‘முதலாவிண்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

வெண்முரசு’ நாவல்தொடரில் 26ஆவது நாவல் ‘முதலாவிண்’. இது வெண்முரசின் இறுதி நாவல். இது பக்க அளவில் மற்ற 25 நாவல்களையும்விடச் சிறியது. ஆனால், இந்த நாவல் கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் அளப்பரியவை.

இந்த நாவலின் தலைப்பு, உள்ளடக்கம் பற்றி எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள்,

‘‘ ‘முதலாவிண்நாவல் பாண்டவர்களின் விண்புகுதலைப் பற்றியது. மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தஎன்ற சீவகசிந்தாமணியின் முதல்வரியிலிருந்து எடுத்து, நீட்டிக்கொண்ட சொல்லாட்சி. ‘பிறக்காத, தோற்றமே அற்ற வானம்’ என்று பொருள். ‘முதற்கனல்’ என்னும் தலைப்பின் மறு எல்லை.”

என்று குறிப்பிட்டிருந்தார்.

குருஷேத்திரப் போரில் வெற்றிபெற்ற பின்னரும்கூடப் பாண்டவரால் ஒன்றிணைந்து வாழ முடியவில்லை. அவர்களின் வாழ்க்கை முற்றிலும் அலைச்சலிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தது. உடலும் மனமும் அலைய அவர்கள் ஒரு கணமும் நிலைகொள்ளவில்லை. ஒன்றிணைய முடியவில்லை. அதற்குக் காரணமாக முன்னைய தீச்சொல் ஒன்றினை எழுத்தாளர் நினைவுபடுத்துகிறார்.

அவர்கள் ஐவரும் அஸ்தினபுரியில் ஒன்றிணைந்து இருந்தால் அஸ்தினபுரி அழியும், அன்றி அவர்களுடைய தொல்குடி முற்றழியும் என்றொரு தீச்சொல் உண்டுஎன்று சூதன் ஒருவன் சொன்னான். இளமையில் அவர்கள் வாரணவதம் எனும் ஊரில் தங்கள் அன்னையுடன் சென்று தங்கியிருக்கையில் துரியோதனனால் அவர்கள் தங்கியிருந்த மாளிகை எரியூட்டப்பட்டது. அதிலிருந்து தப்பும் பொருட்டு அவர்கள் ஐந்து மைந்தருடன் வந்த வேட்டுவ அன்னையொருத்திக்கு ஊனளித்து அவளை அரக்கு மாளிகையில் வைத்து பூட்டிவிட்டு நிலவறையினூடாக ஒளிந்து விலகிச் சென்றனர். எரிந்து பொசுங்கி அழிந்த அம்மைந்தரும் அன்னையும் இறக்கும் தருவாயில் அந்தத் தீச்சொல்லை விடுத்தனர்.

மலைக்குறத்தியின் சொற்கள் எரியென்றே எழுந்தன. உங்கள் அன்னையுடன் துணைவியருடன் மைந்தருடன் கூடிவாழும் குடிவாழ்வு இனி ஒருபோதும் உங்களுக்கு அமையாது. அவ்வண்ணம் கூடியமையும் நாளில் நீங்களும் இதுபோல் முற்றழிவீர்கள். உங்கள் நகர் உடனழியும். எரி அறிக இச்சொல்!என்று அந்த அன்னை உரைத்தாள். தன் மைந்தர் ஊனுருகி எரிவதைக் கண்டு மேலும் வெறிகொண்டு நெஞ்சிலறைந்து உங்கள் மைந்தர்கள் ஒருவர் எஞ்சாமல் அனைவரும் இவ்வண்ணமே எரியுண்டு அழிவார்கள்அறிக மண்ணுள் வாழும் எங்கள் மூதாதையர்!என்று அவள் தீச்சொல்லிட்டாள்.

அவர்கள் தங்களின் உயிரைக் காத்துக்கொள்ளவே கூடிவாழும் குடிவாழ்வைப் புறக்கணித்தனரோ? அல்லது அவர்களைக் காக்கவே அவர்களின் ஊழ் அவர்களை ஒருவரைவிட்டு ஒருவர் விலகியே இருக்கும்படிச் செய்ததோ? அவர்களின் இந்த மண்ணில் எய்தியதுதான் என்ன? என்ற ஓர் அடிப்படையான வினா வாசகரின் மனத்தில் எழுந்தபடியேதான் இருக்கிறது.

