நண்பர் கே.என்.சிவராமன் இக்குறிப்பை எழுதியிருந்தார்:
தற்செயலாக இன்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைக் கடந்து அலுவலகம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனே அந்த எழுத்தாளரின் நினைவு பொங்கித் தளும்பியது. கூடவே அந்த நாளிதழின் இணைப்பிதழ் ஆசிரியர் முகமும்…
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு ஃப்ளாட்டில்தான் அந்த எழுத்தாளரின் மகன் குடியிருக்கிறார். சொந்த வீடு. உண்மையிலேயே இது சிறப்பு வாய்ந்ததுதான். ஏனெனில் அந்த எழுத்தாளர் ஒரு பத்திரிகையாளரும் கூட. அவர் காலத்தில் எல்லா பத்திரிகையிலும் சம்பளம் குறைவு. மூன்று டிஜிட்தான். அதை வைத்துதான் குடும்பம் நடத்தினார். ஒரே மகனை படிக்க வைத்தார்.+2 முடித்தப் பிறகு அவர் மகன் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க விரும்பினார். அன்று இப்படிப்பு பெரிய விஷயம். மொத்தம் ஆறு செமஸ்டர். ஒவ்வொரு செமஸ்டருக்கும் ஃபீஸ் கட்ட வேண்டும். எழுத்தாளரிடம் அவ்வளவு பணமில்லை. சேமிப்பு? பூஜ்ஜியம்.
அவர் பணிபுரிந்த பத்திரிகையில் அவருக்கு சுதந்திரம் வழங்கி இருந்தார்கள். அதாவது மற்ற நிறுவன இதழ்களிலும் அவர் சிறுகதை, தொடர்கதைகள் எழுதலாம். இதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்த எழுத்தாளர் மிகுந்த தயக்கத்துடன் தனக்குத் தெரிந்த ஒரு நாளிதழின் இணைப்புப் பிரிவு ஆசிரியரை சந்தித்தார். இந்த இணைப்புப் பிரிவின் ஆசிரியர், அந்த நாளிதழின் உரிமையாளர்களில் ஒருவரும் கூட. இவரை சந்தித்து தன் நிலையை அந்த எழுத்தாளர் விளக்கினார்.
பொறுமையாகக் கேட்ட அந்த இணைப்பிதழின் ஆசிரியர், எதுவும் சொல்லாமல், கதைச் சுருக்கம் கேட்காமல் அந்த எழுத்தாளருக்கு ஆறு தொடர்கதைகளைக் கொடுத்தார். அதாவது ஆறு மாதங்களுக்கு ஒன்று. 24 வாரங்களுக்கு ஒரு கதை. இதைப் பயன்படுத்தி அந்த எழுத்தாளர் ஆறு சரித்திரத் தொடர்கதைகளை அடுத்தடுத்து எழுதினார். இதன் மூலம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பணம் பெற்று அதை அப்படியே தன் மகனின் கல்லூரியில் செமஸ்டர் ஃபீஸ் ஆக கட்டினார்.
இந்த ஆறு சரித்திரத் தொடர்கதைகளும் தனித்தனி நூலாகவும், ஒரே தொகுப்பாகவும் வந்திருக்கின்றன. அவை அனைத்தும் என்னிடம் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் அந்த எழுத்தாளரின் முகம் மட்டுமல்ல… அந்த நாளிதழின் இணைப்புப் பிரிவு ஆசிரியரும் நினைவுக்கு வருவார். இன்று அந்த எழுத்தாளர் இல்லை. அவர் மகன் மிகப்பெரிய நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார்.
அந்த எழுத்தாளர், கெளதம நீலாம்பரன். அந்த நாளிதழின் இணைப்பிதழ் ஆசிரியர்..?சொல்வதற்கு முன்னால் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடத் தோன்றுகிறது.
