வெண்முரசு விமர்சனம், ஒரு வாசிப்பு

திரு. ஜெயமோகன் அவர்களின் ‘வெண்முரசு’ நாவல்தொடர், எப்பொழுதும் தன் கதிர்களை உலகிற்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆதவன் போன்றது. என்னைப் போன்ற முதல்நிலை வாசகர்களுக்குக் கண்களைக் கூசச் செய்யும் ஒளியாகப் போய்விடுமோ என்று நான் அஞ்சிக்கொண்டிருந்தேன்.

அந்த வேளையில், திரு. ஜெயமோகன் அவர்களின் வலைத்தளத்தில் பலரும் வெண்முரசின் ஒவ்வொரு நாவலையும் வாசித்து அவர்களது வாசிப்பவனுபவத்தை எழுதினர். பலர் சிறப்பாக எழுதினர். அந்த வகையில் முனைவர் ப. சரவணன் அவர்கள் ‘வெண்முரசு’ நாவல் தொடரின் அனைத்து நாவல்களுக்கும் தனது வாசிப்பவனுபவத்தைக் கட்டுரையாக எழுதினார்.

என்னைப் போன்று முதல்நிலை வாசகர்களுக்கு இதுபோன்ற கட்டுரைகள் பெரிய அதிர்ஷ்டம் என்றே நான் கருதுகிறேன். இந்தக் கட்டுரைகள் எந்தவகையிலும் திரு. ஜெயமோகனின் ஆழ்ந்த கருத்துகளைத் திரிக்கவும் சுருக்கவும் கூட்டவும் இல்லை. பல நூறு பக்கங்கள் உள்ள நாவலைச் சில பக்கங்களில் கருத்துச் சுருக்கமாகவும் சிந்தனைத் தெளிவாகவும்  வெளிப்படுத்தின. என்னைப் போன்ற திரு. ஜெயமோகன் மீது தீராப் பற்றுக் கொண்ட வாசகர்கள் கண்டிப்பாக அக்கட்டுரைகளைப் பாராட்டியே தீர்வர் என்பதில் ஐயமில்லை.

முனைவர் ப. சரவணன் அவர்கள் வெண்முரசின் ‘முதற்கனல்’ நாவலைப் பற்றிக் கூறும்போது, “அது நெருப்பால் ஆனது அல்ல. வெறுப்பால் ஆனது என்கிறார். திரெளபதியின் கண்ணீர் மட்டும் அல்ல அவரைப் பல ஆயிரம் பெண்களின் கண்ணீர்தான் ‘முதற்கனல்’ ஆகும். முதற்கனலைப் பற்றிக் கூறும் பொழுது, ‘மகாபாரதத்தின் முதற்கனல் எது?’ என்று கேள்வியை நாம் நமக்குள் எழுப்பிக் கொண்டால், அது ‘மகாபாரதத்தோடு தொடர்புடைய ஒவ்வொரு பெண்ணின் ஆற்ற முடியாத துயரங்களின் திரள்’ என்பதையே விடையாக ஏற்க நேரும்” என்று அந்த நாவலின் மையப்புள்ளியை வரையறுத்துள்ளார்.

பெண்களின் துயரம் கண்ணீராக வெளிப்படும். ஆண்களின் துயரம் சொல்லாக வெளிப்படும் என்பதையும் முதற்கனலில் கூறியுள்ளார். அம்பை பீஷ்மர் மீது கொண்டுள்ள கோபத்தையும் அன்பையும் இந்நாவல் வழி அறியலாம். அன்னையின் அல்லது தந்தையின் ஆணைகளைச் சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் மைந்தர்களாகப் பலரை நாம் இந்த நாவலில் காணமுடிகிறது.

அவர் எழுதிய பின்வரும் தொடர் இப்பகுதிக்கு மணிமகுடமாக உள்ளது.  “புகழையும் பழியையும் சமஅளவில் பெறுவதுதான் எட்டாவது குழந்தையாகப் பிறந்தோருக்கு விதிக்கப்பட்டுள்ளதோ! என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அதற்குச் சான்றுகளாக நாம் இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் ஸ்ரீகிருஷ்ணர். மற்றொருவர் பீஷ்மர்” என்கிறார்.