பாண்டவர்கள் காட்டுக்குச் சென்ற பின்னர் அஸ்தினபுரியைத் துரியோதனன் மிகச் சரியாக ஆண்டு வந்தான். குருஷேத்திரத்தில் பாண்டவர்கள் வென்று, அஸ்தினபுரிக்குள் நுழைந்த பின்னர் அதை ஆண்டது யுயுத்ஸும் சம்வகையும்தானே? பாண்டவர்கள் குருஷேத்திரத்தில் பெற்றதுதான் என்ன? இந்த பாரதவர்ஷத்துக்கு அவர்கள் கொடுத்ததுதான் என்ன?

முற்றழிவுக்குப் பின்னர் அவர்கள் பேரறத்தை நிலைநாட்டினார்கள் என்றால், அவர்கள் விரும்பியது அதைத்தானா? பேரறத்தின் விலை முற்றழிவுதானா? எல்லாத்தையும் அழித்த பின்னர், இழந்த பின்னர் பேரறத்தின் அடிப்படையில் அவர்கள் எந்த வாழ்வை வாழ்ந்தார்கள்?.

காட்டுத்தீயில் காடு முற்றழிந்த பின்னர் இயற்கையாகவே புதுப்புல் முளைப்பது போல அடுத்த தலைமுறையினர் பாரதவர்ஷம் எங்கும் எழுந்தனர். குருஷேத்திரம் வழங்கிச் சென்ற பாடத்தை அவர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை. துவாரகையில் செயற்கைப் பேரழிவுகள் நடந்தன! ஒருவரை ஒருவர் கொன்றுகுவித்தனர். மூத்த யாதவர் பலராமர் மீண்டும் நாற்களமாடினார்!

இனி, எத்தனை குருஷேத்திரம் நடைபெற்றாலும் மானுட மனம் பேரறத்தின் பாதையில் நடக்காதுபோலத்தான் தெரிகிறது. பேரறம் மானுடத்தின் முன் நிற்கிறது. மானுடம் அதை மீறிக்கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு உயிரும் இந்த உலகில் ஏதோ ஒரு வகையில் பேரறத்தின் பாதையில் பயணித்தமைக்காகவே அதற்குப் பெருநிலையினை அடைவதற்குரிய ராஜபாதை திறக்கப்படுகிறது. அந்த அதிஉன்னதப் பாதையில் முன்னேறி இலக்கை அடையும் உயிரே பெருநிலையினைப் பெறுகிறது. அந்த வகையில் இந்த ‘வெண்முரசு’ நாவல்நிரையில் இடம்பெறுவோரில் தருமர் மட்டுமே அந்த நிலையினை எய்துகிறார்.

இப்பெருங்காவியத்தின் பாட்டுடைத்தலைவன் விண்மறைந்தான். அது பேரெழிலுடன் கூறப்பட்டுள்ளது. காவியத்தின் கதை அங்கே முடிவடைகிறது. எனினும் காவிய நிறைவு என்பது, இது அல்ல. பெருங்காவியம் அலைகொண்டு கொப்பளிக்கலாம். ஒன்பது உணர்வுகளையும் எட்டு வழிகளையும் ஆறு தத்துவங்களையும் ஐந்து நிலங்களையும் நான்கு அறங்களையும் மூன்று ஊழையும் இருமையையும் ஒருமையையும் வெறுமையையும் அது கூறலாம். எனினும் அனைத்தும் உருகி ஒன்றென ஆகி அமைதியில் இறுதிச்சுவை அடைந்தாக வேண்டும். சாந்தம் அமையாது காவியம் நிறைவுறுவதில்லைஎன்றான் ஆஸ்திகன்.

     அந்த வகையில் இந்த நாவல் ‘வெண்முரசு’ நாவல் நிரை முழுமைக்கும் ஒரு நிறைவினை அளிக்கிறது. இளைய யாதவரைத் தொடர்ந்து குருகுலத்தின் மூத்தோர் ஒவ்வொருவராக உயிர்துறப்பதைப் பற்றி விளக்குகிறது இந்த நாவல்.

