புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-4

மலர்வதி, போகநந்தீஸ்வர ஆலய கோபுரமுகப்பு
புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-1
புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-2
புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-3

முதல்நாள் பயணத்தில் சென்ற ஓர் இடத்தைப் பற்றி எழுத விட்டுப்போய்விட்டது. அது இரண்டாம்நாள் என்ற மனப்பதிவு உருவாகியிருந்தது. கோலாரில் அவனி அருகே உள்ள அந்தர கங்கே என்னும் இடம். இது சதசிருங்கம் என்னும் மலையில் உள்ளது. மகாபாரதத்தில் வரும் சதசிருங்கம் குந்தி பாண்டுவுடன் சென்று தங்கிய இடம். அந்நினைவாக இப்பெயர் போடப்பட்டிருக்கலாம். ஆனால் இது ஒரு சிறிய மலை. பெரும்பாலும் ஓங்கிய கருங்கற் பாறைகளாலானது.

இந்த மலைக்குமேல் இயற்கையான குகைகள் சில உள்ளன. அங்கே செல்ல இடுங்கலான பாதைவழியாக ஏறிச்செல்லவேண்டும். மழையில்லாதபோதுதான் அதற்கு வாய்ப்பு. காட்டுக்குள் செல்ல அனுமதியும் பெறவேண்டும். எங்கள் திட்டத்தில் அந்த இடம் இல்லை. விடுதிக்கு ஆறரைக்கே சென்றுவிட்டோம். ஆகவே சென்றுவரலாமே என முடிவெடுத்தோம். இரவு எட்டுமணிவரை திறந்திருக்கும் என்றனர்.

அந்தரகங்கேயை நாங்கள் அடைந்தபோதே ஏழு ஐம்பது. பத்து நிமிடத்தில் என்ன செய்யமுடியும் என்று தோன்றியது. ஆனால் உங்கள் சௌகரியப்படி பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு காவலர் சென்றுவிட்டனர். மேலே குகைகளுக்குக் கூட சென்றிருக்கலாம் – பத்திரமாகத் திரும்பி வருவதைப்பற்றி கற்பனை செய்யாமலிருந்தால்.

அந்தரகங்கை என்று பெயர் இருந்தாலும் இங்கே ஆறு ஏதும் இல்லை. இங்கிருக்கும் ஓர் ஊற்றுக்கு அந்தப்பெயர். இது  வெறும் ஊற்று, ஆகவே ஆழத்து கங்கை. [தமிழில் நாம் அந்தர என்பதை வானில் என்னும் பொருளில் பயன்படுத்துகிறோம்] இங்குள்ள ஆலயம் காசிவிஸ்வநாதருக்குரியது. நாங்கள் செல்லும்போதே அதை மூடிவிட்டார்கள். நீர் வெளிவரும் பகுதியே ஒரு சிறு ஆலயம்போலத்தான் இருந்தது. மின்விளக்குகள் போட்டிருந்தனர்.

அகலமான படிகள் வழியாக மேலேறிச்சென்றோம். மயில்கள் இருளுக்குள் இருந்து அகவிக்கொண்டே இருந்தன. சீவிடுகளின் ரீங்காரம். எங்களைத்தவிர மேலே எவருமில்லை. கோயிலை மூடிவிட்டிருந்தனர். குளம் இருந்தது. ஓர் நந்தியின் வாய் வழியாக ஊற்றுநீர் குளத்திற்குள் கொட்டிக்கொண்டிருந்தது.

அந்த இடம் தலைக்காவேரி, மகாபலேஸ்வர் போன்ற இடங்களை நினைவூட்டியது. பாசிபிடித்த நீரின் மணம். இலைகளின் சலசலப்பு. காட்டின் குளிர். அதன் படிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஊரடங்கு காரணமாக அங்கே அதிகம்பேர் வருவதில்லை என நினைக்கிறேன். படிகள் முழுக்க சிறிய அட்டைகள் குவியல்களாக நெளிந்துகொண்டிருந்தன.