ஒரு பத்திரிகையாளர். எழுத்தாளரும்தான். தொடர்கதைகள் எழுதியதில்லை. ஆனால், ஏராளமான சிறுகதைகளை வெவ்வேறு பெயர்களில் அவர் பணிபுரிந்த பத்திரிகையில் எழுதியிருக்கிறார். திடீரென்று அந்தப் பத்திரிகை நின்றுவிட்டது. வேலை இல்லை. சென்னையில் எப்படி வாழ்வது..? பத்திரிகை அலுவலகமாக ஏறி இறங்கி வேலைக் கேட்டு வந்தார். அந்த வகையில் ஒருநாள் அந்த நாளிதழின் இணைப்பிதழ் அலுவலகத்துக்கும் சென்றார். ரிசப்ஷனிஸ்ட் வழியாக செய்தி அறிந்த இணைப்பிதழின் ஆசிரியர் அந்த பத்திரிகையாளரை அழைத்தார். பேசினார். அவரது சம்பளத்தை அறிந்தார். பின்னர் கேட்டார்:
‘உங்களுக்கு என்ன தெரியும்..?’
‘சிறுகதைகள் எழுதுவேன்…’
‘ஒரு நாளைக்கு எவ்வளவு சிறுகதைகள் எழுதுவீர்கள்..?’
‘ஐந்து…’
‘சரி எழுதிக் கொடுங்கள்!’
‘சார்…’
‘5 சிறுகதைகளை வெவ்வேறு ஜானரில் எழுதிக் கொடுங்கள். இது உங்களுக்கு நான் வைக்கும் டெஸ்ட்…’
அந்தப் பத்திரிகையாளரிடம் கிழிக்கப்பட்ட நியூஸ் பிரிண்ட் தாள்கள் கொடுக்கப்பட்டன.
ஆடாமல், அசையாமல், டீ குடிக்கவும் உணவு அருந்தவும் செல்லாமல் அங்கேயே அமர்ந்து மாலைக்குள் 5 சிறுகதைகளை எழுதி முடித்து கொடுத்தார்.
அதைப் பெற்றுக் கொண்ட இணைப்பிதழின் ஆசிரியர், பிரித்துப் படிக்கவே இல்லை. அதை அப்படியே தன் டேபிளில் வைத்து விட்டு ஒரு கவரை எடுத்துக் கொடுத்தார்.
பிரித்துப் பார்த்த பத்திரிகையாளருக்கு கண்கள் கலங்கிவிட்டன.
இரு மாத சம்பளம்!
‘இது உங்கள் 5 சிறுகதைகளுக்கான தொகை. வாரப் பத்திரிகையில் பணிபுரிந்த அனுபவமுள்ள நீங்கள் இன்னொரு வாரப் பத்திரிகையில் பணிபுரிவதுதான் சரி. நாளிதழின் இணைப்பிதழ் உங்கள் திறமைக்கு ஏற்றதல்ல. வேலை் தேடுங்கள். கண்டிப்பாக கிடைக்கும். இரு மாதங்கள் குடும்பத்தைப் பராமரிக்க இத்தொகை உங்களுக்கு உதவும். 60 நாட்களுக்குப் பிறகும் வேலை கிடைக்கவில்லை என்றால் இன்னொரு 5 சிறுகதைகளுடன் வாருங்கள்!’
நெகிழ்ந்த பத்திரிகையாளர் முழுமூச்சுடன் வேலை தேடினார். இரண்டாம் நாளே இன்னொரு வார இதழில் அவருக்கு உதவியாசிரியர் வேலை கிடைத்தது.
மகிழ்ச்சியுடன் இணைப்பிதழின் ஆசிரியரை சந்தித்து அவர் கொடுத்தப் பணத்தை திருப்பினார்.
‘இதை உங்களுக்கு இனாமாக நான் கொடுக்கவில்லை. உங்கள் சிறுகதைக்கான தொகை அது!’
நிம்மதியுடன் திரும்பிய அந்தப் பத்திரிகையாளர் அதன் பிறகு எண்ணற்ற சிறுகதைகளை, தான் பணிபுரிந்த வார இதழில் வெவ்வேறு பெயர்களில் எழுதினார்.
அதேநேரம், அந்த இணைப்பிதழின் ஆசிரியரிடம் எழுதிக் கொடுத்த 5 சிறுகதைகளை வேறு வடிவத்தில் கூட, தான் பணிபுரிந்த பத்திரிகையில் மறந்தும் எழுதவில்லை.
இதற்கும் மேலே சென்றார் அந்த இணைப்பிதழின் ஆசிரியர்.
