கேரளப் பெண்வழிச் சமூகமும் சசி தரூரும்

ஆசிரியருக்கு,

நாயர் பெண்களின் உடல் சுதந்திரம் பற்றி ஒரு கேள்வி. பெருமாள் முருகன் வழக்கு போல் கேரளாவிலும் ஒரு வழக்கு. ஆனால் இங்கு நடந்தது போல், ஒரு ஜாதியின் போராட்டம், மிரட்டல், எழுத்தாளரின் பேனாவை தொட மாட்டேன் என்ற சபதம், கருத்து சுதந்திரம் முக்கியம்தான் ஆனாலும்… என்று பிரபலங்களின் பேட்டி, பல வருடங்களுக்கு முன் எழுதப்பட்டிருந்தாலும், திடீரென்று கவனம் பெற்று அந்த வருட புத்தகக் கண்காட்சியில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட புத்தகம், அதன் ஆசிரியர் இந்திய அளவில் விருது பெற தகுதியான தமிழ் எழுத்தாளராக மாறியிருப்பது என்று எந்த அதிரடி திருப்பங்களும் அங்கு நடப்பதாக தெரியவில்லை.

சந்தியா ஸ்ரீகுமார் என்ற நாயர் பெண், சசிதரூர் தனது தி கிரேட் இந்தியன் நாவலில், (The Great Indian Novel) நாயர் பெண்களின் கற்பை, கண்ணியத்தை, ஒழுக்கத்தை இழிவுபடுத்தும் வகையில் எழுதியுள்ளதாக குற்றம் கூறி அவர் மேல் திருவனந்தபுர முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். அவ்வழக்கை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு சசிதரூருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

அவர் வழக்கு தொடுப்பதற்காக கூறும் காரணமே சுவாரசியமானது. அவருக்கு நெருக்கமான ஒருவர் ஒருமுறை, சும்மா இருக்கிறாயா அல்லது வீட்டிற்கு வெளியே ஏதேனும் செருப்பு உள்ளதா என்று கேட்டுள்ளார். பாவம், அப்போது அவர் என்ன கேட்கிறார் என்று புரியவில்லை. தற்போது சசிதரூரின் நாவலை படிக்கையில்தான் அதன் அர்த்தம் புரிந்துள்ளது. நாவலில் இவ்வாறு வருகிறது “In Kerala the men of the Nair community only learn that their wives are free to receive them by seeing if another man’ slippers aren’t outside her door.” நாயர் ஜாதியை சேர்ந்த ஆண்கள், தங்கள் மனைவியிடம் தாங்கள் அணுகலாமா, இல்லையா என்பதை வேறு ஆண்மகனின் செருப்பு வீட்டிற்கு வெளியே உள்ளதா, இல்லையா என்பதின் மூலம் தான் தெரிந்து கொள்வார்கள்.

இதை படித்த சந்தியா ஸ்ரீகுமார் உடனடியாக வெகுண்டு எழுந்து, உண்மைக்கு புறம்பான வகையிலும், நாயர் பெண்களை இழிவு படுத்தவேண்டும் என்ற கீழ் எண்ணத்தோடும் மேற்சொன்ன கருத்தை எழுதிய சசிதரூர்மீது வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கிற்கு எதிராக கேரளா உயர்நீதி மன்றத்தை அணுகியுள்ளார் சசிதரூர். அதில் அவர், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிமினல் அவதூறு வழக்கு சட்டப்படி நிலைக்கத் தக்கதல்ல எனவே அதை ரத்து செய்யவேண்டும் என்று வேண்டியுள்ளார்