இரண்டாம்நாள் தங்குவதற்கு கிருஷ்ணன் கொஞ்சம் தாராளமாகவே செலவுசெய்து இடம்போட்டிருந்தார் நந்திஹில் பகுதியில் ஒரு ‘லக்சுரி ரிசார்ட்’ அவருடைய உள்ளம் போலவே அமைந்தது. அந்த விடுதியை திறந்தே இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கும்போல. புழுதி அழுக்கு. மழைவேறு கொட்டிக்கொண்டிருந்தது. அங்கே ஒரே ஒரு வரவேற்புப்பெண்மணி. அவருக்கு ஒன்றுமே தெரியாது.

சரி, வேறு அறைகள் தேடுவோம் என ஒரு கும்பல் கிளம்பிச் சென்றது. அதைவிட மோசமான அறைகள் அதைவிட கூடுதலான விலைக்கு கிடைத்தன. ஆனால் இங்கே அத்தனை பேருக்கும் தங்க இடமில்லை என்பதனால் அவற்றையும் போடவேண்டியிருந்தது. நந்திஹில்ஸ் ஒருகாலத்தில் பெங்களூரின் படுக்கையறை என்பார்கள். கொரோனா காலகட்டத்தால் அப்படியே நமுத்து தரையோடு ஒட்டிக்கிடந்தது.

மதிய உணவை மாலையில் சாப்பிட்டுவிட்டு நந்திஹில் மலைக்கு அருகே இருக்கும் சிக்கபெல்லாபூர் போகநந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றோம். கர்நாடகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்று இது. கர்நாடகத்தின் தொன்மையான ஆலயங்களில் ஒன்றும்கூட. நுளம்பர்களால் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டது இதன் முதல் கட்டுமானம். இங்கே நுளம்பமன்னர் நுளம்பாதிராரஜனின் கல்வெட்டு உள்ளது.

பின்னர் ராஷ்ட்ரகூட சக்கரவர்த்தி மூன்றாம் கோவிந்தனின் கல்வெட்டும் பாண பேரரசின் ஆட்சியாளர் ஜயதேஜர், தைத்தியர் ஆகியோரின் கல்வெட்டுகளும் உள்ளன. இங்குள்ள கல்வெட்டுகளைப் பற்றியே விரிவான ஆய்வுநூல்கள் வெளிவந்துள்ளன. பிற்காலத்தில் கங்கர்களும் ஹொய்சாலர்களும் இந்த ஆலயத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். கடைசியாக மைசூர் அரசர்களின் முக்கியமான வழிபாட்டிடமாக நீடித்தது

தமிழகத்திற்கு இந்த ஆலயம் மிகமுக்கியமானது. நுளம்பர்களை வென்ற ராஜராஜ சோழன் இந்த ஆலயத்தை பழுதுநோக்கி கொடையளித்து பேணினார். ராஜேந்திரசோழனின் முக்கியமான கல்வெட்டுகள் பல இங்குள்ள தூண்களில் காணப்படுகின்றன. வட்டெழுத்திலும், ஆரம்பகாலத் தமிழ் எழுத்துக்களிலும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

மிகப்பெரிய ஆலயம், உண்மையில் ஆலயவளாகம் என்று சொல்லவேண்டும். இந்த ஆலயத்தின் முகப்பிலுள்ள மிகப்பெரிய பிராகார வளைவு போல நான் எங்குமே கண்டதில்லை. கல்மண்டபங்களால் ஆன திறந்த பிராகாரங்களுக்கு நடுவே பத்தாயிரம்பேர் நிற்குமளவுக்கு பெரிய முற்றம். மண்டபங்களில் சாதாரணமாக இரண்டாயிரம்பேர் தங்கலாம். முன்பு மிகப்பெரிய விழாக்கள் இங்கே நடந்திருக்கவேண்டும்.

இந்த ஆலயம் ‘இரட்டைக்கோயில்’ என்று சொல்லத்தக்கது. வெளியே அறிவிப்புப் பலகையே போக-யோக நந்தீஸ்ரவர் ஆலயம் என்றுதான் சொல்கிறது. ஒரு கருவறையின் தெய்வம் அருணாச்சலேஸ்வரர் என்றும் இன்னொன்று போகநந்தீஸ்வரர் என்றும் வரலாறு சொல்கிறது. இந்த ஆலயமே ஒரு புதிர்வழிப்பாதை போல தோன்றியது. ஒரே இடத்துக்கு திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகத்தை உருவாக்கியது.

