வெண்முரசு : ரசனையும் ஆய்வுநோக்கும்- சுபஸ்ரீ

வெண்முரசின் வாசிப்புக்குத் தன்னை முழுக்க அளிக்கும் வாசகருக்கு அது தரும் வாசிப்பனுபவத்தை, அறிதலில் தொடங்கி ஆதல் ஆகும் கணங்களை, அகத் தெளிவை, ஆன்மிகமான மாற்றங்களை உணர்ந்து கொண்டே இருக்கும் வாசகி என்னும் இடத்தில் நின்றே இதனை எழுதுகிறேன்.

‘வெண்முரசு’ நாவல் நிரையின் 26 நாவல்களைக் குறித்து முனைவர் ப. சரவணன் அவர்கள் எழுதி வந்த கட்டுரைகள் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது தளத்தில் வெளிவந்தன. நாம் வாழும் காலத்தில் ‘வெண்முரசு’ என்னும் நிகரற்ற படைப்பு உருவாகி வந்தது என்னும் பெருமையோடு அது குறித்து எழுதப்படும் ஒவ்வொரு கட்டுரையையும் கடிதத்தையும் வாசித்து, தனி வாசிப்பில் தவற விட்டிருக்கக்கூடிய நுட்பங்களை அறிந்து கொள்வது வாசகருக்கு இன்றைய இணைய யுகத்தில் இருக்கும் ஒரு பெரும் வாய்ப்பு. காவியங்களைக் கூட்டு வாசிப்பு செய்வதுபோல பல மனங்கள் இணைந்து ஒரு மாபெரும் ஆக்கத்தை அணுகி அறிவது தரும் இன்பத்தை இது போன்ற கட்டுரைகள் நமக்கு அளிக்கின்றன.

மகாபாரதத்தின் நவீன மறுஆக்கமான ‘வெண்முரசு’ நாவல் வரிசை மகாபாரக் கதையை தொடர்ச்சியாகச் சொல்லி வந்தாலும் ஒவ்வொரு நாவலும் தனித்து வாசிக்கக் கூடிய வகையில் அமைந்தது. ஒவ்வொரு நாவலின் கட்டமைப்பும் உட்பொருளும் தனித்த சுவை கொண்டது. அவ்வகையில் ஒவ்வொரு நாவலின் மையப் பேசுபொருள், அதன் அழகியல், உணர்வெழுச்சி தருணங்கள் போன்றவற்றை அடிக்கோடிடும் கட்டுரைகள் இவை.

இமயப்பனிவரைகளை நெருங்கும்போது ஒட்டுமொத்தம் உருக்காட்டும் முன்னர், முதலில் வானின் ஒரு பகுதியென முகில்களின் ஊடாக ஆங்காங்கே பனிச் சிகரங்கள் தலை காட்டத் துவங்கும். ஒரு துண்டு பொன்முகிலென ஒளி பெற்று மின்னும். அத்தகைய காட்சித்துளிகள் கண்ணறியா விட்டாலும் அங்கே எப்போதும் நின்றிருக்கும் ஒரு பேரிருப்பை நம் அகம் முன்னுணரச் செய்பவை. இந்நூலில் இடம் பெற்றுள்ள ரசனை சார்ந்த கட்டுரைகள் அவ்விதம் ஒரு சிறு சாளரம் வழியாக வெண்முரசின் பேரிருப்பை நாம் உணர்ந்து கொள்ள உதவுகின்றன. உள்ளே நுழைந்து தொலைந்து போக அழைப்பு விடுகின்றன.

ஒவ்வொரு நாவலிலும் இடம் பெரும் மனம் கவர்ந்த நாடகீய தருணங்களை எழுச்சித் தருணங்களை இக்கட்டுரைகள் பேசுகின்றன. அது தவிர, மையச்சரடு / பேசுபொருள், மொழியழகு, சொல்லாட்சி, புனைவு உத்தி, இலக்கிய ஒப்பீடுகள் என பல கோணங்களில் வெண்முரசை அணுகியிருக்கும் கட்டுரைகள் இவை.

