நிலம் பூத்து மலர்ந்த நாள் – வாசிப்பனுபவம் 

நிலம் பூத்து மலர்ந்த நாள் – கடலூர் சீனு

முதல் வாசிப்பில் கொற்றவையின் சொல்வள சாயலையும், விஷ்ணுபுரத்தின் வடிவ சாயலையும் இன் நாவல் கொண்டிருப்பது போல் தோன்றினாலும், முதல் மீள் வாசிப்பிலேயே என்னுள் ஆழ ஊன்றிய நூலிது. என்னளவில் கொற்றவையோ, விஷ்ணுபுரமோ என்னிடம் பெரும் தவத்தை கோரிய நூல்கள் ஆகும்.

பெரும்பாணன், கொலும்பன் – நெல்லக்கிளி, மயிலன், சித்திரை, உலகன், சீரை, சந்தன் என உள்ளுணர்வால் நகர்த்தப்படும் பாணர் குலம். பரணர், கபிலர், ஔவை என ஒரு அறிவு குலம். கதையை ஆட்டிவைக்கும் மூவேந்தர்கள் மற்றும் முக்கிய மூகுறுநில மன்னர்கள்(நன்னன், பாரி, அதியமான்) என ஒரு ஆற்றல் குலம், இவ்வாறு கனகச்சிதமான கதை மாந்தர்களும் கொண்டுள்ளது.  மகீரனின்  செயல் இவர்கள் அனைவரின் ஊழையும் இணைக்கும் சரடாக இறுகிறது.  இந்நூல் வாசிப்பனுபவம் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் வாழ்ந்த நம் மூதோர் காலங்களில் அவர்களுடன் கைகோர்த்து சுற்றி திரிந்த நிறைவை கொடுகின்றது, சங்ககால நம் மனிதர்களை சரியாக கதையில் இணைத்து, இதில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தன்னளவில் உயர்த்த சிந்தனையாளர்களாகவும் நுண்ணறிவு கொண்டவர்களாகவும், ஒருவர் மீது ஒருவர் அன்புநிறைந்தவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்பம்சம். இதை முழு நாவலிலும் இவர்களின் உரையாடலில் வழியே காணமுடிகிறது. அதற்காக மனோஜ் குரூர் அவர்களுக்கு நன்றி. செம்மையான மொழி மாற்றத்தால், படிக்கும் போது மனம் குதூகலிக்கும். மிக அழகிய மொழி வடிவத்தோடு படைத்த ஜெயஸ்ரீ அவர்களுக்கு நன்றி.

வறுமையின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக மயிலன் தன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். சிறிது காலத்திற்கு பின், அதே வறுமையை அகற்றும் பொருட்டு பொருள்தேடி வேள்பாரியை சந்திக்க செல்கிறது அவனது குடும்பம். இவ்விரண்டும் இணை கதைகளாக மயிலன் மற்றும் கொலும்பன் பார்வையில் நகர்கிறது. மூவேந்தர்களின் சூழ்ச்சிக்கு மகீரனும்  மயிலனும் பகடையாகின்றனர். நன்னன் மற்றும் வேள்பாரியை வெல்லும் பொருட்டு மகீரனின் சதியில், மயிலன் தன்னை அறியாமலே தன் குடும்பத்தை சிக்கவைகிறான், அதனால் தன் தந்தையின் இறப்புக்கு காரணம் ஆகிறான். இதற்கிடையே சித்திரையின் பார்வையிலும் கதை நகர்கிறது. கபிலரும்,  ஔவையும் கூட இந்த சூதின் பகடைகளே. இன் நாவலில் சீரையை தவிர பிற அனைவரையும் ஊழே நகர்த்தி செல்கிறது. சீரையின் உலகமே வேறு, அவள் முற்றிலும் பிரம்மத்தால் ஆட்கொள்ளப்படுகிறாள்.

