மண்ணுள் உறைவது
வணக்கத்திற்கும் பேரன்புக்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுடனான ஏசியாநெட் மற்றும் கைரளி தொலைக்காட்சி நேர்காணல்கள் மிகவும் அருமையாக இருந்தன. அவற்றை யூட்யூபில் ஆழ்ந்து ரசித்து சிரித்து சிந்தித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
சுஷில்குமார் அவர்கள் எழுதிய மண்ணுள் உறைவது கதையை இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். விண்ணில் உள்ளதே மண்ணிலும் உள்ளது. மானுடனின் ஒவ்வொரு எண்ணமும் சொல்லும் செயலும் பிரபஞ்சப் பெருவெளி எங்கும் எழுதாமல் எழுதப்பட்டு கொண்டுதானே இருக்கிறது. மெய்யியலின் உள்ளுறை ஞானம் அவர் கதைகளில் மிகச் சிறப்பாக பயின்று வருகிறது. அவரின் கதைகள் ஒவ்வொன்றும் எளிதில் உணர்த்தப் பட முடியாத சூட்சுமமான கர்ம வினைக் கொள்கை போன்ற விஷயங்களை அழகாக காட்சிப்படுத்துகின்றன. காரிய காரணங்களை மிகச்சரியாக தொடர்புபடுத்த முடியாவிட்டாலும் மானுட இனம் ஏதோ ஒருவகையில் செயல் விளைவு தத்துவத்தை உணர்ந்துதான் இருக்கிறது. இதை ஒரு கதையின் மூலமாக வாசிக்க நேரும் பொழுது அது மனதில் ஆழப்பதிந்து நல்வழி நடப்பதற்கான ஊக்கத்தையும் மன வலிமையையும் வாசகர் அறியாமலேயே அவருக்குள் அது கடத்திவிடுகிறது.
ஒவ்வொருவர் வாழ்விலும் இதுபோல எத்தனையோ எளிதில் அவிழ்த்து விட முடியாத மர்ம முடிச்சுகள் நிறைந்து தான் இருக்கின்றன. ஒரு இலக்கியவாதி தனக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு சிறு நிகழ்வையும் எப்படி கதையாக விரித்து எடுக்கிறான் என்பதே அவனின் வெற்றியை தீர்மானிக்கிறது. ஒரு நல்ல கதை என்பது இலக்கியவாதியின் வெற்றி மட்டுமல்ல அவன் வாழுகின்ற சமூகத்திற்கான பெரும் கொடையும் கூட. உயிரிய மானுட விழுமியங்களை வளர்ப்பதில் சிறுகதைகளின் பங்கு மிக முக்கியமானது. தொடர்ச்சியாக மறை விஷயங்களைக் குறித்து தனது சிறுகதைகளில் மிக அழகாக எழுதி வருகின்ற நண்பர் சுசில் குமார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி
***
அன்புள்ள ஜெ
சுஷீல்குமாரின் சிறுகதை ஒரு சிறந்த படைப்பு. நீங்கள் சொன்னதுபோல கதையை எப்படியும் எந்த வடிவிலும் சொல்லமுடியும். ஏனென்றால் இந்தக்கதை நெரேஷனின் வலிமையால் நிலைகொள்ளவில்லை. மையமாக அமைந்த மெட்டஃபரின் வலிமையால் நிலைகொள்கிறது. உலக இலக்கியத்தை எடுத்துப்பார்த்தால் மெட்டஃபர்களை உருவாக்குவதுதான் இலக்கியத்தின் உச்சகட்ட சாதனையாக இருந்திருக்கிறது. நினைவில் அவைதான் வளர்கின்றன. மொழியழகு, வடிவ அழகு எல்லாம் அந்தச் சமயத்துக்குத்தான். மிகச்சிறந்த படைப்பு.
மண்ணுக்குள் என்ன இருக்கிறது என்ற கேள்வி பல படைப்புகளை ஞாபகப்படுத்துகிறது. மண்ணின் ஆழத்தில் அக்கினி இருக்கிறது என்பது ஒரு நம்பிக்கை. முதலில் நீர். அப்புறம் நெருப்பு. மண் என்பது ஒரு மாபெரும் நினைவு என்று ஆப்ரிக்கபழமொழி உண்டு. எல்லாவற்றையும் மண் ஞாபகம் வைத்துக்கொள்ளும். மண்ணில் புதைந்தவை எல்லாமே எப்படியோ முளைக்கும்.
அழகான கதையை எழுதிய சுஷீலுக்கு பாராட்டுக்கள்.
ராஜேந்திரன் எம்