வாசகர்கள்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெமோ,

வணக்கம். நலம்தானே?

வருடம் 2015 விஷ்ணுபுர விழாவில் பல வாசக நண்பர்களை முதன்முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு வாய்த்தது. அதில் ஒருவர் வாசகர் மீனாம்பிகை. அதிகபட்சம் சற்று சிரிப்பார் அவ்வளவுதான் என்று தோன்றியது. விழா நேரத்தில், வழக்கமான, கடைசி நேரத்தில் மறந்துவிட்ட பொருட்களை வாங்க/தேடி அதிரடியாக செல்வேந்திரன் பின் இருக்கையில் ஒட்டிக்கொள்ள ஸ்கூட்டரை முறுக்கியபடி பறந்தது நினைவிருக்கிறது. அவ்வளவுதான் தெரியும். அவர் எழுதி வாசித்ததாக எதுவும் நினைவில்லை (வெ.மு தளத்தில் எழுதியிருக்கலாம், தெரியவில்லை). பின், சமீபத்தில் ஞானியைப் பற்றிய கடிதம்.

மீனாம்பிகை

எனவேதான் “மெய்யாசிரியனுடன் ஒரு நாள்” என்ற கட்டுரையை வாசித்தவுடன் ஆச்சரியம் எழுந்தது. ஏதோ, மனக்குழப்பத்துடன் ஊட்டி ஆசிரமத்திற்குச் செல்கிறார். அந்த நாளைப்பற்றிய பதிவு – நிதானமாக காலை 5:30 மணிக்கு பஸ் பிடிப்பதிலிருந்து ஆரம்பித்து, அந்த பஸ் மலைப்பாதையில் மெல்ல ஊர்ந்து மேலேறுவது போன்ற ஒரு நாள் பயணம்- புறவிஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கையில் அவர் வாசித்த, உணர்ந்த அக விஷயங்களையும் குறிப்பிட்டுகொண்டே போகிறார்.

ஊட்டி ஆசிரமத்திற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு இன்னும் வாய்க்கவில்லை. ஆனால் அந்த அனுபவங்களை நண்பர்கள் பலர் கூறக்கேட்டிருக்கிறேன். “ஜன்னலில் மழை அறைந்து கொண்டிருந்ததை” நீங்கள் எப்போதோ எழுதியது – இவை அனைத்தும் சேர்ந்து ஆசிரமத்தை, அதன் சுற்றத்தைப் பற்றிய சித்திரம் மனதில் பதிந்திருக்கிறது. மீனாம்பிகை கடிதத்தில் அது இன்னும் விரிவானது.

கடிதம், முன்னர் சொன்னது போல் மலைப்பாதை பஸ் போலவே எவ்வித அவசரமுமின்றி (12-12:30 ‘x’ meeting; 14:00-15:30 ‘y’ workshop; 17:00-17:30 daily status report!) மிக நிதானமாக போகிறது. அவருடைய கேள்வியை வெளிப்படையாக கேட்காமலேயே ஆசிகள், உபதேசங்கள், சிறு உரையாடல்கள் வழியாக, நினைவு கூறல் வழியாக பதிலைக் கண்டடைகிறார். அடுத்த நாளை, எதிர்காலத்தை தெளிவாக சந்திக்கப்போகிறார் என்று பட்டது.

“எஸ் ஆல் க்ளியர்” என்று சிரித்தபடி சொன்னேன்.

கதிர்

அடுத்த கடிதம், நண்பர் கதிர்முருகனிடமிருந்து. இவரை இதுவரை நேரில் சந்திக்கவில்லை, நவீன “அறிதல்” முறைகளின் ஒன்றான வாட்ஸப் வழியேதான் இதுவரை பழக்கம்(!)

விபாஸனா தியான முறையை சொந்த அனுபவத்திலிருந்து நிதானமாகவும் தெளிவாகவும் விவரிக்கிறார். இத்தகைய வாசகர்கள் தங்களுடன் தொடர் தொடர்பில் இருக்கிறார்கள்; முடிந்தவரை பயணத்தில் பங்கு கொள்கிறார்கள். கூட இருக்க, இருக்க, பயணிக்க பயணிக்க, அவர்களது சிந்தனை போக்குகள் துலங்குவதைத் தாண்டி தங்கள் சொல்லவருவதை தெளிவாகவும் எழுதுவது தெளிவாக தெரிகிறது.

நானும் கிரிதரனும் இதைப்பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம்- இப்படி அமைவது ஒருவிதத்தில் கொடுப்பினைதான். எல்லாருக்கும் எல்லாம் அமைந்துவிடுவதில்லை. எங்களுக்கு அமையவில்லை; இவர்கள் வாய்ப்பதை முழுதாக அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள்.

செந்தில்

இப்படி நினைத்துக் கொண்டிருக்கையில்தான் வாசகர் செந்திலின் யுடியுப் பேச்சைக் கேட்டேன், கண்டேன்!

பள்ளிப்படிப்பு படிக்காத, இன்னும் எழுதத் தெரியாத ஒருவர், உங்களைச் சந்திக்காத, எந்த தொடர்பும் இல்லாத ஒரு வாசகரின் பேட்டி! நேரில் சந்திப்பு, தொடர்பில் இருப்பது பயணங்களில் இடம் பெறல் போன்ற எதுவுமே தேவையில்லை என்று படீரென அடித்துச் சொன்ன பேட்டி..! (கண்களிருந்தும் குருடர்கள் போல எழுத படிக்கத்தெரிந்தும் நான் இன்னும் எத்தனை வாசிக்கவில்லை… சற்று வெட்கித் தலைகுனிந்தேன்).