தன் நுண்ணறிவால் ஊழை கவனமாக கையாளும் பரணரின் சொல் என்னக்கானதாகவே கருதினேன், அது அனைவருக்குமான சொல்லும் கூட. அறம் பிழைத்தோர் அதன் கூற்றாக ஆகும் தருணத்தை வெவ்வேறு தளங்களில் சீரையே நிகழ்த்துகிறாள். இக்கதை மாந்தர்களின் கால சுழற்சியை மூன்றாக பிரிக்கலாம். ஊழை நுண்ணறிவால் கவனமாக கையாள்பவர்கள், அறபிழை தவிர்ப்பவர். பரணர், ஔவை இதற்கு சான்று. ஊழில் உழல்பவர்கள், அறிவில் சிறந்தவர்கள், ஆனால் அறபிழை அறியாதவர். நன்னன், மயிலன் இதற்கு சான்று. ஊழில் உழல்பவர்கள், அறிவில் சிறந்தவர்கள், அறபிழை அஞ்சுபவர். பிற அனைவரும் இதற்கு சான்று.

அறப்பிழை தவிர்ப்பவர் 

பரணர் பல தருணங்களில் பாணர் குலத்துக்கு உறுதுணையாக இருக்கிறார். உம்பர்காடில் சந்திக்கும் போதும் அவரே வேள்பாரியை தேடிச்செல்ல சொல்கிறார், அங்கு சென்றபின் தன் நண்பர் கபிலரை சந்திக்க சொல்கிறார், அவர் பாரியை சந்திக்க ஏற்பாடு செய்வார் என்கிறார். தனது தீர்க்க தரிசனத்தால் பாணர் குலம் செல்லும் இந்த பொருள் ஈட்டும் வேட்கை பயணம் நிறைவேறாது என்பதையும் அறிகிறார். மயிலனை வேறொரு இடத்தில் சந்திப்பீர்கள் என்றும் சொல்லுகிறார். இவர்கள் முதன் முதலில் சந்திக்கும் போது பரணர் இயற்றிய சங்க பாடல் ஒன்று வரும், என் உள்ளம் உருகிய இடம் இது! சற்று எளிமையாகிய வரிகளில்,

உடல் வெளுத்து இளமை குன்றி,
புதுவுடல் வலிக்க பிள்ளையும் பெற்று,
உடல் மெலிந்து வெளுப்புமாகி,
எழிலிமைகளில் கண்ணீர் பெருக, நோய்யுற்று,
குரங்கின் மதிபோல் அறிவு பிழற,
மயங்கினேனே – அன்பு தோழி!

வேறொரு சந்தர்ப்பத்தில் மறவர் இனத்திடம் இருந்து மயிலனை பரணரே மீட்க்கிறார், அவனுக்கு அனைத்தையும் கற்றுத்தருகிறார். இருப்பினும் பரணரிடமே அவனுக்கு அரசியல் முரண் ஏற்படுகிறது. ஒரு தருணத்தில் பரணரின் கூற்று இவ்வாறு வரும் “தெரியாமல் செய்த ஒரு குற்றத்திற்காக ஏதுமறியாத ஒரு பெண் குழந்தையை கொல்வதா? ஓலைசுவடிகளில் சொல்லியிருப்பதற்கப்பால் சிலதெல்லாம் இருக்கிறது“. அதற்கு மனுநீதி சோழனின் உதாரணம் காட்டி, “குற்றம் செய்தவர்கள் அனைவரையும் ஒன்றாகவே கருதுவான் என்பதே நன்னனின் பெருமை. அது அப்படியே நிலைநிற்க வேண்டும்” என்பதை எதிர் கூற்றாக வைக்கப்படுகிறது. சிறுமி கொள்ளப்படும் செயலுக்கு நன்னனுடன் மயிலன் துணை நிற்க்கிறான். அன்றே பரணர் அந்நாட்டை விட்டு வெளியேறுகிறார். இந்த சிறுமி உம்பர் காட்டில் இறை ஆகிறாள், தொன்மமாக நீள்கிறாள், பின்னர் சீரையின் வடிவிலும் எழுகிறாள். இங்கு, அறபிழை தவிற்பவராக பரணர் மன்னனை எதிர்த்து நிர்கிறார்.