அதற்காக முன்வைத்த காரணங்கள்,

  1. அந்த நாவல் 1982 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. கால வரம்பு தாண்டி சுமார் 40 ஆண்டுகள் கழித்து இந்தவழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  1. நாவலில் உள்ள புகார்தாரர் கூறும் வாக்கியமானது எனது கற்பனையில் தோன்றிய ஒன்றல்ல. நாயர் பெண்களின் உடலுறவு சார்ந்த சுதந்திரம் நன்கு அறியப்பட்ட ஒன்று மேலும் பல்வேறு வரலாற்று குறிப்புகளைக் கொண்டு பல வரலாற்று ஆய்வாளர்கள் அதை விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார்கள். முக்கியமாக பெரும்வரலாற்று ஆய்வாளர் திரு. ஸ்ரீதர மேனன் அவரது மிகவும் போற்றப்படும் “கேரளா சரித்திரம்” புத்தகத்திலும், மற்றொரு ஆய்வாளரான K.P.பத்மநாப மேனனின் “கொச்சி ராஜ்ஜிய சரித்திரம்” புத்தகத்திலும், 16 மற்றும் 17-ம் நூற்றாண்டில் கேரளாவின் பல்வேறு ஜாதிகளின் சமூக வாழ்வை பற்றி மிக விரிவாக பதிவு செய்துள்ளார்கள். அதை படிக்கும் எந்த ஒரு நபரும், ஹிந்து நாயர் பெண்கள் எந்த அளவு அவர்கள் உடல் மேல் முழு உரிமையும், அவர்கள் உடலுறவு சார்ந்து கட்டுப்பாடற்ற சுதந்திரமும் கொண்டிருந்தார்கள் என்பதை அறியமுடியும்.
  1. சுப்ரமணிய சுவாமி எதிர் மத்திய அரசு என்ற வழக்கில் உச்சநீதிமன்றமானது, ‘ஒருவர் மேல் பழிசொல்வது அல்லது தவறாகச் சித்தரிப்பது மட்டுமே அவதூறு ஆகாது இழிவு செய்யவேண்டும் என்ற உள்நோக்கமும், அவ்வாறு செய்தால் அதன் மூலம் அந்த நபர் பாதிக்கப்படுவார் என்ற அறிதலும் இருக்கவேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த நாவலில் வரும் செய்திகள், கருத்துக்கள் வரலாற்று ஆவணங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது மேலும் யாரையும் இழிவு செய்யவேண்டும் என்ற உள்நோக்கம் கிடையாது.

இறுதியாக சசிதரூர், நானும் நாயர்தான், என் தாய், சகோதரியும் நாயர் பெண்கள்தான். நான் எப்படி நாயர் பெண்களை தவறாக சித்தரிப்பேன் என்று மன்றாடுகிறார்.

தற்போது கேரள உயர்நீதிமன்றம் சசிதரூருக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கிற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. சசிதரூர் கூறும் வரலாற்று தகவல்களை பற்றி உங்களிடம் கேட்கவேண்டும் என்று விழைவு ஆனால் பின்பு நீங்களும், ‘நானும் நாயர்தான், என் அம்மா, சகோதரி இன்னும் பல சொந்தக்காரர்கள் நாயர்தான்’ என்று நீதிமன்றம் நீதிமன்றமாக ஏற வேண்டி இருக்குமோ என்ற பயமும் இருக்கிறது.

V.S. செந்தில்குமார்

அன்புள்ள செந்தில்குமார்,

இந்த விஷயத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்பும் முதன்மைச் சிக்கல் ‘மானநஷ்ட வழக்கு’ என்ற கருவி. வரவர எழுதும் எவருக்கும் எதிரான ஒரு வாளாக மாறியிருக்கிறது. இதை முதலில் மத அமைப்புக்கள் கையிலெடுத்தன. அதன்பின் சாதியமைப்புக்கள். இப்போது தனிநபர்களும் கையிலெடுக்கிறார்கள்.

இந்தியாவின் சட்டம் குத்துமதிப்பாக ஒரு வரையறையை அளித்துள்ளது. அதன்படி ‘சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நோக்குடன், மாற்றுச் சமூகங்களை அவமதிக்கும் நோக்குடன், மற்ற மனிதர்களை சிறுமை செய்யும் நோக்குடன்’ எழுதப்படும் எல்லாமே குற்றம். இந்த வரையின்படி எதையும் எவரும் குற்றமென சொல்லி வழக்குத் தொடுக்க முடியும். வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படும், ஆனால் அதற்குப் பல ஆண்டுகளாகும். எழுதுபவர் நீதிமன்றம்தோறும் அலையவேண்டும்.

