விஷ்ணுபுரம் அமைப்பின் அரசியல்

ஈழ அகதிகளுக்குச் சலுகைகள் – நன்றி
ஆரம்பக்கல்விக்காக ஓர் இயக்கம், நன்றியும் வணக்கமும்

அன்புள்ள ஜெ

சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினின் பணிகளைப் பாராட்டி சில பதிவுகளைப் போட்டிருந்தீர்கள். நீங்கள் விழைந்த சில நடவடிக்கைகளை அரசு செய்வதாக எழுதியிருந்தீர்கள். அதையொட்டி உங்கள்மேல் வந்துகொண்டிருக்கும் விமர்சனங்களை நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். இந்துத்துவர்கள் நீங்கள் மனசாட்சியை கழற்றிவிட்டு திமுகவுக்கு விலைபோய்விட்டதாக நினைக்கிறார்கள். திமுகவினர் நீங்கள் திமுக தயவை நாடுவதாக பதிவிடுகிறார்கள்.

நான் கேட்க நினைப்பது இதுதான். விஷ்ணுபுரம் அமைப்பின் அரசியல் நிலைபாடு என்ன? விஷ்ணுபுரம் அமைப்பிலுள்ளவர்கள் உங்கள் அரசியலை ஏற்றுக்கொள்கிறார்களா? அவர்கள் உங்கள் கருத்துக்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

ஆர்.ராஜேஷ்

அன்புள்ள ராஜேஷ்,

நான் இதை முன்பும் எழுதிவிட்டேன். எனினும் காலந்தோறும் வேறுவேறு தலைமுறையினர் இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே மீண்டும்.

எனக்கு உறுதியான அரசியல் நிலைபாடு அல்லது அரசியல் கொள்கை என ஏதுமில்லை. எழுத்தாளனுக்கு அவ்வாறு இருக்கலாகாது என்றே நான் நினைக்கிறேன். அவ்வாறு இருந்தால் அந்த எழுத்தாளனின் எழுத்தில் அவனுக்கான பார்வையோ, மெய்யான உணர்ச்சிகளோ வெளிப்படாது. அவனுடையது அவன் குரலாகவே இருக்கவேண்டும், அக்குரல் வெளியே இருந்து உள்ளே சென்று எதிரொலிப்பதாக இருக்கலாகாது.

எழுத்தாளன் எந்த அமைப்பிலும் எந்த இயக்கத்திலும் உறுப்பாக இருக்கலாகாது. அதனால் அவனுக்கு பல நன்மைகள் இருக்கலாம். பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால் அவன் அந்த சார்புநிலையைத் துறந்தே ஆகவேண்டும். எழுத்தாளனின் உள்ளம் சார்பற்ற நிலை ஒன்றை கொண்டிருக்கவேண்டும், தன்னிச்சையாக அது இயங்கவிடவேண்டும், அதுவே எழுத்தின் சுதந்திரம்.

அதைப்பற்றிச் சொல்ல நான் பயன்படுத்தும் வார்த்தை ‘காற்றுமானியின் நடுநிலை’ காற்றுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தலே ஒரு காற்றுமானி செய்யவேண்டியது. தன் உள்ளுணர்வின் காற்றுக்கு. தன்னைச் சூழ்ந்து வீசும் வரலாற்றுப் புயலுக்கு. எழுத்தாளனிடம் நாம் காண்பது அவனுடைய சிந்தனையை அல்ல, அவனுடைய உணர்வுகளையும் அல்ல. அவன் அவனைமீறிய விசைகளின் பிரதிநிதி. அவன் ஓர் ‘இண்டிக்கேட்டர்’.

ஆகவே அரசியலில் எழுத்தாளன் ஒரு தரப்பு அல்ல, சாட்சி மட்டுமே. என் அரசியல் கட்டுரைகளுக்குச் சாட்சிமொழி என்று தலைப்பு அளித்தது அதனால்தான். எந்நிலையிலும் என்னை அவ்வாறு வைத்துக்கொள்ளவே முயல்கிறேன். இதில் ஒரே சமயம் ஒரு பாமரத்தனமும் நுண்ணுணர்வும் உள்ளது.

[சாட்சிமொழி வாங்க]

எழுத்தாளன் தன் சொந்த தர்க்கத்தைக் கடந்து, தன் உள்ளுணர்வை எழுதுவதன் வழியாக ஒரு சமூகத்தின் மனசாட்சியாகவும் அந்த வரலாற்றுக் காலகட்டத்தின் பிரதிநிதியாகவும் ஆகிறான். அதை அவன் உணர்ந்தால் அவன் தன்னை வழிநடத்தும் அரசியல்தலைவனாகவோ, பின்தொடரும் தொண்டனாகவோ கருதிக்கொள்ள மாட்டான்.

