சவக்கோட்டை மர்மம் – கடிதங்கள்

சவக்கோட்டை மர்மம் – சிறுகதை

அன்புள்ள ஜெ

சவக்கோட்டை மர்மம் தொகுப்பில் வந்திருந்தாலும் இப்போது படித்தபோதுதான் முழுமையாக உள்வாங்க முடிந்தது. குறிப்பாகப் புதிர்ப்பாதைகளை பற்றிய குறிப்புகளைப் படித்த பிறகு. புதிர்ப்பாதைகளாக ஏன் தியானத்தையும் ஞானப்பாதையையும் உருவகித்தார்கள் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. கடைசிப்பயணத்தின், சாவின் புதிர்ப்பாதை அது என நினைத்தேன். மனசின் புதிர்ப்பாதை என இன்றைக்கு நினைக்கிறேன்.

வெளியே உள்ள  சத்தங்களை வாங்கி அதுவே சுழற்றிக்கொள்கிறது. வேறொன்றாக ஆக்கிக் கொள்கிறது. வேண்டுமென்றே பாதைகளை குழப்பியடிக்கிறது. எல்லாவற்றையும் தப்பாக ஆக்குகிறது. நம்முடைய பெர்செஷனே நம்மை அலைக்கழியச் செய்கிறது. மனசுக்குள் மேப் வைத்துக்கொண்டு செல்பவன் வழிதவறுவான் என்று மகரிஷி சொன்னதுண்டு. ஆழமான கதை.

சுந்தர்

***

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

தமிழரசி வணக்கத்துடன் எழுதுவது. வட்டச்சுழல் பாதையும் சவக்கோட்டையும் நாம் வாழும் வாழ்க்கையை ஒத்து இருக்கிறது. நாம் முன்னோர்கள் கட்டி வைத்த கோட்டைக்குள் இருக்கும் கல்பாவிய பாதைகளின் ஊடுவழியின் ஊடாகவே சுற்றி சுற்றி வருகிறோம். கல் பாவிய தரை திடமான காலடிகளைக் கொடுத்து பாதுகாப்புணர்வைத் தருகிறது.

பாதுகாப்பை உணரும் போதே அகம் பதறி நிலையின்மையை உணர்ந்து அலை மோதுகிறோம். சிறு சாளரம் வழியாக வரும் காற்றை உணரும் போது ஆசுவாசப்படுகிறோம். இந்த காற்றை உற்றார் உறவினர்னு வைத்துக் கொண்டால் வெக்கைக் காற்றா, தென்றலா, குளிர்காற்றா என்பது அவங்ககிட்ட நமக்கிருக்கும் மனப்புரிதலால் ஆனது.

அங்கேயேயிருக்க முடியாது அடுத்த இடம் தேடி நடக்கிறோம். வேர்த்து விறுவிறுத்து களைத்துப் போகும் போது தெளிந்த ஓடையாக ஒழுகும் தண்ணீரைக்கண்டு தாகம் தணித்து தெளிகிறோம். இந்த நீரோடை நீர் புத்தகங்கள்.

எப்பொழுதாவது வழி தவறி வெளியே வரும் போது புல்தரையில கால் வைக்கிறோம். விண்ணையும் மண்ணையும் அப்பதான் பார்க்க முடியுது. விண் நம்ம ஆசான். மண் திருவல்லிக்கேணி செந்தில்குமார்  மாதிரி நம்ம மனசு ஒத்த தோழமைகள்.

புல் தரையில நிக்க முடியுதா. கண்ணுக்கு எதிர்ல கோட்டைச்சுவர் தெரியுது வெளியே போகலாம். வெளியே என்னயிருக்குன்னு தெரியலை. என்னயிருக்குன்னு தெரியாததனாலயே மனசு பதைக்குது. பாதுகாப்பைத் தேடுது. நம்மை அறியாமலேயே முன்னோர் கட்டி வைத்த கோட்டைக்குள்ள இருக்கற வட்டச்சுழல் பாதையில போய் சுற்ற ஆரம்பித்து சுற்றுகிறோம்.

சாளரம் வழியே காற்று வரும். உற்றார் உறவினர் வருவார்கள். தாகம்வரும். நீரோடை நீர் போல புத்தகங்களினால் தாகம் தணிவோம். ஆசான் வருவார். தோழைமைகள் வருவார்கள். திரும்ப கோட்டைக்குள்ள ஓடி இருளில் புதைவோம். அப்படியே காணாமல் போவோம்.

வாழ்க்கையே சுற்றி சுற்றி வர்றமாதிரிதான் இருக்குது. கோட்டை அரணை உடைத்து வெளியே போகத்தான் மனசு ஏங்குது. ஆனால் ஏதோ ஒன்னு தடுக்குது. அந்த ஒன்னு என்ன.

நன்றி.

தமிழரசி.

***

முந்தைய கட்டுரைமாபெரும் கம்பளம் பற்றிய கனவு [சிறுகதை]
அடுத்த கட்டுரைபாணனின் நிலம்