விக்ரமாதித்யன், ஒரு மதிப்புரை

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு

வணக்கம். நலம்தானே?

விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட இருப்பது குறித்து மிகவும் மகிழ்கிறேன். பெரும்பாலும் அமைப்புகளால் புறக்கணிக்கப்பட்ட ஆனால் தகுதி வாய்ந்தவர்களுக்குத்தான் விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதின் வெளிச்சம் அவர்கள் மீது விழுந்தபின்னரே ஊடகங்களும் இலக்கிய அமைப்புகளும் அவர்களைத் திரும்பிப் பார்க்கின்றன. அவர்களுக்கு விருதுகளும் வழங்குகின்றன. உதாரணமாக வண்ணதாசன் மற்றும் ஆ.மாதவன் ஆகியோருக்கு இவ்விருதுக்கு அறிவிக்கப்பட்ட பிறகுதான் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

விக்ரமாதித்யன் எனும் நம்பிராஜனை இன்னும் சொல்லப்போனால் அண்ணாச்சி என அனைவரும் பாசத்தோடும் உரிமையோடும் அழைக்கும் கவிஞரை நான் பல ஆண்டுகளாக அறிவேன். எப்படியோ அவர் முகவரி கிடைத்து அவருக்கு நான் நடத்தும் சங்கு இதழை அனுப்பி வைத்தேன். அடுத்த பத்து நாள்கள் கழித்து அவரிடமிருந்து ஓர் உறையில் சங்கிற்காக ஏழெட்டுக் கவிதைகள் வந்தன. ஒவ்வொன்றாய் வெளியிட்டேன்.

கவிஞர் தேவதேவனும் இதுபோலத்தான் எப்பொழுதும் ஆறேழு கவிதைகலை அனுப்பி வைப்பார். கவிதைகள் அனைத்தும் வெளியிட்டான பின் மீண்டும் கவிதை கேட்டு எழுதினால் இருவரும் உடனே அனுப்பி வைப்பார்கள். அண்ணாச்சியின் எழுத்துகள் மிகப்பெரிதாக ஒரு பக்கத்திற்குப் பதினைந்து வரிகள் எழுதும் அளவிற்கு இருக்கும். அவர் எழுத்துகள் அவற்றைப் படித்துப் பழகியவர்க்குத்தான் எளிதில் விளங்கும். சங்கு இதழுக்குக் கவிதைகள் அனுப்புவதோடு கவிதைகள் பற்றிய கட்டுரைகளும் அனுப்புவார். பசுவய்யா, சி.மணி ஆகியோரின் கவிதைகள் பற்றி அவர் எழுதி அனுப்பிய கட்டுரை சங்கு இதழில்  வெளிவந்தது.

அவரின் புதிய நூல் வெளிவந்தவுடனேயே இரண்டு படிகள் எனக்கு அனுப்புவார். நான் அவற்றைப் படித்து அவருக்கே மதிப்புரைகள் எழுதி அனுப்புவேன். அவர் அதைப்படித்து விட்டு இன்ன இதழுக்கு அனுப்புங்கள் எனக் கூறுவார். அது போன்ற மதிப்புரைகள் தீராநதியில்  வெளிவந்தன. சங்கு இதழ் கிடைத்தவுடன் சில சமயம் பேசுவார். அவர் கவிதைகள் குறித்து நானும் லக்ஷ்மி மணிவண்ணனும் சென்னை இலக்கியவேல் ஆசிரியர் சங்கர சுப்பிரமணியனுடன் அலைபேசி வழியில் கலந்துரையாடியது பதிவு செய்யப்பட்டு இலக்கியவேல் இதழில் வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டபின் அவரிடம் அலைபேசியில் பேசிப் பாராட்டினேன். மிகவும் உற்சாகமாகப் பேசினார். “உங்களைப் போன்றோர்க்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். சங்கு போன்ற சிற்றிதழ்கள்தான் எனக்குத்தளம் அமைத்துக் கொடுத்தன” என்று மனம்திறந்து நன்றி கூறினார். ”எப்பொழுதும் வெளியூர்களுக்குப் பயணம் சென்றுகொண்டிருக்கும் என்னால் இன்றைய சூழலில் வீட்டிற்குள் அடைந்திருக்கவே முடியவில்லை” என்று வருத்தப்பட்டார்,

