோசியம்” என்றாள் காளியம்மை. “எங்க சோசியம் கல்லுலே…”

அவர்கள் அந்த கல்லை வெவ்வேறு இடங்களில் இரும்புக்கூடத்தால் மெல்ல தட்டித்தட்டி பார்த்தார்கள். அது டங், டக், டண் என வெவ்வேறு ஒலிகளை எழுப்பியது. கல் அவர்களுடன் உரையாடுவது போலிருந்தது.

தாணுலிங்கம் ”அம்மிணி ஒரு மூணு வெத்திலை, ஒருபாக்கு, ஒரணா துட்டு, ஒரு துண்டு கருப்பட்டி கொண்டுவாங்க” என்றார்.

“எதுக்கு?”

“பூசை வைக்கணும்லா?”

அவள் அவற்றைக் கொண்டுபோய்க் கொடுத்தாள். சமையலறையில் ஏகப்பட்ட வேலை மிச்சமிருந்ததை உள்ளே சென்றபோதுதான் உணர்ந்தாள். ஆனால் ஆர்வம் கல்மேல்தான் இருந்தது.

ஒரு வாழையிலையை வெட்டி விரித்து அதன்மேல் வெற்றிலை பாக்கு நாணயம் கருப்பட்டி ஆகியவற்றை வைத்து தாணுலிங்கம் கும்பிட்டார். அழகம்மையும் காளியம்மையும் வணங்கினர்.

காளியம்மை “கல்லுக்குள்ள இருக்குற அம்மி சேதமில்லாம வெளியே வரணும்லா?” என்றாள். “பொம்புளை உடம்பு புள்ளையப் பெத்து குடுக்குத மாதிரியாக்கும்.”

“ஓ” என்று அழகம்மை சொன்னாள்.

“அம்மிணி, இந்தக்கல்லு இப்டி இந்த ரூபத்திலே இங்கிண இருக்கத்தொடங்கி ஆயிரம் லெச்சம் வருசமாகியிருக்கும். அதிலே காலமறியாம குடியிருக்குத தெய்வங்கள் உண்டு. இப்ப அதை நாம ரூபம் மாத்துறோம். அதுக்குமேலே காலதேவனுக்க கண்ணு விளப்போகுது… அதுக்கு நாம கல்லுக்க தெய்வங்கள் கிட்ட மன்னிப்பு கேக்கணும்லா?”

“ஆமா” என்று அழகம்மை சொன்னாள். அவளுக்கு அவர்கள் சொன்னது புரியவில்லை. ஆனால் மீண்டும் சிலிர்த்தது.

கண்ணப்பன் வீட்டு முகப்பில் வந்து நின்று “அங்க என்ன எடுக்குதே? ஏட்டி, உள்ள பாட்டா கிடந்து விளிச்சுகூவுதாரு…” என்றான்.

”இதோ…” என்று அவள் ஓடினாள்.

“சுக்குவெள்ளம் வேணுமாம்… வயசான சீவன்களுக்கு ஒருவாய் சுக்குவெள்ளம் குடுக்க இந்த வீட்டிலே ஆளில்லியா?” என்று அவன் கூச்சலிட்டான்.

“இந்தா குடுக்குதேன்.”

“என்ன குடுத்தே? சத்தம்போட்டு அளுத பிறவுதான் குடுப்பியா?”

“சுக்கு பொடிக்கணும்லா? அம்மி கெடக்குத கெடை அப்டி… அதிலே வச்சு நசுக்குறதுக்குள்ள எனக்க சீவன் போவுது…” என்று அவள் தரையைப் பார்த்துச் சொன்னாள். ஆனால் குரலில் எதிர்ப்பு இருந்தது.

“அதுக்காக்கும் கல்லாசாரியை கூட்டிட்டு வந்தது…”

“செரி அவங்க கொத்திக் குடுக்கட்டு… அதுக்குமேலே சுக்கு நசுக்குதேன்”

“சீ நாயே, எதிர்ப்பேச்சா பேசுதே?”

அவன் கையை ஓங்கிவிட்டான். அவள் நிமிர்ந்து பார்த்ததும் கண்களை சந்தித்து தணிந்தான். “ம்ம்ம்” என்று உறுமியபின் திரும்பி சென்றான்.

