அன்புள்ள ஜெயமோகன்
விக்கிரமாதித்தனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நீண்ட நாட்கள் ஆயிற்று விக்ரமாதித்தன் அவர்களின் கவிதைகளை நான் படித்து. நடுவே இலக்கியம் எல்லாவற்றிலும் இருந்து ஒரு நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. சிறு பத்திரிகைகள் எல்லாம் நின்றுபோய் இலக்கியம் என்பதே இணையத்திற்கு மாறிவிட்டது. இன்னும்கூட எனக்கு இணையத்தில் படிப்பது முடிவது இல்லை. நான் பழைய சிறுபத்திரிகைகளைச் சேர்த்து வைத்து அவற்றை தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.
நம்பிக்கு விருது கிடைத்த செய்தி அடைந்தபோது பழைய இதழ்களை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். அவற்றில் இருந்த அவருடைய கவிதைகளை படித்துக் கொண்டிருந்தேன். கடந்த ஒரு 40 ஆண்டுகளாகவே தமிழ் சிற்றிதழ் இயக்கத்துடன் அவர் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய பெயரில்லாத சிறுபத்திரிகைகளில் குறைவாகத்தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்ப சின்ன பத்திரிகைகளில் கூட அவர் எழுதி இருக்கிறார் 50 காப்பி 100 காப்பியடிக்கும் சிறிய இதழ்களில் கூட அவருடைய கவிதைகளை நான் பார்ப்பேன். அவருக்கு எந்த சிறுபத்திரிகை என்ற பேதம் எப்போதும் இல்லை. அதை யாராவது படிப்பார்களா என்று கூட அவர் வந்து யோசித்தது கிடையாது. அவர் ஒரு கலைஞனாக தன்னைப் பற்றி மட்டுமே எண்ணி தன்னிலேயே நிறைவு கொள்பவராக இருந்திருக்கிறார். அவருடைய சிறிய வட்டத்துக்குள்ளேயே அவருடைய கவிதை நிறைவடைந்திருக்கிறது
யோசித்துப் பார்த்தால் சங்ககாலத்தில் இருந்து தமிழ்க் கவிஞர்கள் எல்லாருமே அப்படித்தான் இருந்திருப்பார்கள். அந்தக் காலத்தில் இருந்த ஒரு பாணன் அவன் எழுதிய கவிதையை ஏட்டில் எழுதி வைத்து இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கழித்து வாசிப்பார்கள் என்றெல்லாம் நினைத்திருக்க மாட்டார். ஔவையார் பாடிய ஒரு கவிதை உண்டு. உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் என்றன் உளம். விக்ரமாதித்யனும் அப்படித்தான். அத்தகைய ஒரு கவிஞர்களின் மரபு விக்கிரமாதியனுக்குப் பின்னால் இருக்கிறது.
அவருடைய கவிதைகளை இப்போது பார்க்கையில் அவர் தமிழிலிருந்து ஒரு மரபை தனக்கென்று ஒரு எடுத்து வைத்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. அந்த மரபு இங்கே எப்போதுமே இருந்தது. அலைந்து திரிபவர்களாகவே கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். நான் தமிழ் கவிஞர்களை ஒரு நீண்ட வரிசை பின்னால் எடுத்து பார்த்தேன். எல்லாரும் அலைந்தவர்கள்தான். ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஊராகச் சென்று பாடல் பாடியிருக்கிறார்கள். தனிப்பாடல் கவிஞர்கள் எல்லாருமே பிரபுக்களை நாடிச் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள். மிகப்பெரிய ஒரு பேரரசின் அவைக்கவிஞராக இருக்கும் பாக்கியம் பெற்றவர் கம்பர். ஆனால் அவருக்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை. உங்கள் ஊரில் தான் அவர் தலைமறைவாக இருந்தார் என்று இங்கே சோழநாட்டிலே சொல்வார்கள்.
தெய்வங்கள் நிலைத்திருக் கவேண்டும், கவிஞன் அலையவேண்டும் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். விக்ரமாதித்தன் தமிழகத்தில் அலைந்து கொண்டிருக்கிறார். என்றாவது அவர் எந்தெந்த ஊர்களைப் பற்றி பாடியிருக்கிறார் என்று கணக்கில் எடுத்தால் அது பழைய பக்தி இயக்கக் கவிஞர்கள் அளவுக்கு இருக்கும் என்று தோன்றியது. அவர் எந்தெந்த மனிதர்களைப் பற்றிப் பாடியிருக்கிறார் என்பதுகூட ஒரு பட்டியல் போடலாம். ஒட்டுமொத்தமாக அவருடைய கவிதைகளை தொகுத்து இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைப்பதுண்டு
எல்லா கவிகளையும் போலவே அவருடைய கவிதைகளில் நெல்லும் பதரும் கலந்துதான் இருக்கின்றன. நெல்லு பிரித்து எடுப்பதுக்கு அவருடைய எழுத்தில் ஒரு பயிற்சி தேவை. பசியுள்ள பறவைகளுக்கு அந்த பசியே அந்த பயிற்சியை கொடுத்துவிடும். அவர் ஒரு கவிஞராக இங்கே இந்த நிலத்தில் அலைந்து கொண்டிருக்கிறார். ஏராளமான விஷயங்களை எழுதியிருக்கிறார். அரசியலையோ சமூகசீர்திருத்தக் கருத்துக்களையோ அவர் எழுதவில்லை. இங்கிருக்கும் அன்றாட வாழ்க்கையை பார்த்துத் தன் மனதுக்குப்பட்டதைச் சொல்லியிருக்கிறார். அவருடைய இரு கவிதையை மட்டுமே எடுத்து தனியாகப் பேசிவிட முடியாது. ஒட்டுமொத்தமாக அவருடைய கவிதைகளைக் கொண்டு அவரை ஒரு ஆளுமையாக எடுத்துக் கொண்டு அந்த ஆளுமையின் ஒரு வெளிப்பாடாக அத்தனை கவிதைகளையும் பொருட்படுத்துவது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவரைப் போன்ற ஒருவர் ஒருவர் நம்முடைய ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார். குடும்பத்திற்கு வெளியே குடும்ப அரசியல் தெரியாதவராக இருப்பார். ஆனால் சரியான சந்தர்ப்பத்தில் சரியான நியாயத்தை அவர் தான் சொல்வார். எனக்கு அப்படி ஒரு சித்தப்பா இருந்தார். அவரை நான் அப்படித்தான் நினைத்திருக்கிறேன். அவரைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு நெடுங்காலமாக பெரிய விவாதங்கள் நீடித்து அதிலிருந்து அவருடைய ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு பெரிய விவாதங்கள் வேண்டும். எந்தக் கவிதைகளை காலம் நிலைநிறுத்துகிறது என்று நமக்குத் தெரிய வேண்டும். இப்போது ஒரு வாசகனாக அவரை மரியாதை செய்வது மட்டுமே நாம் செய்யவேண்டிய விஷயம். விஷ்ணுபுரம் விருது அவருக்கு அளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
சி.செல்வமுருகன்