தியானமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும்

விபாசனா, ஓர் அனுபவம் சில எண்ணங்கள்

அன்புள்ள ஜெ..

பல்வேறு தியான முறைகள் குறித்து உங்களது புனைவுகளிலும் கட்டுரைகளிலும் உரையாடல்களிலும் பார்த்திருக்கிறோம்.

உண்மை என்பதை இது போன்ற பயிற்சிகளால் அணுக இயலாது என்ற தரப்பு குறித்த உங்கள் பார்வையை அறிய விருப்பம்.

Truth is Pathless land என்ற ஜே.கிருஷ்ணமூர்த்தி தரப்பை எப்படி பார்க்கிறீர்கள்? கடவுளை நேருக்கு நேராகப் பார்க்க வைத்தல், சூன்ய நிலையை அடைதல், மகா நிர்வாணா என அனைத்துக்குமே அவற்றுக்குரிய தியான முறைகள் உண்டு. அவற்றைப் பின்பற்றினால், அந்தந்த முறைகள் வகுத்துள்ள இலக்கை அடையலாம் (இறை தரிசனம், தானழிதல், மகாமுக்தி, சித்தியடைதல் போன்றவை). ஆனால் இதற்கும் “உண்மை” என்பதற்கும் சம்பந்தமில்லை, உண்மை என்பது பயிற்சிகள் மூலம் அறுதியாக அடைய வேண்டிய இலக்கு இல்லை. அப்படிப் பயிற்சிகளால் அடைவது அந்தந்த பயிற்சிகளின் விளைவுகள்தானே தவிர உண்மை நிலை ஆகாது என்கிறார் ஜேகே.

எந்த தியான முறைகளுமே அறியாத ஒருவன் இப்படி சொல்லிவிட முடியாது. முதலில் அம்முறைகளைப் பின்பற்றி, அவைதரும் அனுபவங்களை அனுபவித்துப் பார்த்துவிட்டு வந்து பேசு என்று சொல்லி விடுவார்கள்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் பொருத்தவரை அவரை உலக குரு ஆக்கும் பொருட்டு அனைத்து தியான முறைகளையும் சின்ன வயதிலேயே கற்பித்தனர். அனைத்தையும் பார்த்துவிட்டுதான் அவர் இப்படி சொல்கிறார்.

குருவற்று இரு, தியானப்பயிற்சி என்பது சுயமனோவசியம் என்பதைத் தவிர வேறல்ல போன்ற அவர் கூற்றுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்,

உங்கள் கேள்விக்கு பதிலாக நான் இன்னொன்றைச் சொல்லமுடியும். “உண்மை என ஒன்று இல்லை” என்கிறார் யூஜி கிருஷ்ணமூர்த்தி. என்ன சொல்கிறீர்கள்?

இப்படி ஒருவரை ஒருவர் மறுக்கும் பத்துப்பதினைந்து மெய்ஞானிகள், தத்துவவாதிகளின் வரிகளை எடுத்து வைக்கிறேன்.எதன் அடிப்படையில் மதிப்பிடுவீர்கள்? எப்படி முடிவுக்கு வருவீர்கள்? நம்மிடம் என்ன அளவுகோல்கள் இருக்கின்றன? அவர்களின் மொழிநடையை வைத்தோ, புகழைவைத்தோ, அவர்களைப்பற்றிய கதைகளை வைத்தோ மதிப்பிட்டு முடிவுசெய்யவேண்டுமா என்ன?

நாமே தியானம் செய்து, நாமே அறுதியாக அறிந்துகொண்ட ஞானம் இருந்தால் மட்டுமே நம்மால் அவர்கள் சொல்வது சரியா பிழையா என மதிப்பிட முடியும் இல்லையா? ஆனால் அதற்கு நாம் எவரையாவது ஏற்றுக்கொண்டு, பயின்று தெளிந்திருக்கவேண்டும். இந்த முரண்பாட்டை யோசித்திருக்கிறீர்களா?

அவ்வாறு ஞானம் இல்லாத நிலையில் இவர்கள் சொல்வதில் எது சரி என நாம் விவாதிப்பதென்பது வெறுமே வம்பளப்பு மட்டும்தானே?