மையப் பேசுபொருள்:

வெண்முரசின் ‘முதற்கனல்’ என்னும் முதல் நாவல் அனைத்தையும் தொடங்கி வைக்கிறது. எல்லா விளைவுகளுக்குமான கனல் விதைக்கப்படுகிறது. சுனந்தை, கங்கை, சத்தியவதி, அம்பை எனப் பெண்களின் ஆற்றாத கண்ணீரும் குன்றாத விழைவும் பேசும் இப்பகுதி கூரை மீது பற்றிப் படர்ந்தேறும் நெருப்பின் வேகம் கொண்டிருக்கிறது. ‘எந்தக் கனலும் தான் உருவாகக் காரணமானவரை அழிக்காமல் அவிவதில்லை’ என்ற இதன் மையத்தைச் சரவணன் முன்வைக்கிறார். இது போல ஒவ்வொரு நாவலின் மைய இழையை சொல்லிச் செல்கிறார்.

மொழியழகு:

வெண்முரசின் மொழியின் அழகைச் சொல்ல வரும்போது நீலம் நாவல் அதன் உச்சம். வெண்முரசின் நான்காவது நாவலாகிய நீலம் ஒரு இசைப் பாடலின் இனிமை கொண்ட குறுங்காவியம். திருப்புகழை வாசிப்பது போல என்கிறார் இக்கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் சரவணன் .

அணைந்தது கருந்தழல். அலையடங்கி அமைந்தது கருநதி. அதிலாடி எழுந்தது என் கருநீலக் கண்ணன் கழல்

இதுபோல நூலெங்கும் ஒலிக்கும் தமிழின் சந்தச் சுவை, ஒவ்வொரு சொல்லும் தாளத்தில் அமைந்த சொல்நடனம், சொல்லிசை. எங்கிருந்தோ விண்ணில் இருந்து பொழிந்திறங்கும் குழலிசை போன்ற சொற்களும் அதன் உள்ளுறை இசையமைதியும் அவ்வண்ணம் உணர வைப்பவை.

சொல்லாட்சி:

தமிழ் சொற்களின் ஒலியழகும் இசையழகும் விஞ்சி நிற்பது நீலம் நாவலில் என்றால் தனக்கென ஒரு தனிமொழியை உருவாக்கிக் கொண்டிருக்கும் வெண்முரசில் பயின்று வரும் சொல்லாட்சியை, புத்தம் புது சொல்லி ணைவுகளை, வாசித்த நொடி காட்சியாகி விடும் புதிய பதங்களை அனைத்து நாவல்களிலும் காண முடியும். அதுபோல நினைவில் இருந்து உதிர்ந்து போன பழந்தமிழ்ச் சொற்கள் பலவும் புத்துயிர்கொண்டு வருகின்றன. சான்றாக வெண்முரசின் 23ஆவது நாவலான ‘நீர்ச்சுடர்’ நாவலில் இரண்டு அழகிய பழந்தமிழ் சொற்களை ஆசிரியர் சரவணன் அடிக்கோடிடுகிறார்.

ஒன்று ‘நிரத்தி’, மற்றொன்று ‘கவடி’.

“இதில் நிரத்தி’, ‘நிரத்துதல்’ என்றால், ‘பரப்பி’, ‘பரப்புதல்’ என்று பொருள். சரி, அது என்ன ‘கவடி’?” என்று கேள்வியெழுப்பிக்கொண்டு சிலப்பதிகாரத்தில் இச்சொல் பயின்று வருவதை அடையாளப்படுத்துகிறார்.

வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக்

கவடி வித்திய கழுதையே ருழவன்

குடவர் கோமான் வந்தான்”

“அமலையாடுதல்” என்ற சொல் குறித்துப் பேசும்போது, அதன் தொல்காப்பிய விளக்கம் “அட்ட வேந்தன் வாளோ ராடு மமலையும்”  ஒளி பாய்ச்சுகிறது. வெறும் சொல் விளக்கமாக அன்றி, சங்க இலக்கியத்தின் போர் சார்ந்த புறத்திணைகளில் எவ்வெவற்றில் இதுபோன்ற வெற்றிக் களிப்புகள் இடம்பெறுகின்றன என்பதையும் எடுத்துச்சொல்லி, திருஷ்டத்யும்னன் ஆடும் அமலையாட்டத்தை ‘ஒள்வாள் அமலை’ என்று கூறலாம் என்கிறார் சரவணன்.

ஓரோர் இடத்தில் வந்து விழும் அரிய சொற்கள்கூடப் பேசப்படுகின்றன. வெண்முரசின்  14ஆவது நாவல் ஆகிய ‘நீர்க்கோலம்’ நாவலில் வரும் ‘பொருபுலி’ என்னும் சொல் “நம் இளவரசர் களத்தில் ‘பொருபுலி’ என நின்றிருக்கிறார்…” கலிங்கத்துப் பரணி’யில் வருகிறது என்னும் குறிப்பு “பொருபுலி புலியொடு சிலைத்தபோல் பொருபட ரொடுபடர் சிலைக்கவே”. இதுபோல எண்ணற்றவை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற தகவல்கள் தமிழின் இலக்கிய செல்வங்களைக் கற்றறிந்த அறிஞர்கள் சொல்லும் போதே வாசகர் உணர்ந்து கொள்ளக் கூடியவை.

புனைவு உத்தி:

வெண்முரசின்  20ஆவது நாவல் ஆகிய ‘கார்கடல்’ முழுக்க போர் குறித்தது. கார்கடல் குறித்த கட்டுரையில் இந்நாவலில் வரும் பின்னோக்கு உத்தியில் ஒரு புதிய வகைமையை எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கி இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் சரவணன்.

வெண்முரசு’ நாவல் தொடரில் கீதை இடம் பெரும் பகுதி “இமைக்கணம்”. வெண்முரசெனும் மாபெரும் பீடத்தில் மெய்மை தெய்வமென வந்தமரும் பகுதி. நிகழ்வதனைத்தும் பேரருவி ஒன்றில் வீழும் கணம் நோக்கி விரைவு கொண்டொழுகுவதுபோல குருக்ஷேத்திர போர் நோக்கி அனைத்தும் உச்சம் கொள்ளும் சமயத்தில் கீதை எவ்விதம் நாவலில் அமையும் என்ற ஓர் எதிர்பார்ப்பு பாரதம் அறிந்த வாசகர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பதற்றம்தான்.

இது பற்றிப் பேசும்போது சரவணன், “தனக்கேயுரிய புனைவு நேர்த்தியால் அந்தக் கீதையை, அதன் சாரத்தை ஒரு கனவுநிலையில் இந்த நாவலிலேயே மிகச் சுருக்கமாக வெளிப்படுத்திவிட்டார்.” என்று நாவலின் கதையோட்டத்துக்குத் தடையின்றி நிகழ்த்திக்காட்டிய உத்தியைச் சரியாக தொட்டுக்காட்டுகிறார் .

மற்றொரு முக்கியமான புனைவுத் தருணத்தை வெண்முரசின்  10ஆவது நாவலான   ‘பன்னிருபடைக்களம்’ நாவலில் காண முடியும். குருக்ஷேத்ரம் நோக்கி அனைத்து காய்களையும் நகர்த்திவிடும் சூதாட்ட நிகழ்வும் அதைத் தொடரும் துகிலுரிதலும். திரௌபதியின் மானம் காக்கப்படும் தருணத்தைப் “பொது அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்ற வகையில், மாயங்களுக்கு இடந்தராமல் எழுதியிருக்கிறார். அதனாலேயே நாம் மகாபாரதத்தை ‘அது மிகைக் கற்பனைப் புனைவு அல்ல; அது ஓர் உண்மைப் பெருவாழ்வு’ என்று நம் மனம் உறுதியுடன் ஏற்கத் துணிகிறது” என்கிறார் சரவணன்.

