புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-3

புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-1
புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-2

கோலாரில் ஒரு விடுதியில் தங்கினோம். இது ஊரடங்குக் காலமென்பதனால் குறைவான செலவில் தங்கமுடிந்தது. பொதுவாகவே சுற்றுலாத்துறை சார்ந்த எல்லா தொழில்களும் அப்படியே உறைந்துவிட்டிருக்கின்றன. கட்டிட உரிமையாளர்களுக்கு முதலீட்டில் நஷ்டமில்லை. ஆனால் குத்தகைக்குக் கட்டிடங்களை எடுத்து நடத்துபவர்களும், ஊழியர்களும் வாழ்க்கையின் பெரும் நெருக்கடிகள் வழியாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

அந்த கட்டணத்திலும் நாங்கள் விடுதியில் அறைக்கு நான்குபேர் என தங்கினோம். இரண்டுபேருக்கு கட்டில், இரண்டுபேருக்கு தரை. ஆகவே தலைக்கு முந்நூறு ரூபாய்தான் ஆகும். கார்ச்செலவு, சாப்பாடு உட்பட மொத்த பயணச்செலவே மூவாயிரம் ரூபாய்தான். ஆடம்பரம் எங்கள் பயணமுறைக்கு எதிரானது. ஆடம்பரச் செலவுக்கான பணமிருந்தால் இன்னொரு பயணம் செய்யலாமே என்பது கொள்கை.

காலையில் கோலார் அருகே உள்ள அவனி என்னும் ஊருக்குச் சென்றோம். இந்தப் பயணத்திற்காக அமைக்கப்பட்ட வாட்ஸப் குழுமத்தின் பெயரே ’அவனிபவனி’தான். செல்வேந்திரனின் சொல்வண்ணம் என நினைக்கிறேன். காலை ஏழுமணிக்கே சென்றமையால் சிலர் டீ கூட குடிக்கவில்லை. நான் காலையிலேயே வெந்நீருக்காகக் காத்திருக்காமல் குளித்துவிட்டேன். ஆடைமாற்றி வந்தபோது ஒரு கும்பல் ஒரு திசைக்கும் இன்னொரு கும்பல் எதிர்திசைக்கும் காலை தேநீர் தேடிச் சென்றிருந்தது. நாங்கள் சென்ற திசையில் நல்ல டீ கிடைத்தது.

அவனி என்னும் தொன்மையான நகரம் நுளம்பர்களின் நாட்டின் பண்பாட்டு மையமாக இருந்தது. இன்று ஒரு சிற்றூர். கிபி நான்காம் நூற்றாண்டு முதல் இந்நகரம் முக்கியமான ஆட்சிமையமாக இருந்து வந்தமைக்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. பிற்கால கல்வெட்டுகளில் இது தென்னகத்தின் கயா என்று அழைக்கப்படுகிறது. கயா போலவே நீத்தார் சடங்குகளுக்கு முக்கியத்துவம் உடைய இடமாக இருந்திருக்கலாம்.

இங்குள்ள தலபுராணப்படி இது வால்மீகி தவம்செய்த இடம். இங்கே ராமன் வால்மீகியைச் சந்திக்க வந்தார். லவனும் குசனும் வாழ்ந்ததும் இங்குதான். இத்தகைய தொன்மங்களின் சமூகவரலாற்றுப் புலம் என்ன என்று ஆராயவேண்டும் என்று தோன்றியது. வால்மீகி சமூகத்துடன் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு குலம் இங்கே கிபி நான்காம் நூற்றாண்டுக்கு முன் இருந்திருக்கிறதா?

அவனியில் உள்ள அங்குள்ள ராமலிங்கேஸ்வரர் ஆலயத்துக்குக் காலையிலேயே சென்றோம். பசித்ததனால் வழியிலிருந்த குட்டிக்கடையில் இருந்து கடலைமிட்டாய் வாங்கிக்கொண்டோம். உடன்வந்த இளம்பரிதி கடலைமிட்டாய் ஜாடியையே மொத்த விலைக்கு வாங்கிவிட்டார். அதுதான் பசி தாங்க உதவியது.