இது புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி வரை இங்கிருந்த ஒரு மரபு. தன் காலகட்டத்தின் பேரலையாக இருந்த சுதந்திரப்போரில்கூட ஈடுபட மறுத்தவர் புதுமைப்பித்தன். அமைப்புக்கும் எழுத்தாளனுக்குமான முரண்பாட்டைப்பற்றி அறிய ‘ஒரு புளியமரத்தின் கதை’ முதல்பதிப்புக்கு சுரா எழுதிய முன்னுரையை நீங்கள் வாசிக்கலாம். ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் நூலை வாசிக்கலாம். தமிழில் என்னிடமிருந்து மாறுபட்ட குரலாக ஒலித்தாலும் சாரு நிவேதிதாவின் அரசியலும் இதுவே என்பதை கவனித்திருப்பீர்கள்.

இந்த நிலைபாட்டை பொதுவாக அரசியலாளர்கள் புரிந்துகொள்ள முடியாது. அவர்களைப் பொறுத்தவரை ஒருவர் அவர்களின் தரப்பினராகவோ எதிர்த்தரப்பினராகவோதான் இருக்க முடியும். எவரும் நிகழ்வுகள் சார்ந்து எந்த நிலைபாடும் எடுக்கமுடியாது. ஆதரித்தால் முழு ஆதரவு, எதிர்த்தால் முழு எதிர்ப்பு என்றுதான் செயல்பட முடியும். அதுதான் அவர்களைப் பொறுத்தவரை தெளிவான அரசியல் நிலைபாடு, அதுதான் நேர்மையான நிலைபாடு. அப்படித்தான் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆகவே அவர்களால் முத்திரை குத்தவே முடியும். அதனடிப்படையில் ஆதரவு என்றால் கொண்டாடவும் எதிர்ப்பு என்றால் வசைபாடவுமே முடியும். அவர்கள் தங்கள் அரசியல்நிலைபாட்டை சுயநலத்தின் அடிப்படையில் ஒரு சதியாகவே எடுத்திருக்கிறார்கள். அல்லது சாதி, இனம், மதம், கருத்தியல் வெறிகளின் அடிப்படையில் அடித்துச் செல்லப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் பிறரையும் அப்படியே நினைக்கிறார்கள். எனவே தங்களுக்கு எதிர்தரப்பு என்பது சுயநல நோக்கம் கொண்ட ஓர் அரசியல்சதி அல்லது சாதி மத இன மொழி கருத்தியல் சார்ந்த ரகசியப்பற்று என்று மட்டும்தான் அவர்களால் புரிந்துகொள்ள முடியும். அதற்குமேல் அவர்களால் எழவே முடியாது. அவர்கள் இருக்குமிடம் ஒரு மாபெரும் இருட்சிறை.

இந்த வசைகள் எல்லா எழுத்தாளருக்கும் அளிக்கப்பட்டவையே. இன்று புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் முற்போக்கினரால் கொண்டாடப்படுகின்றனர். ஆனால் புதுமைப்பித்தன் நச்சிலக்கியவாதி என அவர்களால் வசைபாடப்பட்டார். ஜெயகாந்தன் பச்சோந்தி என்று இழிவுசெய்யப்பட்டார். காலந்தோறும் அரசியல்வாதிகள் எழுத்தாளனை தங்களுக்கு கொடிபிடிக்க அழைக்கிறார்கள், வராவிட்டால் வசைபாடுகிறார்கள்.

ஜெயகாந்தனின் கருத்துக்களைக் கவனியுங்கள். அது மிகச்சிறந்த உதாரணம். அவர் இடதுசாரிப்புலம் கொண்டவர். ஆனால் தாயுமானவரையும் விவேகானந்தரையும் இயல்பாக ஏற்றுக்கொண்டவர். தேவையென தோன்றியபோது காங்கிரஸின் மேடைப்பேச்சாளர் ஆனார். ரஷ்யாவை ஆதரித்தவர் கடைசிக்காலத்தில் அமெரிக்கா சென்று அங்கிருந்த மக்கள்நலத் திட்டங்களைக் கண்டபோது அதை எந்த ஜாக்ரதையுணர்வுமில்லாமல் இயல்பாகவே அமெரிக்காவைப் பாராட்டினார். கடைசியாக அவர் பச்சோந்தி என இழிவுசெய்யப்பட்டது அப்போதுதான்.