தலக்காட்டு கங்கர்களால் அருணாச்சலேஸ்வர் கருவறை கட்டப்பட்டது. போகநந்தீஸ்வரர் கருவறை சோழர்களால். அங்குள்ள ஒரு சிற்பம் ராஜேந்திரசோழனுடையது என்று முன்பு சொல்லப்பட்டது. ஆனால் ஆய்வாளர்களால் ஏற்கப்படவில்லை.

ஆடவல்லான், ஓருரு

இங்குள்ள கட்டிடம் அமைப்பு தமிழகத்தின் ஏதோ பேராலயத்தில் நின்றிருக்கும் எண்ணத்தை உருவாக்கியபடியே இருந்தது. கல்முளைத்து எழுந்து சூழ்ந்து ஓங்கி பெருகியதுபோல. மணற்கல்லில் செதுக்கப்பட்ட தூண்கள் இலைதெரியாமல் பூத்த மலைமரங்கள் போல அணிகள் கொண்டவை. சிற்பங்களை முழுமையாகப் பார்த்து முடிக்க பலநாட்களாகலாம்.

இரு கருவறைகள் கொண்ட இரண்டு பெருங்கோயில்கள். நடுவே ஒரு சிறுகோயில் சோமேஸ்வருக்கு. உள்ளே கருவறையில் எழுந்த பெரிய சிவலிங்கம். சிற்பங்களும் செதுக்கணிகளும் செறிந்த கல்யாணமண்டபத்தில் உமாமகேஸ்வரர் சிலை அமைந்திருந்தது.

பிறிதொரு உரு

சைவ ஆலயமாக இருந்தாலும் சுற்றுச்சுவர்களிலும் கோபுரத்திலும் விஷ்ணுவின் சிலைகளும் இருந்தன. சிறிய அளவுகொண்டவை என்றாலும் அகோர நரசிம்மர் சிலைகளும், கரியுரித்தபெருமான் சிலைகளும், பிட்சாடனர் சிலைகளும் மகிஷாசுரமர்த்தனி சிலைகளும் மிக அழகானவை. சிதைவிலாது நேர்த்தியாகவும் இருந்தன.

பிற்காலச் சிலைகளில் ஹொய்சாளச் சிற்பங்களுக்குரிய இடையணியாகிய சல்லடமும், பல அடுக்கு கொண்ட மணிமுடிகளும் தெரிந்தன. பேரரசுகள் ஒருவரோடொருவர் போரிட்டு வென்றுகொண்டிருக்க கலையும் மதமும் இணைந்து இணைந்து ஒற்றைப்பெருக்காக வளர்ந்துகொண்டிருப்பதை நாம் வரலாற்றில் காணலாம். அதற்கு கண்கூடான உதாரணம் இந்தப்பேராலயம்.

கல்தூண்களிலும் அடித்தளங்களிலும் உள்ள கல்வெட்டுகளுக்கு கூடுலதாக கல்வெட்டுப்பலகைகளும் இங்கே உள்ளன. இந்த ஒரே ஆலயத்திலேயே நுளம்பர், கங்கர்,ஹொய்ச்சாலர், ராஷ்ட்ரகூடர், சோழர், நாயக்கர் காலத்துக் கலையின் பங்களிப்பு உள்ளது. ஆனால் கோகன் சொல்வதுபோல கலையை அரசர்களுடன், பேரரசுகளுடன் இணைக்கவேண்டியதில்லை. நுளம்பர்கலை என்பது இந்நிலப்பகுதியில் இருந்த ஒரு கலைப்பாணி. அதில் பிற நிலத்துக் கலைப்பாணிகள் அவ்வப்போது வந்து கலந்திருக்கின்றன, அவ்வளவுதான்.

கீழே நின்று ஆடவல்லான் சிலைகளை ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டிருந்தேன். நரசிம்மர் சிலையில் இருந்த உக்கிரம். மயிடனின் உடல் மேல் எழுந்த அன்னையின் வெறிநடனம். இச்சிலைகளை விழிகளால் பருகி எவருக்கும் விடாய் தீரப்போவதில்லை.