ராமலிங்கேஸ்வரர் ஆலயம் கிபி நான்காம் நூற்றாண்டு முதல் அங்கே இருந்திருக்கிறது. அது ஓர் ஆலயத்தொகை. ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகியோரின் பெயரால் இங்குள்ள நான்கு முதன்மை ஆலயங்களும் அழைக்கப்படுகின்றன. வாலி, சுக்ரீவன் பெயரால் இரு சிற்றாலயங்கள் உள்ளன. ஆலயங்களெல்லாம் சிவனுக்குரியவை. ராமேஸ்வரம் போல ராமன் வழிபட்ட சிவலிங்கங்கள் இவை. இவற்றில் சத்ருக்னலிங்கேஸ்வரர் ஆலயம் காலத்தில் பழைமையானது என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

நுளம்பர்களால் கட்டப்பட்ட ஆலயங்களை பின்னர் சோழர்கள் எடுத்துக் கட்டியிருக்கிறார்கள். நாயக்கர் காலகட்டத்தில் மேலும் மண்டபங்கள் கட்டப்பட்டன. விஜயாலயசோழீச்சரம் என்னும் நார்த்தாமலை ஆலயத்தொகையை நினைவூட்டிக்கொண்டே இருந்தது இந்த இடம்.

கருவறைக்கு மேலேயே திராவிடபாணி கோபுரம் கொண்ட சிறிய ஆலயங்கள். தேர்போல தோன்றுபவை. சிற்பங்கள் அதிகமில்லை, ஆனால் இருப்பவை அழகானவை.  உமாமகேஸ்வரர், தாண்டவர், பிட்சாடனர் சிலைகளை உலோகமோ என மயங்கவைத்தது காலையின் ஒளி. சிற்பங்களை காலையொளியில் பார்க்கையில் கல் ஒரு மெல்லிய பட்டுத்திரை என்று ஆக, அப்பாலிருந்து, காலவெளியின் பிறிதொரு களத்திலிருந்து, புடைத்து எழுந்து வந்தவை அவை என பிரமை எழுந்தது.

பொதுவாக பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய கோயில்கள் மணற்பாறையால் ஆனவை. அவை சிற்பங்களுக்கு நெகிழ்ந்து கொடுக்கின்றன. மென்மையான பொன்வண்ணமும் கொண்டிருக்கின்றன. அங்கிருந்த ஒரே ஆலயத்தில் மட்டும் கோயிலும் சிலைகளும் பளிங்குப்படிகம் போன்ற கல்லில் செதுக்கப்பட்டிருந்தன. குழைவில்லாத மொத்தையான சிலைகள் அவை.

இங்குள்ள ஆலயங்களில் மிக அழகான சிற்பங்கள் முகமண்டபங்களில் கூரைக்குடைவின் அடியில் செதுக்கப்பட்டிருக்கும் எண்திசைக் காவலர்களின் சிலைகள். மிகநேர்த்தியான, நுட்பமான கலைவடிவங்கள்கள் அவை. நுளம்பர்களின் கட்டிடக்கலையின் ஒரு சிறப்பம்சமாகவே அவற்றைச் சொல்லலாம்.

பிற்காலத்தில் கல்யாணி சாளுக்கியர், கங்கர்கள், ஹொய்ச்சாலர்களின் கட்டிடக்கலையின் முகப்படையாளமாக ஆன உருண்டைத் தூண்களுக்குமேல் தாமரைக்கவிதல் கொண்ட அழகிய மண்டபங்களும் இங்கே உள்ளன. கரிய சலவைக்கல்லில் செதுக்கப்பட்டு ததும்பும் நீர்த்துளிபோல் ஒளிவிடும் நந்தி அமர்ந்த மண்டபங்கள்.

இங்கே  லட்சுமணேஸ்வரா ஆலயத்தின் சுவரில் உருத்திராக்கம் அணிந்து கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பவர் பத்தாம் நூற்றாண்டின் சைவ குருநாதராகிய திரிபுவனகர்த்தா என்று சொல்லப்படுகிறது.

மையக்கோயில் திறக்கப்படவில்லை. சிறிய ஆலயங்களின் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டு காலையில் மெல்ல மெல்ல விழிப்படைந்துகொண்டிருந்த உள்ளத்துடன் நடப்பது இனிதாக இருந்தது. இப்படி அதிகாலையில் பார்த்த ஆலயங்களின் நினைவுகள் எழுந்து ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன.

