அன்புள்ள ஜெ
விக்ரமாதித்யன் என்ற கவிஞரை விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு அறிவிக்கப்படவில்லை என்றால் எப்போது கண்டடைந்திருப்பேன் என தெரியாது. இதுவரை அவரது மூன்று கவிதை தொகுப்புகளை வாசித்துள்ளேன். உள்ளத்திற்கு மிக நெருக்கமான கவிஞரை ஒருவரை அறிமுகப்படுத்தியமைக்காக உங்களுக்கு என் நன்றியும் மகிழ்வும்.
இந்த கவிதை தொகுப்புகளில் அவரது முதல் கவிதை தொகுப்பான ஆகாசம் நீலநிறம் நூலில் அடங்கியுள்ள கவிதைகளின் மேலான என் வாசிப்புகளை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இத்தொகுப்பின் அவரது கவிதைகளில் கவிஞனின் கைவிடப்பட்ட நிலை, மனுகுலத்தின் மேல் அவன் கொள்ளும் கனிவு, வாழ்க்கை தரிசனங்கள் பல வெளிப்படுகின்றன. குறிப்பாக எந்த இடத்திலும் கசப்புகளே இல்லை. அவர் குறித்து தளத்தில் வரும் கடிதங்களை வாசிக்கையில் தவறாமல் அவரது குடிக்கும் இயல்பு குறிப்பிடப்படுகிறது. இந்த கவிதைகளில் வழியே நான் கண்டடைந்த விக்ரமாதித்யன் உங்களுடைய மாயப்பொன் கதையில் வரும் நேசையனை போல. கனிந்தவர்.
அவரது கவிதைகளின் பாடுப்பொருட்கள், எல்லைகள் என விமர்சன நோக்கில் கூறுமளவு இன்னும் நான் வளரவில்லை. ஆனால் இங்கு வேறு ஒன்றை கூற வேண்டும். அவரது கவிதை பற்றி உரையாடுகையில் ஒரு சொல் எழுந்தது. அவரது காலக்கட்டத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று. அது அவசியமான கூறுகளில் ஒன்றெனினும் முக்கியமானதாக படவில்லை. ஒருவேளை ஒரு இலக்கிய வரலாற்றாசிரியனுக்கும் சமூகவியல் ஆய்வாளனும் அவை முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அழகியல் ரசனையுடன் வாசிப்பவனுக்கு எந்த கவிதையும் தன் காலத்தை விட்டு மேலெழுதாலேயே முக்கியமாகிறது.
சங்க கவிதைகளை நோக்கி போக துடிக்கும் என்னை போன்றவன் வெறுமனே அக்காலத்தை அறிய செல்லவில்லை. என்றுமுள மானுட வாழ்க்கையின் தொன்மையான அழகியலையும் தரிசனத்தையும் அறியவே செல்கிறான்.
விக்ரமாதித்யன் அவர்களை நம் பண்பாட்டின் கவிஞன் என்றே குறிப்பிட தோன்றுகிறது. ஏனெனில் அவரது கவிதைளில் ஆழ்ந்து செல்ல இந்திய தமிழ் பண்பாட்டின் வாழ்க்கை புலத்தில் வாழ வேண்டியுள்ளது. இன்றைய உலகளாவிய நுகர்வின் அடிப்படையிலான பொது ரசனைக்கு முன் நம் கவிஞர் என பெருமிதமாக விகர்மாதித்யனை முன்வைக்கலாம்.
விக்ரமாதித்யன் அவர்களுக்கு விருது பெறுவதற்காக அன்பு கொண்ட வாசனாக வாழ்த்து கூறுகையிலேயே அவரது பாதம் பணிந்து ஆசியும் வேண்டுபவன் நான்.
ஆகாசம் நீலநிறம் தொகுப்பில் உள்ள ஏராளமாக கவிதைகள் எனக்கு பிடித்திருந்தாலும் எழுதுமளவுக்கு நெருங்கி அமைந்த கவிதைகளின் மேலான என் வாசிப்பை பகிர்கிறேன். இவை முழுக்க சரியானவையா என்பதில் எனக்கு சற்று ஐயமும் உள்ளது.
இவையே நிறைய கவிதைகள் என்பதில் ஐயமில்லை. அதற்காக பொறுத்து கொள்ளவும். இறுதியாக கடல் என்ற தலைப்பின் கீழ் உள்ள குறுங்கவிதைகளை குறித்து சில எண்ணங்கள்.
