கிரானடாவும், இஸ்லாமியரின் அச்சமும் -கடிதம்

கிரானடா நாவலும் அச்சங்களும்- கொள்ளு நதீம்

இனிய ஜெயம்

கிரானடா புனைவு மீதான கொள்ளு நதீம் அவர்களின் கட்டுரை வாசித்தேன். இரண்டு அலகுகளில் அந்தக் கட்டுரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் அலகு அக்கட்டுரை ஆவணப்படுத்தும் இந்திய நிலத்தின் ‘கலாச்சார முஸ்லீம்’ என்ற தன்னுணர்வு கொண்ட அச்சம்.  கட்டுரையின் இறுதிப் பத்தியில் உச்சம் தொடும் அவரது பதற்றம் அவருடையது மட்டுமல்ல என்னுடையதும் கூட. நேர் பொருளில் நம்முடையது.

ஒரு சராசரி இந்தியக் குடிமகன் பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தின் பொருட்டு எந்த அளவு வருந்தினானோ, அதே அளவு, தூக்கில் தொங்கிய (இந்தியாவுக்குள் ஊடுருவி குண்டு போட்ட) தீவிரவாதிகள் உடலுக்கு சேர்ந்த இந்திய சிவில் சமூக முகமதியர் கூட்டம் கண்டும் வருந்தினான். இத்தகு பிரிவினை போக்கை அதன் விளைவான அச்சத்தை அரசியலின் பொருட்டு வலது சாரிகளும், இடதுசாரிகளும் ஊதி ஊதிப் பெருக்கி, பரஸ்பரம் சேர்ந்து வாழ வேண்டிய  சமுக உறவுகளை பயம் பீதி விதைத்து எதிரும் புதிருமாக நிறுத்தி விட்டார்கள்.

அன்று திருவக்கரை கோயிலில் அம்மா திட்ட  அன்னதானத்தை என்னுடன் சேர்ந்து உண்ட முகமதிய நண்பர்கள் இன்று அவ்வாறு இல்லை. அவர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் அடிப்படைவாதத்தின் ஏதேனும் ஒரு கண் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இப்படிக் கண் முன்னால் மாறிக்கொண்டிருக்கும் பல நூறு காரணிகள் பகைப்புலமாக அமைந்தது நதீம் அவர்கள் முன்வைக்கும் அச்சம். கிரானடா வாசிப்பு அனுபவம் அவருக்கு அதை எந்த அளவு பெருக்கி திரும்ப அளித்திருக்கும் என்பதை உணர முடிந்தது.

இரண்டாவது அலகு. இந்தக் கடிதம் ஜெயமோகனுக்கு எழுதப்பட்டது என்பது. ஜெ மீது சுமத்தப்படும் பல நூறு அவதூறுகளில் ஒன்று அவர் இஸ்லாமிய விரோதி என்பது. இந்த அவதூறுகளுக்கு வெளியே ஜெயமோகன் எனும் படைப்பாளியின் இந்திய ஆழுள்ளம் நோக்கி அதற்கு மட்டுமே புரியும் என நதீம் எனும் இந்திய ஆழுள்ளமும் பேசியது இக் கட்டுரை. அந்த வகையில் இலக்கியத்தின் வல்லமை எதுவோ அதன் ஆவணமும் கூட.

தமிழில் உருது அரபி இரு மொழிகள் செலுத்திய பண்பாட்டு தாக்கம் குறித்து எழுதி இருந்தார். என் நோக்கில், உருது இந்திய மொழி ( அது எப்புடி சொல்ல போச்சி என்று எகிறி குதிக்கப் போகும் மொழியியல் ஆய்வாளர்களை விட்டுவிடுவோம் பாவம் அவர்கள்)  அதுவே இந்த தாக்கத்தின் காரணம். கிரானடா போலவே, தான், தான் கொண்ட குடும்பம், வாழும் சமூகம்,பேசும் உருது மொழி அவை கொண்ட மேன்மைகளையும், இந்தியப் பிரிவினை போன்றவை வழியே கண்ட வளர்சிதை மாற்றங்களையும் தனது உதிரும் இலைகளின் ஓசை கதை தொகுப்பின் (சாகித்ய அகாடமி வெளியீடு – மொழியாக்கம் திலகவதி) முன்னுரையில் விரிவாக ஆவணம் செய்திருக்கிறார் குர் அதுல் ஹைன் ஹைதர் அவர்கள். ஆக உருது இங்கே இவ்வாறு இல்லாமல் போனால்தான் ஆச்சர்யம் வாசித்துப் பார்க்கலாம்.

