அன்புள்ள ஆசிரியருக்கு,
நெடுநாட்களாகவே கொற்றவை படிக்க வேண்டுமென்ற ஆவல் அண்மையில் நிறைவேறியது. தொடக்கத்தில் அதன் பழந்தமிழ் நடையும் செறிவும் சற்றே கூடுதல் உழைப்பையும் ஈடுபாட்டையம் கோரினாலும், தொல்தமிழகத்த்தின் அப்புனை வரலாறு என்னை வசீகரித்து மேலும் மேலுமென உந்தியது. குமரிக்கோட்டையும் பஃறுளியாற்றையும் அகமெனக்கொண்ட மூதாதையரில், வாழ்வாங்கு வாழ்ந்தோர் வானுறையும் தெய்வங்களாகவும் ஏனைய வாழ்ந்தவிந்தோர் தென்புலத்தாராகவும் ஆகி, அவர்களுள் தோன்றி அவர்களால் வளர்ந்து அவர்களின் உள்ளத்திலும் உணர்விலும் நிறைந்து, அருவமாய் திகழ்ந்த அக்கன்னிக்கு “தமிழ்” என பெயர் சூட்டி “தாம் ஒரு பேர் கொண்ட குடி”யாக மாறியதை வசிப்பதென்பது, நம்மை நாமே எவரென, நம் வேரும் கொடிவழியும் யாதென உணரும் உன்னத தருணம்.
கண்ணகை கண்ணகியாதலும், “சிறுமியை பெண்ணாக்கும் தெய்வம் நானென” வந்த நீலி (கவுந்தி அடிகள்) ஐந்து நிலங்களினூடே பல்வேறு கன்னியரையும் அன்னையரையும் காட்சியளித்து அவளை தெய்வமாக்குகிறாள். வெண்ணி, மருதி எனத்தொடங்கி நப்பின்னை வரை நீளும் அப்பெருநிரையில் “அவளை தெய்வங்களில் கொற்றவையாக” மாற்றியதில் பாலை நிலத்தின் ஒரு கன்னிக்கும் ஓரன்னைக்கும் பெரும் பங்குண்டு. முன்னவள் சிறுவயதில் கொற்றவையின் கோலம் பூட்டி வணங்கப்பட்டு, முதிர்ந்ததும் தன் இனத்தால் கைவிடப்பட்டு தனிமையின் தாழ்வரையில் தன்னிலையிழந்தழிந்து வெள்ளெல்லுகளின் மாடக்குவையான மணல்மேட்டில் மறையும் முதுகன்னி. மற்றவள் தான் ஈன்ற நான்கில் ஒன்றை புசித்துக்கொண்டே பிறக்குருளைகளுக்கு முலையூட்டும் அன்னைநாய்.
அறம் தளர்ந்து மறம் பிறழ்ந்து எரிமுன்னர் வைத்தூறு போல விளங்கிய பாண்டியன் மண்ணில், கூம்பும் பருவத்து குத்தென கொற்றத்தாளின் முதற்கனல் வீழவே மதுரைப் பேரூர் பேராச்சிக்கு அவியாகிறது. பின் குடமலை சென்று அறிவமர் செல்வியாகி ஊழ்கத்திலமர்ந்து உய்கிறாள். யாண்டு பல கழிந்து குடமலை குறும்பர் கோர, சேரன் செங்குட்டுவன் செங்குன்றம் சேவித்து திருமாபத்தினிக்கு திருக்கோவிலையும் அவன் இளவல் செய்தவக்கொழுந்தின் செவ்வியல் காப்பியத்தையும் நாட்டினர்.
கதை இவ்வளவேயெனினும், காப்பியத்தின் எண்ணற்ற கூறுகள் ஒவ்வொன்றும் தன்னளவில் உச்சத்தைத்தொட்டு ஒருங்கே முழுமைகொள்வதை எண்ணி எண்ணி வியப்பதன்றி வேறு வழியில்லை.