பாண்டவர் ஐவரும் உயிர்துறக்க மனம் ஒருங்குகின்றனர். அவர்கள் ஐவரும் ஒரு குகைக்குள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பிறரைப் பற்றி எக்கவலையும் இன்றித் தன்னுடைய அகவிடுதலையை மட்டுமே நினைத்து, முன்னேறி நடக்குமாறு பணிக்கப்படுகின்றனர். ஆனால், திரௌபதி கால்தளர்ந்து அமர்கிறாள்.

நகுலன் யுதிஷ்டிரனின் அருகே வந்து மூத்தவரே, திரௌபதி விழுந்துவிட்டாள், அதைக் கண்டு பீமசேனன் திரும்பிவிட்டார்என்றான். யுதிஷ்டிரன் அச்சொற்களைக் கேட்கவில்லை, அவ்வண்ணம் ஒருவர் தன் அருகே வந்ததையே உணரவில்லை.

மற்ற நால்வரும் அவளைப் பற்றிக் கவலையின்றி முன்னேறி நடக்க, பீமன் மட்டும் அவளுக்காகத் தன் நடையைத் தளர்த்தி, அவளோடு நின்றான்.

பீமன் ஓடிச் சென்று அவளை அணுகி, கையை நீட்டினான். திரௌபதி அவன் கையை விலக்கி, செல்க!என்றாள். இல்லை. நீயில்லாது செல்லப் போவதில்லைஎன்றான் பீமன். என் எடையையும் நீங்கள் சுமக்கவேண்டும்என்று அவள் சொன்னாள். நீ என்றும் எனக்குச் சுமையாக ஆனதில்லைஎன்றான் பீமன். செல்க, செல்க, எனக்காக நீங்கள் எதையும் இழக்க வேண்டியதில்லைஎன்றாள் திரௌபதி. உன்னை இழந்து நான் பெறுவதொன்றுமில்லைஎன்று பீமன் சொன்னான். எழுக, உன்னை நான் தூக்கிக்கொள்கிறேன்!என்றபோது அவன் புன்னகை புரிந்தான். நம் இளமையில் உன்னைச் சுமந்தபடி கங்கையில் நீந்தினேன்.அவள் முகம் மலர்ந்து, ஆம்என்றாள். நம் முதல் சந்திப்பில்.அந்த இனிமையால் இருவருமே எடைகொண்டவர்களானார்கள். பீமன் கால் தளர்ந்து அவளருகே அமர்ந்தான். எடை நான் நினைத்ததைவிட மிகுதிஎன்றான்.  அவளால் கையையே அசைக்க முடியவில்லை. துயருக்குத்தான் எடைமிகுதி என எண்ணியிருந்தேன்என்றாள். சென்றகாலத்து இன்பம் பலமடங்கு எடைகொண்டதுஎன்றான் பீமன். இனி நாம் செல்ல இயலாது. நம் மீட்பு இதுவரை மட்டுமேஎன்று பீமன் கூறினான். எனில் இந்த இடமே நன்றுஎன்றாள் திரௌபதி. இங்கே இனிய காற்று வீசிக்கொண்டிருக்கிறது. முடிவிலி வரையென்றாலும் இங்கிருப்பது நன்றே.

ஆம்! ஐவரில் அவளுக்கு அவனே பெருங்காதலன், பெருங்கணவன். அவளுக்காகப் பீமன் மீண்டும் மீண்டும் அஸ்தினபுரியில் பிறக்கவும் காட்டில் அலைந்து திரிந்து வாழவும் குருஷேத்திரத்தில் குருதியைக் குடிக்கவும் எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறான். பெருநிலையை எய்த விழையாமல், முடியாமல் அவர்கள் அந்தக் குகைக்குள் பாதிவழியிலேயே அமர்ந்து, தங்களின் பழைய காதல் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