எழுதுபவன் தனியாள், அவனுக்கு எதிராக அமைப்புகள் எழுந்து வருமென்றால் அவன் ஒன்றும் செய்ய முடியாது. சசிதரூர் பெரிய ஆளுமை, பணபலம் கொண்டவர். பெரும்பாலான எழுத்தாளர்கள் இங்கே அன்றாடம் காய்ச்சிகள். பலர் அரசூழியர்கள். நான் அரசூழியனாக நீடித்திருந்தால் என் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை எப்படி எதிர்கொண்டிருக்க முடியும்?

இந்திய அரசியல்சட்டம் வாக்குறுதி அளித்துள்ள பேச்சுரிமைக்கே எதிரானது இந்த சட்டம். அடிப்படையில் ஜனநாயகத்தையே அழிப்பது. இதற்கு முற்றிலும் தடைபோட முடியாது. ஆனால் படைப்பிலக்கியம், கருத்துச்செயல்பாடு ஆகியவற்றைக் காக்கும் பொருட்டு தெளிவான வழிகாட்டு நெறிகள் வழியாக உச்சநீதிமன்றம் கீழ்நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். எவரும் எதையும் எழுத்தாளர் மேல் வழக்காகத் தொடுக்கலாம் என்னும் நிலை வரலாகாது. அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அவ்வழக்கு தொடுக்கப்பட்டிருந்தால் வழக்குத் தொடுத்தவருக்கு தண்டனை வழங்கப்படவேண்டும்.

இந்த வழக்கில் சசிதரூர் எழுதியது வரலாறு. அதற்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு இருப்பது வரலாற்று அறியாமை. எண்ணிப் பாருங்கள், ஓர் எழுத்தாளன் அல்லது ஆய்வாளன் வரலாற்றை எழுதுகிறான். வாசிக்கும் ஒருவருக்கு அவ்வரலாறே தெரியாது, தெரிந்து கொள்ள ஆர்வமும் இல்லை. ஆனால் அவர் வரலாற்றை தன் போக்கில் கற்பனை செய்து வைத்திருக்கிறார். எனவே உண்மையான வரலாற்றை கேள்விப்படும்போது அவர் புண்படுகிறார். தன் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகச் சொல்லி அவர் எழுதியவர் மேல் வழக்கு தொடுக்கிறார். [இயக்குநர் ரஞ்சித் மீதான வழக்கும் இவ்வகையானதுதான்]

இந்தக் கேலிக்கூத்து இங்கே நடந்துகொண்டே இருக்கிறது. முதலில் மதவிஷயங்களில். பின்னர் சாதி சார்ந்த ஆய்வுகளில். இப்போது அனைத்திலும். இங்கே எந்த அடிப்படைகளையும் அறியாதவர்களே மக்களில் 99 விழுக்காடு என்னும்போது எதை நம்பி ஆய்வுகளைச் செய்வது, இலக்கியங்களைப் படைப்பது?

*

கேரளத்தின் பெண்வழிச் சொத்துரிமையை ஆண்வழிச் சொத்துரிமை கொண்ட சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள் புரிந்துகொள்வது கடினம். ஒழுக்கநெறிகள் என்பவை அவரவர் பிறந்து வளர்ந்த சமூகச்சூழலை ஒட்டி உருவாகி மனப்பழக்கமாக நிலைகொள்பவை. நானறிந்த பெரும்பாலான மலையாளிகள் தமிழகத்தில் தாய்மாமன் மருமகளை மணந்து கொள்வதைப் பற்றிக் கேட்டால் திடுக்கிட்டு கைகால்கள் நடுங்கிவிடுவார்கள். அங்கு அது தந்தைக்குச் சமானமான உறவு, தந்தையைவிட ஒருபடி மேலானது.

பிரான்ஸிஸ் புக்கானனன் கேரளப் பெண்வழிச் சொத்துரிமையை புரிந்துகொள்ளாமல் ‘இங்கே எல்லா பெண்களும் விபச்சாரிகள்’ என எழுதியிருக்கிறார். அதற்கு முன் கேரளத்தைக் கைப்பற்றிய திப்பு சுல்தான் அவ்வாறு எண்ணியிருக்கிறார். பிற்காலத்தைய மலையாளிகளல்லாத வரலாற்றாய்வாளர்கள் பலரும் அவ்வாறு எழுதியிருக்கின்றனர். நம் பழங்குடிகள், வடகிழக்கு மாவட்ட மக்கள் பற்றியெல்லாம் இப்படி எழுதப்பட்டிருக்கிறது.