நன்னன் சேர மன்னனால் வீழ்த்த படுகிறான், மயிலன் அலைகழிக்கப்படுகிறான் பின் தன் குலத்துடன் சேர்கிறான். தான் செய்த கொடுமைகளுக்கு தன் குடும்பம் கருணையினால் பதிலடி கொடுக்கிறது, தன்னில் உள்ள குற்றஉணர்வால் மயிலன் தன்னையே குறுகி நிர்கிறான். அனைவரும் நாடு திரும்ப நடக்கின்றர், உம்பர் காட்டில் பரணரை மீண்டும் சந்திக்கநேர்கிறது, மயிலன் வேகமாக பரணர் கால்களில் விழுகிறான், ஆனால் உன்னை மன்னிக்க வேண்டியது நானல்ல என்கிறார் பரணர். பின்னர் பரணர் தனது பொருளனைத்தையும் பாணர்களுக்கு கொடுக்கிறார். மேலும், அரசர்களுக்கு புகழுரை வேண்டிய காலம்வரை புலவர்களுக்கு துன்பமில்லை என்று சொல்லி பரணர் நடந்து மறைகிறார். இங்கு, பயன் தவிர்க்கும் குன்றா வளமிக்கவராக பரணர் காட்சியாகிறார். தனது சொலே பொருளாக மாறும் ஒருவருக்கு எப்பொருளும் பொருளற்றதாகவே தோன்றியிருக்கும்.

அறப்பிழை அறியாதவர்

நன்னன் முதலில் சேர படையை வெற்றிகொண்டாலும், பின் சேரனிடம் தோற்கிறான். நன்னனின் அறபிழை பற்றிய செய்தி பாணர் குலத்திடம் பரணர் கூறுவதாக நாவலின் முதலிலேயே வரும். நன்னன் ஒரு மாந்தோப்பு வளர்கிறான், அதன் கனிகளை பாதுகாக்க காவல் இடப்படுகிறது, இத்தோப்பில் எதை கவரும் ஒருவருக்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்ற விதி இயற்றப்படுகிறது. அரச விதியினை அறியாத சிறுமி மாப்பழத்தை கவரவே, அரச நீயதியின்படி அச்சிறுமியை கொன்றுவிட நன்னன் ஆணை இடுகிறான். அதை தடுக்க பரணர் பெரிதுமுயன்றும், நன்னன் தன் முடிவை மாற்றவில்லை. அரச நீதியின் பொருட்டு, சிறுமியிடத்து உள்ள கனிவினை கண்டுகொள்ளாமல், அறியாது செய்த தவறு  என்றும் சிந்திக்காமல் சிறுமியை கொள்வதன்முலம், இயற்கை நீதிக்கு பங்கம் விளைவித்து அறபிழை அறியாதவனாகிறான் நன்னன். அச்சிறுமி அக்காட்டில் இறைவியாகிறாள். இவ்விறவியை பற்றி பரணர் இவ்வாறு கூறுகிறார், “இன்னும் பல சந்தர்ப்பங்களில் இவள் மீண்டும் மீண்டும் பிறப்பாள். அரச நீதியும் இறைவனின் நீதியும் அவளை மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கும். கனிவு மட்டுமல்ல, பகையும் வற்றாதவள் இவள். இனிவரும் காலம்தோறும் கனிவையும் பகையையும் இந்த உலக மக்கள்மீது பொழிவாள் இவள்.”