ஆக விஷ்ணுபுரம் விருது மீண்டும் ஒரு தக்கவரை அதுவும் எனக்கு நெருங்கிய தொடர் கொண்டவரைச் சேர்வது குறித்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி,

வளவ. துரையன் அவரின் நூல்களுக்கு நான் எழுதிய மதிப்புரைகளைத் தேடிப் பார்த்ததில் ஒன்றுதான் கிடைத்தது. அதைத் தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். நன்றி

ஒரு யோகியின் சுயசரிதை

[விக்ரமாதித்யனின் “காடாறுமாதம் நாடாறுமாதம்” தொகுப்பை முன் வைத்து]

                 வளவ. துரையன்

சுயசரிதை என்பது என்ன? பிறந்தது முதல் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டுப் போவதன்று. வாழ்வின் இன்றியமையாப் பகுதிகளை சுவாரசியமாக ஆங்காங்கே சொல்லிக்கொண்டு போவதே. யோகி என்பவன் யார்? எப்பற்றுமின்றி எவ்வூரும் சொந்த ஊராகக் கருதாது ஊர் சுற்றி மனம் வெளுப்பாக  நல்லதையே நினைப்பவன். அப்படித்தான் விக்ரமாதித்யனின் “காடாறு மாதம் நாடாறு மாதம்” தொகுப்பை அணுக வேண்டி உள்ளது.

இதில் விக்ரமாதித்யன் தன் அனுபவங்களைத் தம் சிறு வயது முதற்கொண்டு தான் பட்ட இன்பதுன்பங்களை எல்லாம் படிக்கும் விதத்தில் சொல்லிக் கொண்டு போகிறார். கிராமம் முதல் பெருநகரம் வரை அவர் வாழ்ந்து கொண்டுள்ளார். அந்த இடங்களில் தான் கண்ட இடங்களையும் தான் சந்தித்த மனிதர்களையும் அவர் விவரித்துக் கூறுவது மிகவும் சுவாரசியமாக உள்ளது.

கொள்ளிட ஆற்றின் கரையோரம் உள்ள சிற்றூரான மாதிரவேளூரில் விக்ரமாதித்யன் ஏழாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார். அது இலவச உணவு விடுதியுடன் இணைந்த பள்ளியாகும். அந்தக்கிராமம் பற்றி விக்ரமாதித்யன் இப்படி வருணிக்கிறார்.

“ஊருக்கே வடக்கே ஆறு; அதற்கும் முன்னதாகவே வாய்க்கால்; கிழக்கே மாதலீஸ்வரர் கோயில்; மேற்கே பெருமாள் பெருமாள் கோயில்; தெற்கே பள்ளிக்கூடம்; சுற்றிச் சூழவும் வயல்; மின்சாரம் கிடையாது; பேருந்து விடவில்லை; வண்டி, சைக்கிள் வரும் போகும்; மழைக்காலத்தில் உளையாக—சேறும் சகதியுமாக—கிடக்கும், போக முடியாது.”

இதைப்படிக்கும்போது. அக்கிராமமும் அங்குள்ள பள்ளியும் நம் கண்முன் வந்து நிற்கின்றன.

விக்ரமாதித்யனிடம் சில  குணங்கள் இயல்பாகவே உள்ளன. அதாவது துணிச்சல். யாருக்கும் அஞ்சாத நேர்மை; மனத்தில் பட்டதை உடனே பட்டென்று சொல்லி விடுவது. சிறு வயது முதற்கொண்டே இது அவரிடம் இருந்ததை ஒரு நிகழ்ச்சி மூலம் அறிய முடிகிறது. விக்ரமாதித்யனின் தந்தை தலைவன்கோட்டை ஜமீனில் செயலாளராகப் பணி ஏற்கிறார். அருகில் உள்ள வாசுதேவ நல்லூரில் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் விக்ரமாதித்யன் சேர்க்கப்படுகிறார். அவரிடம் ஜமீந்தாருக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. கவிதைகள் எல்லாம் எழுதுவதால் அவரை ஜமீன்தார் “புலவரே” என்றுதான் அழைக்கிறார்.

