பழைய மலையாளப் பாடல்களுக்கு ஏன் செல்கிறேன் என என்னையே கேட்டுக்கொள்கிறேன். கடந்தகால ஏக்கமா? இல்லை என சொல்ல முடியாது. ஆனால் அது மட்டுமல்ல. அதற்கப்பால் ஒரு பண்பாட்டுத் தேவையும் உள்ளது. கேரளப்பண்பாட்டின், அதாவது நான் வளர்ந்த சூழலின், நுண்ணிய நினைவுகளை மீட்டும் காட்சிகளும் இசையும் எழுபது எண்பதுகள் வரை சினிமாவில் இருந்தன. அவை எனக்கு இன்றும் தேவையாகின்றன.
என்ன ஆயிற்று எண்பதுகளுக்குப் பிறகு? தொண்ணூறுகளில் சட்டென்று ஒரு பெரும் செய்தித்தொடர்புப் புரட்சி நிகழ்ந்தது. அத்தனை கிராமங்களும் ஒரே தொடர்புப் பரப்பாக இணைந்தன. அந்த செய்தித்தொடர்பு உடனடியாக வணிக மயமாக்கப்பட்டது. முதலில் ஒவ்வொரு ஊருக்கும் இருந்த தனித்தன்மைகள் மறைந்தன. பின்னர் கேரளம், தமிழ்நாடு என்னும் பண்பாட்டுத் தன்மைகள் அழிந்தன. பின்னர் உலகமே ஒற்றைப் பண்பாட்டுப் பரப்பாகியது.
இன்று, நாம் ஆப்ரிக்க இசையை கேட்கிறோம். ஜாஸ் என்றும் ராக் என்றும் செல்கிறோம். ஆனால் இங்கே ஒவ்வொரு சிற்றூரும் நீண்டகாலத் தனிமைத் தவத்தால் உருவாக்கிக்கொண்ட தனித்தன்மை கொண்ட இசையும் பாடல்களும் நடனங்களும் இல்லாமலாகின. இன்று நாம் டோனெட்ஸ் சாப்பிடுகிறோம். பிட்ஸா சாப்பிடுகிறோம். ஆனால் நம் சிற்றூர்களின் தனித்த சுவைகள் இல்லாமலாகிவிட்டன.
தொண்ணூறுகளின் இறுதியிலேயே அது நிகழத்தொடங்கிவிட்டது. அன்று நம் தனித்தன்மைகள் பழையவையாக, சலிப்பூட்டுவனவாக இருந்தன. வரவுகள் எல்லாமே கிளர்ச்சியூட்டும் புதுமைகளாக இருந்தன. ஆவேசத்துடன் நம் மரபிலிருந்து நாம் வெட்டிக்கொண்டோம். எல்லா புதியவற்றையும் தழுவிக்கொண்டோம். நம் குழந்தைகளுக்கும் அவற்றையே அளித்தோம். இரண்டாயிரத்துக்குப் பின் வந்த தலைமுறைக்கு உள்ளூர்த் தனித்தன்மைகள் என்றால் என்னவென்றே தெரியாது.
இன்று உலகளாவிய பண்பாடு என்பது ஒருவகை மதிப்பீட்டுச் சுரண்டல், அதன் விளைவு மானுடத்திற்கு பேரிழப்பு என உணர்ந்த ஒரு சிறு இளைஞர்வட்டம் அழிந்துவரும் வட்டாரத் தனித்தன்மைகளை நாடிச் செல்கிறது. ஆனால் மிகப் பெரும்பான்மைக்கு அப்படி தனி ருசிகளே இல்லை. உலகளாவ ஒரே ரசனை. ஒரே மனநிலை.
நான் இழந்தவற்றை மீண்டும் மீட்டிக்கொள்ள இந்தப் பாடல்களை தேடுகிறேன். என் இளமையில் திருவாதிரைக் கொண்டாட்டம் மிகமிக முக்கியமான ஒன்று. அது சிவனுக்காக பார்வதி தவமிருந்த நாள். அன்று பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. ஆண்கள் அன்றிரவு வெளியே வரக்கூடாது. ஊரெல்லாம் பெண்கள் ஆடிப்பாடி களியாடுவார்கள். அவர்களுக்கான ஒரு ரகசியக் கொண்டாட்டம்.
இந்தப்பாடல் அதைச் சித்தரிக்கிறது. இப்படி அந்த நாளின் கொண்டாட்டத்தைச் சித்தரிக்கும் பல சினிமாப்பாடல்கள் அன்று இருந்தன. முன்பும்கூட எழுதியிருந்தேன். [பாவைக்களியாட்டம்] இந்தப்பாடலில் ஒலிக்கும் கேரளத்திற்குரிய வாத்தியங்கள், மலையாளியின் செவிக்கு இனிய மெட்டு. சுசீலாவின் நிலவொளியென உருகி ஒளிரும் குரல்.
