புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-2

தர்மபுரி வழியாக குப்பம் சென்று அங்கிருந்து கோலார் சென்றோம். கோலார் என்பது பழைய நுளம்பநாடு. இந்தப்பயணமே முதன்மையாக நுளம்பநாட்டைப் பார்ப்பதற்காகத்தான்.

ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியில் “…வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்ட” என்று வருகிறது. அதில் பேசப்படும் நுளம்பபாடி கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதிதான். பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் முதலாம் ராஜராஜ சோழன் நுளம்பபாடியை வென்று நேரடி ஆட்சிக்குக் கீழ் கொண்டுவந்தார்.

நொளம்பர்களைப் பற்றி ஒரு பயணக்குறிப்பை நண்பர்கள் தயார் செய்திருந்தனர். அதிலுள்ள செய்திகள்.

மூன்று நூற்றாண்டு காலம் கர்நாடகத்தை ஆட்சி செய்தவர்கள் நொளம்பர்கள்  [கிபி 750-1055 ] நொளம்ப பல்லவர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள். ராஷ்ட்ரகூடர்கள், கங்கர்கள், சாளுக்கியர்கள் போன்று இவர்களும் பழைய சாதவாகனப் பேரரசின் கீழ் இருந்து கிபி ஐந்தாம் நூற்றாண்டில் தன்னாட்சிபெற்று ஒரு பேரரசாக எழுந்தவர்கள்.

ஆரம்பத்தில் கங்கர்களின் கீழ் நொளம்பலிகே என்ற பகுதியை ஆண்டிருக்கிறார்கள். அது இன்றைய அனந்தப்பூர் (ஆந்திரா), சித்திரதுர்கா, தும்கூர், பெல்லாரி, கோலார் பகுதிகள். கிழக்கே பெண்ணாற்றுக்கும் மேற்கே ஹகரி நதிக்கும்(வேதவதி) நடுவே உள்ள பகுதி. ஆயிரம் ஊர்களை இவர்கள் ஆட்சிசெய்தனர் என்கின்றன கல்வெட்டுகள்.

சோமேஸ்வர் ஆலயம் கோலார்  https://stepstogether.in/2018/01/21/someshwara-temple-and-kolaramma-temple/

நொளம்பர்களின் தலைநகரம் ஹேமவதி. [ஹெஞ்சேறு] தமிழகத்தில் சேலம் இவர்களின் தெற்கெல்லை.  ஹேமாவதியில் கிடைத்த தூணில் இவர்களது குலவரிசை குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இவர்கள் தங்களை பல்லவர்களின் வழிவந்தவர்கள் என்று சொல்கிறார்கள். த்ரிநயனா என்ற நொளம்பாதிராஜா முதல் மன்னன். சிம்மாபோதா, சாரு பொன்னேறா, மஹேந்திரா, நண்ணிக ஐயப்பதேவ அன்னிகா, திலீபா என்ற நிரை குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் த்ரிநயன பல்லவா என்ற அரசன் சாளுக்கிய மன்னன் விஜயாதித்தனால் தோற்கடிக்கப்படுகிறான். (8ஆம் நூற்றாண்டின் முற்பகுதி). சிம்ஹபோதா கங்க மன்னன் சிவமார சாய்கொட்டா-வின் படைத்தளபதி ஆக இருக்கிறான். சிவமாறன் ராஷ்டிரகூடர்களால் வெல்லப்பட்டு சிறைபிடிக்கப்பட்டபோது சிம்ஹபோதாவின் மகனும் பேரனும் ராஷ்டிரகூடர்களின் பாதுகாவலில் செல்கிறார்கள். பின்னர் அவர்கள் நொளம்பாலிகே 1000-ன் ஆட்சியை அடைகிறார்கள்.