அதே போல் நாவலின் முடிவில் சீரையை தேடி இந்த காட்டில் உள்ள இறைவி கோவிலுக்கே வருகிறார்கள் பாணர் குலம், அப்போது மயிலன் ஓர் இடிதாக்கி கோவிலின் முற்றத்தில் விழுகிறான், சீரையின் உருக்கொண்டு காட்டில் உள்ள இறைவி மயிலனை துரத்துகிறாள், மயிலனின் ஒடுங்கலாக இவ்வாறு வரும், “செய்து வைத்த பாவங்களில் இருந்தெல்லாம் எனக்கு விடுதலையே கிடையாது. மண்ணிடிந்து  போய்விட்டதென்று எண்ணியதெல்லாம் எந்த நேரமும் உயிர்பெற்றுத் திரும்பக் கொத்தும்.” இவ்வாறு அறபிழை அறியாதவர்களாக நன்னன் மற்றும் மயிலன் இருக்கிறார்கள்.

அறப்பிழை அஞ்சுபவர்

வேள்பாரியை புகழ் பாடி பொருள் ஈட்டிய கபிலர், பாரியின் இறப்பிற்குப்பின் ஏற்படும் குழப்ப சூழலிலிருந்திய பாணர் குடும்பத்தை பறம்புமலை யிலிறுந்து வெளியேற உதவுகிறார். பின்னர் சேரனிடம் சேர்ந்து புகழ் பாடுவதை வழக்கமாகிக்கொல்கிறார். ஒரு கட்டத்தில் பாணர் குலம் சேரனை சந்திக்க வரும் போது கபிலரே அவர்களுக்கு தடையாக இருக்கிறார். இதை அறிந்த மயிலன் கபிலரிடம் சினம் கொல்கிறான். பாரியை கொன்றது மயிலனே ஆனாலும் கபிலரிடம் ஏற்படும் வாக்குவாதத்தில் பாரியை நீங்கள் என்னக்குமுன்பே அகத்தில் கொன்றுவிட்டீர் என்கிறான். புரியாமல் கபிலர் நானா என வினவவே, மயிலன் இவ்வாறு கூறுகிறான் “படையுடன் வந்தால் தோற்கடிக்க முடியாது. பாணராகவோ இரவலராகவோ வந்து இரந்தால்தான் நாட்டை அடையலாம் என்று பாடல்வழியாக நீங்களே அவர்களுக்கு தெரிவித்தீர்கள். நீங்கள் சொன்னதுபோலவே எங்களை போன்ற பகடைகளை நகர்த்தி அதை செய்து முடித்தார்கள். தன் உயிரைவிட மேலாக உங்களிடம் அன்பு காட்டிய பாரிக்கு நீங்கள் செய்தது, எந்தப் பொருளையும் உங்களிடம் நிலைத்திருக்காமல் ஆக்கும்“. இன் நிகழ்விற்குப்பின் பாரியைப் பற்றிய பாடல்களைப் பாடியபடி கபிலர் உண்ணா நோன்பிருந்து வடக்கிருந்து உயிர் விடுகிறார்.

இப்படி இந்நாவலின் வரும் பிற அனைவரும் அவர்களின் பொருள் தேடும் வேட்கை வெற்றியடையவில்லை என்றாலும், அறபிழைக்கு அஞ்சுபவர்களே. அவர்கள் தன் நுண்ணுணர்வால் சரியாக சூழலை கையாள்பவர்கள், அவர்களை பெரும்பாணனும் கொலுபனும் வழிநடத்துகிறார்கள்.

இந்நாவலில் சற்று நிறுத்தி யோசிக்க வைத்த தருணங்கள் பல. அவற்றுள் சில அனுபவங்களும், கேள்விகளுமாக இங்கே.