இங்கே வியப்புக்குரியவை சாளரங்கள். கலை ஆய்வாளர்கள் அவற்றைப் பற்றி நிறையவே எழுதியிருந்தனர். சிற்பங்களின் கைகள் கால்களுக்கு நடுவே துளைகள் இருந்தன. மறுபக்கம் அவை சாளரங்களாக திறந்திருந்தன. நாகங்கள் பின்னி அமைந்ததுபோல கல்லில் செதுக்கப்பட்ட  சாளரங்கள், மலர்ச்சாளரங்கள், பூதங்களின் நடனமே பலகணியென்றானவை.

நுளம்ப கலைவிமர்சகரான ஆண்ட்ரூ கோகென் இந்த இரண்டு ஆலயங்களில் அருணாச்சலேஸ்வர ஆலயம் இடிந்து விழுந்து கிடந்தது என்றும், பிற்காலத்தில் விஜயநகர ஆட்சியாளர்களால் அது எடுத்துக்கட்டப்பட்டது என்றும், இடியாத ஆலயத்தின் அதே வடிவில் அதே சிலைகளுடன் அதை அப்படியே கட்டினார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஆடிப்பிம்பம் போலிருந்த இரு ஆலயங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது உற்சாகமான ஒரு விளையாட்டாக இருந்தது. சிறிய வேறுபாடு இருப்பதுபோலவும் அது வெறும் கண்மயக்கு என்றும் தோன்றிக் கொண்டிருந்தது. ஒரு சிலையை அப்படியே எப்படி திரும்பச் செய்ய முடியும்? ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கும். அச்சிலையென எழுவது தன்னை மீண்டும் அப்படியே பிறப்பிக்குமா என்ன?

பிரம்மாண்டமான கோயில் வளாகத்தில் தாயார் சன்னதிகள் இரண்டு இருந்தன. சிற்பங்கள் செறிந்த தூண்கள் கொண்ட மண்டபங்கள். ஓங்கிய கல்கொடிமரம். அந்தியாகிக் கொண்டிருந்தது. அந்திவேளையில் கற்பரப்புகள் வண்ணம் மயங்கி குழைவுறத் தொடங்குகின்றன. கற்சிற்பங்கள் திரைச்சீலை ஓவியங்கள் போல நெகிழ்வு கொள்கின்றன. அந்தியில் ஆலயங்களில் இருப்பதுபோல் இனிது ஒன்றுமில்லை.

விடுதிக்கு திரும்பி வந்தோம். மறுநாள் செல்வேந்திரனின் நாற்பதாவது பிறந்தநாள். நான் களைப்பால் படுத்து உடனே தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் நந்திஹில் மலைமேல் ஒரு சிறிய மலையேற்றம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மலையேற அனுமதி இல்லை என்று சொல்லியிருந்தனர். மீண்டும் ஒருமுறை போகநந்தீஸ்வரர் ஆலயத்தைப் பார்த்துவிட்டு திரும்புவது கடைசியாக எஞ்சிய திட்டம்.

காலையில் இரவில் நடந்தவற்றைச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். சக்தி கிருஷ்ணன் தலைமையில் ஒரு கும்பல் கிளம்பிச் சென்று கதிர்முருகன், நாமக்கல் வரதராஜன், சுபஸ்ரீ, நிகிதா உள்ளிட்டவர்களை உசுப்பி எழுப்பி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நந்திஹில் உச்சியில் செல்வேந்திரனுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதாகச் சொல்லி கார்களில் அழைத்துச் சென்றிருக்கிறது.

இரவில் மூன்றுமணிநேரம் விதவிதமாக கதை சொல்லி ஏமாற்றி, வழிகண்டுபிடிப்பதுபோல பாவனை செய்து, நந்திஹில்லையே சுற்றி வந்திருக்கிறார் சக்தி கிருஷ்ணன். திடீர் திருப்பங்கள். திடீர் குழப்பங்கள். சிலர் உண்மையிலேயே வழிதவறிவிட்டதாக நம்பியிருக்கிறார்கள்.

