கோவை சொல்முகம் கூட்டத்தில் செந்தில்

இம்மாத கோவை சொல்முகம் கூடுகையில்  வாசகர் செந்திலை சந்தித்தேன். காலையில் ஆனந்தாஸ் முன் நண்பர்கள் நின்று கொண்டிருந்தனர். என்னைக் கொஞ்ச தூரத்திலேயே பார்த்துவிட்ட கிருஷ்ணன் கையசைத்தார். அருகில் நெருங்கியதும் அறிந்தவர்கள் என்றாலும் அதிகம் தொடர்பில் இல்லாத நண்பர்கள் நின்றிருந்தனர்.

கிருஷ்ணன் “சிறப்பு விருந்தினர் செந்திலை அறிமுகப்படுத்திக்கோங்க” என்றார். முதல் கணம் தயங்கி “வாங்க நான் மீனாம்பிகை” என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். “வணக்கம்” என்றார். தொப்பியும் கண்ணாடியும் அணிந்து டூரிஸ்ட் போல தோற்றமளித்தார். கூடுகைக்கு வரமுடியாத க்விஸ் செந்தில் சார் அங்கேயே அனைவரையும் சந்தித்துவிட்டிருந்தார். பிறகு அனைவரும் நிகழ்வு நடக்கும் இடத்துக்குச் சென்றோம்.

இம்மாதத்தின் பேசுபொருள் வண்ணக்கடலின் மூன்று பகுதிகள். எப்போதும் போர்ஷனை படித்து முடித்து விட்டு படிக்காமல் வருகிறவர்களை விரட்டும் கிருஷ்ணன், இம்முறை மூன்று பகுதிகள் என்றாலும், 250 பக்கங்கள். மீள் வாசிப்பு செய்ய நேரம் போதவில்லை என்று காரில் சொல்லிக்கொண்டு வந்தது கேட்க சந்தோஷமாக இருந்தது.

முதலில் புதிதாக வந்தவர்களின் அறிமுகம். பிறகு வெண்முரசு HOD என்று நண்பர்கள் பிரியமாய் அழைக்கும் பூபதி முதற்கனலிலிருந்து வண்ணக்கடல் வரை நிகழ்வுகளைத் தொகுத்துச் சொன்னார். முதற்கனலில் துவங்கும் காமக்குரோதமோகங்கள் எப்படி வண்ணக்கடலில் கூர்கொள்கின்றன என்று விளக்கினார். முதற்கனலில் சொல்லப்படுவது அம்பையின் சாபம் போல இருந்தாலும் வண்ணக்கடல் வருவதற்குள்ளேயே இறுதியில் நிகழும் போருக்கான களங்கள் அமைந்துவிடுகின்றன. மிக நீண்ட தொகுப்பு. முழுவதையும் இங்கு பகிரவில்லை. தொடர்ந்து நரேன், நவின், விக்ரம், மணவாளன் பேசினர். தெற்கிலிருந்து துவங்கும் நாவலில் நிலக்காட்சிகளின் அமைப்பு மாறுவது அன்றிருந்த பெருமதங்கள், சிறுதெய்வ வழிபாடுகள், புறநடையாளர்கள், வணிக முறைகள் என பலவகையான பார்வைகளும் இடம் பெற்றன.

கோவை நவீன் வண்ணக்கடலில் துரோணர், கர்ணன், ஏகலைவன் மூவருடைய கதை சந்தர்ப்பங்கள் இறுதிப்போருக்குக் களம் அமைப்பதை விரிவாகச் சொன்னார். நரேன் அன்னையரிடமிருந்து தந்தையருக்கு கடத்தப்பட்ட நாடாளும் வேட்கை ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படுவதைத் தொடங்கி, நாவல் முழுக்க இழையோடும் காவியத்தன்மை வரலாற்றுத்தன்மை புராணத்தன்மை பற்றியும் அதனூடாக இழைந்து வரும் பகடி பற்றியும் சொன்னார்.