இவர்கள் அனைவருமே செய்யும் பிழை கேரளப் பெண்களின் சுதந்திரத்தை தாங்கள் பிறந்து வளர்ந்த ஆணாதிக்கச் சூழலில் நின்று பார்ப்பதும், மதிப்பிடுவதும்தான். விளைவாக கேரளப் பெண்கள் கட்டுப்பாடில்லாத ஒழுக்கம் கொண்டவர்கள், விலைபோகிறவர்கள் என்றெல்லாம் கற்பனை செய்துகொள்கிறார்கள்.

அதையே ஆணைப்பற்றி கேட்கலாம். ஓர் ஆணாதிக்கச் சமூகத்தில் ஆணின் பாலியல்பு எவரால் கட்டுப்படுத்தப்படுகிறது? ஆகவே அதிலுள்ள ஆண்களை எல்லாம் ஒழுக்கமற்றவர்கள் என்று சொல்லிவிடமுடியுமா? தாசித்தெரு தோறும் அலைந்த சென்ற நூற்றாண்டுத் தமிழகத்து மூதாதையர்களை விபச்சாரர்கள் என்று சொல்லிவிட முடியுமா?

ஆணாதிக்கச் சமூகங்களில் ஓர் ஆணுக்கு உரிமையல்லாதவளாக, அவனால் ஆதிக்கம் செய்யப்படாதவளாக வாழும் பெண்ணை பொதுவாக விபச்சாரிகள் என்றுதான் புரிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் அங்கே பெண் ஓர் உடைமைப் பொருள். எவருக்கும் உடைமை அல்லாத பொருள் அனைவருக்கும் உரியதுதான் என்பது அவர்களின் எண்ணம்.

ஆகவேதான் ஆணாதிக்கச் சமூகத்தில் கைவிடப்பட்ட பெண்களும் விதவைகளும் அனாதைகளாகி இழிவடைகிறார்கள். அவர்களுக்குச் சொத்துரிமை இல்லை. உழைத்து வாழும் உரிமைகூட இல்லை. அவள் தன்னை ஒடுக்கிக் கொண்டு உடன்பிறந்தாரின் கடும் சுரண்டலுக்கும் உட்படாவிட்டால் விபச்சாரியாகத்தான் ஆகவேண்டும். ஒருவரின் பெண்ணை இன்னொருவர் கவர முயன்றபடியே இருக்கிறார்கள். பெண்களுக்கான போர் ஓய்வதே இல்லை.

சென்ற நூற்றாண்டில் நடந்த பல கதைகள் இன்று எழுத்தில் பதிவாகியிருக்கின்றன. அ.மாதவையாவின் முத்துமீனாட்சி என்னும் நாவலை மட்டுமே வாசித்தால் போதும். பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் உச்சம் நம்மை கூசிச்சுருங்கச் செய்யும்.

சாதாரணமாக அத்தனை தமிழ்க்குடும்பங்களிலும் ஒரு கதை இருக்கும். இளவரசி போல வாழ்ந்த பெண்ணை கொஞ்சம் நகை மட்டும்போட்டு கட்டிக்கொடுப்பார்கள். சென்ற இடத்தில் அப்பெண் வேலைக்காரிக்கும் இழிவான வாழ்க்கையை அடைவாள். அவள் உடன்பிறந்தவர்கள் அத்தனை சொத்துக்களையும் எடுத்துக் கொள்வார்கள்.

அந்தப்பெண் விதவையாகித் திரும்பிவந்தால் அவளை சகோதரர்கள் கீழினும் கீழாக நடத்துவார்கள். அவளுக்கு வாழ வழியே இல்லை என்பதனால் அதுதான் விதி. கொஞ்சம் பணம் இருந்து அவள் தனியாகச் சென்று வாழமுயன்றால் விபச்சாரிப் பட்டம் கிடைக்கும்.