நடுவே கார்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. வழியில் அரைப்போதையில் இருந்த ஒருவரிடம் வழிகாட்டுவதாக கூட்டிக்கொண்டு சுற்றிவந்திருக்கிறார்கள். பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும்படி அதன்பின் சொல்லியிருக்கிறார் சக்தி கிருஷ்ணன். அவரும் என்ன ஏதென்று அறியாமல் இரவெல்லாம் அப்பகுதியை சுற்றிவந்திருக்கிறார்.

களைத்துச் சலித்து பாதிப்பேர் கோபம் அடைந்து அவரவர் அறைகளில் சென்று கதவை மூடிய பின் மீண்டும் தட்டி எழுப்பி பிறந்தநாள் கொண்டாட்டம் என்று சொல்லி ஒரே ஒரு சாக்லேட்பட்டையை வெட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். அதை 21 துண்டு போட்டு பகிர்ந்து ஊட்டியிருக்கிறார்கள். கேலிக்கூத்தாக ஆரம்பித்தால் சக்தி கிருஷ்ணன் அதன் உச்சத்துக்கே சென்றுவிடுவார்.

காலையில் செல்வேந்திரன் புதுவேட்டி, புதுசட்டை, துண்டு அணிந்து மாப்பிள்ளை போல வந்தார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன். காலையில் ஒரே ஒரு டீக்கடையில் நல்ல காபி கிடைத்தது. நந்திஹில் திறக்கப்படாது என்ற செய்தி தெரியாமல் வந்த இளைஞர்களும் இளைஞிகளும் அங்கே கூடி காபிசாப்பிட்டு சலம்பிக்கொண்டிருந்தனர்.

போகநந்தீஸ்வர ஆலயத்துக்குள் ஒரு பெரிய குளம் இருக்கிறது, அது ஒரு ‘காதல்போட்டோ’ எடுக்கும் மையம் என்றனர். அதை நாங்கள் பார்க்கவில்லை. ஆகவே மீண்டும் உள்ளே சென்றோம். கோயிலை ஒட்டி ஒரு அலங்கார மண்டபமும் அதைச்சுற்றி ஒரு வளைப்பும். அதற்கு அப்பால் இருந்தது குளம்.

ஆனால் குளத்தை பூட்டிவிட்டனர். காதலர்களை கட்டுப்படுத்த முடியவில்லையாம். காவலரிடம் கெஞ்சியபோது ஐந்துபேரை மட்டும் உள்ளே சென்று பார்க்க அனுமதித்தார். புகைப்படம் எடுத்துவிட்டு வந்தனர். மிகப்பெரிய சுற்றுப்படிக்கட்டுகளுடன் பிரம்மாண்டமாக இருந்தது.

இளமழை பெய்துகொண்டிருந்தது. அப்படியே பெங்களூருக்குத் திரும்புவதாக திட்டம். மழைக்குள் காரை ஓட்டிச்சென்றோம். வழியில் ஓர் ஏரி. அதன்மேல் மழை திரை என நின்றிருந்தது. இறங்கி நீர்மேல் அறையும் நீர்விரிவை பார்த்துக்கொண்டு நின்றிருந்தோம்

மாலை எனக்கு ஓசூரிலிருந்து நாகர்கோயிலுக்கு ரயில். நான்கு மணிக்கே ஓசூர் வந்துவிட்டேன். ஆறுமணிக்கு ரயில் வந்தது. எல்லா பயணங்களிலும் திரும்பும்போது பயணத்தின் காட்சிகள் ஒன்றாகக் கலந்துவிடுவது வழக்கம். சரடு பிரித்து எடுக்க முயலும்போதே தூக்கம் வந்துவிடும்.

புதிர்ப்பாதைகளில் தொடங்கி ஆறு பேரரசுகள் வழியாக சென்று முடிந்த பயணம். நுளம்பர், சோழர், கங்கர், ஹொய்சாலர், ராஷ்டிரகூடர் நாயக்கர்கள்.  அவர்களின் கலைத்தடையங்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன. வென்றனர், வீழ்ந்தனர். வரலாற்றை ஒரு புதிர்ப்பாதையாக ஒருகணம் உணர்ந்தேன்

[நிறைவு]

முந்தைய கட்டுரைநீலஜாடி
அடுத்த கட்டுரைஈழ அகதிகளுக்குச் சலுகைகள் – நன்றி