ஆலயத்தை ஒட்டி ஒரு தொன்மையான குளத்தை தொல்லியல்துறை தோண்டி எடுத்துக் கொண்டிருந்தது. ராமலிங்கேஸ்வரர் ஆலயம் உட்பட பழைய ஆலயங்களுக்கு வருகையாளர் பொதுவாகக் குறைவு. அருகே மலைமேல் ஒரு புதிய ஆலயம் கட்டப்பட்டிருந்தது. அங்கே பக்தர்கள் வருகிறார்கள் என்று தோன்றியது.

சாலைவழியாகச் சுற்றிக்கொண்டு மலைச்சரிவில் ஏறிச்சென்றோம். மிகப்பெரிய உருளைக்கிழங்குக் குவியல்போன்ற மலை. செந்நிறப்பாறைகள் உருண்டும், தயங்கியும்,நீர்த்துளி எனத் ததும்பியும் நின்றிருந்தன. ஒரு பாறையின் அடியில் அமர்வதற்குரிய குகைபோன்ற சரிவு இருந்தது. அங்கே அமர்ந்து சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

அடுத்தபடியாக அருகேயுள்ள முல்பகல் விருபாட்சர் ஆலயத்திற்குச் சென்றோம்.  பகுலமுகி அன்னை இங்குள்ள சிறப்புத்தெய்வம், முல்பகல் அப்பெயரின் மருவு என தோன்றியது. ஆனால் முலபகிலு, மேற்குவாசல், என்னும் சொல்லின் திரிபு என்கிறார்கள்.

நுளம்பர்களைப் பற்றி வாசித்தபோது கண்டடைந்த ஆய்வாளர் கலைவிமர்சகரான ஆண்ட்ரூ கோகென் [Andrew Cohen]. கர்நாடக சிற்பக்கலை ஆராய்ச்சியில் ஹொய்ச்சால கட்டிடக்கலைக்கு ஜெரார்ட் புக்கேமா [Gerard Foekema]போல நுளம்பர்களின் கலைக்கு இவர் முக்கியமானவர். நுளம்பர் காலகட்டக் கலையை ஆய்வுநோக்கில் தொகுத்து அதன் அடிப்படைகளை வரையறை செய்தவர்.

கோகென் சொல்லும் ஒரு முக்கியமான கருத்தை கிருஷ்ணன் சொல்லிக்கொண்டிருந்தார். கட்டிடக்கலையை சோழர்கலை, நுளம்பர் கலை, நாயக்கர் கலை என பிரிப்பது பிழையானது. உண்மையில் ஆட்சியாளர்களுக்கு கலையிலுள்ள பங்கு என்பது மிகமிகக் குறைவானதே. கலையை வட்டாரம் சார்ந்தே பிரிக்கவேண்டும். காலகட்டம் சார்ந்து அடுத்த பிரிவினையைச் செய்யலாம். ஒரு கலைமரபு ஒரு சிற்பியர் குலத்தைச் சார்ந்தே உருவாகி வருகிறது. அதற்கு திரிபுவன்கர்த்தா போல ஒரு ஆன்மிக- தத்துவ வழிகாட்டி இருக்கலாம். அதில் நிகழும் மாற்றங்கள் தத்துவம் வழியாக, சிற்பக்கலைக்கு வந்து மிகமெல்லவே உருவாகின்றன

விருபாட்சர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளிபடி இந்த ஆலயம் நுளம்பர்களால் கட்டப்பட்டு சோழர்களால் விரிவாக்கப்பட்டது. முலுவை மாகாணத்தைச் சேர்ந்த லக்கண தண்டேசா என்னும் படைத்தலைவன் பதின்நான்காம் நூற்றாண்டில் இதை எடுத்து கட்டினான்.

இரு கருவறைகள் கொண்டது இந்த ஆலயம். இரு சிவலிங்கங்கள். ஒன்று அத்ரி முனிவரால் நிறுவப்பட்டது, இன்னொன்று சுயம்பு என்று தொன்மம் சொல்கிறது. சற்று தாழ்வான கூரைகொண்டவையும் உருண்ட தூண்களால் ஆனவையுமான மண்டபங்களுக்கு அப்பால் கருவறைகளில் எழுந்த சிவம். கோயில்களில் நாங்கள் மட்டுமே அன்று வணங்க வந்தவர்கள்.