அவளுக்கு அழுகை வந்தது. கண்ணீரை முந்தானையால் துடைத்தபடி உள்ளே சென்றாள். அவள் கண்ணீர் விடாத ஒருநாள் கூட இல்லை. என்னதான் தவறு நடக்கிறது?

அம்மா கூட கேட்டாள், போனமுறை வந்தபோது. “ஏண்டி? ஏன் இப்டி இருக்கே? சண்டையா?”

“சண்டை ஒண்ணுமில்லை”

“பின்ன?”

“ஒண்ணுமில்லை”

அதை எப்படி இன்னொருவரிடம் சொல்லமுடியும்? காரணம் இல்லாமல் நாளெல்லாம் சண்டை என்று சொன்னால் என்ன என்று புரிந்துகொள்வார்கள்.

கொல்லைப்பக்கம் ஏசுவடியாள் பாத்திரங்களை விளக்கிக்கொண்டிருந்தாள்.

“சுக்குவெள்ளம் கேட்டாங்களாடி?” என்றாள் அழகம்மை.

“என்னமோ கேட்டாங்க… நான் இங்க கைவேலையா இருந்தேன்”

“சாவாம கிடந்து நம்ம சீவனை வாங்குறாங்க” என்றபடி அவள் குலுக்கையில் இருந்து சுக்கு எடுத்துக்கொண்டு வந்தாள்.

அம்மி மிகப்பழையது. இருநூறு வருடம் பழையது என்று ஏசுவடியாள் சொன்னாள். அவள் சின்னக்குழந்தையாக அங்கே வரும்போதே அது அப்படித்தான் இருந்ததாம். அரைத்து அரைத்துத் தேய்ந்து படகுபோன்ற வடிவில் இருந்தது. அதன் பரப்பு கன்னங்கரேலென்று உருகி வழிந்ததுபோல தெரிந்தது. குழவியின் உருளைவடிவம் மெழுகுபோல கரைந்து குழிவாகியிருந்தது.

தொட்டுப்பார்த்தாலும் மெழுகுதான். கல் என்றே சொல்லமுடியாது. இரவில் கொல்லைப் பக்கம் வந்து பார்த்தால் அங்கே அண்டாவில் தண்ணீர் இருப்பதுபோல அதன் பளபளப்பு தெரியும்.

“இதிலே அரைக்கிறதுக்கு எனக்க மண்டையிலே அரைக்கலாம்…” என்றபடி அழகம்மை சுக்கை அதன்மேல் வைத்தாள். குழவியால் அடித்து அதை உடைத்தாள். குழவி அம்மிப் பரப்பின் மேல் வழுக்கி வழுக்கி உருண்டது. “வெண்ணைச்சேத்திலே சறுக்குத மாதிரி சறுக்குது. அம்மியா இது?”

“உருட்டாதீங்க அம்மிணி… தூக்கி தூக்கி இடியுங்க”

“தூக்கி இடிச்சா எனக்க கையை ராத்திரி அசைக்க முடியாது. நேத்தும் காயத்திருமேனி எண்ணை இட்டு சூடுதண்ணி பொத்திக்கிட்டாக்கும் படுத்தேன்”

ஏசுவடியாள் ஒன்றும் சொல்லாமல் கழுவிய கலங்களுடன் உள்ளே சென்றாள்.

“ராப்பகலா சுக்குத்தண்ணி… இந்த சுக்கெல்லாம் எங்க போவுதோ? நேத்து ஒரு மணங்கு சுக்கு அரைச்சு வைச்சேன். அதை ராத்திரியே கலக்கிக் கலக்கிக் குடிச்சாச்சு” என்று அழகம்மை தனக்குத்தானே சொன்னாள்.

“ரெண்டு பேருக்கும் வயித்திலே அக்கினி இல்ல… வயசாச்சுல்லா?” என்று வெளியே வந்த ஏசுவடியாள் சொன்னாள். “சுக்கு அக்கினியாக்குமே” என்றபடி மீண்டும் கழுவ அமர்ந்தாள்.

“சுக்க கரைச்சு தலையிலே ஊத்தணும்… எரியட்டும்” என்று அழகம்மை சுக்கை அரைத்தாள்.

“அதுக எப்டியும் இந்த வருசமோ அடுத்த வருசமோ தெக்குக் காட்டிலே எரியும்…”

“ஆமா எரியுதுக… என்னைய எரிச்சபிறவுதான் அதுக போவும்.”