க.நா.சு அவருடைய ஒருநாள் நாவலில் சாத்தூர் சர்வமானிய அக்ரஹாரம் பற்றி அளிக்கும் சித்திரம் இது. அந்த தெருவில் பாதிப்பெண்கள் இளம்விதவைகள். அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ’விபச்சாரிகள்’ என்கிறார். அதாவது அவர்கள் அவ்வாறுதான் வாழமுடியும் என்பதே நிலை. ரகசியமாக ஆண்களுக்கு ஒத்துப்போகாமல் விதவை வாழ்க்கைகூட சாத்தியமல்ல.

கேரளச் சமூகமுறையை நேர் எதிராக உருவகித்துக் கொள்ளலாம். சென்ற நூற்றாண்டில் கேரளத்தில் குடும்பம் என்பதே பெண்தான். சொத்து முழுக்க பெண்களுக்குரியது. மூத்த அன்னைதான் குடும்பத்தலைவி. அங்கே பெண் தன் விருப்பப்படி, தன் தெரிவின்படி ஆண்களை ஏற்றுக்கொள்வாள். ஆண்கள் தங்கள் விருப்பப்படி பெண்களை அடைய முடியாது. பெண்ணுக்கு ஆண் கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை.

பெண்வழிச் சொத்துரிமைச் சமூகத்தில் ஆண்கள் ‘கணவர்கள்’ அல்ல. அவர்களுக்குப் பெண்மேல் எந்த ’உரிமையும் ‘ஆதிக்கமும்’ இல்லை. அவர்களால் பெண்களைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் பெண்களுக்கு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. குழந்தை பிறந்தாலோ ஓணத்திற்கோ சில சிறு பரிசுகள் கொடுக்கலாம், அவ்வளவுதான். ஆண்களை நம்பி குழந்தைகளோ பெண்களோ இல்லை.

அரசரே கூட பெண்ணுக்கு கட்டுப்பட்டவர்தான். அரசரை ஏற்கமுடியாதென தவிர்த்த, அரசரை தன்னிச்சையாக உறவுமுறிவு செய்து அனுப்பிய பெண்களின் கதைகள் வரலாற்றில் உள்ளன. மகாராஜா சுவாதித்திருநாள் ராமவர்மா கூட அவர் மனைவியால் ஒதுக்கப்பட்டார். அந்த அம்மையார் இன்னொருவரை ஏற்றுக்கொண்டார். அவர் இளமையில் உளம் சோர்ந்து இறந்தமைக்கு அதுவும் ஒரு காரணம்.

அதாவது ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண்கள் பெண்களை எப்படி நடத்தினார்களோ அப்படித்தான் பெண்ணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் ஆண்களை நடத்தியிருக்கிறார்கள். அது அதிகாரத்தின் இயல்பு. அங்கே பரிதாபத்துக்குரியவர்கள் ஆண்கள்தான்.

சொத்துரிமை பெண்களுக்கு அளிக்கும் இந்த தேர்வுரிமையைத்தான் ஆணாதிக்கச் சமூகம் ஒழுக்கமின்மை என புரிந்துகொள்கிறது. உயர்குடிப் பெண்களில் சொத்துக்கள் மீதான நிர்வாகத்தின் தேவைக்கு ஏற்ப, ஒன்றுக்குமேல் ஆண்களை ஒரேசமயம் மணந்து கொள்ளும் முறை இருந்தது. என் வீட்டுக்கு அருகிலேயே என் உறவினர்களிலேயே அப்படி சில குடும்பங்கள் இருந்தன. அந்த ஆண்கள் அப்பெண்களின் அறைக்கு வெளியே எவருடைய செருப்பு உள்ளது என்று பார்த்துத்தான் உள்ளே செல்லமுடியும். சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையிலேயே இந்த சித்திரம் வருகிறது.

இதே சித்திரம் தமிழகத்தில் ஆண்களை மையமாக்கி இருந்தது. பல மனைவியருடன் வாழும் தமிழகத்து குடும்பத் தலைவர்களில் கணவனுடன் செல்லும் மனைவி தன் கூந்தலில் உள்ள மலரையோ வேறேதாவது அடையாளத்தையோ அறைக்கு வெளியே வைக்க வேண்டுமென்ற வழக்கம் இருந்தது.

