வாசகர் செந்தில்,கடிதங்கள்

வாசகன் என்னும் நிலை

வாசகர் செந்தில், கடிதங்கள்

அன்புள்ள ஜெ

ஓராண்டுக்கு முன்பு செந்திலின் பேட்டியை நான் வாசித்திருந்தால் சிலரைப்போல நையாண்டியாகச் சிரித்திருப்பேன். நான் ரொம்ப முற்றிப்போன அறிவுஜீவி என நினைத்துக்கொண்டிருப்பேன். ஆனால் கொரோனாக்காலம் என்னை உண்மையில் யார் என்று காட்டிவிட்டது. பலவகையான சிக்கல்கள். இழப்புகள். தூக்கமே இல்லாத இரவுகள். நான் முகநூலில் நெகெட்டிவாகவே எழுதிவந்தவன். எல்லாவற்றையும் நையாண்டி செய்வேன். அப்போதுதான் நமக்கு ஒரு பிம்பம் உருவாகிறது. அது ஒரு குறுக்குவழி.

ஆனால் உண்மையில் உள்ளூர நான் நம்பிக்கையும் பிடிப்பும் கொண்டிருந்தேன். ஏனென்றால் நல்ல வேலை, நல்ல சம்பளம். அந்த நெகெட்டிவிட்டி ஒரு நடிப்புதான். உண்மையாகவே உள்ளூர நெகட்டிவாக இருப்பது என்றால் என்ன என்று எனக்கு காட்டியது தூக்கமே இல்லை. அப்போதுதான் நூறுகதைகளை வாசித்தேன். பலகதைகளை ஏழெட்டுமுறை வாசித்தேன். வாழ்க்கை என்பது எத்தனை நுட்பங்களும் அழகுகளும் கொண்டது என்று அறிந்துகொண்டேன். மதுரம் என்ற சிறுகதையை மட்டும் இருபது முறை படித்தேன். இன்றைக்கு மீண்டுவந்துவிட்டேன்.

அந்தக்கதைகளில் உள்ளது கருத்து அல்ல. பார்வை அல்ல. ஒரு wisdom. அது வாழ்ந்து அறிபவர்களுக்குத்தான் வந்து சேரும். அதைத்தான் இன்றைக்கு வெண்முரசிலும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இலக்கியத்தைப் பார்த்து வாசகர்கள் வருவது அதற்காகவே. அந்த wisdom கிடைக்காதவர்களுக்கு இலக்கியமென்றால் என்ன, அதன் பயன் என்ன என்று சொன்னாலும் புரியாது.

ரா.கார்த்திக்

அன்பு ஜெயமோகன்,

காந்தம் வலைக்காட்சியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செந்தில்குமார் என்பவரின் நேர்காணலைப் பார்த்தே ஆக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். காரணம், நேர்காணலுக்கு அவர்கள் கொடுத்திருந்த தலைப்பு. “ஜெயமோகனுக்காக கழுத்து அறுத்து குருதிப்பலி கொடுப்பேன்” எனும் தலைப்பால் கடுப்பாகித்தான் காணொலிக்குள் நுழைந்தேன்.

கடுப்பு என்றால் உலக மகா கடுப்பு. உங்களை வைத்து ஜல்லி அடிக்கும் சமூகவலைக்கும்பலோ எனும் கடுப்புதான். இன்னொரு புறம், உங்களைப் ‘புனிதப்படுத்தும்’ முயற்சிகள் ஆரம்பமாகி விட்டனவோ என்றும் அச்சம். காணொலியில் அகரமுதல்வன் பெயரைக் கண்ட பிறகே நிதானமானேன். தொடர்ந்து நேர்காணலைக் காணவும் முடிவு செய்தேன்.

திருவல்லிக்கேணி செந்தில்குமார் என்பவரின் நேர்காணல் அது. அப்பகுதியில் பழைய புத்தகக்கடை நடத்தி வருகிறார். வழக்கமாக அதுபோன்ற கடைகள் நடத்தும் நபர்கள், பெரும்பாலும் பிழைப்புக்கான வழியாகவே அதைக் கருதுவர். இலக்கிய நூல்களைத் தேடி வருபவர்களைக் கண்டால் எரிச்சல் படுவர். அவர்களையும் குறைசொல்லிட முடியாது. அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி. இப்படியான சூழலில் ஒரு வாசகன் கிடைத்து விட மாட்டானா என ஏங்கி இருக்கிறேன். ஏக்கத்தைப் போக்கியதோடு, என்னைக் குற்றவுணர்வுக்குள்ளும் தள்ளி விட்டான் செந்தில்.

