வெண்முரசும் கிருஷ்ணஜெயந்தியும்.

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் தங்களுக்கும், அண்ணிக்கும், குழந்தைகளுக்கும். சொல்முகத்தின் வரும் மாதத்திற்கான வெண்முரசு – நீலம் வாசிப்பு இன்று தொடங்குகிறது. இம்முறையும் வெண்முரசு கலந்துரையாடல் இனிதாகச் சென்றது. சென்னையிலிருந்து வந்திருந்த அன்பிற்குரிய இளையோன் செந்திலை அறிந்து கொள்ள முடிந்தது.

ஈரோட்டிலிருந்து அன்பிற்குரிய கிருஷ்ணனும் அந்தியூர் மணியும் இளையோன் மணவாளனும் வந்திருந்தனர். தங்களுக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. அறிவியலில் ராமன் எபெக்ட் என்பதைப் போலவே இலக்கியத்தில் கிருஷ்ணன் பினாமினன் என்று ஒன்று இருப்பது. இம்முறையும் அவர் பினாமினன் தவறவில்லை. மாமலர் வந்துகொண்டிருந்தபோது அதில் சுக்கிரரின் குருநிலையைச் சேர்ந்த கிருதர் – அவரை எண்ணும்போது அன்று குறுந்தாடியுடன் இருந்த நம் நரேனை கிருதர் என்று எண்ணிக்கொள்வேன்.

சொல்முகத்தின் திறன் மிகுந்த நல்ல கேப்டன் அவர். முதலில் வாசிக்க வேண்டும், தொடர்ந்து வாசிக்க வேண்டும், சரியானதைத் தேர்ந்தெடுத்து வாசிக்கவேண்டும், அவ்வகையில் சொல்முகம் ஒரு நல்லூழ். குவிஸ் செந்தில் அண்ணன், நரேன். செல்வேந்திரன், மீனாம்பிகை, சுஷில்குமார், பாலாஜி பிருதிவிராஜ், வெண்முரசு பூபதி, கதிர்முருகன், காளீஸ்வரன், நவீன் எனப்பல அன்புமிகுந்த, அறிவார்ந்த, கலகலப்பான, ஆன்மிக சாதகர்களான (நம் இனிய கதிர் இன்னும் இங்குள்ள பெந்தேகொஸ் தேவைத்தான் மேற்கொள்ளவில்லை. ஹட யோகியைப்போல் இருக்கிறார். இளைத்திருக்கிறார் – சற்றுப் பொறாமைதான்) நல்ல நண்பர்களை எனக்கு அளித்தீர்கள். என்றும் தங்களுக்கு நன்றி.

அன்புடன்

விக்ரம்

கோவை

***

அன்புள்ள விக்ரம்,

நலம்தானே?

வெண்முரசு எழுதி முடிந்தபின் மீண்டும் ஒரு வாசிப்பின் அலை எழுந்துள்ளது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிப்பது. புதியதாக வாசிக்கும் இளைய தலைமுறை வந்திருக்கிறது. அவர்களுக்கான தனி விவாத அரங்குகள் நடைபெறுகின்றன. புதியவாசகர்கள் மொத்தமாகவே வாசிக்க முடிகிறது என்பதனால் மிக விரைவில் முடித்துவிடுகிறார்கள். தொடராக வாசித்தவர்களுக்கு இல்லாத பல தெளிவுகள் அவர்களுக்கு எளிதில் அமைகின்றன.

கோவை வெண்முரசு கூட்டம் மிகச்சிறப்பாக நடந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். வெண்முரசின் ‘முதன்மை வாசகர்’ என தன்னை அறிவித்துக்கொண்ட இளவல் செந்தில் [ வாசகன் என்னும் நிலை ] சென்னையில் இருந்து வந்திருந்ததை நண்பர்கள் கொண்டாட்டத்துடன் சொன்னார்கள். அவருடைய விரிவான கூரிய வாசிப்பும், அதை வெளிப்படுத்தும்படி மொழி அமைந்திருந்ததும் பலரையும் வியப்படையச் செய்திருந்தது. நம் நண்பர்களுக்கு அவருடன் உருவான நட்பு என்னையும் மகிழச்செய்தது.

இந்த கிருஷ்ணஜெயந்தி நாளில் சுவாரசியமான ஒரு விஷயத்தைக் கவனித்தேன். சென்ற ஆண்டே தொடங்கியது, என்றாலும் இப்போது பேசிப்பேசி வலுப்பெற்றிருக்கிறது. பலர் அன்று நீலம் நாவலின் சில பகுதிகளைப் படிப்பதை ஒரு புதிய சடங்காகக் கொண்டிருக்கிறார்கள். அதிலுள்ள ஒலிநயம் மிக்க பகுதிகளை வாசித்து அதை ஒலிப்பதிவு செய்து அனுப்பியிருந்தனர். சிலர் பூஜையிலேயே நீலம் நாவலை வைத்திருந்தனர்.

காலந்தோறும் கிருஷ்ணன் வெவ்வேறு வகைகளில் கண்டுபிடிக்கப்படுவதாகவே அதை நான் காண்கிறேன். நிறைவூட்டும் ஒர் எண்ணம் அது.

ஜெ

முந்தைய கட்டுரைஒரு பேரிலக்கியத்தின் வருகை
அடுத்த கட்டுரைவாசகர் செந்தில்,கடிதங்கள்