விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5

விக்ரமாதித்தன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இந்த கடிதத்தை என்னுடைய மகிழ்ச்சியை தெரிவிப்பதற்காக எழுதுகிறேன். நான் அவருடைய கவிதைகளை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவரை இரண்டு மூன்று முறை நேரில் சந்தித்து இருக்கிறேன். அவர் என்னுடைய உள்ளத்திற்கு மிகவும் உகந்த கவிஞர்.

ஏன் அவரை நான் முக்கியமாக நினைக்கிறேன் என்று கேட்டுக் கொள்வதற்காக இந்த கடிதத்தை எழுதும்போது முயற்சி செய்கிறேன். அவர் எந்த தோரணையும் இல்லாத கவிஞர். கவிஞர் என்ற எண்ணம் அவருக்கு உண்டு. அதை அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவருடைய கவிதையில் அந்த தோரணையே கிடையாது. அவருடன் பேசிக்கொண்டே திருநெல்வேலி நகரத்தில் ஒரு தெருவில் சென்று கொண்டிருப்பது போல அவருடைய கவிதைகள் படிக்கும்போது தோன்றும். எனக்கு அவருடைய எல்லா கவிதைகளும் உரையாடலாகவே தோன்றுகின்றன

என்னைப் பொறுத்தவரை நல்ல கவிதை என்பது அந்த உரையாடல் குரலை தன்னிடம்  கொண்டிருக்க வேண்டும் . அதாவது.  நம்மிடம் அது ஒரு தோழனின் போல பேச வேண்டும். நான் சொல்கிறேன், நீ கேள் என்ற தோரணை இருக்கக்கூடாது .ஒருவேளை இது என்னுடைய பிரச்சினையாக இருக்கலாம். நான் வாழ்க்கையில் யார் பேச்சையும் கேட்டவன் கிடையாது. கெட்டுக்குட்டிச்சுவரானாலும் சரி நான் நினைப்பதைச் செய்தவன். ஆகவே உபதேசம் செய்யக்கூடிய கவிதைகள் மேல் எனக்கு பெரிய மதிப்பில்லை. அதேபோல இயற்கை வர்ணனைகள் அல்லது மிகப்பெரிய தத்துவ சிந்தனைகளை உலகிற்கு அளிக்கும் கவிதைகளையும் என்னால் ரசிக்க முடியவில்லை. என்னுடைய மனம் வேறு வழியே செல்கிறது. எனக்கு என்னுடன் உரையாடுகிற கவிதைதான் தேவை

முன்பு நான் நிறைய குடித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை குடிப்பழக்கத்தினால் தான் விக்கிரமாதித்தன் கவிதைகள் எனக்கு பிடிக்கிறதோ என்னவோ. அவருடன் நான் இருந்து பேசிக்கொண்டே கவிதைகளை கேட்டேன் என்று நினைத்துக்கொள்வேன். நிறைய சந்தர்ப்பங்களில் அவரும் நானும் ஒரு பாரில் அமர்ந்து பேசும் போது அவரது கவிதைகளை சொல்வது போல நான் கற்பனை செய்து கொண்டிருக்கிறேன். அவருடைய கவிதைகள் நேரடியாகவே ஞாபகத்தில் இருக்கின்றன .நிறைய கவிதைகளை அவர் சும்மா போகிற போக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது .அவை கவிதைதானா என்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. ஆனால் அவையெல்லாம் கவிதைதான் எனக்கு எப்படி உறுதி ஆயிற்று என்றால் நான் நீண்ட காலத்துக்குப் பிறகு இதையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறேன் என்பதனால்தான். நானே சொல்லிச்சொல்லி ஞாபகம் வைத்திருக்கிறேன்.

அவருடைய கவிதைகள் மனசாட்சி பேசுவது போல இருக்கின்றன. ஆகவே யாரோ நமக்கு உள்ளே இருந்து பேசுவது போல நினைத்துக் கொள்ள முடிகிறது. அவர் கவிதைகள் தனியாக இருந்து யோசிப்பதில்லை. நமது வாழ்க்கையில் நம்மைச் சுற்றி இங்கு நடப்பவை எல்லாவற்றுக்கும் அவர் எதிர்வினை ஆற்றுவது போல தோன்றுகிறது. விக்ரமாதித்தன் எல்லா கவிதைகளையும் ஒட்டுமொத்தமாக எதிர்வினைகள் என்று சொல்லலாம் அவர் ஒரு குடிகாரர் போல ஒரு பக்கமாக நின்று கொண்டு எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் .குடிகாரர்களுக்கு அந்த பழக்கம் உண்டு. பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு அங்கே மற்றவர்கள் பேசக்கூடிய எல்லாவற்றுக்கும் அவர்கள் விளக்கமாக பதில் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அல்லது ஒரு சித்தர் போல அந்த பதிலை சொல்லுகிறார்