ஒருமுறை ஜமீன்தார் விக்ரமாதித்யன் தந்தையைப் பற்றி அவரிடம் ஏதோ குறை கூறுகிறார். உடனே விக்ரமாதித்யன், “நீங்க இதை அப்பாட்டேயே பேசுங்க” என்று சொல்லி விடுகிறார். இது கேட்ட ஜமீன்தார் கோபம் கொள்ளவில்லையாம். “இந்தத் துணிச்சலும் நேர்மையும் பெரிய விஷயமாகப் பட்டிருக்கிறது ஜமீன் தாருக்கு. அப்பா வந்ததும் பெருமிதப்பட்டுச் சொல்லியிருக்கிறார்” என்று அவர் எழுதுகிறார். இதில் ஜமீன்தாரின் பெருந்தன்மையும் வெளிப்படுகிறது. அதனால்தான் “கிரகயுத்தம்” எனும் தன் ஆறாம் கவிதைத்தொகுப்பை விக்கி ஜமீன்தாருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.

மேலும் அத்தொகுப்பை ஜமீன்தாரிடம் அவர் நேரே கொண்டு போய்க்கொடுத்து அவரின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டாராம். உடனே ஜமீன்தார் கால்களை அவசரமாகப் பின்னுக்கு இழுத்துக்கொண்டாராம். சிறு வயதில் தான் ‘இதிகாசநாயகன்’ என நினைத்த ஜமீன்தாரை மறக்காத கவிஞரின் மனித நேயமும் அதைவிடத் தன்னைப் பெரிதாக எண்ணாத ஜமீந்தாரின் குணமும் இங்கு போட்டி போட்டுக்கொண்டு வெல்ல நினைக்கின்றன.

எப்பொழுதுமே இதுபோன்ற தன்வரலாற்றுக் குறிப்புகளில் சோகத்தைச் சொல்லிவிட்டு சொன்னவர் மறந்திருப்பதைப்போல நாமும் அதை மறக்க ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோட வேண்டும். அதை இந்நூலில் பார்க்க முடிகிறது.

விக்ரமாதித்யனுக்குப் புலவர் தேர்விற்கானப் புகுமுக நுழைவுத் தேர்வு நெருங்குகிறது. ஆனால் அவர் ஐந்து மாதமாக விடுதிக்கட்டணம் கட்டாததால் [இத்தனைக்கும் அறுநூற்றுச் சொச்சம்தான்; அப்போது அது ஒரு பெரிய தொகைதானே] தேர்வு நுழைவுச் சீட்டு பெற முடியவில்லை. அப்போது அங்கே தமிழறிஞர் வ. வே. சுப்பிரமணியம் வந்தார். அவருடைய அப்பா வேலாயுதம் பிள்ளைதாம் கல்லூரித் தாளாளர். விக்ரமாதித்யன் நேரே வ.வே.சுவிடம் போய் நிலைமையைச் சொல்ல வ.வேசு உடனே எழுத்தரை அழைத்து நுழைவுச் சீட்டு தரச் சொல்கிறார். விக்ரமாதித்யனும் தேர்வு எழுதி இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார். ஆறுமாதத்துக்குப் பின்தான் சான்றிதழை வாங்குகிறார்.

இப்போது அச்சான்றிதழ் பற்றி விக்கி இப்படிக் குறிப்பிடுகிறார். “அது என் வாழ்க்கையில் பயன்பட்டதே இல்லை. கற்றுக்கொண்ட தமிழ், கவிதை எழுத உதவியாய் இருக்கிறது.”