‘நீலம்’ நாவலைப் பற்றிய கட்டுரையில் நீலத்தோடு சங்க இலக்கிய அடிகளையும் இணைத்து நம் கண் முன்னே கொண்டு வந்திருப்பது மிகச் சிறப்பு. இப்பகுதியில் ராதையைப் பற்றித்தான் முழுவதுமாக வருகிறது. சங்க இலக்கிய வாசிப்புப் பயிற்சி இன்றி வெண்முரசினை வாசிக்க இயலாது. “அத்தகைய பயிற்சி அற்றவர்களுக்கு இந்த நாவல் வெறும் சொற்குவியலாகத்தான் தெரியும். தொடர்ந்த பயிற்சியாலும் முயற்சியாலும் இரண்டு செந்தமிழ்ச் சொற்கள் இணைவதால் உருப்பெறும் படிமத்தை உணரக் கற்றுக்கொண்டால், இந்த நாவல் கற்கண்டாக இனிக்கத் தொடங்கிவிடும்” என்கிறார் முனைவர் ப. சரவணன்.

நாவலைப் பற்றி மட்டும் கூறாமல், அதனோடு தொடர்புடையவற்றைத் தேடிக் கண்டறிந்து நமக்கு அளிப்பவராக இருக்கிறார் இவர்.

வெண்முரசில் துரோணர், துரியோதனன், கர்ணன் ஆகியோரின் அவனமானங்களை நோக்குமிடத்து புலப்படுபவன, துரியோதனன் யானைக்கு நிகரான வலிமையுடன் திகழ்வதாலேயே தன்னுடைய வலிமைக்குச் சிறிதளவு இழுக்கு ஏற்படும்போதும் அவன் தன்னுள்ளேயே பொங்கிக் கொந்தளித்துச் சரிகிறான். துரோணர் அதீத திறனிருந்தும் தன்னுடைய குலமுறைப் பிறழ்வாலேயே எல்லா இடத்திலும் சரிக்கப்படுகிறார். அதன் பின்விளைவாக அவரின் ஆசைகள் விரிந்து வரிந்து பேராசைகளாக மாறிவிடுகின்றன. கர்ணன் தன்னுடைய தனித்திறமையை நிறுவ முயலும் ஒவ்வொரு இடத்திலும் பிறப்பு குறித்து பழிக்கப்பட்டே எல்லோராலும் புறக்கணிக்கப்படுகிறான். புறக்கணிப்பின் வலியே அவனுக்கு மேலும் மேலும் வலிமையை வாரி வழங்குகிறது.

மூவரும் பல்வேறு காலங்களில் அவமானப்பட்டாலும் தங்களது ஆன்மாவைப் புதுப்பித்துக் கொள்ளும் திறன் அவர்களிடம் காணப்படுகிறது. பீமனுக்கும் துரியோதனுக்கும் இடையே நடைபெறும் நிகழ்வையும். துரியோதனனுக்கும் பீமனுக்குமான இடையேயான பிரிவுக்கான காரணத்தினை இக்கட்டுரைத் தொகுப்பில் மிக அழகாகக் கூறியுள்ளார்.

‘இந்திர நீலம்’ பற்றிய கட்டுரையை வாசிக்கும் பொழுது அதிசயத்துப் போனேன். ‘இந்திரப்பிரஸ்தம்’ பற்றி இதில் அறிந்தேன். அது மட்டும் அல்லாது இளைய யாதவரைப் பற்றி திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதியதைச் சுருக்கத்தினை மட்டும் விரும்பும் வாசகர்களுக்காக முனைவர் ப. சரவணன் பின்வரும் பத்தியை எழுதியுள்ளார்.

“இளைய யாதவரின் அகத்தையும் புறத்தையும் சுற்றிப் பெண்கள் இருப்பது போலவே துவாரகைக்குள்ளும் வெளியிலும் பெண்களே நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே இளைய யாதவரும் துவாரகையும் பெண்களின் கனவுகளில் நீங்கா இடம்பெற்று விடுகின்றனர். இனி உருவாகும் ‘இந்திரப்பிரஸ்தம்’ அகத்திலும் புறத்திலும் துவாரகையைப் போலவேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ‘துவாரகை’ ஓர் ஆணால் உருவாக்கப்பட்ட பெண்ணிய நகரம். ‘இந்திரப்பிரஸ்தம்’ ஒரு பெண்ணால் உருவாக்கப்படும் மற்றொரு பெண்ணிய நகரம்”.

‘மாமலர்’ என்ற நாவல் தொடர்பான கட்டுரையின் வாசிக்கும்போது, ‘மாமலர்’ என்றால் ‘மிகப் பெரிய மலர்’ என்று நினைத்தேன். ‘அவ்வாறு அல்ல; அதன் பொருளே வேறு’ என முதல் மிக அழகாகத் தன் கட்டுரையில் எடுத்துரைத்துள்ளார்.

