வணக்கம் ஜெயமமோகன்.
நலம்.
ஊரடங்கில் உடலும் அகமும் கூர்மை அடைந்தன. தினசரி வாழ்க்கை யந்திரகதியிலிருந்து விலகி நுண்கவனத்தில் நுழைந்துவிட்டது.
வரலாறும் தத்துவமும் மீண்டும் ஒருமுறை தோற்று தங்களுக்குள்ளே சிரித்துக்கொண்டன. உலகம் முழுவதும் குடும்பத்துக்குள் வந்தமாதிரி இருந்தது. எறும்பு கூட நின்று ஒரு வார்த்தை பேசிவிட்டுத்தான் நகர்ந்தது.
விக்கிரமாதித்தனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
–தேவதச்சன்
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தேவதச்சன் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்கள் என அறிந்து மகிழ்ச்சி. பொதுவாகவே நீங்கள் பயணி அல்ல. ஒரே இடத்தில் மேலும் மேலும் உள்ளே செல்பவர். உங்களுக்கு ஊரடங்கு ஒரு நீண்ட பெருந்தியானமாகவே அமைந்திருக்கும்
ஜெ
அன்பு ஜெயமோகன்,mail பார்க்கும் வழக்கம் இல்லை. இனிய தற்செயலில் உங்கள் mail பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி. விக்ரமாதித்யன் தகுதியானவர். உங்கள் தெரிவுகளில் கவிதையின் வேறுவேறு பரிமாணங்களை மதித்து ஏற்கும் மிக விரிந்த உங்கள் சுயம் துலங்குகிறது. விக்ரமாதித்யனுக்
அபி
2021ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது, கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு வழங்கப்படுவதில் மகிழ்வும் உவகையும் அடைகிறோம். படைப்புசார்ந்த அவருடைய பேருள்ளம் அடுத்த தலைமுறைக்கும் அடையாளப்படுத்தத்தக்கது.
‘தமிழிலக்கிய மரபில் நாடோடி மனத்துடன் அலைந்த பாணர்களின் வாழ்க்கையோடு தான் ஒப்பு நோக்கிப் பேசப்பட விக்ரமாதித்யன் உள்ளூர் ஆசைகொண்டிருப்பாரோ என்றும் சமயங்களில் தோன்றுவதுண்டு’ என்று கவிஞர் சுகுமாரன் அவர்கள் விக்ரமாதித்யனைப் பற்றிக் குறிப்பிடுவதும் இங்கு நினைவெழுகிறது.
இலக்கியம் என்பது மீட்சிக்கான, கண்டடைதலுக்கான வாசல் என்பதனை காலங்கடந்தும் மேலெழும் படைப்புகள் வழியாக நாம் அறிய இயலும். கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் படைப்புகள் அதற்கான உக்கிரத்தைக் கொண்டிருக்கிறது. விருது பெரும் படைப்பாளுமையை பணிந்து வணங்குகிறோம்! அவருக்கு எங்கள் வாழ்த்துகள்!
சிவராஜ்
குக்கூ குழந்தைகள் வெளி
அன்புள்ள ஜெ
சற்று முன் விக்கி அண்ணாச்சியிடம் பேசி வாழ்த்து கூறினேன். சற்று நேரம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தார். சங்கு போன்ற சிற்றிதழ்கள் தனக்குத் தளம் அமைத்துக் கொடுத்ததை நன்றியோடு நினைவு கூர்ந்தார். சங்கு இதழில் அவரது கவிதைகளை வெளியிட்டமைக்கும், பசுவய்யா, சி. மணி போன்றோரின் கவிதை பற்றி அவர் எழுதிய கட்டுரைகளை வெளியிட்டதையும் தொடர்பு படுத்திப் பேசினார். சங்கு இதழுக்கென்றே கவிதைகள் தந்த அப்பெருமகனாரை வாழ்த்தி மகிழ்கிறேன்
வளவதுரையன்
சங்கு மாத இதழ்
2021ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் அண்ணாச்சி விக்கிரமாதித்யனுக்கு வாழ்த்துக்கள்
என்னுடைய இலக்கிய நண்பர்களில் என்னை டா. போட்டு உரிமையுடன் பேசுபவர்கள் சா.கந்தசாமி,கந்தர்வன்,அப்புறம் அண்ணாச்சி விக்கிரமாதித்யன்.என்னை டேய்…..தர்மா…..என்று கூப்பிடுவதற்காகவே நீங்கள் நூறாண்டையும் கடந்து வாழணும் அண்ணாச்சி.
அந்த கண்டெடுத்த கால் கொலுசு கவிதை என்னை பாடாய் படுத்துகிறது அண்ணாச்சி.
சோ.தருமன்
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது- பாவண்ணன்
விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது-கல்யாண்ஜி வாழ்த்து
விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது, கடிதங்கள் – 3
விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது, கடிதங்கள் – 2