இப்போது ஸ்டாலினின் அரசை கவனிக்கிறேன். என் சுற்றிலும் நிகழ்வனவற்றில் இருந்து என் உளப்பதிவைச் சொல்கிறேன். எல்லாவற்றிலும் கருத்து சொல்வதில்லை. எனக்கு அக்கறை உள்ள தளங்களில் மட்டும். உண்மையில் எனக்கு இந்த அரசல்ல, எந்த அரசின்மேலும் பெரிய நம்பிக்கை ஏதும் இருப்பதில்லை. அதுவே பொதுவாக இந்தியக் குடிமகனின் மனநிலை. ஆனாலும் ஒவ்வொரு புதிய ஆட்சியாளர்மேலும் ஒரு நம்பிக்கை உருவாவதையும் தவிர்க்கமுடியாது, அது பலசமயம் கடும் ஏமாற்றமாகவே ஆகிறது.

ஸ்டாலின் அரசை சற்றுக் கூடுதல் நம்பிக்கையின்மையுடனேயே அணுகினேன் என நண்பர்களுக்குத் தெரியும். ஆனால் இவ்வரசின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாகவே உள்ளன. அனைத்துத் தளங்களிலும். ஓர் இலட்சிய அரசு என்றெல்லாம் சொல்லமாட்டேன். அப்படி ஓர் அரசு நம் தேர்தல்முறையில் சாத்தியமே இல்லை. ஆனால் நடைமுறைகளில் நேர்மையும், நல்ல நோக்கங்களும், சரியான திட்டங்களும் கொண்ட அரசாக உள்ளது.

இதுவே இன்று தமிழகத்து மக்களின் மனநிலை என்பதை அறிய ஒரு சுற்று உங்கள் அருகே உள்ள முச்சந்தியில் உலவி வந்தாலே போதும். இந்த அரசு மிகமிக நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. உண்மையில் இந்த ஆதரவின் பாதிப்பங்குகூட தேர்தலின்போது திமுகவுக்கு இருந்ததில்லை.

ஏமாற்றம் கொள்ளப்போகிறவர்கள் திமுகவினர்தான். அவர்களில் சுயநல நோக்கம் கொண்டவர்கள் ஏதும் கிடைக்காமல் சீற்றம் அடையலாம். மிகையான நம்பிக்கை கொண்ட முதிராத தொண்டர்கள் நடைமுறையின் எல்லைகளுக்குள் அரசு செயல்படுவதைக் கண்டு ஏமாற்றம் அடையலாம்.

ஆனால் இந்த ஆட்சி இதே விசையுடன் தொடர்ந்தால் சாமானியன் நிறைவையே அடைவான். அவனுக்கு அரசின், அரசியல்வாதிகளின் எல்லைகளும் தெரியும். அதற்குள் நின்று அவர்கள் செய்யும் சாதனைகளையே அவன் எதிர்பார்க்கிறான்

இந்த அரசியல்கும்பல், அதிலும் களஅரசியலே அறியாமல் முகநூலில் வம்பளக்கும் வெட்டிகள் என்ன சொல்வார்களென எனக்கு தெரியும். இவர்கள் எந்த வகையில் எனக்கு ஒரு பொருட்டு? இதுவரை எங்கே இவர்களை கருத்தில்கொண்டிருக்கிறேன்? நாளை ஸ்டாலின் அரசின் ஏதாவது செயல்பாட்டை நான் விமர்சனம் செய்தால் மீண்டும் விலைபோய்விட்டான், பச்சோந்தி என ஆரம்பிப்பார்கள். சிறுமதியர், மிகச்சிறிய மானுடர்.

*

நான் தன்னிச்சையாக அரசியலை கவனிக்கிறேன். இயல்பாக என் உள்ளத்திற்குப் படுவதைச் சொல்கிறேன். வாழ்க்கையின் பிறவிஷயங்களை எப்படி பார்த்து எவ்வண்ணம் வெளிப்படுத்துகிறேனோ அப்படி.

அது பொதுவாக ஒட்டுமொத்தச் சமூகத்தின் எதிர்வினைகளின் போக்கையே கொண்டிருக்கும். எழுத்தாளன் என்பதனால் ஒர் உள்ளுணர்வின் வெளிப்பாட்டையும் கொண்டிருக்கும். ஒட்டுமொத்தச் சமூகத்தின் எண்ணமென்ன என்று அறிய, உள்ளுணர்வின் கண்டடைதலென்ன என்று அறிய அவற்றை கவனிக்கலாம்.

அது ‘தெளிவானதாக’ இருக்கவேண்டும் என்றோ ‘மாறாநிலைபாடு’ கொண்டிருக்கவேண்டும் என்றோ நான் முயல்வதில்லை. அது தன்போக்கில் இருக்கலாம். அதில் குழப்பங்களும் பிழைகளும் இருக்கலாம். உண்மையானதாக இருந்தால் மட்டும் போதும்.