“ ‘மாமலர்’ என்பது, ‘கல்யாண சௌந்திகம்’ என்ற மலர். இது, கன்னியரின் துயிலில் மட்டுமே மணம் பரப்பும் தேவமலர். இது, பீமன் அதன் அகத்தால் மட்டுமே நுகர்ந்தறியும் மெய்மையின் மலர்வடிவம். ‘மாமலர்’ என்ற சொல், சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது. கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர் (குறுந்தொகை, பாடல் எண் – 51)

நெய்தல் நிலங்களில் வளரும் முட்கள் நிறைந்த கழிமுள்ளிச் செடியில் பூத்த கரிய நிறமுடைய முண்டக மலர். இங்கு ‘மா’ என்பது, ‘கருமை’ என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. ஆனால், இந்த நாவலில் பீமன் அடைவது, தடித்த, தூய வெண்ணிற இதழ்களைக்கொண்ட, காம்பில் பால் வடியும் மலர்.”

என்று விளக்கியுள்ளார் முனைவர் ப. சரவணன். அதுமட்டுமின்றி எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘வெண்முரசு’ தொடர் நாவல்கள் சிலவற்றுள் ‘மாமலர்’ என்ற சொல்லை வெவ்வேறு பொருண்மைகளில் பயன்படுத்தி யுள்ளதையும் இக்கட்டுரையில் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார் முனைவர் ப. சரவணன்.

‘வெண்முரசு’ தொடர் நாவல் வரிசையில் இந்த நாவல் ‘நீலம்’ நாவலைப் போலவே தனித்து விளங்குகிறது என்பதை முழுமையாக வாசித்ததால், ‘நீலம்’ நாவல் மொழியிலும் கதைப் பின்னலிலும் தனித்துவம் வாய்ந்தது என்கிறார். அதுபோலவே, இந்த ‘மாமலர்’ நாவலும் இரண்டு விதங்களில் தனித்துவம் வாய்ந்தது என்கிறார் முனைவர் ப. சரவணன்.

“ஒன்று – இந்த நாவல் முழுக்க முழுக்க கனவு சார்ந்தது. கனவால் மட்டுமே தொட்டறியக் கூடிய ஒரு மலரின் மணம் பற்றிய தேடலை மையமாகக் கொண்டது. இரண்டு – இந்த நாவலில் முக்காலமும் (சென்றவை, நிகழ்பவை, வருபவை) கலைந்து கலைந்து மீள்கின்றன. தனிஊசலின் அலைவுபோலப் பின்னுக்கும் முன்னுக்கும் ஆடி ஆடி இறுதியில், நடுவில் நிலைகொள்கிறது.”

இது போன்று வெண்முரசின் ஒவ்வொரு நாவல் பற்றிய கட்டுரைத் தொகுப்பிலும் தன் வலிமையான எழுத்தின் வழியாக ‘வெண்முரசு’ நாவல் தொடரை நம் கண்முன்னே கொண்டு வருவதுடன், அதனுடன் தொடர்புடைய இலக்கிய அடிகளையும் சான்றாகக் கூறியுள்ளமை மனமார்ந்த பாராட்டு தலுக்குரியது.

வெண்முரசினைப் படிப்பதற்கும் கொடுப்பினை வேண்டும். அந்தக் கொடுப்பினைகள் (நேரமும் மனநிலையும்) முனைவர் ப. சரவணன் போன்றவர்களுக்குக் கிடைத்துள்ளது. அவர், ‘தான் பெற்ற பெரும்பேறு பிறருக்குக் கிடைக்கும் வேண்டும்’ என்பதற்காகவே இக்கட்டுரைகளை எழுதியுள்ளார் என நினைக்கின்றேன்.

உலகின் மிகப் பெரிய நாவல்களுள் ஒன்றான ‘வெண்முரசு’ நாவல் தொடரை எழுதிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கும் அவற்றைப் படித்து, ஒவ்வொரு நாவலுக்கும் தனித்தனியாக, விரிவாகக் கட்டுரையை எழுதிய முனைவர் ப. சரவணன் அவர்களுக்கும் என்னைப் போன்றவ வாசகர்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

. பிரியா சபாபதி,

மதுரை.

‘முதலாவிண்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘கல்பொருசிறுநுரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்

‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 

கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை

சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரைஇன்றைய சிற்பவெற்றிகள் எவை?
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 12