விக்ரமாதித்யன் எல்லாவற்றையும் நல்லன என்றல் ரசிக்கும் மனப்பான்மை கொண்டவர். அவரால் டி.ஆர் மகாலிங்கத்தின் “ஸ்ரீ வள்ளித் திருமணம்” நாடகத்தைப் பாராட்ட முடிகிறது. அதே நேரத்தில் மகாலிங்கம் பாடிய “எங்கள் திராவிடப் பொன்னாடே” பாடலையும் கேட்கக் கொடுத்து வைக்கவேண்டும் என்று எழுத முடிகிறது. இதுபோன்ற அனுபவங்கள் அமையுமென்றால் மனிதப் பிறவி மேன்மையானதுதான் என்கிறார் அவர். அவரே “மிகைக்கூற்றாகப் படலாம்; அப்படியல்ல” என்று சொல்லி விட்டு, புலன்களின் ரஸானுபவத்தை விஞ்சி வேறென்ன இருக்கிறது இந்த வாழ்க்கையில்?” என்று கேட்கிறார். உண்மைதானே?

இந்நூலின் தமிழ்நாட்டுத் தலைவர்களைப் பற்றிய ஓர் இடம் வருகிறது. காமராசரைப் பற்றிச் சொல்லும்போது ”அவரது இலவசக்கல்வியும், மதிய உணவுத்திட்டமும் இல்லையென்றல் நான் எப்படி வாழ்ந்திருப்பேனோ” என்கிறார் விக்ரமாதித்யன். அது மட்டுமன்று; அதற்காக நான் ஏழேழு பிறவிக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என்றும் எழுதுகிறார். அத்துடன் தம் மனத்தில் உள்ள தலைவர்கள் பற்றித் துணிந்து இப்படி எழுதுகிறார்.

“மக்களுக்கு நன்மை செய்பவன்தான் தலைவன்; அய்யா பெரியாரும், காமராஜரும், சிலம்புச் செல்வர் ம.பொ.சியும் அப்படிப்பட்ட தலைவர்கள்; அண்ணா நீண்டகாலம் வாழ்ந்திருந்தால் இப்படிச் சொல்ல வாய்ப்பிருந்திருக்கும்”

விக்ரமாதித்யன் ‘அஸ்வினி’ இதழில் வேலை  பார்த்ததைத் தனியாக ஓர் அத்தியாயமே எழுதிச் சொல்கிறார். அது எண்பதுகளில் இந்துமதியை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த மாதமிரு இதழாகும். 250 ரூபாய் மாதச் சம்பளத்தில் வேலை பார்த்த அந்த நாள்கள் அருமையானவை என்று அவர் கருதுகிறார். அத்துடன் அப்பொழுது இதழுக்காக வந்த கீசகவதம் கூத்தின் அழைப்பினால் சென்று அக்கூத்தைப் பார்க்க முடிந்ததை அழியாச் சித்திரமாக எழுதுகிறார். புரிசை கண்ணப்ப தம்பிரானின் மற்ற கூத்துகளையும் அதற்குப் பிறகு அவரால் பார்க்க இயலவில்லை. அதற்காக அவர் வருத்தப்படவுமில்லை; அதுத்கான் விக்ரமாதித்யன். அவர் எழுதுகிறார்.

“அதனாலென்ன? அமிழ்தத்தைக் குவளை குவளையாகப் பருகவேண்டும் என்பது இல்லையே! உள்ளங்கையளவு கிட்டியதே! போதாதா?”

விக்ரமாதித்யன் கண்ணகி கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கு கண்ணகி விக்கிரகம் உடைபட்டு இருப்பதைப்பார்த்து அவர் மனம் வெறுமையாகிறது. அங்கிருக்கும் இயற்கை கூட அவரை இருத்தி வைக்கவில்லை. உடன் கிளம்பி விடுகிறார்.  ”நமது தலைவர்கள் எல்லாருமே இன உணர்வும் மொழியுணர்வும் கொண்tடவர்கள்தாம்; ஆனாலும் கண்ணகி மூளியாகவே நிற்கிறாளே? எந்தக் காலத்தில் நிவர்த்தியாகும் இது” என்று வருத்தப்பட்டு இவ்வாறு எழுதுகிறார்.