இந்த ஆலயத்தில் பகுலமுகி என்னும் தேவியின் ஆலயம் தனி இணைப்பாக உள்ளது. பழைய காலத்தில் தட்சிணமகாவித்யை எனப்படும் தாந்த்ரீக பூஜைக்குரிய தேவி இவள். ஆலயப்பூசகர் அவரே வந்து ஆலயத்தை திறந்து எங்களுக்குக் காட்டினார். த்ரிசக்தி வடிவம். முன்பக்கம் விஷ்ணுதுர்க்கை வடிவம் போல துர்க்கையும் நாராயணியும் கலந்த தோற்றம். பின்பக்கம் வீணை ஏந்திய சரஸ்வதி. சிற்பத்தின் நிழல் துணுக்குறசெய்யும்படி விசித்திரமான ஒரு விழிக்குழப்பத்தை அளித்தது. இந்த தெய்வத்தை இப்போதுகூட மைசூர் அரசகுடியினர் வந்து வணங்கி சில பூசைகள் செய்துவிட்டு செல்கிறார்கள்.

இவ்வாறு பல ஆலயங்களை ஒரே நோக்கில் பார்ப்பதனால் என்ன பயன் என்னும் எண்ணம் சிலபோது எழுவதுண்டு. ஒவ்வொரு சிற்பத்தைப் பற்றியும் தனித்தனியாக ஆராய்வதும் ரசிப்பதுமே உகந்தது. நான் அத்தனை சிற்பங்களையும் சொல்லிவிடவேண்டுமென நினைப்பேன். ஆனால் அது இயந்திரத்தனமாக ஆகிவிடுமா என்னும் ஐயமும் எழும்.

இத்தகைய பயணங்களின் சிறப்பு நம்மை இவை ஒரே உச்சஉளநிலையில் பலநாட்கள் நிறுத்தி வைக்கின்றன என்பதுதான். இது ஒரு வகை விழிப்புநிலைக் கனவு. சிற்பங்களை நாம் தனித்தனியாகப் பார்த்தாலும் ஒற்றை அனுபவம்தான். நம் ஆழத்தில் எங்கோ அத்தனை சிற்பங்களும் இணைந்த ஒரு பெரும் படலம் உருவாகிறது.

இத்தகைய ஆலயங்களில் பெரும்பாலான சிற்பங்கள் திரும்பத்திரும்ப வந்தபடியே இருக்கின்றன. ஆடவல்லான், மயிடசெற்றகொற்றவை, கரியுரித்தபெருமான்… செவ்வியல் கலையின் இயல்பு அவ்வண்ணம் திரும்பத் திரும்ப வருவதுதான். இசையில் ஒரே பாடல், ஒரே ஸ்வரங்கள் மீளமீள வருவதுபோல. நாம் ரசிக்கவேண்டியது அவ்வாறு அவை திரும்பத்திரும்ப வருவதிலுள்ள கனவுத்தன்மையை. கனவுகளும் திரும்ப நிகழ்பவை. கூர்ந்தால் அவை நுண்ணிய மாறுபாடுகளை அடைந்திருப்பதையும் காணலாம். ஒரு சிற்பம் அல்ல இன்னொன்று.

காலையுணவு தவறிவிட்டது. கடலைமிட்டாயின் பலத்தில் தாக்குப்பிடிக்க முடிந்தது. முல்பகலின் பிரசாத் ஓட்டல் நன்று என்று நண்பர்கள் விசாரித்து அறிந்திருந்தனர். கட்டுக்கட்டாக வெற்றிலையும் பாக்கும் விற்கும் ஒரு சிறு சந்தைக்குள் சென்று அங்கிருந்து சந்துக்குள் நுழைந்து அந்த ஓட்டலைக் கண்டுபிடித்தோம்.