*

இதைப்பற்றிய என்னுடைய தெளிவை மட்டும் சொல்கிறேன். மெய்மையின் வழியில் வெவ்வேறு ஆசிரியர்கள் உண்டு. அவர்கள் அடைந்தவையும், காட்டியவையும் உண்டு. அவற்றில் உங்களுக்கு எது ஏற்புள்ளதோ அதைத் தெரிவுசெய்யலாம். அதை நம்பி, கற்று, ஈடுபட்டு வெல்லலாம். ஆனால் எதையோ ஒன்றை பற்றி முன்சென்றே ஆகவேண்டும். செல்லும் வழியிலேயே ஒன்று பயனற்றது எனக் கண்டால் உதறிச் செல்லலாம். உங்கள் வழி உங்களுக்கு. உங்களுக்கு ஊழிருந்தால் அடையலாம், அமையலாம்.

ஆனால் வெவ்வேறு மெய்யாசிரியர்களின் கூற்றுக்கள் மற்றும் அவர்கள் காட்டும் வழிகளை ஒப்பிட்டு எது சரி என்றும் எது சிறந்தது என்றும் விவாதிக்கிறோம் என்றால் நாம் வெறும் அகந்தையைக் கொண்டு விளையாடுகிறோம்.

அவ்வாறு ஞானியரை மதிப்பிட்டு தீர்ப்புசொல்ல முயல்கிறோம் என்றால் நாம் நம்மை வைத்துக்கொள்ளும் இடம் என்ன? அனைத்தையும் அறிந்து அறுதியாக முடிவெடுப்பவராக நம்மை உருவகித்துக் கொள்கிறோம் இல்லையா? அந்தத் தகுதி நமக்கு உண்டா? இருந்தால் நாம் ஏன் இன்னொருவரின் வழிகாட்டலை நாடவேண்டும்?

தொன்மையான மெய்வழிகளிலேயே சங்கரரின் வழியல்ல ராமானுஜருடையது. அவர்களிருவரின் வழி அல்ல மத்வருடையது. ராமானுஜரும் மத்வரும் சங்கரரை கண்டித்த பின்னரே தங்கள் வழிகளை முன்வைக்கின்றனர். இவர்களில் எவரை ஒருவர் ஏற்றுக்கொள்கிறார் என்பது அவருடைய இயல்புக்கும், வாய்ப்புக்கும், அவற்றை உருவாக்கும் ஊழுக்கும் இயைப நிகழ்வது.

நான் சங்கரரின் வழியை ஏற்றுக்கொண்டவன். சங்கர வேதாந்தத்தின் வளர்ச்சிநிலையாகிய நாராயணகுருவின் தரிசனமரபைச் சார்ந்தவன். ஆனால் வழிநிற்பவன் அல்ல, பயணி. ராமானுஜரையும் மத்வரையும் கற்றுக்கொள்வேன். ஆனால் சங்கரருடன் அவர்களை ஒப்பிட்டு யார்சொல்வது ‘உண்மை’ என்று விவாதிக்க மாட்டேன். மத்வரை ஏற்றுக்கொண்ட ஒருவர் சங்கரரைக் கண்டிக்க முற்பட்டால் ஒரு புன்னகைக்கு அப்பால் அவரிடம் ஒரு வார்த்தைகூட உரையாட மாட்டேன்.நான் ஏற்றுக்கொண்ட வழி என்னுடையது. அதை மறுக்கும் எந்த வழியுடனும் எனக்குப் பூசல் இல்லை.

ஏனென்றால் அதனால் எந்தப் பயனுமில்லை. அந்த விவாதம் நம்மை ஆணவமும், அதன்விளைவான அறிவின்மையும் கொண்ட அற்பச்சழக்காளர்களாக ஆக்கிவிடும். என்னுடைய பார்வையில் எனக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி உகந்தவராக இல்லை. அதற்கான காரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் ஜே.கிருஷ்ணமூர்த்தி சொன்னது சரியா பிழையா என விவாதிக்க மாட்டேன்.