தெய்வம் கோரைப்பட்டு இருக்கலாமா

தேசத்துக்கு ஆகுமா இது?

கங்கை வற்றிவிடவில்லை

காவிரிதான் வறண்டு வருகிறது”

நா. காமராசனின் “சோதனை இதழில் பணியில் சேர்ந்த விக்ரமாதித்யன் அவ்விதழ்பற்றி விவரமாகவே எழுதி உள்ளார். அதிலும் காமராசன் பற்றியே மிகுதி. இரண்டு இதழ்களே வந்து அது நின்றுவிட்டது. விக்ரமாதித்யன் அந்த இதழ் தொடர்ந்து நடைபெற்றிருந்தால் காமராசன் வாழ்வு இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் என்று நம்புகிறார். இதுபோன்ற பதிவுகள்தாம் தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானவை. ’சோதனை’ இதழ்களில் உள்ளவற்றை யாரேனும் இப்போது தேடிக் கண்டுபிடித்து வெளியிட்டால் நாம் மிகவும் நன்றி உடையவர்களாக இருப்போம். ஏனெனில் அது பற்றி இப்படி அவர் எழுதுகிறார்.

”பத்திரிகை நீடித்திருக்குமெனில், நா. காமராசனின் இலக்கிய வாழ்க்கை இன்னும் பொருள் பொதிந்ததாகத் துலங்கியிருக்கும்; “மாநிலம் பயனுற வாழுதற்கே” கவிஞன் கனவு காண்கிறான்; சூழல் அனுசரணையாக இருந்து, காலம் அனுகூலமாக அமைகையில் அது சாத்தியமாகிறது. கவிஞனுக்கென்ன; சமூகத்துக்குத்தான் இழப்பு, உண்மையிலேயே.”

யாரும் இதுவரை அறிந்திராத [அதுவும் நானறியாதது என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்] ஒரு செய்தி இந்நூலில் பார்க்க  முடிகிறது. அதுதான் இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகர் அவர்களின் மனைவி  விக்ரமாதித்யனின் அத்தை என்பது. அவருடன் சிலகாலம் விக்கி தங்கி இருந்திருக்கிறார். அக்காலத்தை மிகவும் பாக்கியமாகக் கருதுகிறார். தண்டபாணிதேசிகர் பற்றி ஆவணப்படம் ஒன்று வெளிவரவேண்டும் எனவும்  ஆசைப்படுகிறார். தன் இளைய மகன் சந்தோஷை விட்டு எடுக்கச் சொல்ல வேண்டும் என நினைக்கிறார். அதுதான் அந்த அத்தைக்கும் மாமாவுக்கும் தான் செய்யும் கைம்மாறு என்று கருதுகிறார். அதை வழக்கம் போல் இப்படி முடிக்கிறார். “காலத்தின் ஆசிர்வாதம் இருக்குமெனில் எல்லாம் கைகூடும்”

ஆன்மிகவாதியாக இருந்தாலும் ஜோதிடம் எல்லாம் கற்றுத் தேர்ந்திருந்தாலும் விக்ரமாதித்யன் தன் உள்ளம் விரும்புவதை எல்லாம் கையில் எடுத்துக் கொள்கிறார். காரணம் அவர் ஓர் உணர்வு வழிப்பட்ட கவிஞன். அதனால்தான் தந்தை பெரியார் பற்றி இப்படி எழுதுகிறார்.

”இன்றைய தமிழ்ச் சமூகத்தில் அய்யா அவர்கள் இல்லாத வெற்றிடம் வெளியரங்கமாகவே புலப்படுகிறது. அந்த நேர்மை, அந்த உண்மை, அந்த ரௌத்ரம் அந்த கலகக்குணம் கொண்ட தலைமை இப்பொழுது இந்த இனத்திற்கு வெகுவாக வேண்டியிருக்கிறது.