வாசகரின் தொடர் சங்கிலியின் உறுதிக்கு உதாரணம். பல நண்பர்கள் ஜெமோ எழுத்துகளை வாசிக்க கடினம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கு அருமையான பதிலை செந்தில் சொல்லாமல் சொல்லிவிட்டார்!

“அறம்” தொடர் வந்தபோதுதான் தங்களை, கடிதங்கள் எழுதித் தொடர ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன். இத்தனை வருடங்களில் எத்தனையோ வாசகர்கள் -வயது, படிப்பு, தொழில் என்று பல விஷயங்களில் வித்தியாசப்பட்டிருந்தாலும் வாசித்துக்கொண்டும் தொடர்பிலும் இருக்கிறார்கள். சிலர், வழியில் தொடர்பிலிருந்து விலகி, மறைந்து, முறித்துக்கொண்டு… சிலர் எழுத ஆரம்பித்து சில காலத்திற்குப்பின் தொய்வு ( எத்தனையோ காரணங்கள், என்னைப்போல்!)

இதுபோலவே மேலும் மேலும் புது வாசகர்கள் தோன்றி, அல்லது இப்போதுதான் தெரியவந்து, எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். யார்க்கு கொடுப்பினை அதிகம் (எழுத்தாளருக்கா, வாசகர்களுக்கா!) என்று சட்டென சொல்லத் தெரியவில்லை!

வாசகர்களை வெண்முரசுக்கு முன் மற்றும் பின் என்றும் பிரிக்கலாம் என்று தோன்றுகிறது. அது ஏற்படுத்திருக்கிற வாசக சலனம், தீவிரம் – சிந்திப்பில், தம் சிந்தனையை எழுத்தில் கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியிருக்கிறது என்று உறுதியாக தெரிகிறது. இதற்கு இவ்வாசகர்களின் எழுத்துகளே சாட்சி.

ஒவ்வொருத்தரின் பாதையும் தேடலும் தனிதான்; வெண்முரசு ஒரு கலங்கரை விளக்கம் போல் அவரவருக்கான வழியை காட்டிக்கொண்டிருக்கிறது- இதன் பாதிப்பு, தீவிரம் இன்னும் வரும் வருடங்களில் மேலும் அருமையாக வெளிவரும் என நம்புகிறேன்.

சிறுவயதில் கார்த்திகை நாட்களில் வீடுகளில் திருவிளக்குகள் ஏற்றுவது ஓர் உற்சாகமான விஷயம். ஒரு விளக்கைக் கொண்டு எத்தனை விளக்குகளை ஏற்றுவது என்பது குறித்து எங்களுடையே போட்டியே நிலவும்.

வெண்முரசு திருவிளக்கின் வாயிலாக எத்தனை எத்தனை விளக்குகள் சுடர் விடுகின்றன…

மாரிராஜ்

இரு நாட்களுக்கு முன் நண்பர் மருத்துவர் மாரிராஜிடம் பயணச்செய்திகளை விசாரித்துக் கொண்டிருந்தேன். உணவு பற்றிய பேச்சு வந்ததுமே நீர்க்கோலம், கொன்றதும், உண்டி அளித்ததுமான பீமனது கைகள் என்று  உற்சாகமாக பேசத்துவங்கிவிட்டார்! வெண்முரசை வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலிருந்தும் ஒரே ஒரு அடி தூரத்திலிருந்து அணுகிவிடுகிறார்கள் வாசகர்கள்!

அதே சமயம், மாரிராஜ், இன்னொன்றும் சொன்னார்: ஒரு குறள்.

“தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

அஃதிலார் மேற்கொள் வது”

தவத்தை அடைவதற்கும், முன்பு தவம் செய்திருக்கவேண்டும் என்றார். இல்லையா பின்ன!

சுபா

பின் குறிப்பு: இக்கடிதத்தை எழுதி அனுப்பும் முன் ஒரு முறை படித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது நண்பர் சுபா அவர்களின் மொழிபெயர்ப்பைப் பற்றிய பதிவைக் கண்டேன்! இவர், இன்னொரு பெரிய வாசகி, பின்னாளில் மேலும் பெரிய இடங்களை அடையப்போகிற தீவிரம், இன்றைய எழுத்துகளிலேயே தெரிகிறது…

சிவா கிருஷ்ணமூர்த்தி

சிவா கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள சிவா,

இப்பட்டியலில் நான் சேர்க்கும் மேலும் பலர் உள்ளனர். பலர் சென்ற ஓராண்டுக்குள் வந்தவர்கள். மிகுந்த விசையுடன் எழுதத் தொடங்கியிருப்பவர்கள். அவர்களை நேரில் உங்களுக்கு அறிமுகமில்லாமல் இருக்கலாம். இன்று எவர் எங்கே ஒரு சிற்றிதழை வெளியிட்டாலும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என என் வாசக நண்பர்களில் இருந்து வந்தவர்களே மிகப்பெரும்பாலானவர்களாக இருப்பார்கள்.

நான் அனைவவரிடமும் கையளிக்க முயல்வது தீவிரத்தை மட்டுமே. நாம் சோர்வு, சலிப்பு, உளச்சிக்கல்கள் என சிதைவுறுவதெல்லாம் தீவிரமின்மையால்தான். உளம்குவிந்த செயல்தீவிரம் எதுவானாலும் அது யோகம். இங்கே அனைத்திலிருந்தும் நம்மை மீட்பது அது மட்டுமே.

ஜெ

விபாசனா, ஓர் அனுபவம் சில எண்ணங்கள் – கதிர்முருகன்

ஒரு பேரிலக்கியத்தின் வருகை – சுபா

மெய்யாசிரியனுடன் ஒரு நாள் – மீனாம்பிகை

முந்தைய கட்டுரைபுகைப்பட முகங்கள் -கடிதம்
அடுத்த கட்டுரைஆலயம், கடிதங்கள்