ஆண்கள் அப்படி இருந்ததை எண்ணி இன்று எவராவது கூச்சம் அடைகிறார்களா? இல்லை. அதைக் கொஞ்சம் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்வதே வழக்கம். ஆனால் பெண்கள் அப்படி இருந்தது ஏளனத்திற்குரியதாக ஆகிவிட்டது. ஆணாதிக்க மனநிலை நீடிக்கும் இந்தியப் பெருநிலத்தில் அந்த ஏளனம் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

எப்படி அந்தக்கூச்சம் கேரளத்தில் நிகழ்ந்தது? சென்ற இருநூறாண்டுகளாக கேரளச் சமூக அமைப்பு மெல்ல மெல்ல ஆணாதிக்கச் சமூகமாக ஆகிக்கொண்டே இருந்தது. அதற்குக் காரணம் நவீனக்கல்வி, ஆண்கள் சம்பாதிக்க ஆரம்பித்தது முதல் அவர்கள் தங்களுக்கான ‘ஆணாதிக்கக் குடும்பம்’ ஒன்றை உருவாக்க ஆரம்பித்தனர். அதில் பெண்ணை அடிமையாகக் கொண்டு வந்தனர்.

என் அப்பா செய்தது அதுதான். எங்கள் குடும்பத்தின் வீழ்ச்சிக்குக் காரணமும் அதுதான். அப்பா கொண்டுவந்து அடிமையாக குடிவைத்த பெண், என் அம்மா, ஒரு சராசரி தமிழ்க்குடும்பத்து அடிமைப்பத்தினி அல்ல. பெரும் வாசிப்பும், அரசியல் பிரக்ஞையும், ஆளுமையும் கொண்ட மலையாளப் பெண். அந்த மோதலில் அவர் தானும் அழிந்து அப்பாவையும் அழித்தார்.

நான் இதை விரிவாக எழுதியிருக்கிறேன். ஒழிமுறி இதையெல்லாம் வெளிப்படையாகப் பேசிய படம். அது வெளிவந்தபோது அது கேரளச் சூழலில் எந்த எதிர்ப்பையும் உருவாக்கவில்லை. மாறாக அது பெண்வழிக் கேரளத்தின் வீழ்ச்சியின் சித்திரம் எனக் கொண்டாடப்பட்டது. இன்றும் ஒரு கிளாஸிக் என சொல்லப்படுகிறது.

ஆனால் ஏன் சசிதரூர் தாக்கப்படுகிறார்? ஏனென்றால் அது ஆங்கில நூல். ஆங்கிலம் வழியாக இந்தியா முழுக்க உள்ள ஆணாதிக்கச் சமூகத்திற்கு இங்குள்ள பெண்வழிச் சமூகம் பற்றிய ஒரு அரைகுறைச் சித்திரம் சென்று சேர்கிறது. அவர்கள் அதை தங்கள் கோணத்தில் பிழையாகப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. அது மலையாளிகளுக்கு சங்கடத்தை அளிக்கிறது.

தமிழகத்து பெரியாரியர்கள் மட்டுமல்ல, சில முற்போக்காளர்கள் கூட கேரளப் பெண்வழிச் சமூகத்தைப் பற்றி இழிவாகப் பேசி இளிப்பதை நான் அவ்வப்போது வாசித்திருக்கிறேன். பலருக்கு விரிவான விளக்கங்களை அளித்திருக்கிறேன். கொஞ்சம் மார்க்சியம் வாசித்த, எங்கல்ஸ் பெயர் சொன்னால் தெரிகிற, முற்போக்காளர்களிடம் அதைச் சொல்லிப் புரிந்துகொள்ளச் செய்ய முடியும். பெரியாரியர்கள் பொதுவாக வரலாற்றுணர்வற்ற ஆணாதிக்கவாதிகள்.