இவர்கள் சிறிய நிலப்பகுதியையே ஆண்டாலும், இந்நிலப்பகுதி சோழ, பல்லவர்களின் தமிழ் நிலத்தையும் கீழைச்சாளுக்கியர்கள், மேலை கங்கர்கள், ராஷ்டிரகூடர்கள் ஆண்ட கர்நாடக பகுதிக்கும் இடையே இருந்த காரணத்தால் முக்கியத்துவம் பெறுகிறார்கள். கோலாப்பூர் தகடுகள் குறிப்பிடுவதன் படி நொளம்பர்கள் கும்பகர்ணனின் மகன் நிகும்பா வழி வந்தவர்கள் என்றிருக்கிறது. இது அவர்கள் பாணர்கள் வழி வந்திருக்கலாம் என ஒரு சாத்தியத்தை காட்டுகிறது.

பல்லவர்களைப் போல நொளம்பர்களும் ஆலயங்கள் பல எழுப்பி இருக்கிறார்கள். கம்பதுருவில்  (அனந்தப்பூர் மாவட்டம், ஆந்திரா) உள்ள மல்லிகார்ஜுனா ஆலயமும், நந்தியில் உள்ள போகநந்தீஸ்வரர் ஆலயமும் சிறப்பானவை.

சோழன் ராஜாதிராஜனின் படையெடுப்பில் நொளம்பர்களின் பகுதி முழுவதும் கைப்பற்றப்பட்டு கம்பிலி எரித்தழிக்கப்படுகிறது. முதலில் அவர்களது தலைநகராக இருந்த ஹேமவதி சோழர்களால் வெல்லப்பட்டபோதுதான் அவர்கள் கம்பிலியை தலைநகராக்கி இருக்கிறார்கள்.

இரண்டாம் ராஜேந்திரனின் மணிமங்கலம் கல்வெட்டு நண்ணி நொளம்பா என்னும் மன்னன் களம்பட்டதை குறிப்பிடுகிறது. அவனுக்குப் பிறகு இக்குலம் சாளுக்கியர்களின் படையோடு கலந்திருக்கலாம் எனப்படுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் நொளம்பர்களின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.

கோலார் தங்கவயலுக்கு 1982-ல் சென்றிருக்கிறேன். அப்போதே அது கைவிடப்பட்ட நகர் போல இருந்தது. இப்போது அங்கே தங்க அகழ்வு இல்லை. அகழ்வுச்செலவு எடுக்கும் தங்கத்தின் மதிப்பைவிட மிகுதியாகிவிட்டது. ஆகவே அந்த இடமே ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் தேங்கி நின்றுவிட்டது.

நாங்கள் கோலார் தங்கவயல் பகுதிக்குள் செல்லவில்லை, அவ்வழியாகச் சென்றோம். செல்லும் வழி முழுக்க பழைய பிரிட்டிஷ் பாணி ஓட்டுக் கட்டிடங்கள். பெரும்பாலானவை ஓடு பெயர்ந்தவை. கோலார் தமிழகத்துக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களிலொன்று. ஆனால் அவர்களில் பலர் காலப்போக்கில் கன்னடமொழிக்குள் சென்றுவிட்டார்கள்.

ஒரு காலத்தில் அயோத்திதாசரின் ஒருபைசா தமிழன் இதழ்கள் கோலாரிலிருந்துதான் வெளிவந்தன. அங்கே சென்று அயோத்திதாசரின் நினைவுகள் எஞ்சியிருக்கின்றனவா என ஆராயவேண்டுமென்பது அலெக்ஸின் விருப்பங்களில் ஒன்றாக இருந்தது.

கோலார் சோமேஸ்வரர் ஆலயத்தை நாங்கள் சென்றடைந்தபோது நான்கு மணி. கோயில் நடைதிறக்கவில்லை. ஆலயத்தைச் சுற்றி இஸ்லாமியர் குடியிருப்பு. முகரம் கொண்டாட்டத்தின் பகுதியாக சர்பத் கலக்கிக் கொண்டிருந்தார்கள். சரி, சர்பத் குடிப்போம் என்றால் ஆறுமணிக்கு மேல்தான் தருவோம் என்று சொல்லிவிட்டார்கள்.

சோமேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில்தான் கோலாரம்மாவின் ஆலயம். கோலாரம்மைதான் கோலாரின் அதிதேவதை. துர்க்கையின் உள்ளூர் பெயர் இது. இங்கிருந்த தொன்மையான நாட்டார் அன்னை வழிபாட்டு ஆலயம் சோழர்களால் பத்தாம் நூற்றாண்டில் மையத்தெய்வமாக துர்க்கை நிறுவப்பட்டு பெருந்தெய்வ வழிபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இப்போதுள்ள ஆலயமும் அவர்களால் கட்டப்பட்டது.

நடந்தே கோலாரம்மையின் ஆலயத்திற்குச் சென்றோம். நெரிசலான தெருக்களில் கொரோனா பற்றிய சிந்தனையே எவருக்கும் இல்லை. குழந்தைகள் கூச்சலிட்டு விளையாடிக் கொண்டிருந்தன. சிறிய பழைய வீடுகள். புதிய, அழகற்ற வீடுகள். தெருவெங்கும் குப்பைகள்.

சோமேஸ்வர் ஆலயம்.

கோலாரம்மா ஆலயத்தின் முதன்மைத்தெய்வம் என இருந்தது தேள்வடிவமான செல்லம்மா என்னும் தெய்வம். தேள்கடி முன்பு இங்கே முக்கியமான பிரச்சினையாக இருந்திருக்கிறது, அதிலிருந்து காக்கும் பொருட்டு இத்தெய்வத்தை வழிபட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் எளிய சுற்றுலாக் குறிப்பாளர்கள்.

ஆனால் உள்ளூர் வழிபாடுகளைக் கொண்டு பார்த்தால் தேள்கடி என்பது எல்லாவகையான நோய்களுக்கும் குறியீடாகவே இருந்திருக்கிறது. அதைவிட தேள் தொன்மையான உலகநாகரீகங்கள் பலவற்றிலும் தெய்வமாக இருக்கிறது. குறிப்பாக சோதிடமரபில் விருச்சிக ராசி முக்கியமானது. மேலை வானியலிலும் தேள் எட்டாவது நிலையாக உள்ளது.

கோலாரம்மை ஆலயம்

ராசிகளாக நாம் கருதுவன எல்லாமே தொன்மையான தெய்வங்கள்தான். அவை சூரியனை மையமாகக் கொண்ட சௌரமதம் போன்றவற்றில் இருந்து பிற்கால மதங்களுக்கு வந்தமைந்தவை. கோலாரம்மையின் இந்த ஆலயத்தின் வரலாற்றை சோழர்களுக்கும் முன்னால் மேலும் ஆயிரமாண்டுகளுக்குக் கொண்டு செல்லமுடியும்.

புடவை கட்டி, வெள்ளிக்கண்களுடன் அமர்ந்திருக்கும் தேளன்னையை பார்க்க ஒரு அகநடுக்கம் வந்தது. அப்படியொரு அன்னைத் தெய்வத்தை நான் பார்த்ததே இல்லை. நாகம் தெய்வமாகலாமென்றால் ஏன் தேள் ஆகக்கூடாது? தன் குஞ்சுகளை உடல்மேல் ஏற்றிக்கொண்டு செல்லும் அன்னைத் தேளின் ஒரு அகச்சித்திரம் எழுந்தது.