சுக்குநீரைக் கொண்டு சென்றபோது கிழவனும் கிழவியும் அதை மறந்துவிட்டிருந்தனர். சுவரைப் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்து கிழக்குப்பக்கம் ஒட்டுத்திண்ணையை அடைந்து அதில் அமர்ந்திருந்தனர். இருவர் மேலும் வெயில் பொழிந்து கொண்டிருந்தது.

அவர்கள் அருகருகே அமர்வதில்லை. கிழவர் அமருமிடத்திற்கு சற்றுத் தள்ளி, அவரைப் பார்க்காதவள் போல இன்னொரு கோணத்தில் திரும்பித்தான் கிழவி அமர்வாள். இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். தொலைவில் இருந்து பார்த்தால் இருவரும் இருபக்கமும் வந்து நின்றிருக்கும் கண்ணுக்குத் தெரியாத எவருடனோ தனித்தனியாகப் பேசிக்கொண்டிருப்பது போலத் தெரியும்.

“பாட்டா சுக்குவெந்நி”

“ஏ?”

“சுக்கு வெந்நி”

“எதுக்கு?”

“கேட்டியள்லா?”

“ஆ…” என்றார் கிழவர். “ஏட்டி நீ கேட்டியாடீ சுக்குவெள்ளம்?”

கிழவி “மாசிமாசத்திலே மானத்திலே மேகம்… பூத்த மரமெல்லாம் என்னெண்ணு விளங்கும்?” என்றாள்

“நீ சுக்கு வெள்ளம் கேட்டியோ?”

“மாசியிலே மளையடிச்சா மாமரத்துக்கு கேடுன்னு சொல்லு உண்டும்”

“ஏட்டி நீ சுக்குவெள்ளம் கேட்டியா?”

“மாசிமளையும் மாட்டுமூத்திரமும் சமம்னு சொல்லுண்டுல்லா?” என்றாள் கிழவி.

அவள் மெல்ல பின்னால் நகர்ந்து உள்ளே சென்றுவிட்டாள். அவர்கள் அப்படித்தான். இருவரும் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒருவர் பேசுவதற்கும் இன்னொருவர் பேசுவதற்கும் சம்பந்தமே இருக்காது. அவ்வப்போது சின்னச்சின்ன சண்டைகள். அதுவும் சம்பந்தமே இல்லாமல் தனித்தனியாக ஒலிக்கும். ஆனால் விழித்திருக்கும் நேரமெல்லாம் அருகருகேதான்.

கண்ணப்பனின் அம்மாவழிப் பாட்டாவும் பாட்டியும். அவன் அப்பாவும் அம்மாவும் அவனுக்கு ஏழு வயதிருக்கும்போதே காய்ச்சலில் அடுத்தடுத்துப் போய்விட்டார்கள்.

திருமணத்தின் போதுதான் அவர்களை அழகம்மை நேரில் கண்டாள். “வாங்க, அம்மைக்கும் அப்பனுக்கும் நமஸ்காரம் பண்ணுங்க” என்று சடங்குசெய்த மூத்தார் அழைத்தார்.

அவர்கள் இருவரையும் தாங்கிக்கொண்டு வந்தனர். கிழவரின் ஊன்றுகோல் கீழே விழுந்தது. “எனக்க தடி, எனக்க தடி” என்று அவர் கைநீட்டி குழறினார்.

அதை எடுக்க எவரோ குனிந்தனர் “அத விடுங்க… இப்ப அது எதுக்கு?” என்றார் தங்கையா நாடார்.

அவர்கள் இருவரையும் அருகருகே நிறுத்தினர். கிழவர் கிழவியை அவள் யார் என்பதுபோல பார்த்தார். அவருடைய தாடை தொங்கி வாய் திறந்திருந்தது.

அவளும் கண்ணப்பனும் குனிந்து கால்தொட்டு வணங்கினர். கிழவரும் கிழவியும் அதைக் கவனிக்காமல் வேறெங்கோ பார்த்தனர்.

“ஆசீர்வாதம் செய்யுங்க… அப்பச்சி”

”ஏ?”

“ஆசீர்வாதம்! ஆசீர்வாதம்!”