இரவில், நிலவொளியில் இந்த நடனம் நடைபெறுகிறது. அன்று உச்சகட்டமாக வெளிச்சம் பெய்து அதை தேவையான அளவுக்கு ஃபில்டர் போட்டு குறைத்தே இக்காட்சியை எடுப்பார்கள். பலசமயம் நிலவின் ஒளியே கண்கூசும்படி தெரிவது அதனால்தான். இன்று இந்த காட்சியைப் பார்த்தபோது அன்று இத்தனை குறைந்த ஒளியில் இதை எடுத்த மேதை யார் என்னும் திகைப்பு ஏற்பட்டு, படத்தின் பெயரைப் பார்த்ததுமே “வேறு எவர்!” என்னும் எண்ணம் வந்தது. ஒளிப்பதிவு மேதை ஏ.வின்செண்ட். இயக்குநரும் அவர்தான். மலையாளத்தில் எக்காலத்திற்கும் உரிய சில பெரும்படைப்புகளை உருவாக்கியவர் அவர்.

தீர்த்தயாத்ர கூட ஒரு நல்ல படம்தான். கருப்புவெள்ளை படங்களை பார்க்கும் பழக்கம் இருக்கவேண்டும். யதார்த்தமான, மெல்லச்செல்லும் படங்களை பார்க்கும் மனநிலை இருக்கவேண்டும். ஒரு வாழ்க்கையின் வட்டம் மொத்தமாக அறிமுகமாகும் படம் இது. பார்த்ததுமே “நீங்க என்ன சாதி?” என்று கேட்கும் ஒரு காலகட்டத்தின் வாழ்க்கை. முந்தைய யுகம் சரிந்து அடுத்த யுகம் பிறக்கிறது. ஓங்கி நின்றவை சரிகின்றன. அது வரலாற்று நெறி. ஆனால் சிக்கிக்கொண்ட மனிதர்கள் எளிய பலிகள்.

இந்த சினிமாவின் ஆசிரியர் வி.டி.நந்தகுமார் மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். கொடுங்கல்லூர் அரசகுடும்பத்தின் ஒரு கிளையில் 1925ல் பிறந்தவர். ஆனால் கடும் வறுமையில் வளர்ந்தார். இதழாளரும் எழுத்தாளருமானார். அவருடைய ரண்டுபெண்குட்டிகள் என்னும் நாவல் லெஸ்பியன் உறவைப் பற்றியது. அது சினிமாவாகியிருக்கிறது. எழுபதுகளில் கமல்ஹாசன் நடித்த சில மலையாளப் படங்களுக்கு எழுதியிருக்கிறார். கமல்ஹாசனின் அக்கால நண்பர்களில் ஒருவர். 2000த்தில் மறைந்தார்.
சந்த்ர கலாதரனு கண்ணுகுளிர்க்கான்- தேவி
பந்தடிச்சாடுந்நு சாஞ்சாடுந்நு
சஞ்சல சரணத்தில் சிலங்ககள் கிலுங்ஙி
கொஞ்சும் தரிவளகள் தாளத்தில் குலுங்ஙி
பர்வத நந்தினி, இந்நு அவள்க்கு அகம்படி
உர்வசி மேனக சுந்தரிமார்
ரம்ப திலோத்தம நர்த்தகிமார்
மதனன் மீட்டுந்நு மணிவீண
நந்திகேசன் மிருதங்கம் முழக்குந்நு
மானஸ சரஸின்னு கரயில் உலஞ்ஞாடும்
மாலேய சுரஃபில மலர்வனியில்
சந்த்ர கிரணங்கள் சாமரம் வீசும்போள்
பந்துர நர்த்தனம் துடரூ நீ துடரூ நீ
|
இசை ஏ.டி.உம்மர்,
பாடல் பி பாஸ்கரன்
படம் தீர்த்தயாத்திரை. 1978
சந்திரக்கலையை சூடியவனுடைய கண்கள் குளிர தேவி
பந்து அடித்து விளையாடுகிறாள் சாய்ந்தாடுகிறாள்
ஆடும் கால்களில் சதங்கைகள் ஒலித்தன
கொஞ்சும் கொத்துவளையல்கள் தாளத்தில் குலுங்கின
மலைமகள் அவளுக்கு துணையாக
ஊர்வசி மேனகை என சுந்தரிகள்
ரம்பை திலோத்தமை என நர்த்தகிமார்
மன்மதன் மீட்டுகிறான் மணிவீணை
நந்திகேசன் மிருதங்கம் முழக்குகிறான்
மானச சரோவரத்தின் கரையில் ஊசலாடும்
மலர்க்கொடிகள் நிறைந்த பூங்காவில்
சந்திர கதிர்கள் சாமரம் வீசும்போது
காதல் நடனத்தை நீ தொடர்க
பாவைக்களியாட்டம்