அந்த இனிமையில் திளைத்தபடி தேவர்கள் என முகம் மலர்ந்து அவர்கள் கைகளைத் தொட்டுக்கொண்டு அங்கே அமர்ந்திருந்தனர். திரௌபதி தன் குழல்முடிச்சில் இருந்து ஒரு மலரை வெளியே எடுத்தாள். இது என்னவென்று தெரியுமா?” என்றாள். இது கல்யாண சௌகந்திகம்என்று பீமன் வியப்புடன் சொன்னான். இதை நீ கொண்டுவந்தாயா என்ன?” “ஆம், என் உடைமைகளைத் துறக்கவேண்டும் என்று எண்ணி ஒவ்வொன்றாக அகற்றிய போதெல்லாம் இதை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன். இங்கு வரும்பொருட்டு புறப்படும்போதும் இறுதியாக இதை வைத்திருந்தேன். நூறுமுறை வீச எண்ணினேன். என்னால் இதை வீச முடியாதென்று அறிந்தேன். அந்தக் குகையினூடாக வந்தபோது என் ஆடையனைத்தும் அகன்றது. ஆனால், எழுந்தபோது என் குழற்சுருளில் இது எஞ்சியிருந்ததுஎன்றாள் திரௌபதி. இதன் எடையால்தான் நான் நடை தளர்ந்தேன்.

இந்த மலரைப் பற்றி மட்டும்தான் ‘மாமலர்’ என்ற நாவல் முழுக்கப் பேசுகிறது. அந்த மலர் திரௌபதியின் நெஞ்சில் இருந்த கனவு மலர். அதைப் புறவயமாக அடைவதே பீமனுக்கு மெய்மையாக அமைந்தது. அதைத் தேடிய அலைந்த பீமனின் பெரும்பயணத்தைப் பற்றியதுதான் ‘மாமலர்’ நாவல். பீமன் அந்த மலரைக் கைப்பற்றினான். திரௌபதியின் நெஞ்சில் அவன் நீங்கா இடம்பெற்றமைய அந்த மலரே அவனுக்கு வழி வகுத்தது.

அவர்களைச் சூழ்ந்து பொன்னிற வானம் இறங்கி வந்தமைந்தது. அவர்கள் பொன்னொளிரும் உடல் கொண்டவர்களானார்கள். நீங்கள் என்னைத் தேரில் வைத்து இழுத்த நாளை நினைவுறுகிறேன்என்று திரௌபதி நாணத்துடன் சொன்னாள். பீமன் உரக்க நகைத்தான். அக்கணம் முதல் அவர்கள் வாழ்ந்த காலத்தின் இனிய காதற்கணங்களை மட்டுமே தொடுத்து உருவாக்கிய ஒரு காலத்தில் அவர்கள் அங்கிருந்தனர்.  அக்கணங்களில் பல்லாயிரத்தில் ஒன்றுமட்டுமே புறத்தே நடந்தது. எஞ்சியவை எல்லாமே அகத்தில் பொலிந்தவை என்று அவர்கள் உணர்ந்தனர்.

பீமனும் திரௌபதியும் அடைந்த, எய்திய பெருநிலையின் எல்லை இதுவரைதான். இதுவே அவர்களுக்கு உவப்பானதாக இருந்தது. அவர்கள் தங்களை அங்கேயே, அதே அகமனநிலையில் இருத்திக்கொண்டனர்.

‘வெண்முரசு’ நாவல் தொடரை எழுதுவதற்கு முன்பே எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள், தான் ஏன் இந்த நவீனக் காவியத்துக்கு இந்தப் பெயரினை இட்டேன் என்பது பற்றி, நாவல்வரிசைக்கான பொதுத்தலைப்பு வெண்முரசு’. ஏன் இந்தத் தலைப்பு எனச் சொல்லத் தெரியவில்லை, தலைப்பு தோன்றியது, அவ்வளவுதான். அறத்தின் வெண்முரசு. எட்டுச் சுவைகளும் இணைந்து ஒன்றாகும் சாந்தத்தின் நிறம்கொண்ட முரசு.

என ஒரு குறிப்பு எழுதியிருந்தார். இந்த நாவலில் ஒரு வரி இடம்பெற்றுள்து. அதாவது, ‘அறத்தின் நிறம் வெண்மை’ என்பதுபோல.

அனைத்து வண்ணங்களும் இணைந்து வெண்மையென்றாவதுபோல. வெண்மையே அறத்தின் நிறம்.