கேரள பெண்வழிச் சமூகத்தின் சித்திரத்தை சசிதரூரின் நாவல் அளிக்கவில்லை. த கிரேட் இண்டியன் நாவல் என்பது மகாபாரதம் பற்றிய ஒரு பகடிநாவல். அது எந்த இந்திய ஆங்கில எழுத்துக்களையும் போல ஆங்கில வாசகர்களுக்காக, அவர்களின் கோணத்தில் பேசுவது. அது ஒரு மெல்லிய கேலியுடன் திரௌபதியை சித்தரிக்கையில் நாயர் பெண்களையும் சேர்த்துச் சொல்கிறது.

சசிதரூருக்கே பெண்வழிச் சொத்துரிமை அமைப்பின் மேல் கேலிதான் இருக்கிறது. அதன் வரலாற்று இடம் அவர் அறிந்திராதது. ஆகவே அந்நாவல் இயல்பாக எதிர்மறையாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒழிமுறி அந்த யுகத்தில் பெண்ணுக்கு இருந்த நிமிர்வை, அறத்தை பேசும் படைப்பு. ஆகவே ஒழிமுறிக்கு அந்தச் சிக்கல் வரவில்லை.

இதேபோன்ற எதிர்ப்பு எம்.எஸ்.சத்யூ இயக்கத்தில் தகழி சிவசங்கரப்பிள்ளையின் கயறு நாவல் சின்னத்திரைத் தொடராக தேசிய ஒளிபரப்பில் வெளிவந்தபோதும் எழுந்தது. தகழி மார்க்ஸிய பார்வையில் எழுதிய நாவலில் பெண்வழிச் சொத்துரிமை அமைப்பின் கடைசிக்காலத்துச் சித்திரத்தை அளிக்கிறார். அதில் ஆண்கள் கிட்டத்தட்ட அனாதைகள். இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ளவர்கள் அதை தவறாகப் புரிந்துகொள்வார்கள், தங்களை கேலிசெய்வார்கள் என கேரளத்துக்கு வெளியே வாழ்ந்த மலையாளிகள் எதிர்க்கவே அத்தொடர் நிறுத்தப்பட்டது.

இந்நூற்றாண்டில் மலையாள இளைய தலைமுறையினருக்கு இந்த வரலாற்றுப் பின்புலம் தெரியாது. அவர்கள் புழங்கும் சூழல் ஆணாதிக்கத் தன்மை கொண்ட இந்தியப் பொதுச்சூழல். பெண்ணைப் பற்றிய ஆணாதிக்கப் பார்வையே சரியான ஒழுக்கம் சார்ந்தது என அவர்கள் மெய்யாக நம்புகிறார்கள்.

இன்று நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வதும், மிஸிஸ் நாயர் மிஸிஸ் பிள்ளை என்று தங்களை அறிமுகம் செய்துகொள்வதும் உயர்குடி பெண்கள்தான். அவர்களின் பாட்டிகளுக்கு கணவர்கள் என எவரும் இருந்திருக்க மாட்டார்கள். அவர்கள் வெள்ளை வேட்டியும் மேலாடையும்தான் அணிந்திருப்பார்கள். தாலிகட்டுவது, விதவை ஆவது போன்ற வழக்கங்களே இருக்கவில்லை. முதலெழுத்தாக குடும்பப்பெயர்தான் போடப்பட்டது, அப்பா பெயர் அல்ல.

இச்சூழலில் பழையகாலத்தை பற்றிய வரலாற்று உண்மை பேசப்படுகையில் ஆணாதிக்க ஒழுக்கவியல் கொண்ட தங்கள் நண்பர்களின் பார்வையில் தாங்கள் சிறுமைப்பட நேரும் என அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு வரலாறு சரியான பார்வையில் அறிமுகம் செய்யப்படவேண்டும். அதற்கு வரலாற்றுணர்வுடன், சமூகப் பரிணாமத்தைப் பற்றிய தெளிவுடன் பேசவேண்டிய பொறுப்பு எழுத்தாளர்களுக்கு உண்டு.

இந்த ஒட்டுமொத்த விவாதமும் மேல்தட்டு பெண்களைப் பற்றியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் எண்ணிக்கையில் மிகப்பெரும்பான்மையினராக இருக்கும் போர்க்குடிகள், அடித்தள மக்கள், நாடோடிகள், பழங்குடிகள் கொண்டிருக்கும் ஒழுக்கவியலுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.