வறுமையிலும் தங்கள் மனிதர்களை காட்டிலும் பிற உயிகளிடத்து இவர்கள் காட்டும் அன்பை சுட்டும் இடம் இது. கொலும்பன் வழக்கம்போல் கையில் ஒன்றும்மில்லாமல் மாலையில் வரும்போது நெல்லக்கிளி இவ்வாறு சொல்லுகிறாள், “இந்த நாய்குட்டிகளையாவது நினைத்துப் பார்த்தீர்களா? சீரையும் ஒன்றும் சாப்பிடவில்லை” என்றாள். இவ்வரி என்னை பலவருடங்கள் முன் வாசித்த “ஓநாய் குல சின்னம்” எனும் நாவலில் வரும் வரிகளை நினைவுபடுத்தியது. மேச்சல் நில பகுதிகளில் “ஆக சிறு உயிரான புல்லே  மிகப்பெரிய உயிர்” என்று ஒரு வரி வரும், இந்த வரி வாழ்க்கையை பார்க்கும் பார்வையை மாற்றியது. ஓர் அறிவு உயிர் முற்றிலும் அழிக்கப்பட்டால் பிற அறிவுள்ள அனைத்து உயிரும் படிப்படியாக அழியும் அல்லவா? எனவே ஓர் அறிவு முதல் ஐந்தறிவு உயிர் வரை உள்ள ஒவ்வொரு உயிரும் காக்கப்படவேண்டும் அல்லவா? இயற்கையில் உயிர்கள் உணவிற்காக மட்டுமே இயற்கையால் கொள்ளப்படவேண்டும், தவிர ஒருவரின் வசதிக்காக கொள்ளப்படுகிறது என்றால் அது ஒரு ஒழுங்கை குலைக்கும் செயல்தானே? இங்கு பிற உயிர்களின் மீது பாணர் குடும்பம் காட்டு அன்பு மகத்தானது.

மேலும் கொலும்பன் சீரைக்கு சொல்லும் தருணம், “வானத்திற்கு நிறமில்லை மகளே. அது எப்போதும் கண்களோடு விளையாடுகிறது. அதுபோலவே இந்த உலகமுமென்று சிலர் சொல்கின்றனர்“. இவ்வரிகள் “யதி” நூலை நினைவூட்டியது “அறிவுக்கு தெரிவதாக நாம் காணும் விஷயம் நாம் நம்பும் படித்தான் அங்கே இருக்கிறதா என்று சொல்லிவிடமுடியாது” என்றவரிகளை.

பாணர் குலம் மாந்தர்கள் அனைவறையுமே ஒரே குடும்பமாக என்னும் காட்சி இது, நெல்லக்கிளி சந்தனை பார்த்து சொல்லுவாள், “எங்களுடைய வேதனையை தனியாக சுமந்தவன் நீ. நான் பெற்றது அவனையென்றாலும், நீ உடனிருக்கும்போது அவனும் வேண்டுமென்று விரும்பியிருக்கக்கூடாது“. இப்படி ஒவ்வொருவரும் பேரன்புடனே வாழ்கின்றனர்.

இதை முடிக்கும் தருவாயிலும் நான் இந்நாவலை பற்றி ஒன்றும் சொல்லிவிடவில்லை என்றே தோன்றுகிறது. அது முப்பதாயிரம் சொற்களை முப்பது சொற்களால் சொல்லிவிட நினைப்பதற்கு சமம். ஒவ்வொரு பக்கத்திலும் நான் அறிய ஏதோ ஒன்று உள்ள நூல், அல்லது இனிமை ததும்பும் சொற்களின் அழகிற்காகவே மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் நூலிது. நான் சிறுவதில் ஒரு நாட்டை ஆள்வது அரசியல் தலைவர்களே என்றென்னியிருந்தேன். இளம்வயதில், பெரும் முதலாளிகளும் வியாபாரிகளும்தான் நாட்டை ஆள்வதாக அறிந்தேன், ஆனால் இன்று என்நாடாகிலும் அதை ஆள்வது அன்நாட்டில் உள்ள அறிவார்த்தவர்களே என்பதை இப்புத்தக வழியாக என்னால் கண்டடைய முடிந்தது. தனியொருவராக அல்ல, அவர்களின் திரளே இதை செய்கிறது. தாங்கள் இந்நாவலை கொண்டாடியதற்கு மிக்க நன்றி.

பேரன்புடன்,

கார்மேகம் 

பெங்களூர்

நிலம் பூத்து மலர்ந்த நாள் வாங்க

முந்தைய கட்டுரைலீலையும் நற்றுணையும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-5