ஈழ அகதிகளுக்குச் சலுகைகள் – நன்றி
தேசமற்றவர்கள்
ஈழமக்களுக்கான உதவிகள், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நேற்றுக் காலை அரசறிவிப்பு குறித்துக் கேட்ட போது நிம்மதியாக அழுதேன்.2002 இல் தக்கலை அலுவலகத்தில் மதிய நேரம் உங்கள் படைப்புகளை வாசிக்கத் துவங்கியிருந்த எளிய வாசகனாக மிகுந்தத் தயக்கத்துடன் சந்தித்தேன்.அச்சந்திப்பிலேயே தடையின்றி உங்களிடம் யாவற்றையும் பகிர்ந்துக் கொள்ளலாம் என்பதை உணர்ந்தேன். யாவற்றையும் பகிர்ந்துக் கொண்டுமிருக்கிறேன். அவ்விதமே 2014 இல் ஏதிலியர் குறித்தும் பகிர்ந்துக் கொண்டேன்.
நீங்கள் எழுதி அறிமுகமான சேகர் எனும் நண்பன் பின்பு இளைய சகோதரனாக மாறி மிகக் குறுகிய காலத்தில் புதையுண்டாலும் அவரது உணர்வுகளும் அர்ப்பணிப்புணர்வும் என் உடல் சாம்பலாக மிஞ்சுவது வரையிலும் நீடித்திருக்க வேண்டும் என்று மட்டுமே 9 மே 2015 அன்று கோட்டவிளையில் ‘பிரயாகை’ பிரதி பிரிக்கப்படாமல் அவருடன் புதைக்கப்பட்டு நீங்களும் செல்வேந்திரனும் மவுனமாகக் கிளம்பி, நான் என் தம்பியுடன் திரும்பும் போது உணர்ந்தேன். உணர்ந்தேன் என்பது மட்டுமே உண்மை.
திரும்பும் போது தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன. அத்தனை நண்பர்களும் ஈழ மாணாக்கர்க்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்கள்.சில நண்பர்கள் ஒரு முறை, மேலும் சில நண்பர்கள் மேலும் சிலமுறை,.சில நண்பர்கள் இன்று வரை உதவிக்கொண்டிருக்கிறார்கள். சேகர் குறித்த உங்கள் கட்டுரை சேகரின் அர்ப்பணிப்புணர்வை முன்னெடுத்து ஈழ மாணாக்கர்க்கு உதவ வேண்டும் என்பதாகவே இருந்தது.
மாணாக்கர், கல்வி என்பதற்கப்பால் அவர்கள் வாழ்வியல் குறித்து என் மகள் அகல்யாவை சந்தித்துத் திரும்பும் போது உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேயாக வேண்டும் எனும் தவிப்பு உருவானது.நேற்று உங்களால் சாத்தியப்பட்டது.ஒரு எளிய வாசக மனத்தில் யாவற்றையும் பகிர்ந்துக் கொள்ளும் நம்பிக்கையை உருவாக்கிய சந்திரசேகர். உடனே அழைத்து உதவிய நண்பர்கள, மின்னஞ்சல் வழி தொடர்புக் கொண்டு உதவிய யுகாந்தர், அருண், சுப்ரமணியம், நரேந்திரன்,மேகலா, ஜெயஸ்ரீ, மதுசூதனன் சம்பத், பாலசுப்ரமணியம் என்ற பாலு ,இன்று வரையிலும் உதவிக் கொண்டிருக்கும் குணசேகரன், அகிலன், சாரதி, சிவா வேலாயுதம், விஜய் சுப்ரமணியம், விசுவநாதன் மகாலிஙகம், கௌதம், தியாகராஜன், சந்திரகுமார், விஜயா வாசகம் மேடம், ப்ரவீன்,முழுமதி அறக்கட்டளை, ஷாகுல், எளிய ஒரு வாட்ஸாப் குழு வழி நிர்வகித்து செயல்படுத்தும் சிவக்குமார், சிவசஙகர், ராமகிருஷணன், சதீஷ் குமார், வினோத் அனைவருக்கும் நன்றி.
சேகர் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயசூரியன், ப்ரசாத், ராதா கிருஷ்ணன், சீனு,அவ்வறக்கட்டளைக்குப் பங்களித்த நண்பர்கள்,அவ்வறக்கட்டளையை செயல்பாடுகளில் அர்ப்பணிப்புடன் பங்கேற்ற தங்கை ரேணுகா,காளி ப்ரசாத், முழுமதியுடன் இணைந்தும் தனிப்பட்ட முறையிலும் பங்களித்துக் கொண்டிருக்கும் செந்தில் ( டோக்யோ) சிறில் அலெக்ஸ், விஜயராகவன், ஈரோடு கிருஷ்ணன்,ஆனந்த் ( பாலாஜி ), சரண் ஆகியோருக்கும் நன்றிகள். சந்திரகுமார் வழி அறிமுகமாகிய வடிவேல்,தேசமற்றவர்கள் கட்டுரை வாசித்து. அறிமுகமான ப்ரபு, அதியமான், கணேஷ், சகுந்தலா,அகல்யாவின் எதிர்கால பணி மற்றும் வாழ்வு குறித்த அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டாக்டர் மல்லிகா ஆகியோருக்கும் நன்றி.