*

நீங்கள் சொன்னதனால் இதைப் பேசுகிறேன். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அனைத்து தியான- யோக வழிகளையும் கற்றார் என்பதெல்லாம் நம் சமகாலத்தைய தொன்மம். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வழி என்பதே கூர்மையான அறிவைக்கொண்டு ஆராய்ந்து முன்செல்வது. ஆகவே ஜே.கிருஷ்ணமூர்த்தியையும் அவ்வாறே அணுகியாகவேண்டும்

அவர் தியோசஃபிகல் சொசைட்டியில் வளர்ந்தவர். தியோசஃபிக்கல் சொசைட்டி என்பது இந்திய மெய்யியல் மேல் ஆர்வம் கொண்ட மேடம் பிளவாட்ஸ்கி, ஆல்காட் போன்ற வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்தியாவின் மெய்யியல் மரபுகள் எதனுடனும் அது நேரடியாக தொடர்பு கொண்டிருக்கவில்லை. எந்த உரையாடலையும் நிகழ்த்தவுமில்லை. எதனுடைய தொடர்ச்சியாகவும் அமையவில்லை. அது இங்கே ஒரு தனித்த அமைப்பாகவே நீடித்தது. இன்று செயலற்றுவிட்டது.

மேடம் பிளவாட்ஸ்கி, ஆல்காட் போன்றர்கள் இந்திய மெய்யியல் மேல் பேரார்வம் கொண்டவர்கள், அன்று கிடைத்த இந்திய மதங்களின் நூல்களை ஆழ்ந்து கற்றவர்கள். அவர்களுக்கு இந்திய மெய்யியலை தொகுத்ததில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு என்பதை நான் எப்போதுமே சொல்லிவருகிறேன். ஆனால் அவர்களுக்கு இந்தியமதங்களில் எதிலும் குருமரபு என ஏதுமில்லை. தியோசஃபிக்கல் சொசைட்டிக்கு தனக்கென மெய்யியல் பாரம்பரியம் என ஒன்று இல்லை. ஆகவே அதில் ஞானிகள் என எவருமில்லை. அதற்குரிய தியான, யோகப் பயிற்சிகளும் இல்லை.

ஜித்து கிருஷ்ணமூர்த்தி தியோசஃபிகல் சொசைட்டியால் பத்தாண்டுகள் பயிற்றுவிக்கப்பட்டார். தன் 16 ஆவது வயதிலேயே லண்டன் கொண்டு செல்லப்பட்டார். அங்கே ஆன்மிக உரைகளை ஆற்றத்தொடங்கினார். அவருடைய அனுபவங்களெல்லாமே தியோசஃபிக்கல் சொசைட்டி அவருக்கு உருவாக்கித்தந்த சிறுவட்டத்திற்குள்தான். தன் 34 ஆவது வயதில் அவர் தியோசஃபிக்கல் சொசைட்டியை உதறி ‘பாதையற்ற பயணத்தை’ அறிவித்தார்.

ஜித்து கிருஷ்ணமூர்த்தி எந்த இந்திய மெய்ஞான மரபிலும் உள்ளே சென்று பயின்றவரோ, தன்னை முழுதளித்து ஈடுபட்டவரோ அல்ல. அவர் எந்த இந்து மெய்ஞானியையும் ஆசிரியராகக் கொண்டவர் அல்ல. அவருடைய பயணத்திற்கும் இந்து- பௌத்த மரபுகளின் மெய்யியல் கல்வி மற்றும் தியான-யோகப் பயிற்சி முறைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்திய ஞானமரபுகளில் குரு யார், முறைமை எது என்பது அடிப்படையான கேள்வி என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பாதை முற்றிலும் ஐரோப்பியத் தன்மை கொண்டது என்று சொல்லலாம். தத்துவத்தை ஒரு பாடமாக ஆக்கி, அதை உரிய ஆசிரியர்களைக் கொண்டு கற்றுக்கொள்வது அது. உண்மையில் கிறிஸ்தவ மடாலயங்களில் இருந்து தியோசஃபிக்கல் சொசைட்டி பெற்றுக்கொண்ட முறை. இங்குள்ளது முற்றிலும் வேறு கல்விமுறை. இது அறிதல்முறை அல்ல, ஆதல்முறை. அதை ஒரு குருதான் அளிக்க முடியும். அவர் அதை கற்ற அறிஞர் அல்ல, அதன் வழியாக மெய்மையை அறிந்தவர். ஒரு கல்லூரியில் வேதாந்தம் பயில்வதற்கும் ஒரு குருகுலத்தில் சீடனாகி பயில்வதற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடுண்டு.