கோலரம்மை ஆலயத்தின் மூன்று சன்னிதிகளில் மையமாக துர்க்கை பெரிய வெள்ளி விழிகளுடன் அமர்ந்திருக்கிறாள். சரிகையாடைகளால் மூடப்பட்ட உடல். மின்விளக்கு ஒளி மின்னி மின்னி அணைவதுபோல் செய்யப்பட்டிருக்கிறது. பெரிய வெள்ளிக்கண்கள் பொருத்தப்பட்டுள்ளன. காகிதமலர்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளன. ரூபாய்நோட்டுகளும் மாலையாகப் போடப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க நாட்டார் மரபு சார்ந்த வழிபாட்டுமுறை.

துர்க்கையைவிட இங்கே முக்கியமான சன்னிதி என்பது ஏழன்னையர்களுக்குரியது. அவர்களிலும் குறிப்பாக ஜேஷ்டை என்னும் மூத்தாள். அவள் பெரிய கரியவிழிகளுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். நேருக்குநேர் பார்க்கலாகாது, எதிரிலுள்ள கண்ணாடியில் பார்க்கவேண்டும். தவ்வையன்னை இடப்பக்கம் பக்கவாட்டில் இருக்கிறாள், ஆகவே வலப்பக்கம் இருக்கும் ஆடியில் அவளைக் காணலாம்.

சோமேஸ்வர் ஆலய முகப்புச்சிலை. புஷ்பபாலிகை

நான் முதலில் சரியாகப் பார்க்கவில்லை. ஏழன்னையரையும் தெளிவுறப் பார்க்க முடியாதபடி அலங்காரங்கள். மீண்டும் சென்று ஆடியில் பார்த்தேன். ஓர் அகநடுக்குடன் திரும்பி வந்துவிட்டேன். நான் சென்ற ஊரடங்குக் காலத்தில் எழுதிய மூன்று கதைகளில் தவ்வை இடம்பெறுகிறாள் என்பதை வாசகர்கள் நினைவுகொள்ளலாம். இது தவ்வையின் காலகட்டம்.

அந்த ஆலயம் உயரமற்றது. அதன் அடித்தானம் முழுக்க நுணுக்கமான கல்வெட்டுகள் பரவியிருந்தன. ஒரு தொன்மையான மர்மமான நூலைப் பார்ப்பது போலிருந்தது. ஆனால் அங்கிருந்து உடனே சென்றுவிடவேண்டுமென்ற எண்ணமும் உருவானது.

திரும்பி வந்தபோது சோமேஸ்வரர் ஆலயம் திறந்திருந்தது. இதன் முகப்புக்கோபுரம் நாயக்கர் பாணியிலானது. கிபி 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியில் கட்டப்பட்டது. கோபுரச்சிற்பங்களில் சூரியனையும், பிட்சாடனரையும், ஆடவல்லானையும் காணலாம். சிறிய புடைப்புச் சிற்பங்களாயினும் மிக அழகான முக அமைப்பும் நுணுக்கமான அணிச்செதுக்கும் கொண்டவை.

பெரிய ஆலயம். உள்ளே பழைய நுளம்பர் ஆட்சிக்காலம் முதல் படிப்படியாக ஆலயம் உருவாகி வளர்ந்து வந்ததைக் காட்சியாகவே காணமுடிந்தது. இப்போதுள்ள ஆலயம் பதினொன்றாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டு பின்னர் நாயக்கர் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

தமிழகத்தின் நாயக்கர் கால ஆலயங்களை, குறிப்பாக ஸ்ரீரங்கம் ஆலயத்தை நினைவூட்டிக்கொண்டே இருந்தது இந்த ஆலயம். யாளிமேல் ஏறிய போர்வீரர்களின் சிலைகள் நிரைவகுத்த தூண்களுடன் கூடிய விரிந்த சுற்றம்பலங்கள். யாளியின் காலடியில் மிதிபடும் யானை. மணற்கல்லால் ஆன மெல்லிய தூண்கள் காடெனச் செறிந்த மண்டபங்கள். ஆலயக்கட்டுமானத்தை தாங்கி நின்றிருக்கும் குண்டுக்குள்ளர்கள், சுவர்களிலெங்கும் விழித்தெழுந்த யாளித்தலைகள், மணிமாலைபோல தங்களை நிரைவகுத்துக் கோத்துக்கொண்ட யானைகள்.