ஐந்துபேர் அமர்ந்து சாப்பிட வசதியுள்ள ஓட்டல். ஆனால் அந்தப்பகுதியெங்கும் மூடியகடைகளின் வாசல்களிலெல்லாம் அமர்ந்தும் நின்றும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஓட்டலுக்கு பின்புறம் மேலே குடியிருக்கும் உரிமையாளரின் வீட்டுக்குச்செல்லும் மாடிப்படிக்கு கீழே நிற்க இடம் கிடைத்தது. தட்டு இட்லி, தோசை, புளியோதரை என வந்துகொண்டே இருந்தது. மதியத்திற்கும் சேர்த்தே சாப்பிட்டேன். ஓட்டலின் புகழுக்குக் காரணம் தெரிந்தது, நல்ல உணவுதான்.

உணவுக்குப்பின் குருடுமலே என்னும் இடத்தில் இருந்த சோமேஸ்வர் ஆலயத்திற்குச் சென்றோம். முல்பகலில் இருந்து பத்து கிமீ தொலைவில் இருக்கும் இந்த ஊர் பழைய நுளம்பர்களின் நகரம். இங்குள்ள சோமேஸ்வர் ஆலயம் சோழர்களால் கட்டப்பட்டது. ஆனால் உள்ளூர் நம்பிக்கையின்படி புகழ்பெற்ற ஹொய்சாலர் கால சிற்பிகளான ஜனகாச்சாரி, மற்றும் அவர் மகன் தங்கணாச்சாரி இருவராலும் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இந்நம்பிக்கைக்கு ஆதாரமில்லை.

கவிழ்தாமரை வடிவிலான கோபுரம் கொண்ட சிறிய ஆலயம் இது. உள்ளே கருவறையில் சிவலிங்கம். ஆனால் மிக முக்கியமானது அருகில் எங்கோ இருந்த பழைய பெருமாள் ஆலயத்தில் இருந்து கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கும் பெருமாள் சிலை. ஆறடி உயரத்தில் மண்மகள், திருமகள் இருபுறமும் துணைக்க பூசைகள் ஏதுமில்லாமல், காகிதமாலை அணிந்து நின்றிருக்கும் பெருமாள்சிலை நான் பார்த்த பெருமாள்சிலைகளிலேயே பேரழகு மிக்கது.

அருகே நம்மாழ்வார், ராமானுஜர் இருவருக்கும் சிலைகள் உள்ளன. ராமானுஜர் அங்கே வந்திருந்தார் என்றும், அவருடைய ஆணைப்படி கட்டப்பட்டது அந்த பெருமாள் ஆலயம் என்றும் அர்ச்சகர் சொன்னார்.

அச்சிலைகளை பார்த்துப்பார்த்து விழி அசைக்கமுடியவில்லை. கம்பீரமும் கருணையும், குழைவும் உறுதியும் கலந்த முகம். கல்திறந்து தெய்வம் எழும் தருணம் தெய்வமுகம் கல்லில்தான் எழக்கூடும். பேரழகுமிக்க அன்னையர். பூசையின்றி வெறும் பாவை என நிற்பதுவும்கூட அவனுடைய விருப்பத்தால்தான் என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான்.

கர்நாடகத்தில் பல மகத்தான சிலைகளைக் கண்டிருக்கிறேன்.  நினைவில் அவை ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று ஒப்பிடமுடியாத அழகு கொண்டவை. ஆயினும் உடனே நினைவிலெழுந்த சிலை பெலவாடியின் வீரராகவப் பெருமாள் திருவுருதான். அதற்கிணையான பேரழகு கொண்டவை இவை.

சோமேஸ்வர் ஆலயத்தின் அருகே உள்ள குருடுமலை பிள்ளையார் கோயில்தான் மக்களிடையே பெரும்புகழ்பெற்றது. கிட்டத்தட்ட பதினான்கு அடி உயரமான மாபெரும் பிள்ளையார் உயரமான கருவறைக்குள் வீற்றிருக்கிறார். யானைகளே திகைக்கும் பேருருவம். கல் தன் உச்சகட்ட சாத்தியத்தை அடைவது யானையென்றாகும் போதுதான் போல. யானைத்தெய்வமே அதற்குரிய வடிவம்.

[மேலும்]

Art Historian Andrew Cohen Gave Nolamba Art Its Place Under the Sun

முந்தைய கட்டுரைவாசகன் என்னும் நிலை
அடுத்த கட்டுரைகாந்தியப் பயணிகள்