உண்மைதான். அறத்தின் நிறம் வெள்ளை. அதில் துளி கறை இருக்க இயலாது. துளி நிறம் மாறினாலும் அது அறக்குறையாகவே இருக்கும். அறம் என்றைக்கும் முழுமையானது. ‘வெண்முரசு’ அறத்தின் முரசு. அதன் முழக்கம் வெற்றியின் ஒலி. அறம்சார்ந்த வெற்றியே நிலையானது. அதையே ‘வெண்முரசு’ குறிப்புணத்துகிறது.

வியாசர், எனது காவியம் வெற்றியைப் பாடுகிறது என்பது உண்மை. அதற்குப் பின்னால் உள்ள தோல்விகளையும் சரிவுகளையும் சொல்கிறது. தோல்விக்குப் பின்னால் உள்ள பெருமைகளைப் பாடுகிறது. அன்புக்குள் வாழும் வெறுப்பையும் வஞ்சத்தின் ஊற்றுமுனையாகிய அன்பையும் சொல்கிறது. ஆக்கமும் அழிவும் கூடிமுயங்கும் வாழ்வையே என் காவியம் கூறுகிறது. மானுட வாழ்வு எனும், ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாத பெருக்கைப் பற்றியே நான் எழுதியுள்ளேன். அந்தப் பெருக்கை வழிநடத்துவது விண்பேரறம். அப்பேரறத்தின் காட்சி இங்குள்ள வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் தெரியக் கூடும். என் காவியம் காட்டுவது அதையேஎன்றார்.

ஆம்! இந்த ‘வெண்முரசு’ நாவல்நிரை காட்டுவதும் அதையே. பேரறத்தை மகாபாரதமாக நமக்கு வியாசர் காட்டினார். அந்த வியாசர்தான் ஜெயமோகனாகப் பிறந்தார். இந்த வெண்முரசினை இயற்றினார். நம் காலத்தில் எழுதப்பட்ட நவீனப் பெருங்காவியம் இதுவே. இனி, இதை வெல்லும் காவியம் எழுதப்பட சில நூற்றாண்டுகள் ஆகலாம். ஜெயமோகன் மீண்டும் வியாசராகப் பிறக்கும் வரை உலகம் காத்திருக்க வேண்டும். அதுவரை இது நல்லோர் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.

‘‘பராசரரின் புராணசம்ஹிதையில், விண்ணில் மாலவன் உறையும் பாற்கடல் பெருமுரசென ஓயாது அலையெழுந்து அறைந்து கொண்டிருந்தது என்று சொல்லப்படுகிறது. வெண்பெருமுரசு. அவ்வலைகள் அமுதைத் திரட்டிக்கொண்டே இருக்கின்றன.  இங்குச் சொல்லென்று நாம் உணர்வது அதன் ஓசையை. அறமென்று நாம் அறிவது அதன் அலைகளை. மெய்மையென்று சுவைப்பது அதன் அமுதின் இனிமையை. அமுதின் ஆழியில் அவன் மீண்டும் சென்றமைக!  அறிதுயிலில் அவன் அமிழ்க! அவன் கனவில் புடவிகள் எழுந்து நிகழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!என்றார் யுதிஷ்டிரன்.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘வெண்முரசு’ நாவல்நிரையினை எழுதி முடித்தமைக்காகவே அவர் பெருநிலையை எய்திவிட்டார் என்பேன். அந்த நாவல் நிரையினைப் படித்து முடிக்கும் ஒவ்வொருவருக்கும் அந்தப் பெருநிலையினை அடைவதற்குரிய ராஜபாதை திறக்கப்படும் என்று நம்புகிறேன். நான் இப்போது அந்த அதியுன்னதப் பாதைக்குள் நுழைந்துவிட்டேன். ‘பெருநிலையினை எய்துவேன்’ என்ற நம்பிக்கை என்னுள் பெருகுகிறது. ஒவ்வொருவருக்கும் இத்தகைய வாசிப்பு சார்ந்த மனவெளிப் பயணம் கிடைக்கவும் அது இனிதே நிறைவு பெறவும் வாழ்த்துகிறேன். ஆம்! அவ்வாறே ஆகுக.

‘கல்பொருசிறுநுரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘களிற்றியானை நிரை’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்

‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 

கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை

சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

முந்தைய கட்டுரைநாஞ்சில்நாடன், கம்பராமாயண விளக்கம்
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன் விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 10