காவியம் முழுமைக்கும் ஊடாடும் எண்ணற்ற பழந்தமிழ்ச் சொற்கள்
இச்சொற்களைக்கண்டு முதலில் மிரண்டு பின் பழகி இறுதியில் அவற்றில் தோய்ந்தே போனேன். உங்களைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் அதில் பேர்பாதி சொற்களையேனும் தடையின்றி பொருளறிவர். எனினும் மற்றவற்றை (திரங்கல், மடங்கல், உமல், நுகம், மையான்…..) இணைய அகரமுதலிகளின் அருந்துணைக்கொண்டே அறிந்தேன். ஆயினும் சில சொற்களை உங்கள் தளத்திலும் அகரமுதலிகளிலும் இணையத்திலும் மட்டுமல்ல உலகத்தின் எந்த மூலையில் தேடினாலும் பொருள் கிடைப்பதரிது (காட்டாக, குணமொழியும் குடமொழியும்). இளங்கோவடிகள் கற்ற மொழிகளாக வரும் தமிழும் செஞ்செயல்மொழியும் அனைவருமறிவர். குணமொழியும் குடமொழியும் ஏது மொழிகளென எங்கும் தடயங்களில்லை. ஆயினும் உங்களை நெடுங்காலம் தொடர்வோர் காப்பியத்தின் ஒழுக்கில் இயல்பாக பொருள்கோடக்கூடும். நீங்கள் தொடர்ந்து முன்மொழியும் பாரதத்தின் செம்மொழிகள் நான்கினுள் எஞ்சிய பாளியும் பிராகிருதமுமாக (முறையே) இருக்குமெனவே எண்ணுகிறேன். மேலும் சொற்றொடர்களின் அமைப்பும் அழகும் நெஞ்சையள்ளுவன. “மலைக்குகை பெண்கடவுளைப் போற்றி” என்னும் நம் இன்றைய செந்தமிழ் வழக்கு “குடைவரை எழுதிய நல்லியல் பாவையின் நலம்கூறி” எனும் செழுந்தமிழாகி மாறி மயக்கும் கணங்களே காவியம் முழுவதும்.
சங்ககால வாழ்க்கைச்சூழலை கண்முன் விரிக்கும் கதைக்களம்
வேட்டுவன் முதல் வேந்தன் வரை உண்பதும் உடுப்பதும் உறைவதும் உழைப்பதும் மொழிவதும் தொழுவதும் இசைப்பதும் இசையோடசைப்பதும் வசைப்பதும் வதைப்பதும் எல்லாம் சங்ககால வாழ்வின் நிகர்ச்சித்திரங்கள். கொற்றவைக்கு சற்றுமுன்புதான் ராஜ் கௌதமன் அவர்களின் “பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்” ஆய்வுநூலை வாசித்தேன். சங்ககால வாழ்க்கைக்கூறுகளை அறிய எண்ணற்ற தகவல்களால் நிறைந்த ஆவணக் களஞ்சியம் பாட்டும் தொகையும். அது கொற்றவையில் வெளிப்படும்போது மேலும் கவித்துவமாக, வாழ்வின் அரிய தருணங்களாக, தரிசனங்களாக முழுமை கொள்கிறது.
குறிஞ்சி நிலத்தில் இரவில் குறவர்கள் எரியூட்டி சுற்றியமர்ந்து வேட்டையுணவை பகிர்ந்தும் (ராஜ் கௌதமனில் பாதீடு) கள்ளுண்டும் களிக்கும் அன்றாட கூட்டு உண்டாட்டில் கலந்துகொள்ளும் கோவலனை நோக்கி ‘உங்கள் நாட்டில் இதுபோன்ற குடிமகிழ்வு கொண்டாடுவீர்களா’ எனக்கேட்கும் முதுகுறவனுக்கு ‘எப்போதாவது எதிரிகளை வெல்லும் போது கொண்டாடுவோம்’ எனக் கூறும் கோவலனிடம் ‘வென்று வென்று பின் எதிரிகளே எஞ்சவில்லையென்றால் நீங்கள் மகிழவே இயலாதே’ என ஒரு சிறுவன் சொல்ல “எரிப்பதனால் மட்டுமே தானிருக்கும், எரிந்தவை அழிந்தால் தானுமழியும் எரி” என்ற கூற்று என்னை நாட்கணக்கில் ஆட்கொண்டது. பலநூறு வேளிர்களுடனும் சிற்றரசர்களுடனும் போரிட்டு அழித்து உருவாகி வந்த மூவேந்தர்கள் ஓயாது தமக்குள் தாம் பொருதி அடுத்த சில நூற்றாண்டுகளில் மூவரும் வீழ்ந்து தமிழ்மண் முழுவதையும் அயலவர்க்கு கையளித்த ஒட்டுமொத்த சங்ககால அரசியலையும் உள்ளடக்கும் ஒற்றை வரி அது.