இந்த கவிதைகளை வெவ்வேறு புகைப்படங்களை இணைத்து புதிய காட்சிகளை உருவாக்குவது போல வாசிக்க முடிகிறது. தனித்தனியாகவும் சேர்த்தும் வாசிக்கையில் புதுப்புது வாசிப்புகள் கிடைக்கின்றன.
இந்தியக் குழந்தைகள்
குழந்தைகள் சினிமா
குழந்தைகள் இலக்கியம்
குழந்தைகள் தினமெல்லாம்
எந்தக் குழந்தைகளுக்கு?
இவன் பார்த்த குழந்தைகளுக்கு
நேற்றைய வாழ்க்கைதான்
இன்றைக்கும் நாளைக்கும்
எதிர்காலத்தில் மட்டும்
என்ன அற்புதம் நிகழ்ந்துவிடும்?
ஓட்டுப்போட மட்டும்
உரிமை கிடைத்திருக்கும்
இவனைப் போல
அப்போதும்
அவர்கள் கனவில் வருகிறதெல்லாம்
வண்ணத்துப்பூச்சிகளாக அல்லாமல்
சோற்றுப்பருக்கைகளாகத்தான் இருக்கும்.
நம் குழந்தைகளுக்கு என்றாவது சோறின் அருமை புரிந்திருக்குமா என்ற கேள்விக்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. பள்ளியில் செங்கல்சூளையில் இருந்து வரும் பிள்ளைகள் மட்டுமே பெரும்பாலும் அந்த மதிய உணவை முழுதாக உண்பர். அவர்களுக்கு தெரியும் உணவென்றால் என்னவென்று.
இந்த கவிதையை வாசிக்கையில் இணையாகவே உங்கள் கட்டுரை ஒன்றில் வாசித்த தேவதேவனின் யாரோ என்று எப்படி சொல்வேன் என்ற வரி நினைவில் எழுந்தது ஜெ. கவிஞன் மானுட அறத்திற்கு எழுந்த உயர் தருணம். ஓட்டுப்போட மட்டும் எத்தனை கூர்மையான சொற்கள். நாம் ஒரு தேசமாக அந்த குழந்தைகளின் வண்ணத்துப்பூச்சிகளை என்றென்றைக்குமாக நசுக்கியவர்கள். சினிமா, இலக்கியம், தினம் இவையெல்லாம் யாருக்காக ? இது நம் மனசாட்சியை துளைக்கும் வாள். எதிர்காலத்தில் மட்டும் என்ன அற்புதம் நிகழ்ந்துவிடும்? கையறு நிலையில் கண்ணீரோடு நிற்கிறேன்.
எதிர்பார்ப்பு
நாய் மட்டும் வாலாட்டாவிட்டால்
நாமதற்கு
ரொட்டித்துண்டு போடுவோமா ?
விக்ரமாதித்யனின் கவிதைகள் நெருஞ்சி முள் போல குத்தும் போது பெரிதாக வலிப்பதில்லை. ஆனால் நெடுநாட்கள் நமக்குள் இருந்து ஊமை வலி தருபவை என்று வாசகர்களில் ஒருவர் கூறியிருந்தார். அது எனக்கு இக்கவிதையில் நிகழ்ந்தது.
நாம் தான் எத்தனை கயமைவாதிகள். எதையாவது எதிர்ப்பார்ப்பில்லாது செய்ய முடியுமா நம்மால் ? அது உலகியலோ, ஆன்மீகமோ எங்கும் நமக்கு ஏதோ ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. எதிர்ப்பார்ப்பில்லாமல் ஆவதும் மனிதன் உருவாக்கி கொண்ட இலட்சிய எதிர்ப்பார்ப்பு. அந்த இலட்சியம் எத்தனை அருகாமையிலும் தொலைவிலும் உள்ளதென்றால் தெருவில் இறங்கி நாய்களை பார்த்தால் போதும். பழகி விட்டுசென்று பலநாள் கழித்து வருகையிலும் நாய்களின் நேசத்தை காணலாம். அது எதற்காவும் அல்ல, நாமிருக்கிறோம் நண்பா என்பதாக.
பார்வை
தன்னின் சிகரெட் நுனி
விரல்களில் சுட…
எதிர்நிற்கும் சிநேகிதனின்
முக்கால் சிகரெட்
விழிகளில் பட…
காலத்தில் இருந்து வெட்டியெடுத்தவை காலமின்மையை, அதன் வடிவான முடிவின்மையை கொண்டு விடுகின்றன இந்த கவிதை போல். ஒரு எளிய வாசிப்புக்கு பொறாமை என்று தோன்றலாம்.