வெண்முரசின் கதாபாத்திரங்கள் விலங்குகளுடன் அடையாளப் படுத்தப்படுவதும், நெருக்கடியான நேரங்களில் விலங்குகளால் வழிநடத்தப்படுவதும், ஒரு தனித்தளமாக வாசிக்கலாம் என்றும் பேசப்பட்டது. நரேன் புல்லின் தழல் ஸ்தூல வடிவமான புழுவாக உருக்கொள்வது போல, புழு முதுகெலும்பு கொண்டு எழுவது போல வண்ணக்கடலின் நாயகர்கள் எழுந்து வருகிறார்கள். பீஷ்மர் தந்தையை முழுதேற்றவர். அவருக்காக அரசு துறக்கிறார். ஷத்ரியனாக இருந்தும் உரிமை மறுக்கப்பட்டவர். துரோணர் தந்தையால் குருவால் கைவிடப்பட்டவர். ஏகலைவன் குருவால் கைவிடப்பட்டவர் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார். இம்மூன்று கதாபாத்திரங்களின் எழுச்சி வெவ்வேறு கோணங்களில் பேசப்பட்டது.

கிருஷ்ணன் வண்ணக்கடல் எப்படி பெரு மன்னர்களை பெருந்தெய்வங்களை பெரு மதங்களை பகடிசெய்து தொடங்குகிறது என்று சொன்னார். மொத்த நாவலே முழுமை மீதுள்ள பகடி போலத் தன்னளவில் முழுமையுறவில்லை என்றும் சொன்னார். இளநாகன் சென்று சேரும் அஸ்தினபுரி உண்மையில் அஸ்தினபுரி அல்ல, அது வேறு. எனில் உண்மையில் அஸ்தினபுரி எது போன்ற தத்துவப் பார்வைகளும் இடம் பெற்றன.

அனைவரும் பேசி முடித்ததும் கிருஷ்ணன் ஒரு விவாதத்தைத் துவங்கினார். கர்ணன் தன் அகத்தில் தான் சூதனல்ல ஷத்ரியன் என்று அறிந்தவன்.  தான் சூதனல்ல என்று தனக்கே தெரிந்த போதும் மற்றவர்கள் இழிவுபடுத்தும்போது கர்ணன் ஏன் துயருறவேண்டும்? அந்த அக நெருக்கடியை அவரால் ஏன் கடக்க முடியவில்லை? அதற்கான குறைபாடாக ஆன்மிகமின்மையைத் தேடலின்மையை காரணமாகக் கொள்ளலாமா? என்று கேட்டார்.

வாசகர் செந்தில் மனிதன் தன்னுடைய நேர்மையை நிரூபிக்க முடியாததன் நெருக்கடியைத் தாண்டமுடியாது என்று தன்னுடைய அனுபவத்தை சொன்னார். இந்தக் கருத்து வாழ்நாளில் தாண்ட முடியாத துயரல்ல என்று கிருஷ்ணனால்  நிராகரிக்கப்பட்டது.

கர்ணன் அடையக்கூடிய அனைத்து அவமானங்களையும் அர்ஜுனன் ஒரே நாளில் ஆடை வரை அவிழ்க்கப்பட்டு அவமானப் படுத்தப்படுகிறான். அவனால் அந்த நெருக்கடியைக் கடக்க முடிந்தது ஆன்மிகத்தேடலாலா அல்லது அதன் சாத்தியங்கள் என்னவாக இருக்கலாம் என்று கிருஷ்ணன் கேட்டார்.

வெண்முரசு இத்தகைய காவிய நாயகர்களை உன்னதப்படுத்துவதனால் அதை நாம் அவ்வாறே ஏற்கவேண்டியதில்லை. அவர்களுடைய சரிவுகளையும் கருத்தில் கொண்டே வாசிக்க வேண்டும். மேலும் தன்னளவில் உன்னதமான நாயகர்களான நேமிநாதர், தீர்க்கசியாமர், போன்றவர்களின் வாழ்க்கையை இதே முக்கியத்துவத்துடன் வாசிக்க வேண்டும் என்றும் சொன்னார்.

ஏகலைவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அறம் கிடைக்கவில்லை ஏன் என்று நவீன் கேட்டார். இறுதியில் பேசும்போது கிருஷ்ணன் மகாபாரதக் கதை மானுட முயற்சியால் நிகழ்வதா, அறத்தின் பொருட்டு நிகழ்வதா அல்லது ஊழா என்ற கேள்வியைக் கேட்டு, துவாரகையின் அழிவைக் குறிப்பிட்டு ஊழே என்று முடித்தார். இவ்விவாதத்தில் அந்தியூர் மணி, விக்ரம் புதிய வாசகர் செந்தில் உட்பட அனைவரும் பங்களித்தனர்.

செந்தில் ஒவ்வொரு விவாதத்தின் போதும் தயக்கமில்லாமல் கலந்துகொண்டார் தன்னுடைய அறிதலில் போதாமையிருப்பின் கவனித்துக்கொண்டும் இருந்தார்.

இன்று தொகுத்துக் கொள்கையில் அன்று பேசுபொருளாக இருந்த பகுதிகளுக்கு அப்பால் விவாதமாக வைக்கப்பட்டவையே நினைவில் நிற்கின்றன. நுண்மையான அவதானிப்புகள் மறைந்துவிட்டிருக்கின்றன. நண்பர்களும் அதையே உணர்ந்ததாக நரேன் சொன்னார். நம்முடைய கூடுகைகளில் கலந்துரையாடலில் விவாதத்தை தவிர்த்துக் கொள்வது எப்படி என்றும் நாம் கற்கவேண்டும்போல.

இடைவேளையில் இன்று புதிதாக வந்திருந்த விஜயகுமார் ஏற்கனவே வாசகர் சந்திப்பில் அறிமுகமானவர் என்றும் “ஒன் மொமண்ட் ப்ளீஸ்” என்ற கதையை எழுதிப் பகிர்ந்திருந்தார் என்றும் கிருஷ்ணன் சொன்னார். கதைச் சுருக்கத்தைச் சொல்லி “மிக நல்ல கதை. நானே பல நண்பர்களுக்கு படிக்கும்படி பரிந்துரைத்தேன்” என்று கிருஷ்ணன் சொன்னபோது விஜயகுமார் நெகிழ்ந்து துள்ளி செந்திலின் பின்னால் மறைந்தார்.

இடைவேளை முடிந்து கார்லோஸ் புயந்தஸ் எழுதிய ஸ்பானிஷ் நாவலான ஆர்தேமியா க்ரூஸின் மரணம் நாவல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முதலில் மெக்சிகோவின் அரசியல் நிலைமை, சர்வாதிகாரம், அதற்கு எதிராக எழுந்த புரட்சியாளர்கள், அவர்களின் அரசியல் வெற்றி, அதன் விளைவுகள், அதன் அபத்தங்கள் பற்றி விரிவாக நரேன் சொன்னார்.

கதைக்கூறு முறையில் narrative pattern வகைமையில் புதிதாக எழுத வந்த லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் நால்வர். கொத்தசார் – அர்ஜெண்டினா, கப்ரியேல் கார்சியா மார்க்யுஸ் – கொலம்பியா, லோசா – பெரு, கார்லோஸ் புயந்தஸ் – மெக்சிகோ இவர்களின் கதைக்கூறுமுறை, அதன் அடிப்படை, ஏன் இவர்களை படிக்கவேண்டும் என்று அதன் பின்னணியையும் நரேன் விளக்கினார்.

புரட்சியாளனின் நனவோடையாக காலத்தால் முன்னும் பின்னும் நகருவதாக சித்தரிக்கப்பட்ட நாவல். கதாசிரியரே மூன்று வெவ்வேறு ஆளுமைகள் போல நாவலுக்குள் ஒருவரை ஒருவர் குறிப்பிட்டுக் கொள்வது ஏற்படுத்தும் புரிதல் தடை. எதிர்வெளியீடாக ஸ்ரீதர் ரங்கராஜ் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் இந்நாவல் ஆங்கிலத்தில் ஒப்பிட அபத்தமான மொழிபெயர்ப்பு என்று சொன்னார். அபத்தமான மொழிபெயர்ப்புகள் வாசிப்பில் ஏற்படுத்தும் தடை பற்றியும் பேசப்பட்டது.

