லண்டன் யார்க்ஷயரைச் சேர்ந்த பிரபு எஃப்.தோமஸ் தோர்ஸ்டன் தனது தொண்ணூறாவது வயதில், 1952-ல் இறப்பதற்கு முன்பாக தன் வாரிசும் மாணவருமான எஃப்.பார்கின்சன் அவர்களிடம் வாழ்நாள் முழுக்கத் தன் அந்தரங்கத்தைக் குத்திச் சிதைத்து இம்சை செய்த ஒரு புதிரை அவிழ்க்கும் பொறுப்பை விட்டுவிட்டுச் சென்றமையால் பார்கின்சன் இந்தியா வரவும் ‘உருவப்பன்நிலையமைதிச்’ சித்தாந்தத்தை (Parkinsons Formal Multiplicity Theory) தோற்றுவித்து உலகப்புகழ் பெறவும் நேர்ந்தது.
பிரிட்டிஷ் இந்தியாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பேச்சிப்பாறை மலைப்பகுதியில் சர்வேயராக 1880 முதல் எட்டு வருட காலம் பணியாற்றிய தோர்ஸ்டன் பிரபு ரைபிள்களைத் திருடி விற்றமைக்காகப் பிடிபட்டு தண்டிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டு இறுதி வரை திரும்ப முடியதபடி வாழ்க்கையில் கட்டப்பட்டு உள்ளூர திரும்பி வரும் தினத்திற்காக ஏங்கியபடி மரணப்படுக்கையை அடைந்தார். ரைபிள்கள் உண்மையில் விற்கப்படவில்லை என்பதை பிரபு வெளிப்படுத்தி கீழ்க்கண்ட தகவல்களைக் கூறினார்.
ஆதி மலையுச்சியின் அணுக முடியாத போர்க்குணம் கொண்ட பழங்குடிகளின் பெண்களுடன் உறவு கொள்வதற்கான விலையாகவே அவை தரப்பட்டன. இந்த ரைபிள்கள் பிற்பாடு பழங்குடி கலகங்களில் பயன்படுத்தப்பட்டு பெருஞ்சேதத்தை விளைவித்தன என்றும், பிறகு ஒருங்கிணைந்த தாக்குதல் மூலம் குறிப்பிட்ட பழங்குடி வம்சம் முழுமையாகச் சிதறடிக்கப்பட்டது என்றும், திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவல் முதற்தொகுப்பு குறிப்பிடுகிறது.
ஆதிமலைப் பழங்குடியினரின் பெண்களின் உடலழகும் அவர்கள் மிக வினோதமான முறையிலும், பரவசவெறியில் மனநிலையே பிறழும் அளவிற்கு தீவிரமானதாகவும் கொள்ளும் உடலுறவு முறையும், அன்றைய பிரிட்டிஷாரிடையே பரபரப்பாகவும் கிட்டத்தட்ட தேவதைக்கதைகளின் கலையழகுமிக்க பயங்கரத்துடனும் பேசப்பட்டு வந்தன. ராமன் நாயர் என்ற மேஸ்திரி மூலமாகப் பலகாலம் முயன்றும் பெருமளவு பணம் செலவு செய்தும் மிகமிக அபூர்வமானதும் ஆபத்தானதுமான இவ்வனுபவத்தைப் பெற்ற ஒரே வெள்ளையராக தோர்ஸ்டன் பிரபு ஆனார் என்பது எழுபத்திரண்டு வருடங்களுக்குப்பிறகு அவருடைய மரணப்படுக்கையில்தான் வெளியிடப்பட்டது.