ஆனால் செயல் என்று இயற்றும் அத்தனையும் எவ்வகையிலோ புகையும் சிகரெட்டுகள் தான். என்றோ ஒரு நாள் காற்றில் கரைபவை. உடன் நம்மையும் கரைப்பவை நம்முடையவை தீரும்போது நேசத்திற்குரியவருடைதை வாங்கி வாழ விழைவு கொள்கிறோமோ!
வாழ்க்கை
பறத்தல்
சந்தோஷமானது
ஆனால்
பட்டுப் பூச்சிகள்
மல்பரி இலைகளில் தூங்கும்.
வாழ்க்கை என்ற தலைப்பிட்ட கவிதை அதை குறித்த கூற்று போல் உள்ளது. இந்த வரிகளை சாமனியனும் சாதனையாளனும் என்று விரித்தால் எல்லோருக்குள்ளும் பறக்கும் விழைவு உள்ளது, சிலரில் வெளிப்படுகிறது என உணர்த்துகிறது.
அல்லது இப்படியும் வாசித்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நம் ஆழத்து நிறைவேறா விழைவுகளுக்கும் அதற்கு மாறாக அமைந்த இயல்புகளுக்கும் ஆன முரணோ என்று.
சிதைவுகள்
நண்பா,
என்னைக் காயப்படுத்தாதவர்கள்
இங்கே யார்தான் இருக்கிறார்கள்?
குழிமுயல் மீது
கல்லெறிந்து விளையாடாத
சிறுவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
வண்ணத்துப் பூச்சியின்
இறக்கைகளைப் பிய்த்து
வேடிக்கை பார்க்காமல்
வளர்ந்த மனிதன் எங்கேயிருக்கிறான்?
மரமேறி
பறவை முட்டைகளைத் திருடியெடுத்து
விளையாடுவது
சிறுபிராயத்து சந்தோஷங்கள் இல்லையா?
நண்பா,
எனது கவிதைக் கனவுகளைத் தீய்த்தவர்களை
நான் என்ன செய்ய முடியும்?
லௌகிக வாழ்க்கை நெருக்கடியில்
மனசின் பாஷையை
யார் புரிந்துகொள்ளப் போகிறார்கள்?
மருந்துக்காக
இறகுகளுக்காக
மயில்களைக் கொல்பவர்கள்தாம் எப்போதும்
மண்ணில் ஜெயிக்கிறார்கள் இல்லையா?
என்ன செய்யலாம்?
வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள
ஆத்மாவை தொலைத்துவிடலாமா?
ஞானமும் கல்வியும் தேவையில்லாத
இந்த மிலேச்ச தேசத்தில்
எப்படித்தான் வாழ்வதாம்?
நண்பா,
இனிமேல்
எந்த சூரியசந்திரன்
என்னைப் பூக்கவைக்கும்?
எனக்கில்லை
என் சந்ததிக்கேனும்
–தப்பித்தல் அல்லாமல்–
விடுதலை எப்போது பூக்கும்?
கவிஞனின் துயரம் என்பது ஒரு பண்பாட்டின் ஆதாரமான நுண்ணுள்ளத்தின் துயரம். அவன் வாழ்வு சரியில்லை என்பது இங்குள்ள வாழ்வில் சிறப்பில்லை என காட்டுவது. எங்கோ அது நம் ஆழத்து துயரமும் கூட. நம் துயர்கள் நமக்கு தெரிந்திருக்க வேண்டுமென்பதில்லை. சாமனிய இந்தியனின் வாழ்வில் நிறைவை காண்பதில்லை. எங்கோ அவனுக்கு அளிக்கப்பட வேண்டிய பண்பாட்டு கல்வி இல்லை. இந்த கவிதை ஏதோ ஒருவகையில் இதே தொகுப்பின் முதல் கவிதையான சுதந்திர இந்தியாவை நினைவூட்டுகிறது.