இந்து, பௌத்த மரபுகளில் ஒரு மெய்ஞானி உருவாகி வருவதன் வழிகளென்ன என்று பாருங்கள். அதற்கு பொதுத்தன்மைகள் பல கொண்ட ஒரு பாதை உண்டு. அந்த மெய்ஞானி இளமையிலேயே அடிப்படை வினாக்களுடன் கல்விகற்றுக் கொண்டிருப்பார். கல்வியின் எல்லையை எங்கோ உணர்வார். மெய்யான கல்விக்காக அலையத் தொடங்குவார். பல ஆசிரியர்களைச் சந்திப்பார், ஒவ்வொருவரிடமும் ஒன்றை கற்பார். அறுதியாக அவருக்கு ஒரு குரு அமைவார். அந்த மெய்யாசிரியருக்கு அவர் தன்னை முற்றளிப்பார். அந்த ஆசிரியரால் உடைத்து உருக்கி திரும்ப வார்த்து எடுக்கப்படுவார். அவரால் ‘மறுபிறப்பு’ எடுக்கச் செய்யப்படுவார்.அது ஒரு மிகப்பெரிய பயணம். பல ஆண்டுகள் தேவைப்படுவது.

அதன்பின் தன்னை முழுமை செய்துகொள்வதற்கான இன்னொரு அலைச்சல் அவருக்கு தொடங்குகிறது. அந்த ஆசிரியரே மாணவரை விலக்கி அந்த அலைச்சலுக்கு அனுப்புவார். ஒரு கட்டத்தில் தன் கனிதலை தானே உணர்ந்தபின் அந்த மெய்ஞானி தன்னை வெளிப்படுத்தத் தொடங்குவார். இங்கே எவரும் ‘சுயம்புகள்’ இல்லை. அனைவரும் ஏதோ ஒரு மரபின் தொடர்ச்சிகள். ஒரு நெருப்பில் இருந்தே இன்னொரு நெருப்பு பற்றிக்கொள்கிறது. அதே சமயம் எந்த ஞானியும் முழுமையாக எதையும் பின்தொடர்பவர் அல்ல. ஒவ்வொருவரும் தனக்கான வழியை, பார்வையை முன்வைப்பவராகவும் இருப்பார்.

ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் மொழி மேலைநாட்டவருக்கு உரியது. அவருடைய பார்வையும் மேல்நாட்டுப்பார்வையே. இந்தியமெய்ஞானத்தைச் சந்தித்து உரையாடிய மேலைநாட்டு மெய்யியியலின் விளைவாக உருவான ஆளுமை அவர். அவர் அந்த சில மெய்யறிதல்களை முன்வைக்கிறார். அவை அவரால் சொற்பொழிவுகளாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஓஷோ போலவே மரபுவாதத்தில் உறைந்திருந்த இந்திய உள்ளத்தை உடைத்து புதிய வினாக்களை எழுப்பி செயலூக்கம் கொள்ளச் செய்யும் ஆற்றல் அவற்றுக்கு உண்டு. வெறுமே ‘நம்பிக்கை – நம்பிக்கைமறுப்பு’ என இருநிலைகளில் மட்டுமே செயல்படும் மேலைநாட்டு உள்ளங்களுக்கு ஆழத்தைச் சுட்டிக்காட்டவும் அவற்றால் முடியும்.

ஜெ.கிருஷ்ணமூர்த்தி சொல்வதை நான் இவ்வாறுதான் எடுத்துக்கொள்வேன், அவர் முன்வைக்கும் பாதையில் தியானம் யோகம் ஆகியவற்றுக்கு இடமில்லை. அவர் சொற்கள் வழியாக அறிந்துகொள்வதே போதும் என நினைக்கிறார். அவருடைய வழிகள் சிந்தனை சார்ந்தவை, மரபான சிந்தனையை புதியசிந்தனை ஒன்றால் உலுக்கி உகுத்து விடுதலின் விடுதலையை அவர் முன்வைக்கிறார், அவ்வளவுதான்.