‘முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை’ வாழும் எளிய குறவர்களிடமுள்ள களிப்பும் மகிழ்வும் ‘புலவும் நெய்யும் பெய்த கொழுஞ்சோறும் யவன நறுந்தேறலும்’ அருந்துவோரிடம் இல்லையென்பது இன்று வரை நீளும் உலகியல் வாழ்வின் என்றுமுள முரண். அண்மையில் ஒரு வாசகரின் கேள்விக்கு (வாசிப்பு, இலக்கியம், சில ஐயங்கள்) புனைவிலக்கிய வாசிப்பும் அறிவுத்துறை வாசிப்பும் ஒன்றையொன்று நிறைவுசெய்ய முடியும் என்ற தங்களின் பதில்தான் எத்தனை உண்மை (கொற்றவையும் பாட்டும் தொகையுமே அதற்குச்சான்று).
நவீனஇலக்கியத்திற்கேற்ப நிகழ்வுகளின் தகவமைவு
கண்ணகியின் ஆளுமைப் பெருவளர்ச்சியில் ஐவகை நிலப்பயணக் காட்சிகளும் உடன்வரும் நீலியின் பங்கும் சிலம்பில் எதிர்பார்த்திராத ஒரு (பொருத்தமான) வன்பாய்ச்சல். மதுரை தீக்கிரையாவதற்காக எல்லாவிதத்திலும் முன்பே ஒருங்கியிருந்த நேரத்து கண்ணகி தன் அறத்தின் ஆற்றலால் ஆயிரமாயிரம் அணங்குகளை அழல்மூட்ட ஆற்றுப்படுத்தும் பேரணங்காக (தன் ஒற்றை முலையரிதல் ஒரு குறியீடே) நீங்கள் ஆக்கியதை, வெண்முரசின் துகிலுரிதலில் உடுக்கையிழந்த கைகளுக்கு உடையளித்து இடுக்கண் களைந்த நூற்றுக்கணக்கான மனையாட்டிகள் (மாதவன் பேரால்!) நினைவுக்கு வருகிறார்கள். ஈராயிரம் ஆண்டுகளாய் தமிழ் நிலத்திலும் பாரத மண்ணிலும் புழங்கிய புகழ்மிக்க நாடகீய தொன்மங்களை முதன்முதலில் நவீன உள்ளங்களுக்கேற்ப உரைத்தது ஒப்பதும் மிக்கதும் இல்லாத தகவமைவு.
சிலம்பின் பயணங்களும் கொற்றவையின் பயணங்களும்
கண்ணகியின் மதுரைப்பயணம் சிலம்பிலிருந்து மாறுபடும் விதம் விரிவாகவே பேசப்பட்டுவிட்டது. நான் வியந்தது வஞ்சிக்காண்டத்தின் பயண வேறுபாடுகளையே. சிலம்பில் சேரன் செங்குட்டுவன் சிலைவடிக்க கல்தேடி இமையம்வரை மறப்பயணம் மேற்கொள்கிறான் (கொற்றவையிலோ அவன் சேரநாட்டு எல்லையைத் தாண்டியதாகத் தெரியவில்லை). ஆனால் சிலம்பில் பயணிக்காத இளங்கோவடிகளோ, கொற்றவையில் தன் அகத்தேடலால் அறிவமர் செல்வியின் அறுதி ஆறினூடாகச் சென்று பண்டைமதுரையை தரிசித்துத் தெளிந்து, தெற்கு நோக்கிக் கடுஞ்சுரம் கடந்து கன்னியன்னையைக் கண்ட கணம் முழுமைகொள்கிறார். சிலம்பில் பார்போற்றும் மறவன் பயணமெனில் கொற்றவையில் வான் போற்றும் அறிவன் பயணம்.