மணற்கல்லாலும் சிவப்புக்கல்லாலும் ஆன ஆலயம். அந்தியொளியிலும் தீப ஒளியிலும் பொன்னென மின்னுவது. நுழைவு வாயிலின் மலர்க்கன்னியரும், உள்வாயிலின் இருபக்கமும் வில்லேந்திய வேட்டுவ கன்னியரும் செதுக்கப்பட்டிருந்தனர். நான் பார்த்த வாயிற்சிற்பங்களில் இவையே அழகானவை என்று சொல்லமுடியுமெனத் தோன்றியது.

அந்தியில் ஆலயத்தின் விரிந்த கல்வெளியில் நடந்துகொண்டிருந்தோம். சோழர்களால் கைப்பற்றப்பட்டபோதிலும் நுளம்பநாட்டில் அவர்களால் ஆலயங்கள் ஏதும் இடிக்கப்படவில்லை. மாறாக புதுப்பிக்கப்பட்டும் எடுத்துக்கட்டப்பட்டும் பேணப்பட்டுள்ளன. புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. பிற்காலத்தைய இஸ்லாமியப் படையெடுப்பின்போதும் ஆலயம் பெரும்பாலும் அழியவில்லை. சிற்பங்கள் அழகு குன்றாமலேயே நீடிக்கின்றன.

கல்லால் ஆன நகை என நான் பல ஆலயங்களை நினைப்பதுண்டு. இந்த ஆலயத்தையும் அவ்வாறு சொல்லலாம். சிற்பங்களும் அணிச்செதுக்குகளும் குழைந்து குழைந்து உருவான மண்டபங்கள். ஒரு கணம் நாமிருப்பது தாராசுரத்திலா என ஐயமெழுப்பும் இணைப்பு மண்டபங்கள். அடித்தளங்களில் தமிழ்க் கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எவையெல்லாம் வாசிக்கப்பட்டுள்ளன என்று தெரியவில்லை.

சுவர்களிலுள்ள சிற்பங்களைப் பார்த்துக்கொண்டு சுற்றிவருவது ஓர் இனிய அனுபவம். சிலைகளை அவற்றுக்கான குறிப்புகளைக்கொண்டு அடையாளம் காண்பது ஒருவகையில் நம் பண்பாட்டு நினைவுகளை மீட்டிக்கொள்வதுதான். அழகிய ஆடவல்லான் உருவங்கள் புடைப்பாகச் செதுக்கப்பட்டிருந்தன. தென்றிசை முதல்வன் சிலைகள், கரியுரித்த பெருமான் சிலைகள், காலபைரவர் சிலைகள். ஆனால் மிக அழகிய சிலை கோபுரத்திலும் உள்ளேயும் இருந்த பிட்சாடனர் சிலைதான். மிகச்சிறிய சிலையில்கூட அழகும் முழுமையும் துலங்கின.

கோயில் முகப்பில் மிகப்பெரிய கல்கொடிமரம் நின்றிருந்தது. விஜயநகர ஆட்சியாளர்கள் தங்கள் போர்வெற்றிகளின் நினைவாக இப்படி கல்கொடிமரங்களை வெற்றித்தூண்களாக அமைப்பது வழக்கம். அருகே இப்போது பயன்படுத்தப்படும் மரத்தாலான கொடிமரம். வெற்றித்தூண் இன்று வெறும் கல்வியப்புதான். பேரரசுகள் மறைந்துவிட்டன. கலைமட்டும் மிஞ்சியிருக்கிறது.

[மேலும்]

Someshwara Temple and Kolaramma Temple of Kolar

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 1
அடுத்த கட்டுரைகோவை எட்டாவது வெண்முரசு கூடுகை