விக்ரமாதித்தன் அவர்கள்தான் தமிழில் எல்லாவற்றுக்கும் கவிஞனாக எதிர்வினையாற்றுபவர் என்று தோன்றியது.  அவ்வாறு எதிர்வினையாற்றுகிற பலபேர் வெறும் அரசியல் எதிர்வினைகள் ஆற்றினார்கள். விக்ரமாதித்தன் ஒரு கவிஞனுடைய எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கிறார் அது ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் என்று நினைக்கிறேன். ஒரு கவிஞன் நாம் பேசக்கூடிய ஒவ்வொன்றுக்கும் என்ன எதிர்வினை கொடுப்பார் என்பதை அவர் கவிதையைக் கொண்டுதான் தெரிந்துகொள்ள முடிகிறது . அவர் எதற்கு எதிர்வினை புரிந்தார் என்று தெரியாதபோது பல கவிதைகளை கவிதைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு இந்தக்குரல் வந்துகொண்டே இருப்பது முக்கியமானது என்று நினைக்கிறேன்

என்னால் சரியாகத் தொகுத்துச் சொல்ல முடியவில்லை. விக்ரமாதித்யன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

துரை அண்ணாமலை

அன்புள்ள ஜெ

விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டது எனக்கு தனிப்பட்டமுறையில் கிடைத்த விருதுபோலவே உணர்ந்தேன். ஏனென்றால் அவர் என்னுடைய கவிஞர். தமிழகத்தில் எங்கோ அவரைப்போன்ற ஒருவர், அவருடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒருவர் இருப்பார். அவருடைய கவிதைகள் அத்தகையவை

1993 வாக்கில் நான் குடிகாரன். அன்றைக்கு குடிக்கொண்டாட்டத்தில் எவரோ

“போதையில் தலைசுற்றித் திரிகையில்

ஓர் உண்மை தெரிந்தது

உழைத்துக்குடிப்பதே உத்தமம்”

அன்றைக்கு கடுமையான சிரிப்பு. ஆனால் அதன் வழியாக நான் என்னுடைய கவிஞனை அடையாளம் கண்டுகொண்டேன். அவ்வப்போது அவர் கவிதைகளை வாசிப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை மாறியது. நான் வேறொருவனாக ஆனேன். அப்போது அவர் கவிதைகளும் உருமாறி என்னுடன் இருந்தன

அவருடைய கவிதைகள் வலிகளைப் பேசுபவை. அதிலும் அலைந்து திரிவதன் வலிகளை அவை சொல்கின்றன. அலைந்து திரிபவன் கவிஞன் மட்டுமல்ல. என்னைப்போன்ற வியாபாரியும்கூடத்தான். எல்லாருக்கும்தான் அலைதல். மனசுக்குள் அலைவது இன்னொரு கணக்கு. எல்லாம் எங்கோ இருக்கிறது என்று சொல்லி தேடி அலையும் அலைச்சல். இருந்த இடத்திலே இருக்க முடியாத அலைச்சல். சருகு சுழல்காற்றில் சிக்கிக் கொண்டதுபோலத்தான்

அலைச்சலின் துக்கத்தை அவரைப்போல எழுதியவர் யாருமில்லை

கிளிகள்
குறிப்பிட்ட தூரம் தாண்டா

குயில்கள் பக்கத்துப் பக்கத்திலேயே
கூவிக்கொண்டிருக்கின்றன

ஆடும் மயில்கள்
அங்கிட்டு இங்கிட்டு போக வேண்டாதவை

புலிகளே கூட
காடுவிட்டு காடுசெல்ல நினையாதவை

காக்கைகளுக்கும் கழுகுகளுக்கும்
வரையறுக்கப்பெற்ற தொலைவுதான்

ஓடும் நதியென்றாலும்
மீன்களும் சிற்றெல்லைகளுக்குள்தாம்

மான்கள்
ஒருவகையில் பாவம்

பாம்புகள் புழுக்கள்
தத்தம் பகுதிக்குள்தாம்

உயர்திணையென
உயர்த்திச் சொல்லிவிட்டால் போதுமா

நதிக்கரை விட்டு
பட்டணக்கரை

நாடுவிட்டு
நாடு

கண்டம் தாண்டி
கண்டம்

மனுஷர்களுக்குத்தாம்
கொடுமையெல்லாம்

பொருள்வயின் பிரிவு என ஒரு கவிதை எழுதியிருப்பார். அந்தக்கவிதையை எல்லா பஸ் பிரயாணங்களிலும் நான் நினைத்துக்கொள்வதுண்டு.

பொருள்வயின் பிரிவு

அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்தது வந்து கொண்டிருந்தேன்
மனசுகிடந்து அடித்துக்கொள்ள

எல்லா ஆண்களும் இந்த துயரத்தை உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன். எங்கே செல்கிறேன் என்ற திகைப்பும், வேறுவழியில்லையே என்ற துக்கமும் மனசை நிறைக்கும் இடம் இது.

விக்ரமாதித்யனுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்

கணபதி குமார்

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்-4

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது- பாவண்ணன்

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது-கல்யாண்ஜி கடிதம்

விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது, கடிதங்கள் -3

விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது,கடிதங்கள்-2

விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது, கடிதங்கள்

விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்- லக்ஷ்மி மணிவண்ணன்

முந்தைய கட்டுரைமண்ணுள் உறைவது
அடுத்த கட்டுரைஒரு பேரிலக்கியத்தின் வருகை