சொல்முகத்தின் கூடுகைக்கு வருபவர்கள் அனைவருமே நாவலைப்படித்திருக்க வேண்டும் என்பது முக்கியமான விதி.  நரேன் படிப்பதில் தடை இருக்கிறதா என்று அடுத்த நாளிலிருந்தே விசாரிக்க தொடங்கிவிடுவார். இம்முறை நாவலைப் புரிந்துகொள்ள முடியாத அளவு மொழிபெயர்ப்பு ஏற்படுத்திய தடையே பெரிதாக இருந்ததாகவும். ஆங்கிலத்திலும் படித்ததாகவும் நண்பர்கள் சொன்னார்கள். கூடுகைக்கு வரும் நண்பர்கள் அனைவருமே தங்கள்  வாசிப்பனுபவத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் இது ஒரு பயிற்சியாகவே கருதி பேச வேண்டும் என்பதும் கடைபிடிக்கப்படுகிறது. ஆரம்ப நிலை உரையாடலைத் தொடங்குபவர்களுக்கு  இது ஒரு நல்வாய்ப்பு.

சந்திப்பு முடிந்து நண்பர்கள் சேர்ந்து சாப்பிட்டபின் வாசகர் செந்திலையும் என்னையும் ஈஷாவில் இறக்கிவிட நரேன் வந்தார். வழிபாட்டு தலங்களின் விடுமுறை பற்றி அறியாதிருந்ததனால் மீண்டும் பேரூர் வரை அவருடனே வந்துவிட்டோம். செந்தில் வருத்தப்பட்டதனால் பேரூர் நொய்யல் ஆற்றருகே சற்று நேரம் நின்று பேசிக்கொண்டிருந்துவிட்டு என் வீட்டுக்கு வந்தோம். வீட்டிற்குள் நுழையும் முன்னே புத்தக அலமாரியைப் பார்த்து உற்சாகமாகி அதிலிருந்த புத்தகங்களை பார்த்துக்கொண்டு வெகுநேரம் நின்றிருந்தார். தன்னிடம் இல்லாத உங்கள் புத்தகங்களை எடுத்துப்பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்றைய நாள் முழுக்க ”நான் நிறைய நேரத்தை இழந்துவிட்டேன். படிப்பதை இப்படி தொகுத்துக்கொள்ளவோ பேசி விரிவாக்க்கிக் கொள்ளவோ இதுவரை அறிந்துகொள்ளாமல் இருந்துவிட்டேன்” என்றபடி இருந்தார். இனிமேல் வரும் கலந்துரையாடல்கள் அனைத்திற்கும் வருவதாக சொன்னார். சென்னையில் நிகழும் கலந்துரையாடல்கள் பற்றிச் சொன்னேன். போனில் தளத்தை எப்படி திறந்து படிப்பது என்பது அவருக்குத் தெரியவில்லை.  எனவே கலந்துரையாடல்கள் நிகழும் நாட்கள் அவருக்குத் தெரியாது என்றார். போனில் எப்படிப் பார்க்க வேண்டும் என்று கேட்டு தெரிந்துகொண்டார்.

முதல்நாள் அவர் கொடுத்த பேட்டி பற்றி சொன்னார். பின்னர் நாஞ்சில் சாரின் சாலப்பரிந்து கதையை அவருக்குத் தெரியாமல் சினிமாவாக எடுக்கப்பட்டது பற்றி வருத்தப்பட்டார். நாஞ்சில் சாரை அழைத்து ஒரு வாசகர் இப்படி வருத்தப்படுகிறார் பாருங்கள் என்று போனைக் கொடுத்தேன்.  அன்று நாஞ்சில் சாருக்கு 42-வது மணநாள். குடும்பத்துடன் பயணத்தில் இருந்தார். அலைபேசி விட்டு விட்டுக்கேட்டது. பின்னர் பேட்டி கொடுத்த செந்தில் என்று சொன்னதும் கொடுங்க கொடுங்க என்று ஆவலாக பேசினார். நாஞ்சில் சாரிடம் அவரது கதைகள் பற்றி, படித்தது பற்றியும் செந்தில் பேசினார்.