பாலகுமார வெறியனாய் இருந்தபோது, அவரின் நாவல்களை வாங்குவதற்கு பழைய புத்தகக் கடைகளையே அதிகம் நாடுவேன். கோபிசெட்டிபாளைய பேருந்து நிலையத்தில் ஒருவர் பழைய புத்தகக்கடை வைத்திருந்தார் (தள்ளுவண்டியில்). அவரிடமே பாலகுமாரன் நாவல்களை (மலிவுப் பதிப்பு) அதிக எண்ணிக்கையில் வாங்கி இருக்கிறேன். அவரும் சலிக்காமல் சேகரித்துத் தருவார். ஒருகட்டத்தில் பாலகுமாரன் நாவல் கிடைக்கும்போது எனக்காக அதைத் தனியே எடுத்து வைத்து விடுவார். நான் மறுத்த பிறகே மற்றவர்களுக்குக் கொடுப்பார். இன்றைக்கும் அக்கடை இருக்கிறது என்றாலும் முன்புபோல ஓட்டம் இல்லை.

செந்தில்குமாரின் உரையாடலில் ஒரு வாசகனின் அசகாய உடல்மொழியைத் தொடர்ந்து கண்டேன். குறிப்பாக, அவரின் கண்ணசைவுகள். வியாச விருந்து எனச் சொல்ல வராமல் வியாச விருது எனக் குறிப்பிட்டார்; அவ்வளவு அழகு. இராஜாஜியையும் சாண்டில்யனையும் வாலியையும் கொண்டாடித் தீர்த்த பிறகு உங்களிடம் வந்தார். கொற்றவை புரியவில்லை எனச் சொல்லவில்லை. எனக்கு அதை வாசிக்கும் அளவிலான பக்குவம் வரவிலை எனப் பணிவுடன் குறிபிட்டார். அது போலிப்பணிவு அல்ல. இது ஒரு வாசகனுக்கு மிக அவசியமான தகுதி.

இவ்விடத்தில், ஒன்றை வலியுறுத்திச் சொல்கிறேன். ஒரு வாசகன் ஒரு எழுத்தாளரின் அனைத்து இலக்கியப் படைப்புகளையும் வாசித்தாக வேண்டும் என்று அவசியமில்லை. தங்கள் வாசிப்புக்கு இணக்கமான படைப்பை முதலில் அடையாளம் கண்டு வாசிக்க வேண்டும். மெல்ல மெல்ல வாசிக்க மேலதிக உழைப்பைக் கோரும் ஆக்கங்களுக்குச் செல்ல வேண்டும். ஒரு படைப்பை வாசிப்பதற்கான முன்தயாரிப்பைச் சில ஆக்கங்கள் இயல்பாகவே வேண்டி நிற்கும். வாசகன் அதற்குத் தயாராகமால், அப்படைப்புகளுக்குள் நுழையவே கூடாது.

வணிக இலக்கியப் பொழுதுபோக்கை வாசிப்பு என நம்பிக்கொண்டிருப்பது அபாயகரமானது. நேரம் போக்க உதவும் எதுவும் படைப்பாகா; பண்டம் மட்டுமே. ஒரு வாசகன் வாசிப்பதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியது. எது படைப்பு (இலக்கியம்) என்பதைத்தான். ஆக, வாசகன் எழுத்தாளனை விட விழிப்புணர்வுள்ளவனாக இருக்க வேண்டி இருக்கிறது. இன்றைய வாசகர்களுக்கு இன்னும் அதிக விழிப்புணர்வு முக்கியம்.

புத்தகத்தின் வாசனை இல்லாத வாசிப்பு தனக்குச் சாத்தியபட்டு வராது என்பதில் செந்தில்குமாரிடம் இருக்கும் உறுதி என்னிடமும் இருக்கிறது. அது முரண்டு பிடிப்பதல்ல. ஒரு வாசகன் வாசிக்கும்போதான நெருக்கமான அனுபவத்தை அச்சுநூல்களே அளிக்கின்றன. மின்நூல்கள் வெறும் காட்சியனுபவமாகவே எஞ்சி நிற்கின்றன. உங்களின் கட்டுரைகளை தளத்தில் வாசிக்கும்போது அந்நியத் தன்மையையே உணர்கிறேன். பண்படுதல் துவங்கி தன்மீட்சி வரையிலான கட்டுரைத் தொகுப்புகளை அச்சுவடிவிலேயே அதிகம் நெருங்க முடிந்தது. ஆயிரக்கணக்கான மின்நூல்கள் கைவசம் இருக்கின்றன. எனினும், அவற்றைக் குறித்த நிறைவில்லை. நூற்றுக்கணக்கான அச்சுநூல்கள் என் சேகரிப்பில் இன்று இருக்கின்றன. அவை இலட்சக்கணக்கானவையாக மாற வேண்டும் என்பதே எப்போதும் என் கனவு.

உங்களைச் சந்திக்க வேண்டும் எனச் செந்தில்குமார் விரும்புகிறார். அவரைச் சந்திக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். பார்ப்போம், எது முதலில் சாத்தியப்படுகிறதென்று.

சத்திவேல்

கோபிசெட்டிபாளையம்.

இன்னொரு பேட்டி

***

பிகு :செந்திலின் புத்தக கடை Pycrofts Road, அல்லது பாரதியார் சாலையில், கோஷா ஆஸ்பத்திரி பேருந்துநிலையம் எதிரில் இருக்கிறது.

முந்தைய கட்டுரைவெண்முரசும் கிருஷ்ணஜெயந்தியும்.
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6