புதிய இறைநிலைகளும் சமயங்களும்
தமிழகத்து இசைபட வாழ்ந்து இறைநிலையெய்தியோரின் நீள்நிரையில் காப்பிய நிறைவில் மேலும் இருவர் சேர்கின்றனர். கண்ணகி வஞ்சியில் “மங்கல மடந்தை”யாகவும் இளங்கோவடிகள் சபரண மலையில் “ஐயப்பனாகவும்” கோவில்கொள்கின்றனர். இருவரும் தம் வாழ்நாளில் சமண மதத்தைப் பின்பற்றியவர்கள். ஆனால் இறைநிலை எய்தும்போது பௌத்தக் கடவுளராக அறியப்படுகின்றனர். காலப்போக்கில் பல்வேறு மாறுதல்களுக்குப் பிறகு இன்று இந்துக்கடவுளராக அருள்புரிகின்றனர். இந்தியப்பெருநிலத்தின் மூன்று பெருமதங்களையும் ஒருங்கே கோர்த்த ஒற்றையிழையாக விளங்குகிறது கொற்றவை. இன்றும் இந்துமதத்தின் ஆறுதரிசனங்களில் பெரும்பிரிவுகளாக நிலைக்கொண்ட மூன்று தரிசனங்களையும் முன்வைக்கும் இறைகளாகத் தொடர்கின்றனர் இருவரும் (கொடுங்கல்லூரம்ம சாக்தத்தையும் ஐயப்பன் சைவ-வைணவ ஒருமைப்பாட்டையும்).
துணைக்கதைகளும் மரபு ஆய்தலும்
கொற்றவையின் சிறப்புகளில் தலையாயவொன்று துணைக்கதைகள். அவையில்லாமலும்கூட கதையின் ஓட்டம் குறைபடாதெனினும் அவற்றின் இருப்பு கதைக்களத்தை வேறொரு உயர்தளத்திற்கு கொண்டுச்செல்கிறது. மண்மகளறியா வண்ணச்சீரடியாள் மதுரையை மாய்க்கும் மாமடந்தையாக மாறும் சித்திரத்தை, ஐவகை நிலத்தின் துணைக்கதைகளல்லாது நவீனஉள்ளம் உள்வாங்க இயலாது. துணைக்கதைகள் நம் மரபார்ந்த நம்பிக்கைகளையும் நெறிகளையும் (கற்பு, நிறை, தாய்மை, மானுடம்….) தொடர்ந்து அறக்கேள்விகளால் ஆய்ந்தும் அலசியும் நம்மை மேலிருந்து கீழ்நோக்கும் முறையிலிருந்து மாற்றி, அடித்தளத்தின் அல்லல்களும் ஆற்றாத கண்ணீரும் நிறைந்த விழிகளால் இம்“மேதகு” விழுமியங்களை நோக்க வைக்கிறது. மேலும் கௌதம புத்தர் மற்றும் மணிமேகலையின் கதைகள் காப்பியத்தின் நோக்கையும் போக்கையும் செறிவூட்டி முழுமை கொள்ளச்செய்கின்றன.
வஞ்சியின் வளமையும் வழமையும்
பண்டுமுதலே மதுரை மாநகரின் மாட்சியும் புகாரின் பெருமையும் அதன் நுண்தகவல்களையும் நிறையவே செவிக்கொண்டுள்ளோம். ஆனால் சிலம்பில் செங்குட்டுவனின் இமையப்பயணம் பேசப்பட்ட அளவு வஞ்சி மாநகரின் வழக்கங்களும் வாழ்வியலும் பெரிதும் பேசுபொருளானதில்லை. கொற்றவையில் சேரநாட்டின் நீர்வளமும் மலைவளமும் மிகவிரிவாகவும் அழகாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பேரியாற்றின் கரையிலமைந்த வஞ்சியில் மரக்கால்கள் ஊன்றிய, மரச்சுவர்களாலான வீடுகள். கையாறுகளாலும் அருகமைந்த பெருங்காயல்களாலும் ஆன நீர்வழிகளூடே பலவகை வஞ்சிகளிலும் தொலைதூரபயணத்திற்கு பெருவள்ளங்களிலுமென பயணங்கள். புகாரின் நாளங்காடி அல்லங்காடி போல வஞ்சியில் நீரங்காடி. யவன மற்றும் சோனக நாவாய்கள் வந்தணையும் முசிறித் துறைமுகமும் அதன் செயல்பாடுகளும்.