விக்ரமாதித்யனின் அக்காவின் கணவர் கல்கத்தாவில் இருந்தார். ஒருமுறை அக்காவைக் கொண்டு போய்விட அவரும் கல்கத்தா போயிருக்கிறார். அப்பொழுது அங்கு காளிபூஜா வந்திருக்கிறது நம்மூர் விநாயக சதுர்த்தி போல தெருவுக்குத் தெரு காளியின் வெவ்வேறு உருவங்களை வைத்திருக்கிறார்கள்.

காளியை வருணிக்கும் விக்ரமாதித்யனின் உரைநடை ஒன்றின் ஒன்றாக எழுதினால் கவிதை போலவே இருக்கும்; பாருங்கள்;

”களி மண்ணாலான பதுமை; ரௌத்ர வடிவம்; கருநீல வண்ணம்; கழுத்தில் கபால மாலை; துடிகொண்ட முகம்; சினம் கொண்ட விழிகள்; துருத்திய நாக்கு; குருதி சொட்டும் சிரம்-ஒரு கரத்தில்; அரிவாள், இன்னொரு கரத்தில்; இருபதிலே உயர்வு, சிவனின் நெஞ்சில் ஒரு கால் பதித்து நிற்கும் காளிதான்; களப்பலி முடித்துவிட்டுத்தான் அமர்வாள் போல; கணக்குத் தீர்த்துவிட்டுத்தான் ஓய்வாள்போல; பக்தியில் பயம் மறைந்துவிடுமோ”

விக்ரமாதித்யன் இந்த நூலை மதிப்புரைக்காக என்று குறிப்பிட்டு அனுப்பியிருந்தார். ஆனல் இக்கட்டுரை ஒரு மதிப்புரையன்று. இந்நூலைப் படிக்கும்போது என்னைக் கவர்ந்த என்னை அழுத்தத்துக்குள்ளாக்கிய சில பகுதிகளைக் காட்டும் கட்டுரையே. ஒரு கவிஞன் வாழ்வு எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்பட்டுள்ளது என்பதை ஓரளவு இதன்வழி புரிந்து கொள்ளலாம். இக்கட்டுரையை விக்ரமாதித்யன் தன்னைப்பற்றி எழுதுவதைக் காட்டியே முடிக்கிறேன்.

”கவிஞனான பிறகு கவிதையைத் தவிர்த்து  வேறே எதிலும் சிந்தை செலுத்த முடிவதில்லை; ஒரு நல்ல சிறுகதை எழுதுவதைவிடவும்-இருபத்தைந்து வரிகளுக்கு மிகாது- ஒரு சிறந்த கவிதை செய்வதுதான் சந்தோஷம் கொண்டு வருகிறது. இரண்டாயிரம் வருஷ நீண்ட நெடிய தமிழ்க்கவிதை மரபில் ஒருவனாக இருக்கவே உள்ளம் விருப்பப்படுகிறது. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போக அச்சமாயிருக்கிறது, அப்படியெல்லாம் போனால், கவிதை கைவிட்டுப் போய்விடுமா என்று கலக்கம். தவிரவும், பிழைப்புக்காகச் செய்த தொழில்கள் வேறு காலத்தில் பெரும்பகுதியை பறித்தெடுத்து விட்டன”

[காடாறு மாதம் நாடாறு மாதம்—-தன் வரலாற்றுக் கட்டுரைகள்—விக்ரமாதித்யன்; நக்கீரன் வெளியீடு; 105, ஜானி ஜஹான்கான் ரோடு; ராயப்பேட்டை; சென்னை—14; பக்; 144; விலை; ரு90]

முந்தைய கட்டுரைகோவை சொல்முகம் கூட்டத்தில் செந்தில்
அடுத்த கட்டுரைஆசிரியர்கள் என்னும் களப்பலிகள்