இன்று வரை அந்த 5 சிறுகதைகளை அவர் பிரசுரிக்கவே இல்லை! காரணம், எழுதிக் கொடுத்ததை அந்தப் பத்திரிகையாளரே, தான் பணிபுரியும் பத்திரிகையில் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்…
இந்தச் சம்பவம் நடந்தது 1990களின் தொடக்கத்தில்…
இன்று அந்தப் பத்திரிகையாளர் ஓய்வுப்பெற்று பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவர் பெயரை இங்கு குறிப்பிடும் உரிமை எனக்கில்லை…
ஆனால், கெளதம நீலாம்பரனுக்கும் இந்தப் பத்திரிகையாளருக்கும் இக்கட்டான தருணத்தில் உதவிக்கரம் நீட்டி… அதை ‘உதவி செய்யவதாக’ காட்டிக் கொள்ளாமல் அவர்களது எழுத்துக்கான ஊதியமாக கொடுத்து கவுரவித்த இணைப்பிதழின் ஆசிரியர் யார் என்று குறிப்பிட முடியும்.
அவர், சென்னை – கோவை ‘தினமலர்’ வார மலர் ஆசிரியரான அந்துமணி.
*
கே.என்.சிவராமன் எழுதிய இந்தக் குறிப்பை நண்பர் அனுப்பியிருந்தார். நான் வீடுகட்டி கடனில் இருந்தபோது மலையாள மனோரமா இதழும் மாத்யமம் இதழும் இதேபோல எனக்கு உதவின. தமிழில் அப்படியெல்லாம் நிகழ வாய்ப்பில்லை என எண்ணியிருந்தேன். பரவாயில்லை, வணிக எழுத்தாளர்களுக்காவது புரவலர்கள் இருக்கிறார்கள்.
திரு.அந்துமணியின் மெய்ப்பெயர் ரமேஷ் என நினைக்கிறேன். அவரைப்பற்றி சாரு நிவேதிதா சொல்லி கேள்விப்பட்டதுண்டு. அவ்வப்போது அவருடைய குறிப்புகளை வாசித்ததும் உண்டு. இச்செயல் அவர்மேல் மதிப்பை உருவாக்குகிறது.
*
கௌதம நீலாம்பரன் குர்அதுலைன் ஹைதர் எழுதிய ‘அக்னிநதி’ நாவலின் கதாபாத்திரம். வெவ்வேறு மனிதர்களாக ஒரே பெயருடன் இரண்டாயிரமாண்டுகளாக வந்துகொண்டே இருப்பவர். கௌதம நீலாம்பரன் என்ற பெயரில் எழுதிய எழுத்தாளரின் ஒரு கதையைக்கூட நான் வாசித்ததில்லை. நான் தமிழ் வணிக எழுத்தாளர்களில் அனைவரையும் ஓரிரு கதைகளாவது வாசித்துப் பார்க்கவேண்டுமென்ற கொள்கை கொண்டவன். எவ்வாறு தவறியதென்று தெரியவில்லை.
கௌதம நீலாம்பரன் பற்றி பேரா.பசுபதி அவர்கள் பக்கத்தில் ஒரு குறிப்பு வாசித்தேன். பேரா பசுபதி அவர்கள் சென்றகால எழுத்தாளர்களைப் பற்றி எழுதும் குறிப்புகள் சுவாரசியமானவை https://s-pasupathy.blogspot.com
செப்டம்பர் 14. கௌதம நீலாம்பரனின் நினைவு தினம்.
கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், கோவி.மணிசேகரன் வரிசையில் குறிப்பிடத்தக்க சரித்திர நாவல்களை எழுதியவர் கௌதம நீலாம்பரன். இவர் ஜூன் 14, 1948 அன்று, விருத்தாசலம் அருகேயுள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் பிறந்தார். இயற்பெயர் கைலாசநாதன். ஆரம்பக்கல்வியை அவ்வூரிலேயே பெற்றார். விக்கிரமாதித்தன் கதைகள், பெரிய புராணம் ஆகியவை கைலாசநாதனின் வாசிப்பார்வத்தை வளர்த்தன.