செந்தில் பேசும்போது பெரும்பாலான புத்தகங்கள் பெயரையும் கதைத்தருணத்தையும் நினைவிலிருந்து சொல்கிறார். பலமுறை படித்தாலும் இவ்வளவு துல்லியமாக சாதாரண கதைத்தருணங்கள் நினைவில் நிற்பதில்லை என்று நினைத்துக் கொண்டேன். அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் எப்படி கதைகளில் பொருந்திப்போயின என்று சொன்னார். அப்படி இலக்கியத்தை வாழ்க்கையுடன் இணைத்துப் பார்ப்பதே நல்ல அறிதல். குறைந்தபட்சம் அதன் துயரங்களிலிருந்து விடுபடல் எளிது.

வாசிப்பு ஒருவரது சிந்தனையை எப்படி செறிவாக்க முடியும் என்பதற்கு நிறைய உதாரணங்களை அன்று பார்த்தேன். ஒன்று கிருஷ்ணன் பேசும்போது சொன்னது. செந்திலிடம் ஒருவர் திருக்குறள் பெண்களுக்கான படைப்பு, அதை பொதுமறை என்று சொல்வது தவறு, அது பெண்களை முன் வைக்கிறது என்றும் ஒரு குறளை மேற்கோள் காட்டி சொல்லியிருக்கிறார். அக்குறள்

”ஈன்ற பொழுதின் பெருதுவக்கும் தன் மகனை

சான்றோன் எனக்கேட்ட தாய்”

இதில் தாயை முன்னிலைப்படுத்தி தானே சொல்லியிருக்கிறது என்று கேட்டிருக்கிறார். செந்தில் உடனே சான்றோன் என்று மகனைத்தானே குறிப்பிட்டிருக்கிறது மகளை அல்லவே என்று திருப்பிக் கேட்டிருக்கிறார். அன்று சென்றவர் ஐந்து வருடங்களாக கடைப்பக்கம் வரவில்லை என்று சொன்னார்.

அன்றைய முழுநாளும் நிறையப்பேரை பார்த்தது, நிறைய பேரை நேரில் சந்தித்தது, நாஞ்சில் சாரிடம், உங்களிடம் போனில் பேசியது என நெகிழ்ந்திருந்தார். புத்தகங்கள் பற்றி வாசிப்பு பற்றி அதன் வகைமைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். நான் தங்கப்புத்தகம் கதை சொல்லத்தொடங்கி முடிப்பதற்குள் அவருக்கான வண்டி வந்துவிட்டிருந்தது. மறுநாள் சென்னையில் சந்திக்கும் வாக்குறுதியுடன் கிளம்பிச்சென்றார். அடுத்தமாதம் சொல்முகம் கூடுகையில் கண்டிப்பாக வந்து கலந்து கொள்வதாக சொல்லிச் சென்றார்.

சொல்முகம் கூடுகையில் செப்டம்பர் மாதத்திற்கான வாசிப்பில் இருந்தது முருகவேளின் எரியும் பனிக்காடும், வெண்முரசு வாசிப்பில் நீலமும். நீலத்தின் நாவல் அடர்த்தியும், கடலூர் சீனு நாவல் குறித்து உரையாற்றுவதற்கான நேரம் கருதியும் நீலம் மட்டும் இந்த மாதத்திற்கான புத்தகமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. தற்செயலாக வாசிக்கத் துவங்கும் மறுநாள் கோகுலாஷ்டமியாக அமைந்திருந்தது! இது நீலத்துக்கான மாதம் போலும்.

மீனாம்பிகை

முந்தைய கட்டுரை சின்ன வாக் போலாமா? – இரம்யா
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன், ஒரு மதிப்புரை