குழிமுயலை அடித்தல், வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கையை பிய்த்தல், பறவை மூட்டைகளை திருடுதல் முந்தைய தலைமுறைகளின் சிறுவர்களில் பெரும்பாலனோர் செய்தவை. நானே கூட அவற்றை கண்டவன், சிலதை செய்தவன். அறியாமையின் பருவத்தில் செய்யும் மூன்றையும் கூறி தன் கனவுகளை தீய்த்தவர்களை அவர்களுக்கு ஒப்பு காட்டுகையில் ஒரே வீச்சில் கவிஞனின் துயரம் கனிவும் வந்து முகத்திலறைகிறது. அடுத்த வரிகளில் மயில் சுடுபவனை சுட்டி அதற்கடுத்தே அத்மாவை தொலைத்துவிடவா? கல்வியும் ஞானமும் தேவையில்லாத இந்த மிலேச்ச தேசத்தில்? வரும் வரிகளில் அவன் கோபமும் எந்த சூரியசந்திரன் என்னை பூக்கவைக்கும்? என்ற கையறு நிலையும் சோகம் எனக்கில்லை என் சந்ததிக்கேனும் என்ற வரிகளில் கனிந்த பெருந்தந்தையின் சோகத்தையும் ஆவலையும் மனதில் ஏற்றிவிடுகிறது.
நண்பா எனும் விளியில் நம் உளத்திற்கு அருகமர்ந்து தன் சோகத்தை சொல்லும் கவிதை இறுதியில் தன் நிலத்தின் பெருஞ்சோகத்தை அடைந்துவிடுகிறது.
வெறுமை
தேரோடும் வீதியிலே
தினம் தினமும்
நாய்களும் பன்றிகளும்
எருமை மாடுகளும்
மொட்டை வண்டிகளும்
இரவு வேளையில்
தடிக் கழுதைகளும்
எப்பவுமே
ரசனைகெட்ட மனிதர்களும்
போவது வருவதை
பார்த்துச் சலித்துப்
பல வருஷமாச்சு
அந்த தேர் வீதியில் இருந்த நாய்களும் பன்றிகளும் எருமை மாடுகளும் தடிக் கழுதைகளும் அங்கு வாழ்ந்த மனித ஜாதிகளாக கூட இருக்கலாம்.
ஆனால் அவைகளை அவைகளாக கற்பித்து கொண்டாலும் நன்றாய் இருக்கிறது. இந்த கவிதை இயக்கமின்மையை தான் நாம் வெறுமை என்று உணர்கிறோமா என எண்ணச் செய்கிறது. வீடுகளோ, தேரோ, அது நிற்கும் கோயிலோ அல்ல, அங்கு நிகழும் வாழ்வியக்கம் தான் வெறுமையை நிரப்புகிறது என தோன்றுகிறது.
சுவடுகள்
போனவருஷச் சாரலுக்கு
குற்றாலம் போய்
–கை(ப்) பேனா மறந்து
கால்(ச்) செருப்பு தொலைந்து–
வரும் வழியில்
கண்டெடுத்த
கல் வெள்ளிக்
கொலுசு ஒண்ணு
கற்பனையில் வரைந்த
பொற்பாத சித்திரத்தை
கலைக்க முடியலியே இன்னும்
குற்றாலநாதன் கூற்றனை சுட்டெரித்த புராணகதையை உடனழைத்து கொண்டு இந்த கவிதையை வாசித்தால் வித்தியாசமான ஒரு பொருள் வருகிறது. கைப்பேனா மனமென்று கால் செருப்பு உடலென்றும் இரண்டும் வழி மறந்து சென்ற வழியில் தான் காலத்தை கடந்த கல் வெள்ளி கொலுசு ஒண்ணை இட்டாடும் அம்மையப்பனின் பொற்பாதம் கண்டேன். கலைக்க முடியலியே இன்னும் என்று உக்கிரம் தாளாது தவிக்கிறேன்.
நிலை
பொய்யொன்றும் இல்லை
பிராண சிநேகம்தான்
என்றாலும்
வேறு வேறு
முளைக்குச்சிகளில்
கட்டப்பட்டிருக்கிறது
நம் வாழ்க்கை
உன்
மேய்ச்சல் நிலத்தில்
நானும்
என் மேய்ச்சல் நிலத்தில்
நீயும்
எப்படி முடியும்
மேய
உனக்கென்று
வொரு துரும்பை
நான் தூக்கிப்போட்டாலும்
எனக்கென்று
வொரு துரும்பை
நீ தூக்கிப்போட்டாலும்
நமது
விரல்கள் ஒடிந்து போம்
விலா எலும்புகள் முறிந்து போம்
மலையேறும் வாழ்க்கையில்
மஹா உன்னதம் தேடியென்ன லாபம்?
