விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது- பாவண்ணன்

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம். விஷ்ணுபுரம் விருதுக்குரியவராக நம் கவிஞர் விக்கிரமாதித்யன் அண்ணாச்சிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் செய்தியைப் படித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருநாள் புதுவையில் தொழிற்சங்க ஈடுபாடுடைய நண்பர் ஞானப்பிரகாசம் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அஞ்சலில் வந்திருந்த புத்தகக்கட்டை அவர் பிரித்துக்கொண்டிருந்தார். அன்னம் நவகவிதை வரிசையில் வெளிவந்த கவிதைத்தொகுதிகள் அக்கட்டில் இருந்தன. எல்லாமே கையடக்கமான புத்தகங்கள். உடனே படிக்கவேண்டும் என்ற ஆசையில் மனம் பரபரத்தது. வெளிப்படையாகக் கேட்கவோ நா எழவில்லை. தொட்டுத்தொட்டுப் பார்க்கும் என் தவிப்பைப் பார்த்துவிட்டு, அவரே “எடுத்துட்டும்போயி படிச்சிட்டு கொண்டுவாங்க” என்று எல்லாத் தொகுதிகளையும் என்னிடம் கொடுத்துவிட்டார். அப்போதுதான் விக்கிரமாதித்யன் என்னும் பெயரை முதன்முதலாகப் பார்த்தேன்.

அவருடைய கவிதைகளை அன்று மிகவும் விரும்பிப் படித்தேன்.  அன்று அன்னம் முன்வைத்த கவிஞர்களில் ஓரிருவர் தவிர அனைவருமே இன்றுவரை தனித்துவத்துடன் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே ஏதோ ஒரு வகையில் கவிதைத்துறையில் முத்திரை பதித்தவர்கள். அன்றுமுதல் அவருடைய கவிதைகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து படித்துவருகிறேன். எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் அவருடைய கவிதை வெளிவந்திருக்கும் கவிதையை முதலில் படித்துவிடுவேன். நம் தோளிலேயே அமர்ந்திருக்கும் ஒரு கிளி சட்டென சிறகசைத்து வானை நோக்கித் தாவிச் செல்வதைப்போல, எதார்த்தச்சித்தரிப்பென தோற்றமளிக்கும் சில கவிதைகள் சட்டென மேல்நோக்கித் தாவிச் சென்றுவிடும். அந்தத் தாவலே விக்கிரமாதித்யனின் தனிச்சிறப்பு. தமிழ் அமைப்புகள் அளிக்கக்கூடிய எல்லா விருதுகளுக்கும் அவர் தகுதியுள்ளவர். அவருக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்து, அவருக்கு இன்னும் மாநில, தேசிய அளவிலான பல விருதுகள் வந்து சேரட்டும் என வாழ்த்துகிறேன்.

அவரை நினைக்கும்போதெல்லாம் குற்றாலம் கவிதைப்பட்டறையில் முதன்முதலாக சந்தித்த நினைவும் வந்துபோவது வழக்கம். திவான் பங்களா வாசலில் மரத்தடியிலும் மணற்குவியலுக்கு அருகிலும் அவர் நின்ற கோலமும் கவிதை சொன்ன கோலமும் மறக்கமுடியாத சித்திரங்கள். சபரிமலைக்கு நடைப்பயணம் செல்லும் பக்தர்களைப்போல நாம் அனைவரும் கூட்டம் கூட்டமாக தேனருவிக்குச் சென்ற பயணத்தையும் நினைத்துக்கொள்கிறேன். நம் கண்ணில் அவர் தென்படும்போதெல்லாம் அவர் நமக்கு முன்னால் யாரோ ஒருவருடன் நடந்துகொண்டிருந்தார். அல்லது பின்னால் வந்துகொண்டிருந்தார். அந்த யாரோ ஒருவராக பயண வழி நெடுக யார்யாரோ மாறிமாறி வந்துகொண்டிருந்தார்கள் என்பதுதான் புரியாத புதிர்.  இன்றும் அவர் நடைவழியில் அவருக்குத் துணையாக யாரோ ஒருவர் சென்றுகொண்டிருக்கக்கூடும்.

விக்ரமாதித்யன் அண்ணாச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும். அண்ணாச்சியை கெளரவிக்கும் உங்களுக்கும் விஷ்ணுபுரம் அமைப்பினருக்கும் வாழ்த்துகள்.

அன்புடன் 

பாவண்ணன் 

விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது-கல்யாண்ஜி கடிதம்

விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது, கடிதங்கள் -3

விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது,கடிதங்கள்-2

விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது, கடிதங்கள்

விக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்- லக்ஷ்மி மணிவண்ணன்

 

முந்தைய கட்டுரைஈழ அகதிகளுக்கான சலுகைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிபாசனா, ஓர் அனுபவம் சில எண்ணங்கள்