அம்பும் நிழலும்

வணக்கம் ஜெயமோகன் சார்,

வெண்முரசின் முதல் நான்கு நாவல்களை, நீலம் வரை வாசித்து முடித்துள்ளேன். நான் காணொலியில் பதிவேற்றுவதை, இரவில் கணவர் வந்ததும் அந்தப் பகுதிகளைப் பற்றி நான் புரிந்து கொண்ட விதங்களை அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன். இன்று இரவிலும் நான்கு நாவல்களிலும் வரும் பெண்களின் கதாபாத்திரங்களைப் பற்றி கூறிக் கொண்டு இருந்தேன்.

இதில் இருக்கும் ஒவ்வொரு பெண்களும், ஆசைப்படும் வாழ்க்கையை இன்னொரு பெண் வாழ்ந்து விடுகிறாள் என்று தோன்றுகிறது. பிரதீபரின் மனைவி சுனந்தை , தன் இளமை முடிந்த பின்னரே திருமணம் செய்து கொள்கிறாள்.இளம் வயதில் அவள் ஆசைப்பட்ட எத்தனை ஆண்கள் இருந்திருப்பார்கள். ஆனால் அவள் வாழ்வில் அது கூடவில்லை. அதே சமயம் குந்தி அவளுக்கான முழு இளமையையும் அவள் விருப்படியே வாழ்ந்திருப்பாள்.

சத்யவதி,  அம்பிகையை பார்த்து பொறாமைப் படும் கணம் ஒன்று உள்ளது. விசித்திரவீரியன் இறந்ததும் அம்பிகை கொள்ளும் பெருந்துயரம் , கண்ணீர் இவையெல்லாம் சத்யவதிக்கு நிகழ்ந்ததே இல்லை. சத்யவதி வாழ ஆசைப்படும் வாழ்க்கையை அம்பிகை வாழ்ந்திருப்பாள்.

அம்பிகை விசித்திரவீரியனுடன் இருக்கும் போது அவனுடைய உலகத்தில் அவனை நேசிக்க அவன் உலகிலேயே இருந்து விட எண்ணுவாள். ஆனால் அவளுக்கு அந்த வாழ்க்கை இருக்காது. காந்தாரி கணவனின் உலகத்தை தான் காண வேண்டும் என்று கண்களையே கட்டிக் கொண்டு வாழ்ந்தவள்.அம்பிகை வாழ ஆசைப்படும் வாழ்க்கையை காந்தாரி வாழ்ந்து விடுகிறாள். அம்பாலிகை ஆசைப்படுவது, விசித்திரவீரியனின் வெண்மை நிறத்துடன், அவனின் பலவீனங்களுடன்  விளையாட்டு தோழியாக அவளுடன் அவனை ஏற்றுக் கொண்டு வாழ ஆசைப்படுகிறாள், ஆனால் அது நிறைவேறுவதில்லை.

மாத்ரி , பாண்டுவிடம் வாழும் வாழ்க்கை, அவனை முழுதாக ஏற்றுக் கொண்டு, நல்ல விளையாட்டு தோழியாகவும், அவன் அகத்தை பகிர்ந்து கொள்பவளாகவும், இருந்து அவன் இறந்த உடன், அவள் வாழ்வையும் முடித்துக் கொள்கிறாள்.அம்பாலிகையின் வாழ்க்கையை மாத்ரி வாழ்ந்து விடுகிறாள். சத்யவதி, அவள் மகன் சித்ராங்கதனைப் பார்ப்பதும், குந்தி அர்ஜுனனை பார்ப்பதும் அவர்களின் ஆசை நிறைவேறுவதில்லை, நெறி ஒப்புதலும் இல்லை. ஆனால் ராதை, கண்ணனை குழந்தையாக வளர்க்கிறாள், குழந்தையாக கண்ட அதே விழிகளால் காதலனாகவும் காண்கிறாள். குந்தியும் , சத்யவதியும் ஆசைப்படும் வாழ்க்கையை, ராதை வாழ்ந்து விடுகிறாள்.

இதை நான் என் கணவரிடம் சொன்னபோது , ஏன் பெண்களை மட்டுமே பார்க்கிறாய்? ஒரு ஆண் வாழ ஆசைப்படும் வாழ்க்கையை இன்னொரு ஆண் வாழ்ந்திருப்பான் என்றார்.

பீமன் வாழ ஆசைப்படும் வாழ்க்கையை துரியோதனன் வாழ்ந்து கொண்டிருப்பான். பீமனுக்கு கெளரவர்களின் மந்தைகளில் கலந்து விட ஆசை, தலைமைப் பொறுப்பை ஏற்கவும், அவனுடன் அவன் தம்பிகள் உடன் இருக்கவும் ஆசை. அவனை மட்டுமே நேசிக்கும் மனைவி, அவன் பாஞ்சாலியின் அன்பை முழுதும் பெற முடிவதில்லை. ஆனால் துரியோதனனுக்கோ, தம்பிகளின் கூட்டம், அவனையே நேசிக்கும் மனைவி. பீமன் வாழ ஆசைப்படும் வாழ்க்கையை துரியோதனன் வாழ்ந்து விடுகிறான்.

சகுனியோ, செல்வம் கொழிக்கும் நாடு, நல்ல மதியூகி வீரனும் கூட,  நாட்டை விரிவாக்கி , நல்ல மாமனாக இருந்து  தன் சகோதரியின் மகன்களுக்கு பாரதவர்ஷத்தின் அரசனாக முடிசூட்ட ஆசைப்படுகிறான். ஆனால் சகுனி வாழ ஆசைப்படும் வாழ்க்கையை கிருஷ்ணன் வாழ்ந்து விடுகிறான். யாதவர்களின் பேரரசை நிறுவுகிறான். அத்தையின் மகன்களை பாரதவர்ஷத்தின் அரசனாக முடிசூட்டுகிறான்.

இப்படியாக வெண்முரசில் ஒருவர் வாழ ஆசைப்படும் வாழ்க்கையை இன்னொருவர் வாழ்ந்து முடிக்கும் படியாகவே கதை நகர்கிறது.  தங்களின் ஒரு கதையில் வரும் வாக்கியம் தான் நினைவிற்கு வருகிறது. அம்பு நேர்கோட்டில் பயணித்து இலக்கை அடைகிறது, அதன் நிழல் காடு மேடு நதிகளிலும் விழுந்து அம்பு அடையும் இலக்கை தானும் அடைகிறது என்று.

அன்புடன்,

மனோபாரதி விக்னேஷ்வர்.

முந்தைய கட்டுரைஈழ அகதிகளுக்குச் சலுகைகள் – நன்றி
அடுத்த கட்டுரைசுரேஷ்பிரதீப் பேட்டி