ஆனால் அவருக்கு ஒன்றும் கேட்கவில்லை. அந்தச் சந்தடியில் தடுமாறிக் கொண்டிருந்தார். கிழவி திரும்பி வேறொரு பெண்ணை பார்த்து “ஏட்டி நீ கனகால்லா?” என்றாள். “உனக்க அம்மை என்ன செய்யுதா?”

“பாட்டா, ஆசீர்வாதம் செய்யுங்க. உங்க கொள்ளுப்பேரனுக்கு கல்யாணமாக்கும்.”

”ஏ?”

“ஆசீர்வாதம்! ஆசீர்வாதம் செய்யுங்க!”

கரடிநாயர் எரிச்சலுடன் “அந்த கைய எடுத்து குட்டிக தலையிலே வையுங்கடே…அது போரும்” என்றார்

தங்கையா நாடார் “ஆமா, அது போரும்லா?” என்று சொல்லி இருவர் கையையும் தூக்கி அவர்களின் தலைமேல் வைத்தார்.

கிழவரின் கால்களும் கிழவியின் கால்களும் அங்கே நின்ற கால்களில் இருந்து வேறுபட்டிருந்தன. பழைய ஏதோ மரத்தின் வேர்கள் போல தெரிந்தன.

அவள் அப்பால் வந்ததும் எசக்கியம்மைச் சித்தி “அவருக்கு அம்மையும் அப்பனும் இல்லை. வளத்தது இவங்களாக்கும்…” என்றாள்.

அதை ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். அவளுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் அதை அப்பா அவளிடம் முன்பு சொன்னபோது அவள் அதை அவ்வளவு பொருட்படுத்தவில்லை. அவளுக்கு கண்ணப்பனை பிடித்திருந்தது. கருப்பாக, விடலிப்பனை போல உறுதியாக இருந்தான்.

“கண்ணப்பனுக்க அம்மைக்க தாத்தாவும் பாட்டியுமாக்கும் ரெண்டுபேரும்… நல்ல தீர்க்காயுசு உள்ள சோடியாக்கும். அவங்களுக்க ஆசீர்வாதம்னா தெய்வ அருளில்லா?” என்றாள் முப்பிடாதி சித்தி.

“இனி ரெண்டுபேத்தையும் இவளாக்குமே பாத்துக்கிடணும்?” என்றாள் அழகம்மை அக்கா.

“ஆமா, அது புண்ணியமாக்குமே?” என்று முப்பிடாதிச் சித்தி சொன்னாள்.

“நல்ல யோகம்” என்று அழகம்மை அக்கா இடக்காகச் சிரித்தாள்.

வீட்டுக்கு வந்தபிறகுதான் அவள் அது எத்தனை பெரிய சுமை என்று தெரிந்தது. வீட்டில் இரண்டு கைக்குழந்தைகள் இருப்பது போலத்தான். எந்நேரமும் ஓலம் கிளம்பும். எதற்கென்று அவர்களுக்கே தெரியாது. எதாவது வேண்டுமென்று கூப்பாடு போடுவார்கள். போய் கேட்பதற்குள் மறந்துவிடுவார்கள். எதையாவது நினைத்துக்கொண்டு எவரையாவது அழைப்பார்கள்.

அவர்களால் அழகம்மையை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. கண்ணப்பனின் அம்மா செம்பகத்தாள் என்று நினைத்தார்கள். அவள் அம்மா பொன்னம்மை என்று சிலசமயம் நினைத்தார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. கண்ணப்பனின் பாட்டி பொன்னம்மையின் இடைக்கோடு வீட்டில் இருப்பதாக பலசமயம் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவளால் எதையுமே கண்ணப்பனிடம் சொல்லி புரியவைக்க முடியவில்லை. அவன் இரவு பகலாக அலைந்து கொண்டிருந்தான். முச்சந்தியில் ஒரு மளிகைக்கடை, நான்கு வயல்களில் வாழை நட்டிருந்தான், நெல் விவசாயம் தனியாக. நேரமே இல்லை. என்ன சொன்னாலும் எரிந்துவிழுந்தான். அடிக்கப் பாய்ந்தான்.

“நான் இங்க கிடந்து சாவுதேன்… இதுகளை வச்சுகிட்டு என்னாலே ஒண்ணும் செய்ய முடியல்ல” என்று அவள் சொன்னாள்.