விருத்தாசலத்தில் நவாப் ராஜமாணிக்கம் நாடகம் பார்த்து, ஈர்க்கப்பட்டு, அந்த நாடகக்குழுவில் இணைந்து சில மாதங்கள் நடித்தார். தொடர்ந்து நாடகம் மற்றும் திரைப்படத்தின் மீது ஆர்வம் அதிகரித்தது. சினிமாவில் நடிக்கும் எண்ணத்துடன் 1965ல் சென்னைக்கு வந்தார். சென்னையில் இவர் சந்தித்தது வறுமையும், கொடுமையுமே. ஹோட்டல் சப்ளையர், பழ விற்பனையாளர், கைக்குட்டை, பிளாஸ்டிக் சீப்புகள் விற்பனை என்று வேலைகள் செய்தார். தெருவிலும், நண்பர்களின் அறைகளிலும் இரவில் தங்கினார். நாடகங்களில் சிறுசிறு வேடங்கள் வந்தன. ஓய்வு நேரத்தில் வாடகை நூலகங்களில் நூல்களை எடுத்து வாசித்தார். கல்கி, நா.பா., மு.வ., அகிலன், சாண்டில்யன், விக்கிரமன், ஜெகசிற்பியன், ஜாவர் சீதாராமன், மீ.ப. சோமு போன்றோரின் நூல்களைத் தொடர்ந்து வாசிக்க எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டது. கவிதைகள் எழுதத் தொடங்கினார். பத்திரிகை அலுவலகங்களுக்கு நேரில் சென்று கொடுத்தார். ஆனால் எதுவும் வெளியாகவில்லை.
நா.பா.வின் கதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட கௌதம நீலாம்பரன் அவரை நேரில் சந்தித்தார். ‘தீபம்’ இதழுக்கு உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார் நா.பா. அது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அங்கு பணியாற்றிக்கொண்டே சிறுகதைகள் எழுதினார். முதல் சிறுகதை ‘புத்தரின் புன்னகை’ இவரது 22ம் வயதில், சுதேசமித்திரன் நாளிதழின் வாரப்பதிப்பில் வெளியானது. இரண்டாவது கதை ‘கீதவெள்ளம்’ அக்பர் – தான்சேன் பற்றிய சரித்திரக் கதையாகும். வித்தியாசமான கதைக்களனில் கற்பனை கலந்து சிறுகதை ஆக்கியிருந்தார். இது கி.வா.ஜ. ஆசிரியராக இருந்த கலைமகளில் வெளியானது. கிட்டத்தட்ட பத்தாண்டுக் காலம் தீபத்தில் பணிபுரிந்தார். அது இவருக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரது அறிமுகத்தைப் பெற்றுத்தந்தது. தொடர்ந்து வார, மாத இதழ்களில் சிறுகதை, தொடர்கள் எழுதினார். சமூகக் கதைகளோடு சரித்திரக் கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுத ஆரம்பித்தார்.
கி.வா.ஜ.வின் பரிந்துரையில் ‘இதயம் பேசுகிறது’ இதழில் உதவியாசிரியராகப் பணிசேர்ந்தார். அதில் இவர் எழுதிய ‘ஈழவேந்தன் சங்கிலி’ என்ற வரலாற்றுத் தொடர் இவருக்குப் பரவலான வரவேற்பைப் பெற்றுத்தந்தது. ஈழத் தமிழ்மன்னனின் பெருமைபேசும் இந்நாவலுக்கு ஜெமினி ஸ்டுடியோ வாசலில் பிரம்மாண்டமான கட்-அவுட் வைக்கப்பட்டது. தொடர்ந்து குங்குமம், முத்தாரம், குங்குமச்சிமிழ் எனப் பல பிரபல இதழ்களில் பணியாற்றினார். பத்திரிகை அனுபவமும், எழுத்துத்திறனும் இவரிடமிருந்து சிறந்த படைப்பாக்கங்களை வெளிக்கொணர்ந்தன. சுதந்திர வேங்கை, சோழவேங்கை, மோகினிக் கோட்டை, கோச்சடையான், ரணதீரன், ரஜபுதன இளவரசி, பல்லவன் தந்த அரியணை, வெற்றித்திலகம், விஜயநந்தினி, பல்லவ மோகினி, மாசிடோனிய மாவீரன், கலிங்கமோகினி, பாண்டியன் உலா, புலிப்பாண்டியன், பூமரப்பாவை, மந்திரயுத்தம், வேங்கைவிஜயம், வீரத்தளபதி மருதநாயகம், சேதுபந்தனம், சாணக்கியரின் காதல், சித்திரப் புன்னகை, சிம்மக்கோட்டை மன்னன், மாடத்து நிலவு போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த வரலாற்றுப் புதினங்களாகும். ‘முத்தாரம்’ வார இதழில் இவர் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இத்தொடர் பின்னர் ‘புத்தர்பிரான்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்து, தினத்தந்தி ஆதித்தனார் அறக்கட்டளை நினைவுப் பரிசு ஒரு இலட்சம் ரூபாய் வென்றது.