சாரமற்ற வாழ்க்கையை
சுமந்து திரியலானது
யாரிட்ட சாபம்
ஸரிகமபதநி
மாறாத ஸ்வரம்
என்றாலும்
தும்புகளை அறுத்தெறிய
துணிச்சலில்லை
தொழுவங்களை விட்டால்
புகலிடமுமில்லை
கொஞ்சம் கனவுகள்
கொஞ்சம் கவிதைகள்
கொஞ்சம் முலைகள்
கொஞ்சம் சித்தாந்தம்
இவற்றுக்கு மேல் பறக்க
யாருக்குச் சிறகுகள் இருக்கு.
ஒருவாசிப்பில் கவிஞனின் உண்மையும் சாமனியரின் உண்மையும் மோதிக்கொள்கையில் வரும் வலியையும் இரண்டு முளைக்குச்சிகளில் கட்டப்பட்ட மாடுகளை போல சேரவியலா நிலையை காட்டுகிறது.
இந்த கவிதையின் இறுதி பத்தியை சற்று அகலே வைத்துவிட்டு வாசித்தால் பெரும்பாலும் வெவ்வேறு வகையான ஒரு சேரவியலா வாழ்க்கை அம்சத்தை நாமனைவருமே கொண்டுள்ளோம் என தோன்றுகிறது.
அப்புறம் தும்புகளை அறுத்தெரிய துணிச்சலில்லை என்கையில் நாம் பயந்து சேராமல் போகிறோம் என்கிறது. இல்லாவிட்டால் இங்குள்ள மாபெரும் ஒத்திசைவு எப்படி நிகழ்ந்து கொண்டு இருக்கிறது?
ஆகாசம் நீலநிறம்
கிழக்கு வந்து
கூப்பிட்டுப் போகும்
சிந்திச் சீரழித்ததை
சேர்த்து விடலாமென்று
நம்பிக்கை தரும்
நல்ல புத்தி சொல்லும்
மேற்கு
கொஞ்சம் ஆறுதலாக
காத்திருக்கச் சொல்லும்
“முடியாதென்றால்
போய்த் தொலை”வென்று கோபிக்கும்
தெற்கு
மனத்துக்குள் நினைக்கும்
வர வேண்டிய இடம் தப்பி
போவதுதான் முடியுமோ இனி யென்று
நிச்சத்துடன் எதிர்பார்த்திருக்கும்
வடக்கு
திரும்பத்திரும்ப அழைத்து
தொந்தரவு செய்யும்
“இப்போதைக்கு
என்னிடம் வந்து இரு” வென்று
கட்டாயப்படுத்தும்
திசைமுடிவுக்குத் தெரிவதெல்லாம்
ஆகாசம்
நீலநிறம்
நாம் திசைகளை அறிவது ஒளிமுதல்வோனை கண்டு. அவன் எழுச்சியின் மறைவின் நிலைநிற்றலின் இல்லாதாதலின் என திசைகளுக்கு பொருள் நோக்கி திறந்தது கவிதை. இன்னொரு முறை வாசிக்கையில் இந்திரனும் வருணனும் யமனும் குபேரனும் திசைகளுடன் இணைந்தனர். இரண்டில் எதுவானலும் திசைமுடிவுக்குத் தெரிவதெல்லாம் ஆகாசம் நீலநிறம் என்ற ஈற்றுவரி பொன் மகுடமே.
அகன்ற நீல பெருவானின் கீழ் அமர்கையில் உணர்வது மகத்தான ஓன்றை. அது முடிவின்மையாக, பேராழமாக, ஏதுமில்லாமையாக, யாவும் உள்ளதாக இருக்கிறது.
தக்ஷ்ணாமூர்த்தியான
மாமிசம் தின்னாமல்
சுருட்டுப் பிடிக்காமல்
பட்டை யடிக்காமல்
படையல் கேட்காமல்
உக்ரம் கொண்டு
சன்னதம் வந்தாடும்
துடியான கருப்பசாமி
இடையில் நெடுங்காலம்
கொடை வராதது பொறாமல்
பதினெட்டாம்படி விட்டிறங்கி
ஊர்ஊராகச் சுற்றியலைந்து
மனிதரும் வாழ்க்கையும்
உலகமும் கண்டு தேறி
அமைதி கவிய
திரும்பி வந்தமரும்
கடந்தகால கைத்த நினைவுகள் வருத்தவும்
எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்
ஒரு கவிதையை இப்படி வாசிக்கலாம் என்பது சரியாவென்று தெரியவில்லை. கீழிருந்து மேலாக திறந்தேன். மனிதரும் வாழ்க்கையும் உலகமும் கண்டு தேறி அமைதி கவிய அமர்கையில் தக்ஷ்ணாமூர்த்தி. கடந்தகால கைத்த நினைவுகள் வருத்தவும் எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும் செய்கையில் வாழ்வு நோக்கி எழும் துடியான கருப்பசாமி.