“முடியல்லன்னா போயிச் சாவுடி… எனக்கு ரெண்டு கிளடுக கெடக்கு, அதுகள பாத்துக்கிடணும்னு சொல்லியாக்கும் நான் பொண்ணு தேடினது. உனக்க அப்பன் உனக்குப் போட்ட அஞ்சுபவுன் நகைக்காக இல்ல பாத்துக்க” என்று அவன் பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னான்.

அவள் கூசிவிட்டாள். அவள் வீட்டில் அவளுக்கு அன்றாடக் கூலிக்காரர்களைத்தான் மாப்பிள்ளையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பா ஒரு மாட்டுவண்டி வைத்து பிழைப்பை நடத்துபவர். எட்டுஜோடி உழவுமாடும், பத்து எக்கர் வயலும் கொண்ட வீட்டுக்கு ஒற்றை மருமகளாக அவள் வந்தது கண்ணப்பன் பெண் மட்டும் போதும் என்றதனால்தான்.

அவள் கிழடுகளைப் பற்றி கண்ணப்பனிடம் பேசக்கூடாது என்றுதான் நினைப்பாள். ஆனால் எப்போதாவது பேச்சு வந்துவிடும். அவன் கத்த ஆரம்பித்துவிடுவான். “எனக்கு என் பாட்டனும் பாட்டியும்தான் முக்கியம். உனக்கு பிடிக்கல்லேன்னா நீ கொண்டுவந்த அஞ்சு பவனை எடுத்துக்கிட்டு கெளம்பிரு… உன்னைய கெட்டின தோசத்துக்கு உனக்குண்டான செலவுக்கு நான் பணம் தாறேன், போருமா?”

அவளுக்கு கிழடுகள்மேல் எந்த வெறுப்பும் உண்மையில் இல்லை. அவர்கள் இரண்டுபேரும் மலைமாடனும் மாடத்தியும் போல அமர்ந்திருப்பது பார்க்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதை அவனிடம் புரியவைக்க முடியவில்லை.

அவள் அடுக்களைக்குப் போய் மதியத்துக்கு உலை வைத்தபின்னர் வெளியே வந்தாள். முந்தானையால் வியர்வையைத் துடைத்தபடி தெற்குபக்கம் தோட்டத்திற்குள் சென்றாள். அங்கே அந்த பாறையை இரண்டு பக்கமும் உடைத்துவிட்டிருந்தனர்.

“அதுக்குள்ள உடைச்சாச்சா?” என்றாள்.

”உடைக்கிறதுக்கு அஞ்சு நிமிசம்தான் ஆகும். கணக்குப் பாத்து உடைக்கணும்லா, அதாக்கும் இவ்வளவு நேரம்.”

“இப்டி உடைஞ்சு போச்சே”

“கல்லுக்கு ஒரு அடுக்கு உண்டு. அதைப்பாத்து வாக்கா தட்டினா கண்ணாடி மாதிரி பிளந்துவரும்”

தாணுலிங்கம் மெல்ல தட்டுவது போலத்தான் தெரிந்தது. மூன்றாவது பக்கமும் டிப் என்ற ஒலியுடன் பொளிந்து விழுந்தது. கல் சதுரமாக ஆனது. அவள் கண்களுக்கு அம்மி தட்டுபட்டுவிட்டது.

”ஆ, அம்மி!”

“இது அம்மி ஆகிறதுக்கு இன்னும் நெறைய வேலை இருக்கு அம்மிணி”

“குழவி?”

“கொளவியும் இதே கல்லுலேதான்… அம்மை எந்த கல்லோ அதானே பிள்ளைக்கும்?”

அவர்கள் இருவரும் இரு பக்கமாக அமர்ந்து அம்மியை கொத்த ஆரம்பித்தனர். இரு கிளிகள் சிலைப்பொலி எழுப்புவது போலிருந்தது. டிச்! டிச்! டிச்!

கருங்கல் கற்கண்டு சீவல்கள் போல உடைந்து உடைந்து விழுந்தது. அதன் தூள் விபூதி போலிருந்தது.

“எங்க முப்பாட்டனுங்க சிற்பம் செதுக்கினவங்க… இப்ப சிற்பத்துக்கு எங்க ஆளு? இப்டி அம்மிகொத்த எறங்கிட்டமேன்னு ஒரு துக்கம் இருந்தது. எங்க அப்பா சொன்னாரு, ஏலே, அம்மியும் சிற்பம்தானேன்னு. ஒரு கல்லு கோயிலிலே நிக்குது. ஒரு கல்லு தான் தேய்ஞ்சு சமையலுக்கு கூடுது. ரெண்டும் கல்லுக்க கனிவுல்லாடேன்னாரு. அதோட அந்தக் குறை போச்சு.”