உங்கள் பழைய சிந்தனைகளை உலுக்கி உதறி உங்களை முன்னெடுக்க அவர் உதவுகிறார் என்றால் நீங்கள் அவர் காட்டும் வழியில் செல்லலாம். அது உங்களுக்குச் சரியானதே. நீங்கள் உங்கள் நிறைவை கண்டடையலாம். அதன்மேல் எனக்கு மறுப்போ விமர்சனமோ இல்லை. விவாதிக்கவும் வரவில்லை. ஆனால் எந்த ஒரு வழியையும் பின்பற்றுபவர் அதில் முழுமையாக ஈடுபட்டு ஆழ்ந்து கற்கவேண்டும். அதன்பின்னரே அதைப் பரிசீலிக்க முடியும்.ஆரம்பத்திலேயே அதையும் இன்னொன்றையும் ஒப்பிட்டு விவாதிப்பது கல்விக்கு எதிரான செயல்.

*

ஊழ்கம் அல்லது தியானம் அல்லது தவம் என்பது எல்லா மதங்களிலும் பல நூற்றாண்டுகளாக இருந்துவருகிறது. ஊழ்கமும் தியானமும் தவமும் புரிந்த மெய்ஞானிகளின் மிகநீண்ட பட்டியல் வரலாற்றில் உள்ளது. அவர்களின் வாழ்வை, செய்தியை, அவர்கள் சென்றடைந்த வழியை முழுமையாக நிராகரிக்க ஒரு தத்துவவாதியின் மேற்கோளே எனக்குப் போதும் என நான் நினைக்க மாட்டேன்.

மேலும் நான் எதை நிராகரிக்கிறேனோ அதை நானே ஆழமாக அறிந்துகொள்ளவே முயல்வேன். அறிந்தபின் என் அனுபவத்தைக் கொண்டு ஐயமின்றி நிராகரிப்பேன். அப்போதுகூட ‘இது என் அனுபவத்தின் வெளிச்சத்தில் பட்ட எனது கருத்து’ என்றே சொல்வேன். அறுதி உண்மை என்று முன்வைக்க மாட்டேன்.

கொஞ்சம் சிந்திக்கும், கொஞ்சம் உள்ளத்தைக் கவனிக்கும், கொஞ்சம் இலக்கியம் வாசிக்கும் எவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் நம் அறிதல்கள் என்பவை எப்போதும் மிகமிக எல்லைக்குட்பட்டவை என்பது. நம் சூழல், நம் தேவைகள், நம் உணர்வுகள், நம் ஆணவம், நம் நினைவுகள் என எவ்வளவோ விஷயங்களால் அவை தீர்மானிக்கப்படுகின்றன.

நம்முடைய வெளிப்பாடுகளை நாம் கூர்ந்து பார்த்தாலே இதைக் காணலாம். ஒரு தருணத்தில் நாம் எப்படி வெளிப்படுகிறோம்? கருணையானவராக, சீற்றம்கொண்டவராக, பொறுமையானவராக, எரிச்சல்கொண்டவராக, முற்போக்காக, பிற்போக்காக… அந்தந்த கணத்தில் தன்னியல்பாக அந்த வெளிப்பாடு நிகழ்கிறது. அது நிகழ்ந்தபின்னரே நாம் அதை அறிகிறோம்.

அது நிகழ்ந்தபின் அந்த வேடத்தை பெரிதாக்கி ஆடி முடிக்கிறோம். அதுவே நாம் என நிறுவும்பொருட்டு நம் தர்க்கத்தை பயன்படுத்துகிறோம், சொற்களைக் குவிக்கிறோம். ஆனால் அந்தரங்கமாக நாம் அறிவோம், நாம் கொண்ட அந்த வெளிப்பாடு நாம் அல்ல. அப்போது ‘ஏனோ’ அப்படி வெளிப்பட்டுவிட்டோம், அவ்வளவுதான். அந்த வெளிப்பாடு நேர்தலைகீழாகவும் இருந்திருக்கலாம். கொஞ்சம் நம்மை நாமே ஆராய்ந்தால் அதற்கான சில காரணங்களை கண்டடைவோம். பெரும்பாலும் காரணம் நம் அறிதலுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.

