கடந்த ஆகஸ்ட் 15 அன்று சென்னிமலை நூற்புகைத்தறி கூடத்தில் இருந்து ஒரு தம்பதியினர் நடைபயணமாக புதுச்சேரி வரை செல்கின்றார்கள். அத்தம்பதியினரின் பெயர் கருப்பையா -சித்ரா. அவர்கள் இருவரும் 31 வருடங்களாக பாதையாத்திரையாக நடைபயணம் செல்கிறார்கள்.
‘உலக அமைதி’யை பிரதான நோக்கமாக மனமேந்தி, சமூகநோக்கத்திற்கான சிறுசிறு கோரிக்கைகளைத் தங்கள் பரப்புரையாக மேற்கொண்டு ஒருவித பிரார்த்தனைச் செயல்பாடாகத் தங்களையும் தங்கள் வாழ்வையும் இச்சேவையில் கரைத்திருக்கிறார்கள்.
இதுவரைக்கும் அவர்கள் நடந்து கடந்த தொலைவு என்பது மொத்தம் 95,000 கிலோமீட்டர் தூரம்! தொண்ணூற்று ஐயாயிரம் கிலோமீட்டர்கள் என்பதை ஒருசில நொடிக்குள் நம்மால் உச்சரித்துவிட முடிகிறது. ஆனால், யதார்த்தத்தில் அவர்கள் இந்த தூரத்தை ஒவ்வொரு அடியாகத்தான் கடந்திருப்பார்கள் என்கிற பேருண்மையை விளங்க முற்படுகையில் வியப்பெழுகிறது.
பாலைவனத்தில் கையில் தேசியக்கொடியோடு அவர்கள் நடந்துசெல்லும் காட்சிப்படம் அது! அந்தக் காட்சிதந்த அகநிறைவுக் கண்ணீரானது இதற்குமுன் எனக்குள் நிகழாதவொன்று.
நிகழ்வின் போது நடந்த ஒரு சம்பவம் :
காந்தி தன் கையில் உப்பு அள்ளும் புகைப்படச் சட்டகத்தை பார்த்த பின் “சித்ரா அம்மா இந்த படத்தைப் பார்த்ததும் ஏதாவது தெரியுதுங்களா?” என்று பார்வையாளர்களைப் பார்த்துக் கேட்டார். பிறகு பேச ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சி 1930 ஏப்ரல் 6 தேதி உப்புசத்தியாகிரத்துக்காக நடந்து வந்தபோது எடுத்தது. இது ரொம்ப சிறப்பானது. வெள்ளைகாரங்க வந்து இங்க இப்படி சட்டம் போடும்போது நாம உணவுக்கு போட்டு சாப்பிடற உப்புக்கும் வரி போட்டுட்டாங்க. அதை எதிர்த்துத் தொடங்கின போராட்டம் தான் தண்டியாத்திரை. ஒவ்வொரு கிராமத்துக்கும் காந்தி போயி அங்கிருந்த பெண்கள் கிட்ட தான் கேட்கிறார். ஒரு மாசத்துக்கு எவ்ளோ உப்பு உங்களுக்கு தேவைப்படும்? இத்தனை படி உபயோகிப்போம் என்று அவங்களும் சொல்றாங்க அப்போ நீங்க எல்லோரும் வந்து இந்த போராட்டத்துல கலந்துக்கணும், வரி விதிப்பு வேண்டாம்னு சொல்லணும் அப்படீன்னு சொல்றார். அப்போதான் உப்பு நாம எப்பவும் போல பயன்படுத்த முடியும்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிக்கிறார்.
அதன் பிறகு அந்த கிராமத்துப் பெண்கள் அவருடன் நடக்க ஆரம்பிக்கிறார்கள். அப்படிதான் அந்த போராட்டம் தொடங்கியது. முதலில் 78 மனிதர்களுடன் ஆரம்பித்தது. 160 கிலோமீட்டர். ஒரு மாதம் நடந்த பயணம். செல்லும் கிராமத்தில் எல்லாம் மக்கள் சந்திப்பு.அந்த மக்கள் அவருடன் இணைகிறார்கள். கடைசியாக தண்டி இடத்தில் உப்பு அள்ளி கையில் எடுக்கிறார். அள்ளிய உப்பை சரோஜினி நாயுடு அம்மா கையில் கொடுக்கிறார். இப்படிக்கூட வச்சுக்கலாம். ஒரு பெண்ணுக்கு உப்பை நல்லா பயன்படுத்த தெரியும்னு நினைச்சு கொடுத்திட்டார். அப்போ அந்த ஒரு பிடிஉப்பை ஒரு பதினோரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற கிராமத்திற்கு வந்து அதை ஏலம்விடறாங்க.. 2600 ரூபாய்க்கு ஏலம் போச்சு… அப்போ அது பெரியதொகை.
உப்பிற்காக போராடிய அந்த போராட்டம் ரொம்ப மகத்துவம் வாய்ந்தது… இந்த முப்பத்தியோரு வருட காலத்தில், என்னென்ன காலச்சூழலில், எந்தெந்த நிலப்பரப்புகளில், எத்தகைய உளநிலைகளில் அவர்கள் அகவலு அகலாமல் நடந்திருப்பார்கள் என்பதை நினைத்தால் பிரமிப்பே எஞ்சுகிறது. நடந்தே அலைந்து வாழ்வைக் கழிக்கிற இவர்களது இச்செயலைப் புறப்பார்வையால் நோக்குபவர்களுக்கு, அது முட்டாள்தனமாகவும் பைத்தியக்காரத்தனமாகவும் தெரியலாம்.
ஆனால், அந்த இரு காந்தியர்களின் மனதில் திரண்டெழுந்து பேருரு கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான நம்பிக்கை என்பது உயிர்த்துடிப்புக்கு நிகரான விசை அல்லது விழைவு என்றே சொல்லத் தோன்றுகிறது.
சிவராஜ்.