ஏசுவடியா வந்து “கறிக்கு வெட்டணும்லா அம்மிணி?” என்றாள்.

அவள் உள்ளே போய் காய்கறிகள் எடுத்துக் கொடுத்தாள். கிழவனும் கிழவியும் வீட்டுக்கு உள்ளே வந்துவிட்டனர். அவர்களின் அறையில் அமர்ந்துகொண்டனர். அங்கிருந்தே “ஏட்டீ இம்புடு குடிவெள்ளம்…” என்றார் கிழவர்.

அவள் கஞ்சிவடித்த தண்ணீரில் கொஞ்சம் நீர் சேர்த்து உப்பிட்டு ஆற்றிக் கொண்டுசென்று கொடுத்தாள். இரண்டு பேருக்குமே அன்னநீர் பிடிக்கும்.

கிழவனும் கிழவியும் பேசிக்கொண்டிருந்தனர். கிழவி பாறைக்காவு பகவதியைப் பற்றி. கிழவர் பாம்பாடிக்கு வேட்டைக்குப் போனதைப் பற்றி. ஆனால் இருவருமே அவ்வப்போது மகிழ்ந்து சிரித்துக் கொண்டார்கள்.

அவள் அவியலும், வெள்ளரிக்காய் புளிக்கறியும் வைத்தாள். கவுச்சி இல்லாமல் கண்ணப்பனுக்கு சோறு இறங்காது. ஆகவே கொஞ்சம் கருவாடு இருந்ததைப் பொரித்தாள்.

கண்ணப்பனுக்கு சாப்பாட்டை கடைக்கு கொடுத்தனுப்ப வேண்டும். அதை பித்தளைப் போணிகளில் வைத்துக் கொண்டிருக்கையிலேயே கடைப்பையன் வந்துவிட்டான். கொடுத்தனுப்பிவிட்டு தாணுலிங்கத்திற்கும் மனைவிக்கும் இலைபோட்டுச் சாப்பாடு போட்டாள்.

“கவுச்சி சாப்பிடுவீகளா?”

“இல்லை அம்மிணி, கையிலே கலையுள்ள கூட்டமாக்கும் நாங்க. உசிருகொன்னு புசிக்கிறதில்லை.”

அவர்கள் சாப்பிட்டுச் சென்றபின் அவளும் ஏசுவடியாளும் அமர்ந்து சாப்பிட்டனர்.

சாப்பிட்டதும் படுக்கும் வழக்கமே அவளுக்கு இல்லை. ஆனால் சென்ற சிலநாட்களாகவே சோறு உள்ளே சென்றதும் உடல் ஓய்ந்து தூக்கம் கேட்டது. கூடத்திலேயே சிமிண்ட் தரைமேல் படுத்தாள்.

தூங்கி எழுந்தபோது வெயில் சாய்ந்துவிட்டிருந்தது. சன்னல்வழியாக வந்த ஒளி நான்கு சதுரங்களாக தரையில் விழுந்துகிடந்தது. தோப்பிலிருந்து எழுந்த காக்கைகளின் ஓசையின் தொனி மாறியிருந்தது.

ஏசுவடியாள் தோசைக்கு அரைத்துக் கொண்டிருந்தாள்.

“பாட்டா விளிச்சாகளாடீ?” என்று அவள் கேட்டாள்.

“ஆமா, தண்ணி கேட்டாக. குடுத்தேன். உறங்கிட்டிருக்குதுக” என்று ஏசுவடியாள் சொன்னாள்.

அவள் முகம் கழுவி வந்தபோது தெற்கே தாணுலிங்கமும் காளியம்மையும் முழு அம்மியை கொத்திக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

“அம்மி சோலி முடிஞ்சுபோட்டே” என்று அழகம்மை வியந்தாள்.

“அம்மிக்க ரூபம் வந்தாச்சு… இனி பரப்பு நேரா ஆகணும். சோலி கிடக்கு” என்றார் தாணுலிங்கம்.

மாடசாமி வந்து நின்றிருந்தான். அவளைக் கண்டதும் தலைமுண்டாசை அவிழ்த்தான்.