நான் 1984 வாக்கில் நான் பாடும் பாடல் என ஒரு படம் பார்த்தேன். அதில் விதவையான பெண் கணவன் விருப்பப்படி பொட்டு வைத்துக் கொள்கிறாள். அதைக்கண்டு அவளை மணமாகாதவள் என நம்பி ஒருவன் திருமணம் செய்யட்டுமா என்று கேட்டுவிடுகிறான். கொதித்து எழுந்த அவள் கொள்ளிக்கட்டையால் தன் நெற்றியைச் சுட்டுக்கொள்கிறாள்.

அன்று எனக்கு தமிழ்ச்சூழல் அவ்வளவாக தெரியாது. எங்களூரில் மறுமணம் மிகச்சாதாரணம். என் நண்பனின் அம்மாவே இரண்டாம் திருமணம் செய்துகொண்டவர்தான். தமிழ்நாட்டில் இப்படி மூர்க்கமாக இருப்பார்கள் போல என நினைத்துக் கொண்டேன்.

பல ஆண்டுகள் கழித்து சின்னத்தம்பி என்று ஒரு படம் பார்த்தேன். விதவையான ஒரு முதியபெண்ணை உச்சகட்ட அவமானத்துக்கு ஆளாக்கும் பொருட்டு அவளைக் கட்டிவைத்து அவள் வெள்ளைப்புடவைமேல் சாயம் பூசுகிறார்கள்.

ஆனால் அன்று எனக்கு தமிழக சமூகச்சூழல் தெரிந்துவிட்டிருந்தது. தமிழக மக்களில் மிகப்பெரும்பான்மையினர் விவாகரத்து, மறுமணம் செய்யும் வழக்கம் கொண்டவர்கள். அப்படியென்றால் சினிமா முன்வைப்பது எவருடைய மதிப்பீட்டை? எப்படி இங்குள்ள பெரும்பான்மை மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்? சினிமா முன்வைப்பது இங்கே நிலவுடைமை கொண்டிருந்த உயர்சாதியினரின் ஆணாதிக்க மதிப்பீட்டைத்தான். மற்றவர்கள் அது உயர்ந்தது என நம்புகிறார்கள், தங்கள் மரபைப்பற்றி தாழ்வுணர்ச்சி கொண்டிருக்கிறார்கள்.

சசிதரூர் மேல் வழக்கு தொடுத்த அந்தப் பெண் உயர்நிலை ஒழுக்கம் என நினைத்துக் கொண்டிருப்பது ஆணாதிக்க உயர்குடி ஒழுக்கத்தைத்தான். அவருக்குத் தேவையாக இருப்பது ஒரு வரலாற்றுப்புரிதல். துரதிர்ஷ்டவசமாக இங்கே பொதுக்கல்வியில், அரசியல்கல்வியில் முற்றிலும் இல்லாமலிருப்பது அதுதான்.

ஒழுக்கநெறிகள் காலந்தோறும் மாறுபடுபவை. நூறாண்டுகளுக்குள் நிலைபெயர்பவை. விவாகரத்து செய்து மறுமணம் செய்த பெண்ணை விபச்சாரி என்று சொல்லும் கிழவாடிகள் இன்னமும்கூட நம்முடன் வாழத்தான் செய்கிறார்கள். ஆகவே வரலாற்றில் இன்றைய ஒழுக்க முறைகளைத் தேடமுடியாது. அதை அப்பெண்ணுக்கு நாம் சொல்லியாகவேண்டும்.

நேற்றைய வாழ்க்கைக்கு நாம் பொறுப்பல்ல. அதில் இன்றைய நம் பார்வையில் ஒழுக்கமீறல்கள் என தோன்றுவன இருந்தாலும் நாம் அதற்காக நாண வேண்டியதில்லை. நாணவேண்டியது நேற்று நம் முன்னோர் இழைத்த மானுட ஒடுக்குமுறைக்காக. தீண்டாமை, சாதிக் கொடுமைகளுக்காக. சாதிப்பெருமை மற்றும் மேட்டிமைத் தனத்துக்காக. அதற்கு நாணுபவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஅரசி
அடுத்த கட்டுரைகுரோதம்