இலக்கிய ஒப்பீடுகள்:

வெண்முரசின் 26 நாவல்கள் குறித்தும் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைகளில் நாவலின் அழகியல் சார்ந்த ரசனைக் குறிப்புகள் தவிர சங்க இலக்கியத்தோடும் திருக்குறளோடும் கலிங்கத்துப் பரணியோடும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் பார்வைகள் ஒரு முக்கியமான பகுதிகள் எனலாம். நதியை ஒரு கையள்ளி உணர முற்படுவதுபோல சிறு பகுதியைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

வெண்முரசின்  21ஆவது நாவலான ‘இருட்கனி’ நாவல் கர்ணன் போர்க்களத்தில் வீழ்ந்ததையும் அதன் பின்னர் படுகளத்தில் அவன் புகழ் பாடும் சூதர் பாடல் வாயிலாக அவனது சிறப்புகளையும் பேசும் நாவல். இதனைக் ‘கையறுநிலை’ என்னும் துறையோடு ஒப்பிட்டுச் சரவணன் அளித்திருக்கும் குறிப்புக்கள் முக்கியமானவை. புறநானூற்றில் பாரியின் மறைவுக்குப் பின் கபிலர் மனம் வருந்திப் பாடும் கையறுநிலைப் பாடலை எடுத்துக்காட்டி செவ்விலக்கியதோடு, நாட்டார் இலக்கியத்தின் ஒப்பாரியையும் அதனுடன் ஒப்பிட்டிருக்கிறார்.

பீஷ்மரின் தலைமையில் நிகழும் முதல் பத்து நாள் போரின் நிகழ்ச்சிகளைப் பேசும் வெண்முரசின்  19ஆவது நாவலான ‘திசைதேர்வெள்ளம்’ நாவலில் ‘எருமைமறம்’ என்னும் சங்க இலக்கியத்துறையுடன் ஒப்பிட்டு, அது எவ்விதம் இந்நாவலில் இடம் பெற்றிருக்கிறது என வாசகருக்கு விளக்குகிறார் சரவணன். அத்துறையில் அமைந்த புறநானூற்றுப் பாடலையும் விளக்கி இருக்கிறார்.  இதுபோல தொடர்ச்சியாக நாவலின் முக்கிய தருணங்களைப் பேசுவது தவிர, அவற்றுடன் தொடர்புடைய இலக்கியக் குறிப்புகள் கவனப்படுத்தப் படுகின்றன.

சங்க இலக்கிய ஒப்பீட்டுப் பார்வைகளை இக்கட்டுரைகளின் சிறப்பாக உணர்கிறேன். தமிழின், உலக இலக்கியத்தின் மாபெரும் படைப்புக்குத் தமிழறிந்தவரால் எழுதப்பட்ட ரசனையும் ஆய்வுநோக்கும் கலந்த கட்டுரைகள் இவை. இருபத்தாறாயிரம் பக்கங்களில் விரியும் இருபத்தாறு நாவல்களின் முழுமையான வாசிப்புக்குப் பிறகு, பிற இலக்கிய ஒப்பீடுகளோடு எழுதப் பட்டிருக்கும் இக்கட்டுரைகள் வாசகருக்குப் புதிய அறிதல்களை அளிக்கும்.

சுபஸ்ரீ.

‘முதலாவிண்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘கல்பொருசிறுநுரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்

‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 

கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை

சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரைபிரான்ஸிஸ் கிருபா நல்லடக்கம்
அடுத்த கட்டுரைகௌதம நீலாம்பரன், கடிதங்கள்