ஆபரணம், கடிதங்கள்-2

ஆபரணம், பா.திருச்செந்தாழை

அன்புள்ள ஜெ

திரூச்செந்தாழையின் எல்லா கதைகளையும் ஒன்றாகத் திரட்டி வாசித்தேன். அவர் எல்லா இணைய இதழ்களிலும் எழுதியிருந்தாலும்கூட இந்த இணையதளம் வழியாகவே எனக்கு அறிமுகமானார். நீங்கள் சுட்டியிருக்காவிட்டால் நான் வாசித்திருக்க மாட்டேன். நீங்கள் சுட்டிக்காட்டுவதுடன் எப்படி வாசிக்கவேண்டும், கதையின் இயல்பு என்ன என்பதையும் சுருக்கமாக சுட்டிக்காட்டுகிறீர்கள். அதேசமயம் கதையை விரிவாக விவாதித்து கதைவாசிக்கும் அனுபவத்தை இல்லாமலாக்குவதுமில்லை.

பா.திருச்செந்தாழை இமையம் போல இங்கே பேசப்படாத ஒரு உலகத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். இந்தவகையான எழுத்தின் அழகு என்பது இதிலுள்ள குரூடிட்டிதான். பண்படாத தன்மை. சிற்பங்களில் பெரும்பகுதி கல்லாகவும் ஒரு பகுதி சிற்பமாகவும் இருப்பதுபோல் இருக்கிறது. அந்தப்பகுதியை நோக்கி அந்த செதுக்கப்படாத பகுதி உருமாறிக்கொண்டே இருப்பதுபோல தோன்றுகிறது. அந்த சிற்பங்களின் பாணியில் உள்ளன துவந்தம், ஆபரணம் மாதிரியான கதைகள். முக்கியமான எழுத்தாளர். அவரை அறிமுகம் செய்தமைக்குப் பாராட்டுக்கள்

ஆர்.ஜெயசீலன்

***

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு

வணக்கத்துடன் தமிழரசி எழுதுவது

திருச்செந்தாழையின் ஆபரணம் கதை எங்கள் கூட்டுக்குடும்பம் எப்படி உடைந்ததோ அதை அப்படியே திரும்ப உயிரும்சதையுமா பார்த்த மாதிரி இருந்தது.

நிறைந்த பால்செம்பிலிருந்து இடுக்கிவைத்து வெளியே எடுக்கப்பட்டு, சிறிய துணியால் அழுந்தி துடைக்கப்பட்ட நெக்லஸை, தனது மரப்பெட்டியின் நிறைந்த நகைக்குவியலுக்கு மத்தியில் பத்தில் ஒன்றாகப் போடும் முன்பாகத் தலையை இரகசியமாகத் தழைத்து ஒருமுறை நுகர்ந்து பார்த்தாள் மரியம். தங்கத்திற்கேயுரிய சுறுசுறுவென நாசியைத் தீண்டுகிற மின்மணத்தோடு பாலின் வெம்மையான கவுச்சி வாசனையும் சேர்ந்தெழுந்தது.

அவளையறியாமல் உதட்டில் மலர்ந்துவிட்ட ஒரு புன்னகையோடு திரும்புகையில் சித்திரையின் அழுது ஓய்ந்துவிட்ட – அதன் வழியாகச் சுடுகின்ற தீர்க்கம் வந்துவிட்ட – கண்களை நேருக்கு நேர் மோதினாள். ஒருகணம் உள்ளம் பதறிவிட்டது. அவள் பார்க்கப் பார்க்க தன் உதட்டில் அரும்பிவிட்ட சிரிப்பைச் சன்னஞ்சன்னமாக அணைத்தபடி வந்தவள், ஒரு புள்ளியில் சித்திரையின் கண்களுக்கெதிரான தனது மினுங்குகின்ற கண்களின் கூர்மைக்கு மாறிவிட்டாள். அந்தப் பார்வைக்கு முன் தன்னைத் தழைத்துக்கொண்ட சித்திரை சற்று முன் தோடுகள் கழற்றப்பட்ட தனது வெற்றுக் காது மடல்களை மென்மையாக நீவியபடி எங்கோ திரும்பிக்கொண்டாள்.

நடுவிலுள்ளவன் கையிலிருந்து உருவிய சேலைத்தலைப்பால் குழந்தையை முற்றிலும் போர்த்தினாள் சித்திரை. திடீரென தன்மீது கவிந்த இருளைக் கிழித்தபடி தனது முகத்தை முண்டி வெளியே வந்தது அதன்முகம். தன்னை மறந்து அந்தச் சிறிய கண்களின் சிரிப்பைப் பார்த்தபடி பால்வாசனை எழுகின்ற அதன் முகத்தை நுகர்ந்து முத்தமிட்டாள் சித்திரை. பிறகு, சட்டென எதையோ அடக்க முயன்றவளாக தன்னை நிதானித்துக்கொள்ளும் முன்பாக, ஜன்னல் கண்ணாடி பதறி விரைந்து மேலேறுவதைப் பார்த்தாள். பிறகு, நீண்ட நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தாள்.

