விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 11

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். விக்ரமாதித்யனுக்கு இந்த வருட விஷ்ணுபுரம் விருது என்று அறிவிக்கப்பட்டதும் அகமகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். எழுபதுகளின் இறுதியிலிருந்து வாசிக்கும் எனக்கு , மிகவும் பரிச்சயமான கவிஞர்களில் ஒருவர், விக்ரமாதித்யன். மரபுக்கவிதை எழுதுபவர்கள் நவீனக் கவிதை எழுதுபவர்கள் மேல் ஈயைத்தை காய்ச்சி ஊற்றாத குறையாக சாடுகின்ற காலம். என்னைப் போன்றவர்கள், இந்தப் பக்கமா அந்தப் பக்கமா என்று விழித்த காலம். அப்பொழுது இவரது கவிதைகள் எளிமையாக மனதில் வந்து அமரும். நான் அறிந்த வாழ்க்கை, என் அனுபவம் அவரது வார்த்தைகளில் வந்து விழும். எதுகை, மோனை, சீர், ஓசை என்று எதுவும் பிரித்துப் பார்த்து அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. நல்ல வேலை கிடைக்காமல், காலையில் தாமதமாக எழுந்தால், அம்மாவிடமிருந்து காப்பி கூட கிடைக்காது. இருத்தலே, கேள்வியாக இருந்த காலத்தில்,  இப்படி ஒரு கவிதை அவரிடமிருந்து ஆறுதலாக.

எப்படியும்
இருந்துகொண்டே இரு

காட்சியில் இல்லையென்றால்
காணாமல்தான் போவாய்

காணாமல் போனதுக்காக
கவலைப்படுவார் யாருமில்லை

அவரவர் பாத்திரத்துக்கு
அவரவரே பொறுப்பு

எவர் கையையும் எதிர்பாராது
எதுக்காகவும் அலட்டிக்கொள்ளாது

ஏனென்று விசாரம்விடுத்து
இருந்துகொண்டே இரு

இருக்கும்வரை இருந்துகொண்டே இரு
எப்படியும்.

வார்த்தைகள், புரிதலைத்தாண்டி உணர்வுப்பூர்வமாக சென்றடைவது சொந்த மொழியில் வாசிக்கும்பொழுதும், கேட்கும்பொழுதும்தான் என்பது என் எண்ணம். ‘காற்று’ என்று யாரேனும் சொல்லக் கேட்டால் புயல், தென்றல் இரண்டும் வந்து அலைமோதுகிறது. ‘மழை’ என்று சொன்னதும் ஊரில் இன்னும் மழை இல்லையே என்ற கவலை வந்து ஒட்டிக்கொள்கிறது. விக்ரமாதித்யனின் கவிதை நூல்களில் ஒன்றின் பெயர் , ‘சும்மா இருக்கவிடாது காற்று’. இந்த நூலை வாங்கி அட்டையில் இருக்கும் தலைப்பைப் பார்த்தால் போதும். கவிதைகள் அப்புறம்.

கருத்துச் சொல்ல பிடிப்பதில்லை. யாரும் கருத்துச் சொன்னால், அவர் மேல் கோபம் வருகிறது. அவரது ‘பூமிபோல’ கவிதை என்னை ஆற்றுப்படுத்துகிறது.

நடக்கும்
நடக்காதென்று சொல்ல
நான் யார்

வேண்டும்
வேண்டாமென்று நினைக்கத்தான்
நான் யார்

.

நன்மை
தீமையென யோசிக்க
நான் யார்

உண்மை
பொய்மையென கருதத்தான்
நான் யார்

பூமிபோல
இருக்கவேண்டியதுதான் சாமி

கவிஞர் விக்ரமாதித்யனின், கவிதைகளுடன், அவரது கட்டுரைகளும் வாசகனாக எனக்கு கற்றுக்கொடுத்தவை உண்டு. கற்றுத் தேறுவதுதான் வித்தை என்ற அவரது கட்டுரையிலிருந்து.

சங்கக் கவிதையிலிருந்து கவிதை நுணுக்கமும் கூர்மையும் கற்றுக் கொள்ளலாம். காவியங்களிலிருந்து பலவகைப்பட்ட சொல்லும் விதமும் கவிதையை வளர்த்தெடுத்துச் செல்லும் வழி வகையும் விரிவான கதைசொல்லும் முறையும் தெரிந்துகொள்ளலாம்.

அகமும்புறமும் ஆழ்ந்து வாசித்து குறுந்தொகையும் நெடுந்தொகையும் உள்வாங்கி, பதிற்றுப்பத்தும் பட்டினப்பாலையும் மனசிலாக்கிக் கொண்டால் கவிதையின் சூட்சுமம் தன்னைப்போல பிடிபடும். நல்ல கவிதை தெரியாது. நல்ல கவிதை எழதமுடியாது  

இன்று காலை போனில் அழைத்து, அவருக்கு வாழ்த்துக்கள் சொன்னேன். ‘கவிதையை என்னால் அனுபவிக்கத்தான் முடியும். விமர்சனம் வைக்கத் தெரியாது’ என்றேன். ‘சரியா சொன்னீங்க, சரியா சொன்னீங்க’ என்று சிரித்தார். எனது வேலை விபரங்கள் எல்லாம் கேட்ட பிறகு, “இவ்வளவு வேலைக்கு அப்புறமும் வாசிக்கிறீர்களா?“ என்றார். “துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிற வாழ்க்கையில் உங்கள் கவிதைகள்தான் ஆறுதல் படுத்துகிறது” என்றேன். “ஓ.. அப்படியா, என் வாழ்விற்கு ஒரு அர்த்தம் இருக்குங்கிறீங்க” என்றார். “என்ன ஐயா, இப்படி சாதாரணமா சொல்லீட்டிங்க!” என்றேன். லட்சுமி மணிவண்ணன் வார்த்தைகளை கடன் வாங்கி, ‘நீங்கள் தமிழின் அலங்காரம்’ என்றேன். “எனது அழைப்பால், அவரது நாள், நன்றாக அமைந்தது” என்றார். அவர் கவிதைகள்தானே, நம் நாட்களை நன்றாக வைத்திருக்கின்றன.

அன்புடன்,

சௌந்தர்,

ஆஸ்டின்

***

முந்தைய கட்டுரைகாந்தியும் பிராமணர்களும்
அடுத்த கட்டுரைமண்ணுள் உறைவது- கடிதங்கள்