அவள் போணிகளைக் கொண்டு சென்று கொடுத்தாள். அவன் தொழுவில் கயிறை இழுத்து கொம்பால் அழிகளை முட்டிக்கொண்டிருந்த பசுவின் கொம்புக்குழியில் கையால் வருடினான். அது நீள்மூச்சு சீறி வால்தூக்கி சிறுநீர் கழித்தது. கன்றை அவிழ்த்துவிட்டான். அது பாய்ந்து அன்னையின் அகிடில் முகம் சேர்த்து முட்டி முட்டிக் குடிக்கத் தொடங்கியது. அதன் கடைவாயில் பாலின் நுரை எழுந்தது. பசு கண்சொக்கி குட்டியை நக்கிக்கொண்டிருந்தது. நக்கப்பட்ட இடத்தில் முடியில் நாவின் தடம் புற்பரப்பில் நீர் ஓடியதுபோல தெரிந்தது.

அழகம்மை அதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் உள்ளம் மலர்ந்துவிட்டது. கண்களை எடுக்க முடியவில்லை.

மாடசாமி பசுவின் அருகே குந்தி அமர்ந்து பால் கறக்க ஆரம்பித்தான். செம்பில் பால் விழும் ஒலி எழுந்தது.

புதுப்பாலை செம்பில் வாங்கிக் கொண்டுசென்று காபி போட்டாள். அதை அவளே கொண்டுசென்று தாணுலிங்கத்துக்கு கொடுத்தாள்.

“புதுப்பால் காப்பியாக்குமே” என்று சொல்லி மலர்ந்து சிரித்தபடி தாணுலிங்கம் கோப்பையை வாங்கிக்கொண்டார். “இவ காப்பி குடிக்கமாட்டா.”

“அப்டியா?” என்றாள் அழகம்மை.

”ஆமா, காப்பின்னா கள்ளுமாதிரின்னு நினைப்பு களுதைக்கு”

காளியம்மை ஒரு உருளைத்தடியில் துணியைச் சுற்றி அதன்மேல் நீலநிறமான மையை ஊற்றிக்கொண்டிருந்தாள். வெட்கத்துடன் சிரித்து “எனக்கு அதுக்க மணம் பிடிக்கல்ல. என்னமோ ஒரு கறைமணம் மாதிரி” என்றாள்.

”அதுக்காக கொண்டுவந்த காப்பிய திருப்பி கொண்டு போகவேண்டாம்… குடுங்க” என்று தாணுலிங்கம் வாங்கிக்கொண்டார். “எப்பவும் இவளுக்க காப்பிய நானாக்கும் குடிக்கிறது.”

“இது எதுக்கு?” என்று அழகம்மை உருளைத்தடியைச் சுட்டிக்காட்டி கேட்டாள்.

”உருட்டுநிரப்பு பாக்கணும்லா?”

“அது என்ன?”

“பாருங்க”

அம்மியின் பரப்பின்மேல் நீலச்சாயம் நனைக்கப்பட்ட துணி சுற்றப்பட்ட உருளைத்தடியை மெல்ல ஒரு முறை உருட்டி எடுத்தார். அதன்மேல் மேடாக இருந்த ஓரிரு இடங்களில் மட்டும் சாயம் பட்டிருந்தது.

“இனி இதை மட்டும் மெதுவா செதுக்கி எடுக்கணும்” என்றார் தாணுலிங்கம்.

அவருடைய உளி மென்மையாக கல்லைத் தொட்டுத் தொட்டு எழுந்தது. அந்த மேடுகள் வெண்ணிறமான தூளாக மாறின.

துணியால் அம்மியை நன்றாகத் துடைத்துவிட்டுக் கைகாட்டினார். காளியம்மை மீண்டும் அந்த நீலத்துணிசுற்றிய உருளையை அந்தப்பரப்பில் உருட்டினாள். இப்போது நீலப்பரப்புகள் கொஞ்சம் கூடுதலாக இருந்தன.

அவர் ஒரு சிறு உளியை எடுத்து மிக மெல்ல தட்டி அந்த நீலப்பரப்புகளை மட்டும் செதுக்க ஆரம்பித்தார்.

“இப்டி செதுக்கினா சமமா ஆயிடுமா?”