ஆயினும் பிறகு எப்போதும் எப்பெண்ணையும் அணுக முடியாதபடி அவரை ஆக்கிய அவ்வனுபவத்தின் உக்கிரத்தை எப்போதுமே அவர் சொற்களாக மாற்ற முயற்சி செய்யவில்லை என்பதையும் இங்குக் குறிப்பிடவேண்டும். உறவுக்கான நிபந்தனைகளில் துப்பாக்கி தவிர, ஒருபோதும் உறவு கொள்ளும் பெண்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் முக்கியமானதாகும். அமாவாசை நள்ளிரவில் இடைவெளியற்ற இருட்டு வழியாக மலையுச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரபு அங்கு ஒரு ஓடைக்கரையில் நிர்வாணமாகப் பழங்குடியினருக்கு கைமாறப்பட்டு அவர்களால் கிராமத்தின் ஒரு குடிசைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்த பெண்ணிடம் அளிக்கப்பட்டார்.
உடலால் மட்டும் பார்த்து பேசி அறிந்த அந்த உக்கிரமான இரவு முடியும் முன்பே கடும் சுரத்தால் பீடிக்கப்பட்டு அரைப்பித்து நிலையில் திரும்பி வந்து ஒருவாரம் நீடித்த நோய்ப்படுக்கையில் சரிந்தவர் ஸ்பரிசங்களால் மட்டும் இருப்புணர்த்தும் பெண்பிம்பங்களின் பித்துப்பிடித்த உலகில் மிதந்தலைந்தார். மீண்டும் ஆசைஎழ மீண்டும் மலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பதிமூன்றாம் தடவை அகப்பட்டுக் கொண்டு தண்டிக்கப்பட்டு லண்டன் வந்து வேறு விதமாக வாழ்வை அமைத்துக் கொண்ட போது கூட அவரை ஒரு முள் குடைந்துகொண்டே இருந்தது.
அவ்வனுபவங்களைப் பிரித்து வரிசைப்படுத்தி புரிந்துகொள்ளும் முயற்சிகளினால் மனநோய்க்கு ஆளாகி எட்டுவருடம் சானடோரியத்தில் இருக்க நேர்ந்தது. காலம் நகர்ந்து அனுபவங்கள் பின்னடைந்து விலகிவிலகிச் செல்ல குவிந்து உருவான ஒரு புள்ளியில் இருந்து தெளிவு கிடைத்தது. அவ்வனுபவங்கள் அனைத்துமே ஒரு அனுபவத்தின் பதிமூன்று கூறுகளே என்றும் பின்பு அவை ஒரு தருணமே என்றும் ஒரு தருணம் என்பது எப்போதும் ஒரு கணமே என்றும் அவர் அறியலானார்.
பிரமாண்டமான ஆள்கூட்ட நெரிசல் வழியாக ஊடுருவிப் போகும் ஒரு பயணத்தில், ஒரு கணம் தீண்டித் தொடர முடியாதபடி உடல் அலைகளில் விலகி மறைந்துவிட்ட ஒரு தீற்றலே அது என்ற பிரக்ஞை, அந்தத் துளியிலிருந்து முழு அனுபவத்தையும் மீட்டு படைத்தெடுத்து விடலாம் என்ற நம்பிக்கையை நோக்கி அவரை இட்டுச் சென்றது. எஞ்சிய முப்பது வருடங்களும் அவருடைய தனிமை முழுக்க அவ்வனுபவத்தின் மறு அமைப்பிற்காக செலவழிக்கப்பட்டது.
முப்பது வருட தனிமையில் துளித் துளியாக தேக்கிய தீவிரம் ஒரு கணத்தில் ஒரு அறிதலைச் சாத்தியமாக்கியது. பதிமூன்று முறை அவர் புணர்ந்தது ஒரே ஒரு பெண்தான். கன்னங்கரிய திரையில் கரிய கோடுகளை நுட்பமாக பொறித்து அவர் அந்த முகத்தை பதித்தெடுத்த ஓவியத்தை உலகக் கலை வெற்றிகளில் ஒன்றாகவே கருத முடியும். எளிய பார்வையில் கரிய திரை தவிர வேறு எதுவும் தெரியாத அந்தப் பரபரப்பானது தீவிரமான உள்ளத்தை அதன் மீது செலுத்தும் தோறும் உயிர் பெற்று மெல்லத் திறந்து காட்டுகிறது. எஃப்.பார்கின்சன் அம்முகத்தின் கனவால் தாக்கப்பட்டதும் அவருடைய மன அமைப்பை அது தகர்த்ததும் அவர் இந்தியாவிற்கு வந்ததற்கான காரணங்களுள் முக்கியமான ஒன்றாகும்.