கதை இந்த இரண்டு சம்பவத்திலேயே தெளிவாக சொல்லப்பட்டு விட்டது. எங்கப்பா பத்து வயசுல வீட்ட விட்டு ஓடி வந்து அல்லல் பட்டு தனியா இருந்து மளிகை கடை ஆரம்பிச்சவங்க. கடை கைபிடிச்சவுடனே ஊர்லயிருந்து அண்ணனையும் தம்பியையும் கூட்டி வந்து சேர்ந்திருந்து வியாபாரம் செய்தார்கள். ஆறு கடை. கடையில பத்து கடை பையன்கள். ஓரே வீட்டில் ஒரே சமையல் என்று சுற்றியிருக்கறவங்க சொந்தம் எல்லாம் பார்த்து பொருமற அளவுக்கு இருந்த பெரிய வீடு.

எங்கப்பாக்கு இருந்த தனி நிமிர்வு இப்பவும் என் கண்ணுக்குள்ள இருக்கு. அண்ணன் தம்பி ஒரு படி கீழன்னு இருந்த ஒரு அடுக்குமுறை அப்ப புரியலை. ஆபரணம் படிச்ச பிறகு புரியுது.எங்கப்பாக்கு நாங்க ஐந்து மக்கள். பெரியப்பாக்கும் சித்தப்பாவுக்கும் குழந்தையில்லை. நான் மூத்தவள். எனக்குப்பிறகு ஒன்பது வருடம் குழ்ந்தையில்லாமலிருந்து அடுத்தடுத்து நான்கு பிள்ளைகள்.

பெரிய வீடு. வீட்டில அரிசி பருப்பு சர்க்கரை மூட்டைகள். புளிச்சிப்பம் என்று மளிகை சாமான்கள் உத்திரம் வரை அடுக்கப்பட்டிருக்கும். தினம் மாட்டு வண்டில பொருட்கள் வந்திறங்கும். சைக்கிள்ல கடை பையன்கள் மூட்டைகளை கட்டி வைச்சி எடுத்துட்டு போய்கிட்டேயிருப்பாங்க. குண்டு கணக்கில் விறகு வரும். பானை பானையா சோறு வடிப்பாங்க.

என்னை நீ பொதுப்பிள்ளைன்னு சொல்லிச்சொல்லியே வளர்த்தார்கள். அம்மா மடியில உட்கார்ந்த ஞாபகமேயில்லை. இது ஏன்னு இப்ப புரியுது. இப்படியெல்லாம் முட்டுக்கொடுத்தும் கூட குடும்பம் உடைஞ்சுது. பால் தயிரா மாறுவதற்கு உறை ஊத்துனது எந்த விசயம்னு தெரியாமலே பால் தயிரா மாறி புளிச்சி நொதிச்சி நாற்றமடித்தது.

கடைசியில் சோறாக்கிப் போட்டுப்போட்டே என் உள்ளங்கை தேஞ்சிப்போச்சின்னு ஒருத்தரும் பூண்டும் வெங்காயமும் கை பார்த்தே என் கை ரேகை அழிஞ்சிதுன்னு ஒருத்தரும் சொல்ல எங்கம்மா ஒன்னும் சொல்லலை. இரண்டு பேரும் சேர்ந்து வருசம் தவறாம நீ வயித்த தள்ளிகிட்டு உட்கார்ந்திருந்த உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் சேர்த்து நாங்க பண்டுவம் பார்த்தோம்னு சொல்ற இடத்தில வந்து முடிஞ்சுது. வீடு கடை சொத்து எல்லாமே மூன்று பாகமா பிரித்து தனித்தனி சமையலுக்கு மாறினார்கள்.

கூட்டுக்குடும்பம் பிரிஞ்சி தனிக்குடும்பமா மாறுன ஒவ்வொரு வீட்லயும் சொல்ல ஒரு கதையிருக்கும். கசப்பான பகுதியாயிருந்தாலும் வாழ்க்கையில இதுவும் ஒரு பகுதிதான்.

கதையாசிரியர் இதை தொட்டெடுத்து உள்ளங்கையில வைச்சி நம்ம முகத்துக்கு எதிர்ல காண்பிக்கிறாங்க. ருச்செந்தாழைக்கு  அவருடைய பெயரைப் போலவே கதைகளின் தலைப்பும் அருமையாக அமைகிறது. மனதைத் தொட்ட எழுத்து.

நன்றி.

தமிழரசி சந்திரசேகரன்.

***

சிறுகதைகள்-செந்தில் ஜெகன்னாதன்,திருச்செந்தாழை

துவந்தம், கடிதங்கள்

துவந்தம், கடிதங்கள்

துவந்தம், கடிதங்கள்

கதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்

ஆபரணம், பா.திருச்செந்தாழை

ஒரு புதிய வீச்சு

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12
அடுத்த கட்டுரைபயிற்சிகள் உதவியானவையா?