கௌதம நீலாம்பரனின் படைப்புகள் தமிழின் அனைத்து முன்னணி வார இதழ்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. மலேசியாவின் வானம்பாடியிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. காவியமாய் ஒரு காதல், ஜென்ம சக்கரம், கலா என்றொரு நிலா போன்ற சமூக நாவல்களையும் இவர் எழுதியிருக்கிறார். சிறந்த கவிஞரும்கூட. இதயமின்னல், அம்பரம் போன்றவை இவரது கவிதைத் தொகுப்புகள். சேரன் தந்த பரிசு, மானுட தரிசனம், ஞான யுத்தம் போன்றவை குறிப்பிடத்தக்க நாடக நூல்கள். நலம்தரும் நற்சிந்தனைகள் என்பது சிந்தனைகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு. இதயநதியை இவரது சுயசரிதை என்றே சொல்லலாம். அருள்மலர்கள், ஞானத்தேனீ, சில ஜன்னல்கள் போன்ற கட்டுரை நூல்களில் தனது வாழ்க்கை அனுபவங்களை, சிந்தனைகளை, சமூக உயர்வுக்கான வழிகளைச் சொல்லியுள்ளார். மாயப்பூக்கள், மாயத்தீவு, நெருப்பு மண்டபம், மாயக்கோட்டை எனச் சிறுவர்களுக்காக நிறைய எழுதியுள்ளார்.
இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதை, கட்டுரை, நாடகங்கள் என 65க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய சரித்திரச் சிறுகதைகளும், சமூகச் சிறுகதைகளும் தொகுக்கப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலாக “சரித்திரமும் சமூகமும்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
சேலம் தமிழ்ச்சங்கம் இவருக்கு ‘தமிழ்வாகைச் செம்மல்’ விருதளித்துச் சிறப்பித்தது. தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ‘பேராசிரியர் கல்கி இலக்கிய விருது’, மன்னார்குடி செங்கமலத் தாயார் அறக்கட்டளையின் ‘சிறந்த எழுத்தாளர் விருது’, லில்லி தெய்வசிகாமணி விருது, பாரதி விருது, சக்தி கிருஷ்ணசாமி விருது, இலக்கியப் பேரொளி விருது, கதைக்கலைச் செம்மல் விருது, கவிதை உறவு வழங்கிய ‘தமிழ்மாமணி’ விருது எனப் பல கௌரவங்களை இவர் பெற்றுள்ளார்.
பல இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்ட போதும், தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கியிருந்து தன் படைப்புப் பணிகளை மேற்கொண்டவர். தான்மட்டுமே எழுத்தாளராக இருக்கவேண்டும் என்று நினையாமல் ஆர்வமுள்ள இளந்தலைமுறைப் படைப்பாளிகள் பலரை எழுதத் தூண்டி ஊக்குவித்தவர். கதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப் பல தளங்களிலும் தீவிரமாக இயங்கிவந்த, கௌதம நீலாம்பரன் செப்டம்பர் 14, 2015 அன்று மாரடைப்பால் காலமானார். இந்தக் கட்டுரையே அவருக்கு அஞ்சலியும் ஆகிறது.
[ நன்றி: தென்றல் ]
தொடர்புள்ள பதிவுகள்:
கௌதம நீலாம்பரன்: விக்கிப்பீடியா