தோர்ஸ்டைன் பிரபுவின் நிறைவேறாத இறுதி ஆசையான அம்முகத்தின் தொடர்கண்ணியை தேடிக் கண்டடைந்து விடுதலை இவ்வண்ணம் இன்னொரு காரணத்துக்காக அவர் மேற்கொண்டாரெனினும் எஃப்.பார்கின்சன் ஒரு தூய யதார்த்தவாதியாவார். அந்த உடலுறவின் அற்புத தன்மைக்கு மாயாஜால அம்சம் எதுவும் தர மறுத்து மானுடவியலில் தேடிய அவருடைய அறிவுவாத மனஅமைப்பு அப்பழங்குடியினர் குரங்கு மனிதப்பரிணாமத்தின் ஏதோ ஒரு தளத்தில் நின்றுவிட்டவர்கள் என்றும் குரங்குகளின் உடலுறவுப் பழக்கத்தின் ஏதோ ஒரு நிலையை தொடர்ந்து கடைப்பிடித்தவர்கள் என்றும் தான் தீர்மானிக்கச் செய்தது.
இந்த யுக்திவாத ஆய்வு அடுத்த தளத்திற்கு அவரை இட்டுச் சென்று பேச்சிப்பாறை சர்வே குறிப்புகள் அலுவலகப்பதிவுகள் கடிதங்கள் மற்றும் ராபின்சன் ஜெஃபீரி (‘நாயர் சமூகத்தின் வீழ்ச்சி’ என்ற புகழ்பெற்ற ஆய்வு நூலை எழுதிய கனடா தேசத்து மானுடவியல் அறிஞர்) ரெவரண்ட் ஃபாதர் ஜோசப் கல்லன் (பழங்குடிகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகள் ஏழு நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன) என்.சிவசங்கரன் நாயர் ஆகியோரின் ஆய்வுகளின் துணையோடு முன்னகர வைத்தன.
பேச்சிப்பாறையின் மறு மலைச்சரிவில் தடிக்காரன் கோணப்பகுதியில் இன்று கிறிஸ்தவ மதம் ரப்பர்த் தொழில் போன்றவற்றை ஏற்று முற்றிலும் நாகரீகமடைந்து சிதறி விரிந்து வளர்ந்திருந்த ஆதிமலைப் பழங்குடிகளைக் கண்டுபிடித்த எஃப்.பார்கின்சன் அவர்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து வியப்பூட்டும் சில தகவல்களை அறிந்தார்.
அவர்கள் தங்கள் அன்னையரை கனவில் வந்து ஆட்கொண்ட பதிமூன்று (வெவ்வேறு) வெள்ளை அப்போஸ்தலர்களை வழிபட்டு வந்தனர். இவ்வாறாக எஃப்.பார்கின்சன் இந்தியாவில் ஒரே சமயம் தோர்ஸ்டனின் காதலியின் பதிமூன்று வடிவங்களையும் தோர்ஸ்டனின் பதிமூன்று வடிவங்களையும் கண்டடைந்தார். இந்தக்கணக்கின் குளறுபடியை சமன் செய்யும் பொருட்டு அவர் உருவாக்கிய சிக்கலான சூத்திரங்களும் வாய்ப்பாடுகளும் அடங்கிய சித்தாந்தமே பிற்பாடு ‘உருவப் பன்நிலையமைதிச் சித்தாந்தம்’ என்று புகழ் பெற்றது. எனினும் இன்று குளோட் லெவிஸ்ட்ராஸ் போன்றவர்களின் அமைப்புவாத மானுடவியல் ஆய்வுகளின் பேரலையில் இது மூழ்கடிக்கப்பட்டு மறைந்துவிட்டது.
மூன்று சரித்திரக்கதைகள்-2, சுபமங்களா 1993