தமிழில் அரபி இலக்கியம் சார்ந்து பின்னிணைப்பாக சொல்ல சில உண்டு. அன்று நான் அவரை  வாசித்த வகையில்  தமிழில் தொடர்ந்து அன்று அரபி இலக்கிய அறிமுக கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தவர் சாரு. இந்த கிரானடா குறித்து அல்லது இதன் சில பகுதிகளை அவரது கோணல் பக்கங்கள் மூன்று தொகுதியில் எதிலோ வாசித்த  நினைவு. தமிழில் அரபி இலக்கிய அறிமுகம் எனும்   சாரு வுக்கான க்ரெடிட்டை அரபு நாவல்கள் தமிழாக்கம் காணும் இன்று சாருவுக்கு கொடுத்து விடுவோம்.

இக்கட்டுரையில் நதீம் குறிப்பிட்ட நம் சேரிப் பிள்ளைகள் நாவல் குறித்தும் நதீம் அவர்களே எழுதலாம். மேலும் அரபு இலக்கியங்கள் குறித்து அவரே தொடர்ந்து எழுதி ஒரு உரையாடல் களத்தையும் உருவாக்கலாம். அதற்கான ஆற்றல் கொண்டவர் இவர் என்பதை கிரானடா கட்டுரை சுட்டுகிறது.  நதீம் அவர்கள் இது குறித்து பரிசீலிக்கலாம்.

 

கடலூர் சீனு

***

 

அன்புள்ள ஜெ

கிரானடா மொழியாக்கமும் அதை வாசித்தபோது உருவான அச்சமும் பற்றி கொள்ளு நதீம் எழுதிய கடிதத்தை வாசித்தேன். அவருடைய கடிதங்கள், மற்றும் குறிப்புகளை இந்த தளத்தில் வாசித்துக்கொண்டே இருக்கிறேன். அவை இங்குள்ள இஸ்லாமியப் பண்பாட்டைப் பற்றிப் பேசுகின்றன. இந்தக் கடிதத்தில் அவர் கொண்டுள்ள அச்சம் ஏற்பட முகாந்திரம் உள்ளதா? ஆத்மார்த்தமாக யோசித்தால் உள்ளது. உலகம் முழுக்க இனவெறுப்பு முதலில் ஒருவகை ஆற்றாமையாகவே தொடங்குகிறது. பின்னர் காழ்ப்பாகிறது. ஏதோ ஒரு கட்டத்தில் வன்முறையும் அழித்தொழிப்பும் ஆகிறது. அவ்வண்ணம் ஆக அரசியலே காரணம். எப்போதும் அதைப்பற்றிய ஐயத்துடனும் மிகையாக எச்சரிக்கையுடனும் இருப்பதே நல்லது.

ஆனால் இந்த ஐயத்தாலும் அச்சத்தாலும் நாம் நம்மை துருவப்படுத்திக்கொள்வோம் என்றால் மீண்டும் மதவெறி அரசியலுக்கு நம்மை நாம் அளிக்கிறோம் என்று பொருள். எதிரிகளைக் காட்டி நம்மை பயமுறுத்துபவர்கள் நம்மை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இன்று, மதவெறிகளுக்கு அப்பாற்பட்டு சிந்தனைசெய்யும் இஸ்லாமியரும் இந்துக்களும் ஒருவரை ஒருவர் அறிந்து, அணுகுவதே உண்மையில் செய்யத்தக்கது

எம்.பாஸ்கர்

 

***

முந்தைய கட்டுரைஒரு கோவை வாசகர்
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 5