அகில், மிளகு (திரங்கல்), யானை வெண்கோடுகள், மான்மயிர், புலியுகிர், பல்வகை வேர்கள் என நீளும் மலைவளங்கள். வேந்தன்குழாமின் மலையேற்ற விவரணைகள், மலைப்பழங்குடிகளின் வாழ்வியல் காட்சிகள், அவர்களின் வழிபாட்டு முறைகள். மழை இழை முறியாது பெய்யும் அதே குளிர்நிலத்தில், மேழ மாதத்தின் வெக்கையும் பருத்திமேலாடை தோய்க்கும் உடல் வியர்வையும், உருளி போன்ற அகன்றவாய் கொண்ட அடுக்கலங்களும், பலவகை அப்பங்களுமென அத்தனை சிறுசிறு கூறுகளும் கோர்க்கப்பட்டிருப்பது கேரளத்தில் ஆறாண்டுகளாய் வசிக்கும் எனக்கு ஒரு நிகரனுபவமாகவேத் தோன்றியது.
தமிழ் நிலத்தில் வடக்கின் தாக்கங்களும் ஆக்கங்களும்
சங்ககாலத்தின் தொடக்கத்தில் தமிழகம் ஏனைய பாரத நிலப்பரப்பினோடு தொடர்புகொண்டிருந்தாலும், அத்தொடர்பு அளவோடே அமைந்த ஒன்றாக இருந்த்தது. ஆனால் சிலம்பின் காப்பிய நிகழ்வு காலத்தில் தமிழகம் வடக்கினோடு பெருமளவில் அளவளாவி, கொடுத்தும் கொண்டும் புதியதொரு பரிணாமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தமிழகத்தில் வடக்கின் மொழிகளும் சமயங்களும் கலந்துரையாடி, தம் செல்வாக்கையும் சிலவிடங்களில் ஆதிக்கத்தையும் செலுத்தத் தொடங்கியிருந்தது (பாட்டும் தொகையும் நூலில் இதை விரிவாகக் காணலாம்). கொற்றவையில் இம்மாற்றங்களைக் காண்பிப்பது மையநோக்கு இல்லையெனினும் ஆங்காங்கே அவற்றைத்தூவிச் சென்றிருக்கிறீர். ‘வெண்ணைப்பெருவூர்’ என்ற இடம் ‘வில்வாரணி’ என வடமொழிப்பெயர் கொள்வதும், அரசர்களும் நகரத்தாரும் மட்டும் செய்து வந்த ‘வேள்விகள்’ சிற்றூர்கள் வரை பரவி வருவதும் போகிறபோக்கில் பதியப்பட்டுள்ளன. கொல்லாநெறி மற்றும் கள்ளுண்ணாமை போன்ற சமணமத கருத்துக்களை, சங்ககால வாழ்வியல் புதிதாக எதிர்கொள்கிறது.
சமணமும் பௌத்தமும், சமூகஅளவிலும் அறிவுத்தளத்திலும் பல நேர்நிலை தாக்கங்களையம் ஆக்கங்களையும் ஏற்படுத்தி இருந்தாலும் (காப்பியம் என்னும் வடிவமே அவரகளின் வருகைக்குப் பின்னரே தமிழுக்கு வாய்த்தது!), இல்லத்தாரிடம் கூட உரைக்காமல் இளைஞர்கள் ஏராளமானோர் சாக்கிய இரவர் (பௌத்த பிக்ஷூ)களாக ஆகிவரும் காலகட்டத்தில் ‘எங்கே தன் மகனும் இப்படிப் போய்விடுவானோ’ என்ற பேரச்சம் அன்னையரை ஆட்டிப்படைக்கும் சித்திரம் அதன் வேறொரு பக்கத்தைக் காட்டுகிறது (சங்கச்சித்திரங்களில் ஔவையின் ‘கால்கழி கட்டிலில் கிடப்பித் தூவெள்ளறுவை போர்ப்பித்திலதே’ எனப் பாடும் சங்ககால அன்னையும், அந்த அண்மைக்காலத்து ஈழ அன்னையும் நினைவுக்கு வந்தனர்). சிலஅன்னையரின் அடிவயிற்றுத்தீ ‘தன் சிறுவனை மழித்து இருத்தி துவராடை அணிவித்திலதே’ என்று புத்தன் புது நெறியைத் தூற்றியிருக்கவும்கூடும் (என்றும் எந்நிலையிலும் அன்னையர் அன்னையரே!).