நாம் என நாம் முன்வைக்கும் நம் குணச்சித்திரமே இப்படி தன்னியல்பாக நம்மை மீறி நிகழ்வது என்றால் நாம் வெளியே இருந்து அறிவது எப்படிப் பட்டதாக இருக்கும்? நாம் நமக்கென வகுத்துள்ள இந்த குணச்சித்திரத்தைக் கொண்டுதான் வெளியுலகையே அறிகிறோம். அந்தக் குணச்சித்திரத்துக்குத் தான் வெளியுலகம் எதிர்வினையும் ஆற்றுகிறது. விளைவாக நாமறியும் அனைத்தும் நாம் உருவாக்கிக் கொண்டே இருக்கும் இந்தக் குணச்சித்திரத்திற்கு ஏற்பத் தன்னியல்பாக உருமாறிவிடுகிறது.

இந்நிலையில் ‘கற்று’ அறிந்து மெய்யை அடைவதெல்லாம் இயல்வதே அல்ல. நூல்களை வாசித்தோம், சொற்பொழிவுகளைக் கேட்டோம், அறிந்து தெளிந்துவிட்டோம் என்பதுதான் மிகப்பெரிய பாவனை.

அந்தப் பாவனையை அடைந்ததும் நாம் சில மேற்கோள்களை கற்றுக் கொள்கிறோம். சில நிராகரிப்புகளைச் சொல்ல ஆரம்பிக்கிறோம். நம்மை விடுதலை பெற்றவராகவும், மெய்யுணர்ந்தவராகவும், ஆகவே ஒருபடி மேலானவர்களாகவும் நினைக்க ஆரம்பிக்கிறோம். அது மிகப்பெரிய மாயை. ஆசாரவாதிகள் நியமநிஷ்டைகளை செய்வதனால் அவர்கள் தூயவர்களாக ஆகிவிட்டதாக எண்ணிக் கொள்ளும் பேதமைக்கு இது நிகரானதே.

கல்வியும் அறிவும் நோய் என்ன, நோய்க்கூறுகள் என்ன என அறிய மட்டுமே உதவும். சிகிச்சை என்பது அறிந்தபின் தொடங்கவேண்டியது. அந்த சிகிச்சையே தியானம் என்பது. தியானம் என்பது ஒன்றல்ல. அதன் வழிகள் பல. ஒவ்வொருவருக்கும் ஒன்று. வாழ்க்கையில் தியானத்தை கொஞ்சமேனும் செய்யாதவர், தியானநிலை அமையாதவர் எவரும் இல்லை. ஒரு தருணத்தில் ‘கொஞ்சநேரம் அமைதியா உக்காந்துக்கறேன்’ என நாம் அமர்கிறோமே, அதுவே தியானம்தான். தியானப்பயிற்சி என்பது அதையே முறையாக நிகழ்த்திக் கொள்வது.

மற்ற எல்லா வரையறைகளையும் விடுங்கள், தியானம் என்றால் மிக எளிதாக இப்படி விளக்குகிறேன். அறிதலில் உள்ள திரிபுகளை கூர்ந்த கவனம் வழியாகவும், தொடர்பயிற்சி வழியாகவும் களைதல்”.

மற்ற வழிமுறைகள் என்ன சொல்கின்றன என எனக்கு தெரியாது. வேதாந்த மரபில் தியானம் என்பது நாம் நம் சூழல் வழியாகவும் நம் ஆணவம் வழியாகவும் உருவாக்கிக் கொள்ளும் பாவனைகள் மற்றும் பொய்யுணர்வுகளைக் களைந்து தூய அறிவு நோக்கி படிப்படியாகச் செல்வதுதான். அடுத்தபடியில் நாம் நம் இருத்தல் வழியாக இயல்பாகவே உருவாகிவந்த திரிபுகளைக் களைகிறோம். இத்திரிபுகளையே மாயை என்கிறோம்.

தியானம் என்பது ஒருவகை கல்வி. நூல்வழியாக அடையப்படுவது புறக்கல்வி என்றால் தியானம் என்பது அகக்கல்வி. எந்தக் கல்வியும் அறியாமையிலிருந்து விடுதலையை அளிப்பதை அதன் ஒவ்வொரு நிலையிலும் உணரலாம். தியானத்தின் விளைவு என்பது ‘கடைசியாக’ சென்றடையும் இடம் அல்ல. அதன் எல்லா படிகளிலும் நாம் அந்த அளவுக்கான விடுதலையை அடைந்தபடித்தான் இருப்போம்.

ஜெ

***

முந்தைய கட்டுரைவருகைகள்- கடிதம்
அடுத்த கட்டுரைஒரு நாளின் டைரி