கடல்
வாழ்க்கை
தேவடியாளின் வசீகரத்துடன்
இருத்தி வைத்திருக்கிறது.
விக்ரமாதித்யனில் உள்ள குடிகாரன் சொன்னது போல் உள்ளது இக்கவிதை. எத்தனை அல்லல்பட்டாலும் அஞ்சு நிமிஷ சுகத்துக்கு தகும். வாழ்க்கை முழுக்க உச்சகண சந்தோஷங்களுக்காக நாம் அல்லல்படுவதில் நட்டமில்லை.
நேத்து ராத்திரி
பார்த்த கும்பக்காரி
உதயத்துக்கு முன்ஜாமம்
படுக்கையில் சர்ப்பம்
முந்தைய கவிதையில் வந்த குடிகார கவிஞர் இங்கும் தொடர்கிறார். இதை வாசிக்கையில் அந்த பாடல் நினைவில் வருவது தவிர்க்க முடியவில்லை. ஆனால் காமம் ஒருவனை விழுங்கும் கணத்தை கண்ணெதிரே நிற்க வைக்கிறது,.
*
இன்மைகள்
இன்மைகள்தாம்
இவனை
குழப்பமிக்க கலைஞானக்கிற்று
தன்னிலும் தன்னை சுற்றியும் இன்மையை உணராதவன் கலைஞானவதில்லை. குழப்பம் அதன் உபவிளைவு. உயிர்நாடியும் கூட.
குழப்பம்
ஞானம் வளர்க்கும்
தெளிவாக எற்றுகொள்பவர்களுக்கு ஞானம் கிடைப்பதில்லை. குழப்பத்தில் ஆழ்ந்து வாழ்க்கையை குடைபவர்களுக்கு கிடைப்பது அது.
*
சிதைவும்
சீரழிவும்
கலைஞனுக்கில்லை
கலை திகழும் கணத்தில் இருப்பவன் கலைஞன். காலத்தை கடப்பதே கலை. காலமோ அரிப்பவற்றால் ஆனது. அதற்கப்பால் கலைஞன்.
*
வார்த்தைகள்
புழங்கித் தேய்ந்த
ஏனங்கள் போல
வார்த்தைகளில்
நம்பிக்கையிழந்த
அவன்
கவிஞன்
இந்த இருகவிதைகளையும் சேர்த்தே வாசித்தேன். புழங்கிய ஏனங்கள் புதுப்பொருளை ஏற்காதவை அல்லது நாம் அப்படி செய்வதில்லை. கவிஞர்கள் அந்த வார்த்தை எனும் ஏனத்திற்கு ஈயம் பூசி புதிதாக்கி தருகிறார்கள்.
*
இந்த்ர சபை
ராஜ சபை
கனக சபை
தாம்ர சபை
சித்ர சபை
பஞ்ச சபைகள்
கண்ட துண்டு
கலந்த தில்லை
இக்கவிதையை இரு பொருள் சாத்தியங்களை கொண்டு வாசித்தேன். ஐஞ்சபைகளைகளில் அவன் ஆடும் ஐவகை பிரபஞ்ச நடனங்களை தன் கலை உச்சத்தில் கண்டு ஏங்கி கலக்க முடியாத ஏக்கமாக. அல்லது கலந்த தில்லை என்பதில் நேராக தில்லை என எடுத்து தானும் மறைகையில் அவனில் கலக்கிறான் என. சைவம் அறிந்தவருக்கு இன்னும் விரிவாக பொருளாவது இக்கவிதை.
*
கனி வெறுத்து
காய் வெறுத்து
பூவும் வெறுத்து
போகக் கூடாதென்றான்
பூர்ணன்
கனியில் தொடங்கி பூ வரை செல்வது பூர்ண பயணம். முழுவதையும் வெறுத்துவிட்டால் முழுமை ஏது
அன்புடன்
சக்திவேல்.
அறிவியக்கவாதியின் உடல் சக்திவேல்
சந்திப்பு, ஒரு கடிதம் சக்திவேல்
சீவகசிந்தாமணி, உரையாடல் சக்திவேல்
இளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா? சக்திவேல்
வாசகனும் எழுத்தாளனும் சக்திவேல்