நான் சொல்லும் கருத்துக்கள் தரவுகள் சேகரித்து, ஆராய்ந்து சொல்லும் உண்மைகள் அல்ல. தர்க்கபூர்வமாக முன்வைக்கப்படுவனவும் அல்ல. அவை அரசியல் ஆய்வாளரின் கருத்துக்கள் அல்ல. ஆகவே அவற்றுடன் விவாதிக்க முடியாது. தேவையில்லை என்றால் கடந்துசெல்லலாம், அவ்வளவுதான்.

ஆனால் ஒரு சமூகச் சூழலில் இக்குரல்களுக்கு, இவை எழுத்தாளர்களால் முன்வைக்கப்படுவன என்பதனால், ஒர் இடமுண்டு. உலகமெங்கும் உயர்பண்பாட்டுச் சூழல்களில் இக்குரல்கள் எப்போதுமே கவனிக்கப்படுகின்றன.

நான் என் வாசகர்களுக்குச் சொல்லும் ஒன்று உண்டு, நான் இந்த அரசு அல்லது எந்த அரசு அளிக்கும் எதையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனக்கு எவரும் எதையும் அளிக்கவேண்டியதில்லை. எங்கும் சென்று நிற்கவேண்டிய தேவையும் எனக்கில்லை.என் வாசகர்களிடமே இன்று நான் எதையும் கேட்கமுடியும்.

ஆனால் நான் கேட்டுப் பெறுவதெல்லாமே எனக்காக அல்ல, பிற எழுத்தாளர்களுக்குத்தான். இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டும் லட்சக்கணக்கான ரூபாயை கேட்டுப்பெற்றிருக்கிறேன். நானறிந்து இந்தியாவில் எந்த எழுத்தாளனும் இந்த நிலையில் இல்லை. நான் மேற்கொண்டு எதிர்பார்க்க ஏதுமில்லை.

 

*

விஷ்ணுபுரம் ஓர் அமைப்பு அல்ல, ஓர் இயக்கம் மட்டுமே. அல்லது ஒரு நண்பர்குழு. எங்களுக்கு ’அமைப்பு’ என ஏதுமில்லை. தலைவர் செயலாளர் என எவரும் இல்லை. ஆகவே இதில் சேர்ந்து செயல்படும் எவரும் இதிலுள்ளவர்களே. இது தன்னிச்சையான ஒரு குழு, அவ்வளவுதான்.

விஷ்ணுபுரம் குழுவை அரசியலுக்கு அப்பாற்பட்டே வைத்திருக்கிறோம். அது தொடக்கம் முதலே உள்ள நெறி. இது கலை- இலக்கிய -பண்பாட்டுக் குழுமம் மட்டுமே. இதில் எல்லா அரசியலியக்கத்தவரும் உள்ளனர். நாம்தமிழர், மக்கள் நீதிமையம், அதிமுகவினர் பலர் உள்ளனர்.பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள்கூட உண்டு. ஆனால் இதற்குள் திமுகவினரும் பாரதிய ஜனதாக் கட்சியினருமே தீவிர அரசியல் பேசுபவர்கள். திமுகவினர் மேற்கோள்காட்டும் பல ஆய்வுக்கட்டுரைகள் என் தளத்தில் நண்பர் பாலா எழுதியவை. வெளியே பாரதியஜனதா, திமுக சார்ந்து விஷ்ணுபுரம் நண்பர்கள் பலர் எழுதிக்குவிக்கிறார்கள். வேறு தளங்களில் விவாதித்துக் கொள்கிறார்கள். அங்கே நான் நுழைவதில்லை.

திமுக -பாரதியஜனதா விவாதம் ஓயாமல் நிகழ்வதனால் எங்கள் குழுமங்கள், கூட்டங்கள் எதிலும் அரசியல் பேசுவதற்கு அனுமதி இல்லை. அரசியல் கூடாது என்பதனால் அல்ல, அதை ஆரம்பித்தால் வேறேதும் பேசமுடியாது என்பதனால். எங்கள் குழுமங்களில் ‘பார்பர்ஷாப் நெறிகள்’ உள்ளன என்ற கேலி பரவலாக உண்டு என நான் அறிவேன். ஆனால் வேறு வழி இல்லை.

ஜெ

எனது அரசியல்

எழுத்தின் இருள்

அரசியலும் எழுத்தாளனும்

இன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி

எழுத்தாளனின் பார்வை

எழுத்தாளனின் சாட்சி

எழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்

அரசியல்வெளி

அரசியல்சரிநிலைகள், ராமர் கோயில்

இரட்டைமுகம்

கலைநேர்மையும் கலைஞனின் நேர்மையும்

அரசியலாதல்

எழுத்தாளன் என்னும் நிமிர்வு

முந்தைய கட்டுரைவல்லினம் இளம்படைப்பாளிகள் மலர்
அடுத்த கட்டுரைமறைந்த ஆடல்கள்