சில நண்பர்கள் பெயர்கள் விடுபட்டுருக்கலாம்,என ஒவ்வொருவரும் உங்கள் உணர்வுகள் சார்ந்து ஈழ மாணக்கர்களுக்கு பங்களித்தவர்கள்,மானசீகமாக அவர்கள் ஒவ்வொருவர் கரங்களைப் பற்றிக் கொள்கிறேன்.இன்று உங்கள் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளித்திருக்கிறது.இது முதல் அடி தான்,மேலும் பகிர்ந்துக் கொள்கிறேன். இந்தக் கணம் உங்களையும்நம் நண்பர்கள் அனைவரையும் நினைத்து வணங்குவதற்கானது.
எக்கணத்துளியிலும்
அன்புடனும் நன்றியுடனும்
முத்துராமன்
அன்புள்ள ஜெ
ஈழ அகதிகளுக்கு அரசு அறிவித்துள்ள சலுகைகளை பற்றிய செய்திகளை பார்த்தேன்.ஏற்கனவே இதை பலமுறை நாங்கள் நண்பர் வட்டாரத்தில் பேசியிருக்கிறோம் .அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் பொறுப்பு .இன்றைய மத்திய அரசு தமிழகத்தையும் தன் வாழ்க்கையில் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை .அவர்கள் நம்மை எதிரிகளாகவே நினைக்கிறார்கள் ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு பொதுவாகவே தமிழர் அனைவரும் தீவிரவாதிகள் என்ற எண்ணம் இருக்கிறது நகாலாந்து காஷ்மீர் மக்களைப் போலவே தமிழர்களை நினைக்கிறார்கள். அந்த நினைப்பை காங்கிரஸ் பிஜேபி ஏற்றுக்கொள்வதனால் அவர்கள் எதையும் சாதகமாகச் செய்ய வாய்ப்பில்லை.
ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் இதை திரும்பத் திரும்ப சட்டசபையில் எழுப்ப வில்லை என்பது ஆச்சரியமானது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், திமுக போன்ற ஈழத்தமிழர்களின் துயரங்களை அறிந்த கட்சிகள் இருக்கின்றன இவர்கள் சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் தொடர்ந்து இந்த கோரிக்கை எழுப்பி கொண்டே இருந்தால் ஏதோ ஒரு கட்டத்தில் எதையாவது செய்தே ஆக வேண்டிய நிலைமை ஏற்படும் .
இந்தச் சூழ்நிலையில் நாம் செய்யக்கூடியது உடனடியாக அந்த மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்படியான சலுகைகளை அளிப்பது. அதற்கான செலவை மாநில அரசு அறிவிக்கலாம் என்ற எண்ணம் எங்களுக்கும் உண்டானது உண்டு. ஏனென்றால் அவர்கள் இன்றைக்கு மிகவும் சுரண்டப்படுகிறார்கள். தமிழர்களால்தான் சுரண்டப்படுகிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை என்பதை பயன்படுத்திக்கொண்டு பாதி ஊதியத்திற்கு அவர்கள் வேலை கொடுத்து சுரண்டுகிறார்கள். கந்துவட்டி கொடுமைக்கு அவர்களை ஆளாக்குகிறார்கள்.
இன்றைக்கு ஈழ மக்களிலே உறவினர்கள் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்ப கூடிய நிலைமையில் இருப்பவர்கள் மட்டும்தான் கொஞ்சமாவது நல்ல நிலையில் இருக்கிறார்கள். மற்றவர்கள் கடன் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நம் அனைவருக்கும் எதிர்காலம் பற்றிய கனவு இருக்கிறது நாம் கஷ்டப்பட்டு பிள்ளைகளை ஒரு நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்கிறோம். அந்த நம்பிக்கைதான் நம்மை வாழச்செய்கிறது. இன்றைய கஷ்டங்களை பொறுத்துக்கொள்ள வைக்கிறது. ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அந்த கனவே இல்லை. அதுவே அவர்களை சோர்வடையச் செய்கிறது. அவர்களிடம் நம்பிக்கை ஊட்டுவது அவசியம். அவர்களின் நலனை கருத்தில் கொள்ளும் ஓர் அரசு இருக்கிறது என்ற எண்ணம் அவர்களுக்குத் தேவை .அவர்களுக்கு இங்கே வாக்குரிமை இல்லை .அதனால்தான் இங்கே உள்ள கட்சிகள் அவர்களை கண்டு கொள்வதில்லை. தமிழ் உணர்வுடன் மானுடநேயத்துடன் அவர்களுக்கான சலுகைகளை அறிவித்த அரசும் முதல்வரும் நன்றிக்குரியவர்கள்.
ஆனந்த்குமார்