தத்துவங்களும் உளவியலும்
காப்பியத்தின் கட்டமைப்பை ஐம்பெரும் பருக்களின் பேரால் பகுத்து, அவற்றின் முன்னுரைகளில் மொழியப்படும் ஒவ்வொரு வரியும் சிந்தனைச்சிறகை விரிப்பவை. நிலம் பகுதியில் ஐந்திணை நிலங்களினூடே கூறிச்செல்லும் வாழ்க்கை முறைகளும் நிலக்காட்சிகளும் கதைமாந்தர்களிடையேயான உரையாடல்களும், தமிழ்ப் பண்பாட்டுக்கே உரித்தான நிலம்சார் மெய்ம்மையும் தரிசனங்களும் நிறைந்தவை. சமணம் பௌத்தம் சைவம் வைணவம் சாக்தம் அளவைவாதம் பிரம்மவாதம் எனப்பல்வேறு இந்தியத் தத்துவச் சிந்தனைகள் மட்டுமல்லாது யவன மற்றும் சீனத்து மெய்யறிவுகளும் உரையாடும் ஒரு களமாக கொற்றவை விளங்குகிறது. வேளாப் பார்ப்பனர்கள் தம்அன்றாட வாழ்வில், அவர்களின் சார்வாகச் சிந்தனைகளை சிந்திச்செல்வதுபோல பற்பல கதைமாந்தர்களின் வழி உதிர்க்கும் கருத்துக்களும் எண்ணற்றவை.
சிலம்பில் பெரிதும் உளச்சலனங்களற்ற, அந்நேரத்து நேரடி உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைமாந்தர்களான பலரும், கொற்றவையில் பல்வேறு எண்ணஓட்டங்களும் உளக்கொந்தளிப்பும் கொண்டவர்களாக உள்ளனர். மாதவியைக்கண்டதும் அவளுடன் தற்செயலாகச்செல்லும் சிலம்பின் கோவலனோ, கொற்றவையில் உளஅலைக்கழிப்புகளில் உழன்றுகொண்டு மாதவியைப் போன்றொருத்திக்காக முன்பே காத்திருக்கிறான் (தீ காற்றைத் தழுவ விழைவதைப்போல). கணவன் மாய்ந்ததும் தானும் மாயும் சிலம்பின் ஒற்றை வரி வேல்நெடுங்கண்ணி எனும் கோப்பெருந்தேவி, கொற்றவையில் உடலோடும் உள்ளத்தோடும் உற்றவனோடும் மற்றவரோடும் ஓயாது பொருதும் ஊடல்மாதேவியாக காப்பியப்போக்கை உச்சத்திலேற்றும் ஒரு தவிர்க்கவியலாத மையக்கதாபாத்திரமாகிறாள். தேவந்திஎனும் தோழி கூட பல்வேறு வாழ்வனுபங்களோடு தீராக்கதைகளின் தீஞ்சுனையென திகழ்கிறாள். இத்தகு கதைமாந்தர்களை, குறிப்பாக பெண்களை, உளவியல் நோக்கில் அணுகுவதென்பது மேலும் சுவைக்கூட்டக்கூடியதாக இருக்கும். எனினும் இவ்விரு தளங்களிலும் ஓர் எளிய வாசகனாகவே இவற்றைக் குறிப்பிடுகிறேன். தத்தம் துறைசார் வல்லுந வாசகர்கள் எவரேனும் நாளை இவற்றின் மீது மீயொளி புலர்த்தக்கூடும்.
பின்னை வினைகளும் விளைவுகளும்
மதில்நிரை மாநகர் அழலுக்கு அவியானபின் வஞ்சி மூதூரில் திருமபத்தினிக்கு பேராலயம் எழுப்பியதும், புகாரில் ஈன்றோர்களான மாநாய்க்கனும் மாசாத்துவானும் மாற்றாள் மாதவியும் மாமகள் மணிமேகலையும் துறவுபூண்டதை குறிப்புணர்த்தி சிலம்பு அமைகிறது. ஆனால் கொற்றவையில் காட்சிகள் மேலும் நீள்கின்றன. புகைகொண்ட மதுரை மாற்றுநிலத்தில் குடம்பியென தொடங்கி கொற்கைக்காவலன் இளஞ்செழியனின் செங்கோலோச்சி குற்றம் கடிந்து குடிபுறங்காத்தோம்பவே அவன்தன் தண்வெண்கொற்றக்குடையின்கீழ் பையப்பைய வளர்ந்து கொங்குதேர் தும்பியென மிளிர்ந்து, நகைகொள்கிறது நான்மாடக் கூடல்.