”நாலஞ்சுதடவை உருட்டணும் அம்மிணி”

மீண்டும் நீலத்துணி உருளையை உருட்டியபோது நீலப்பரப்புகள் படலம் போல பரவியிருந்தன.

“அம்மி அப்டியே நீலமா ஆகணும்… அப்பதான் சமமா ஆகியிருக்குன்னு அர்த்தம்” என்றார் தாணுலிங்கம். “மேடுகள் ஒண்ணொண்ணா இல்லாமலாகணும்…”

அவள் ”அந்தப் பழைய அம்மியிலே வைச்சு உருட்டினா நீலமா ஆகுமா?” என்றாள்.

”அது ஓடித்தேஞ்சு பளிங்காட்டுல்ல இருக்கு. நெறம் நிக்காது” என்றாள் காளியம்மை.

“ஆமா, மூத்ததும் குருத்து ஆகும்னு ஒரு சொல்லு உண்டு” என்றார் தாணுலிங்கம். “கல்லு அப்டியே எளங்குருத்து மாதிரி ஆயிடும். செம்பனூர் ஜமீன் பங்களாவிலே படிக்கட்டுக்குக் கைப்பிடியா போட்டிருக்கிறது பனந்தடியாக்கும். நல்ல மூத்த பனை. தொட்டா பச்சைப்பிள்ளைய தொட்டதுமாதிரி இருக்கும்.”

ஏசுவடியாள் வந்து நின்று “கருப்பட்டி வேணும்னு கேக்குதாரு பாட்டா” என்றாள்.

“எதுக்கு இப்ப கருப்பட்டி?” என்று அவள் கேட்டபடி எழுந்தாள்

“ஆருக்கு தெரியும்? நினைப்பு வந்திருக்கும், கேக்குதாரு.”

நீலநிற உருளையை மீண்டும் உருட்டினாள் காளியம்மை. அம்மியின் பரப்பு முழுக்க நீலம் பரவி பளபளத்தது.

“குழவிக்கும் இந்த மாதிரி செதுக்கணும்” என்று தாணுலிங்கம் சொன்னார். “ஆனா அதுக்கு பிறவும் அரைச்சா கல்லுகடிக்கும். ஒரு நாலைஞ்சுநாளு உமி வைச்சு அரைக்கணும்… நல்லா பதம் வந்து பாலீஷாகி கிட்டின பிறவுதான் கறிக்கு அரைக்கணும் பாத்துக்கிடுங்க.”

அவள் அம்மியையே பார்த்துக் கொண்டிருந்தாள். என்னவென்றறியாமல் அவளுடைய கண்கள் கலங்கிவிட்டன.

“கருப்பட்டி குடுக்கட்டா?” என்றாள் ஏசுவடியாள்.

“நான் குடுக்குதேன்.”

அவள் கருப்பட்டி எடுத்துக்கொண்டு சென்றாள். கட்டிலில் கிழவர் அமர்ந்திருக்க கிழவி கீழே கால்நீட்டி அமர்ந்திருந்தது.

”கருப்பட்டி கேட்டிகளா பாட்டா?” என்றாள் அழகம்மை.

“ஆ?”

”கருப்பட்டி?”

“ஆமா கேட்டேன்… எனக்கு இல்ல. இவளுக்கு… குடு”

கிழவி ஆவலாகக் கருப்பட்டியை கைநீட்டி வாங்கிக்கொண்டது.

“நாலஞ்சு தடவை கருப்பட்டி கருப்பட்டின்னு பேச்சு வாக்கிலே சொன்னா.., செரி, சவத்துக்கு இனிப்பு ஞாபகம் வந்துபோட்டுது போலன்னு நினைச்சு கொண்டுவரச் சொன்னேன்” என்றார் கிழவர்.

கிழவி “ஆவணி மாசமாக்கும் நாகராஜா கோயிலிலே திருளா… நல்ல கூட்டம்லா?” என்று ஏதோ சம்பந்தமில்லாமல் சொன்னாள்.

அழகம்மை புன்னகைத்தாள். திரும்பி சமையலறைக்குச் செல்லும் போதும் புன்னகைத்துக் கொண்டே இருந்தாள்.

***

முந்தைய கட்டுரைநூலகப்புரவலர் அனுபவம் – கிருஷ்ணன் சங்கரன்
அடுத்த கட்டுரைதேவதேவன் முழுத்தொகுதிகள்- முன்வெளியீட்டுத்திட்டம்