வெண்முரசு ஆவணப்படம், டொரன்டோ-கடிதம்

அன்பின் ஜெயமோகனுக்கு,

வணக்கம்! நலமா?

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சார்பில் Scarborough, Toronto – 29.08.2021 அன்று வெண்முரசு பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.

நமது தளத்தின் வாயிலாக இந்த படத்தைப்பற்றி எல்லா விவரங்களையும் நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். கோவிட் பெரும் தொற்று காரணமாக இங்கு அனைத்து பொது இடங்களும் திரையரங்குகளும் மூடி இருந்த காரணத்தினால் திரைப்படம் இங்கு திரையிடுவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளவில்லை. ஆனால் டெக்சாஸ் சௌந்தர் அவர்களை, திரு. நாஞ்சில் நாடன் சாரின் கம்பராமாயணம் சொற்பொழிவு குறித்து அறிவிப்பதற்காக தொடர்பு கொள்ள நேர்ந்தது. அவர் அப்போது வெண்முரசு ஆவணப்படத்தை இங்கு திரையிடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டினார். இங்கு திரையரங்குகளும் திறக்கப்பட விருப்பதாக நான் அறிந்திருந்ததால் உடன் அ.முத்துலிங்கம் ஐயாவை தொடர்பு கொண்டேன். அவரும் உடனடியாக கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சார்பிலேயே திரையிடலாம் என்று கூறிவிட்டார். காலம் செல்வம் அவர்களும், நானும் சேர்ந்து ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தோம். ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று கலிபோர்னியாவில் திரையிட்டு முடிந்தவுடன் திரு.அண்ணாதுரை அவர்கள் உடனடியாக ஆவணப்படத்தை எங்களுக்கு அனுப்பி விட்டார்கள். தொடர்ந்து சௌந்தர் அவர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டே இருந்தேன்.

நமது தளத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியானவுடன் வாசகர்கள் உள்ளூரில் இருந்து எங்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்தார்கள்.

டொராண்டோவில் எப்போது இலக்கியக் கூட்டம் நடந்தாலும் குறையாமல் 100 பேர் வந்து விடுவார்கள். அந்த நம்பிக்கையில் நாங்கள் ஏற்பாடுகளை செய்து விட்டோம். ஆகஸ்ட் 29ஆம் தேதி மதியம் ஒரு மணியிலிருந்து 3 மணி வரை படம் திரையிடப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை என்றாலும் (அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன! முக்கியமாக பெரும் தொற்று குறித்த அச்சம்) வந்தவர்களில் பலர் உங்களை குறித்தும், வெண்முரசை குறித்தும் அறிந்திருந்தார்கள், படித்தார்கள் என்பது மிகவும் உற்சாகமூட்டும் விஷயமாக இருந்தது. சிறு வயதினரும் ஆர்வத்துடன் வந்திருந்து படத்தை ரசித்தார்கள்.

வெண்முரசு முழுவதையும் வாசித்திருந்த என்னைப் போன்றவர்களுக்கு இந்த ஆவணப்படம் மிகவும் அற்புதமான ஒரு அனுபவமாகவே இருந்தது. அருமையான இசை, அனுபவித்து உணர்ந்து பேசிய அத்தனை பேர் (அனைவருமே எனக்கு தனிப்பட்ட முறையிலோ, தளத்தின் வாயிலாகவோ அறிமுகமானவர்கள் என்பது மற்றுமொரு கூடுதல் புள்ளி), கவனத்தை எங்கும் திருப்ப விடாமல் கட்டிப்போட்ட ஒளியமைப்பு, ஓவியர் சண்முகவேல் அவர்களின் அதிநுட்பமான ஓவியங்களை பிரம்மாண்டமாக திரையில் பார்ப்பது, பிரம்மிக்க வைத்த ஒளிக்காட்சிகள், அவற்றை தொகுத்த விதம் என படத்தை பார்த்த போது ஏற்பட்ட அனுபவங்கள் மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. பார்த்த அனைவருமே பிறகு இக்கருத்துக்களையே வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தினார்கள்.

ஜெயமோகனின் வெண்முரசு குறித்து அறியாதவர்கள் சிலரும் வந்திருந்து, போகும்போது இந்த பிரம்மாண்டத்தை நாம் அனுபவிக்காமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்வுடன் எங்களிடம் பேசி விட்டுச் சென்றார்கள். முத்துலிங்கம் ஐயா எப்பொழுதும் கூறுவது நோபல் பரிசு வாங்கும் தரம் வாய்ந்த தமிழ் எழுத்தாளர் நீங்கள் ஒருவரே என்று….. முதலில் தமிழறிந்த மானிடர்கள் இந்த பேராளுமையின் தனித்துவத்தையும், மாபெரும் உழைப்பையும் கண்டு கொள்ளட்டும். அதனால் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வு எவ்வளவு தூரம் மேம்படும், செம்மையாகும் என்பதை உணரட்டும் என்று நான் பதிலுக்கு எப்போதும் நினைப்பேன்/ சொல்லுவேன்.

நீங்கள் வெண்முரசு எழுதி முடித்தவுடன் எனக்கு சிறிது வருத்தமாக இருந்தது. முடிந்துவிட்டதே என்று! இலக்கியம் படிப்பது என்பது எப்போதும் ஒரு தனிப்பட்ட அனுபவமாக தான் எனக்கு உள்ளது. இப்பிரபஞ்சத்தின் விதிப்படி வெண்முரசை படிக்க கொடுத்து வைத்திருப்பவர்கள் படிக்கட்டும்!

அசோகவனத்தை எப்போது ஆரம்பிப்பீர்கள் ஜெயமோகன்?

நன்றாக இருங்கள்!

அன்பு

உஷா

***

அன்புள்ள உஷா

வெண்முரசை எழுத ஆரம்பிக்க ஒரு குறிப்பிட்ட காரணம் உண்டு. கீதைக்கும் பதஞ்சலி யோகசூத்திரத்திற்கும் பிரம்மசூத்திரத்திற்கும் உரை எழுதவேண்டுமென எண்ணினேன். எழுத ஆரம்பித்தேன். ஆனால் தொடரவில்லை.

ஏன் உரை? ஏராளமான உரைகள் இருக்கின்றனவே? ஆம், பொருள் அறிந்துகொள்ளவும் விளக்கம் பெறவும் நூற்றுக்கணக்கான உரைகள் உள்ளன. ஆனால் உரைமரபு என்பது இந்தியச் சூழலில் வேறு பொருள் கொண்டது. அது ஒரு நூலை தன் அனுபவத்தின் ஒளியில், புதிய கோணத்தில் மீண்டும் கண்டடைவதுதான். பெருநூல்கள் அவ்வண்ணம் காலந்தோறும் கண்டடையப்படுவன.

அவ்வாறு என் உரை ஒன்றை எழுதத் தொடங்கியதும் என் எல்லைகளை உணர்ந்தேன். மேலும் சற்று முன்னகர்ந்து, மேலும் சற்றுத் தெளிந்தபின் எழுதவேண்டும் என தோன்றியது. என் யோகம் என்பது இலக்கியம். ஆகவே அதை கைக்கொண்டேன். அதற்கே வெண்முரசு. அது முடிந்து இப்பால் வந்திருக்கிறேன்.

இனி அவற்றை எழுதுவதே முதல்பணியாக இருக்கும். அசோகவனம்? அதை எழுதுவேன். கொஞ்சம்தான் மிச்சம். அனேகமாக 2022ல் அசோகவனம் வெளிவரும்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஇளந்தென்றலில்…
அடுத்த கட்டுரைஒரு கோவை வாசகர்