ஊழின் பெருவலி யாரும் அறிகிலார். பதியெழு அறியாய் பழங்குடிகளின் பரன் பரை ஊரும் மொழிபெயர் தேயத்து புலம்பெயர் மாக்களின் புத்தேள் உலகுமான புகார் நகர் பௌவத்து புக்கும், நீர்க்கலமென நின்ற சீர்கெழு வஞ்சியும் பேரியாற்றின் சீற்றொழுக்கால் நீர்க்கோலமென நிலையாது, காலாழியின் சுழற்சியில் பேராச்சியின் உறுபசிக்கு ஊணாகின்றன. அறிவமர் செல்வியின் ஆலயமோ சோழர்கள், பிற்காலச்சேரர்களான குலசேகரப்பெருமாள் மற்றும் உதய மார்த்தாண்ட வர்மன், திருவடி சங்கரன் (சங்கரர்) என பலரால் மாற்றங்களையும் மீட்டுருவாக்கங்களையும் காண்கிறது. அன்னையும் கொற்றவை, காளி/துர்க்கை, மங்கல தேவி என பலப்பெயர்களால் அறியப்படலாகிறாள்.
சேரன் செங்குட்டவனால் எதிர்கொண்டு வரவேற்கப்பட்டு தன் அருகமர்த்தி உரையாடும் நிலையிலிருந்த மலைநில குறுமர்கள், உதயவர்மன் காலத்தில் அவர்கள் நின்ற இடம் பசுஞ்சாணியால் தெளித்து தூய்மை செய்யப்படும் நிலைக்கு ஆளாவதிலிருந்து, அவர்களின் சமூக நிலையிலும் ஆலய உரிமையிலும் நிகழ்ந்துவிட்டிருந்த வீழ்ச்சியை உணர முடிகிறது. பின் அவர்கள் ‘காவு தீண்டல்’ நிகழ்வால் ஆலயத்தின் மீதான தம்உரிமையை ஆண்டுக்கு ஒருநாளென மீட்டெடுக்கின்றனர். கண்ணகை- கண்ணகி-அறிவமர் செல்வி- கொற்றவை- காளி- மங்கல தேவி என்று தீயின் அழலென தொடர்மாற்றம் கொள்ளும் அன்னை, டச்சுப் படையின் ‘வான் – கோய்ஸ்’க்கு அவர்களின் ‘தூய மாதா’ வாக காட்சியளித்ததிலோ, இல்லை இனி சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு வேறொரு தோற்றத்தில் வேறொரு பெயரில் அவள் அறியப்படலானாலோ வியப்பதற்கொன்றுமில்லை. மாற்றமொன்றே மாறாததல்லவோ.
மாக்கோதையும் கோளூரும் கல்லூரும் – கன்னிநுன்
நோக்கேறியச் சேரலாண்ட வஞ்சியின் கண்ணிகளே
தோற்றம் தொடர்மாற்றம் கொளினும் – தாயேநின்
ஆற்றலும் அருளும் என்றுமுள
மாநிலம் போற்றும் மங்கல மடந்தையே – யாயே
நின்னின் பெருந்தக்க யாவுள
அம்மே நின் திருச்சிலம்படிகளே சரணம்.
பி.கு: இக்காப்பியத்தை வாசித்து முடித்த பேருவகை உளநிறைவையும், ‘இனி என்ன?’ என்ற ஒரு வெறுமையும் ஒருங்கே ஆட்கொண்டது. பாட்டும் தொகையும் என்ற அடிவாரம் கடந்து கொற்றவையென்னும் மாமிசை ஏகி, மாமுகட்டிலிருந்து சட்டென இடறி வீழாமல் சங்ககாலத்தில் சற்றுகாலம் பயணித்து பையஇறங்க “நிலம் பூத்து மலர்ந்த நாளில்” அடி வைக்கிறேன் (அந்நூலின் அறிமுகமும் தங்கள் வழியே!). ஆசிரியருக்கு நன்றியும் அன்பும் வணக்கங்களும்.
அன்புடன்
இரா. செந்தில்
கொற்றவை எனும் புதுக்காப்பியம்-சூர்யப்ரகாஷ்
கொற்றவை- கரு.ஆறுமுகத்தமிழன் உரை
கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)
கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.
வெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா?
விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்
தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்
இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா