சவக்கோட்டை மர்மம் – சிறுகதை

நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் தக்கலை என்ற ஊர் இருக்கிறது. இதற்கருகே உள்ள பத்மநாபபுரம் கோட்டையையும் அரண்மனையையும் தமிழ்த்திரைப்படங்களில் பலர் பார்த்திருக்கலாம். அங்கிருந்து திருவட்டாறு போகும் பாதையில் குமாரபுரம் என்ற கிராமத்தின் அருகே ஒரு குன்றின்மீது இன்னொரு கோட்டையையும் முற்றிலும் அழிந்துபோன ஒரு அரண்மனையின் இடிபாடுகளையும் இன்றும் நாம் காணலாம். இது ‘சவக்கோட்டை’ என்று கூறப்படுகிறது. நாற்புறமும் ரப்பர்க் காடுகள் மண்டி, அமைதியில் விழுந்து கிடக்கிறது. திருவிதாங்கூர் கொட்டாரம் பண்டிதர் ‘அச்சு மூத்தது’ அவர்களின் ஒழுங்கற்ற குறிப்புகள் – சரித்திரமும் ஐதீகமும் இக்காலகட்டத்தில் வேறுவேறாகக் கருதப்படவில்லை – இக்கோட்டையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

மார்த்தாண்டவர்மா மகாராஜா (1729) வின் காலகட்டத்திற்கு முன் திருவிதாங்கூரின் பலபகுதிகளில் சுதந்திரமான மாடம்பிகள் பலர் தங்களை மன்னர்களாக பிரகடனப்படுத்தி பலகாலம் ஆட்சி செய்திருந்தார்கள். அவர்களில் ஒருவரான குமாரபுரம் கரைமாடம்பி பாறைக்கல் உதயன்தம்பி (தன்னை இவர் அவிட்டம் திருநாள் பாலராமவர்மா மகாராஜா என்று அழைத்துக் கொண்டதாகத் தெரிகிறது) இதைக் கட்டினார் என்று தெரிகிறது. அழகிய பூமுகம், கொட்டியம்பலம், சபாமண்டபம் மற்றும் களியரங்கு ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும்: சுத்தமான வெண்தேக்கு, ஈட்டி சந்தன மரங்களினால் அபூர்வமான சிற்ப வேலைப்பாடுகள் நிரம்ப அமைக்கப்பட்டதாகவும் இந்த அரண்மனை இருந்திருக்கிறது. இதைக்கட்ட பொன்னுமங்கலத்தைச் சேர்ந்த மூத்தாசாரி கொச்சுச்சாத்தன் தலைமையில் பன்னிரண்டாண்டுகால உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது.

‘குமாரபுரம் அம்மவீடு’ என்று இது அப்போது அழைக்கப்பட்டிருக்கிறது. பொன்மனை தெற்கு மனையிலிருந்து இரண்டு கன்னிகைகளை தானமாகப் பெற்றுக்கொண்டு பாலராமவர்மா மகாராஜா இந்த அரண்மனையில் ஒரு ஆவணிமாதம் (சிங்ங மாதம்) முதல் தேதி குடியேறியதாக செவிவழிச் செய்தி சொல்கிறது. காலம் உத்தேசமாக மார்த்தாண்டவர்மா மகாராஜாவிற்கு முன்னூறு வருடங்கள் முன்பாக இருக்கலாம். காலக்கணக்கெல்லாம் இப்போதைய விஷயம். அன்றெல்லாம் காலம் தேங்கிக்கிடந்தது.

ஐதீகக் கதைகளின்படி இரவு தேவியருடன் பள்ளிநித்திரை கொண்டிருந்த மகாராஜா வினோதமான குரல் ஒன்று தன்னிடம் பேச முயற்சிப்பதை உணர்ந்து பதறியதாகவும், தேவியரும் அக்குரலைக்கேட்டு பயந்து அலறியதாகவும், இது பெரிய பதற்றத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் அறிகிறோம். அந்தக் குரல் சிலசமயம் உணர்ச்சி வசப்பட்டுக் கூவுவதாகவும், சிலசமயம் அரற்றலாகவும், சிலசமயம் மௌனமான மந்திர உச்சாடனமாகவும் இருந்தது. அது ஆண்குரலோ பெண்குரலோ அல்ல. மனிதத் தொண்டையிலிருந்து வரும் குரலாகவே இருக்கவில்லை என்று திட்டவட்டமாக குறிப்பிடப்படுகிறது. பிரசனம் வைத்துப் பார்த்த அனந்த  நாராயணன் போற்றி அரண்மனையில் துஷ்ட ஆவிகளின் இருப்பு உள்ளதாகக்  கண்டுபிடித்தார்.

வயலில் வேலை செய்யும்போது விழுந்து இறந்த புலையர்களின் ஆவிகளுக்கு பலி தரும் இடமாக இக்குறிப்பிட்ட குன்று இருந்து வந்ததாகவும், பலி ஏற்க வந்து ஏமாந்த ஆவிகளின் குரலே அது என்றும் ஜோசியர்கள் குறிப்பிட்டார்கள். விரிவான யாகங்களும் மாந்திரிக தாந்திரிக கர்மங்களும் நடத்தப்பட்டன. பித்ரு பூஜை, குலதெய்வ பூஜை, துஷ்ட நிக்ரக பூஜை, சாத்தன் பூஜை ஆகியவையும் நிகழ்த்தப்பட்டன. ஆனால் அந்தக்குரல் தொடர்ந்து பள்ளியறையில் கேட்டபடியேதான் இருந்தது. கொச்சு சாத்தன் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டான். அவன் அரண்மனைக்கு இடம் பார்த்ததன் கோளாறுதான் அது என்று குற்றம் சாட்டப்பட்டான். தேவாசுர சக்திகளில் எதுவோ நடமாடும் சூக்குமமான பாதை அக்கட்டிடத்தால் முறிக்கப்பட்டுவிட்டதாகக் கணிக்கப்பட்டது.முன்பு காயங்குளம் அருகே ஒரு மன்னனுக்கு இப்படி ஆனதனால் அவன் வம்சமே அழிந்தது என்று நினைவு கூரப்பட்டது. கழுவில் ஏற்றப்பட விதிக்கப்பட்டு சக்கரக்கல்லில் கட்டிவைக்கப்பட்டிருந்த கொச்சு சாத்தன் ஒரு நாள் அவகாசம் கோரினான். அதற்குள் பிழையைக் கண்டுபிடித்துத் திருத்திவிடுவதாகக் குறிப்பிட்டான். அவனை விட்டால் கட்டிட சூக்குமம் அறிந்த எவருமில்லை என்பதால் அனுமதி தரப்பட்டது.

இரவெல்லாம் கட்டிடத்தில் அலைந்த கொச்சு சாத்தன் விடிகாலையில் கூச்சலுடன் சூக்குமத்தைக் கண்டடைந்தான். பிற்பாடு அவன் சுவடியில் எழுதி வைத்த குறிப்புகள் மற்றும் கணக்குகளின்படி (இவை ‘பத்மநாப சில்ப ரத்னாவளி என்ற பெயரில் பிற்பாடு இவன் வம்சத்தை சேர்ந்த ‘அனந்தன் மூத்தாசாரி’யால் வடமொழியில் நூல் வடிவம் தரப்பட்டு, திருவனந்தபுரம் மகாராஜா சுவாதி திருநாளின் அரச சபையில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நூலின் ஏட்டுப்பிரதி ஸ்ரீ சுவாதி மியூசியத்தில் இன்றும் உள்ளது) நிகழ்ந்தது இதுதான் என்று தெரிகிறது.

குமாரபுரம் குன்றைச் சுற்றி இருபது கிராமங்களும் வயல்வெளிகளும் சந்தைகளும் எண்ணற்ற சேரிகளும் உள்ளன. இங்கிருந்து எழும் ஒலிகள் பாறைகள் மற்றும் கோட்டை சுவர்கள் வழியாக எதிரொலித்தும் மறுஎதிரொலித்தும் அரண்மனையின் பிரதான வளாகத்தில் திரண்டு பள்ளியறைக்குள் அதிர்கின்றன. பள்ளியறையின் கூரை முகடு உட்குழிந்து கிண்ண வடிவாக இருப்பதால் இவ்வதிர்வுகள் குவிந்து தெளிவான ஒலியாகவும் சிலசமயம் சொற்களாகவும் கூட மாற்றப்படுகின்றன. அதை நிறுத்துமாறு மகாராஜா உடனே ஆணையிட சாத்தனின் திட்டப்படி கோட்டைக்குள் வரும்வழி இரண்டு இடத்தில் வளைக்கப்பட்டு சுவர் எழுப்பப்பட்டது. ஒலியும் இல்லாமல் ஆயிற்று. மகாராஜா மகிழ்ந்து ’தச்சுமூத்தது’ பட்டமும், வீராளிப்பட்டும், வளையலும் பரிசளித்து சாத்தனை கவுரவித்தார்.

ஆனால் சில நாட்கள் கழித்து களியரங்கில் நளதமயந்தி ஆட்டத்தின் சிருங்கார ரசத்தில் மெய்மறந்திருந்த மகாராஜா பாடலின் ஊடாகப் புகுந்து நாதத்தைச் சிதறடித்த ஒலியை மீண்டும் கேட்டார். துடித்துப்போய் மீண்டும் சாத்தனை வரவழைத்து அதை அகற்றும்படி ஆணையிட்டார். அரண்மனையும் கோட்டையும் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டன. இதனால் அரண்மனைக்குள் வருவதும் போவதும் சிரமமாக இருப்பதாகவும் பலசமயம் வழிதவறிவிடுவதாகவும் மந்திரிகளும் பிராமண பூஜ்யர்களும் முனங்கிக்கொண்ட போதிலும் எவரும் அதுபற்றி மகாராஜாவிடம் கூற முயலவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக மகாராஜா அரண்மனையை விட்டு வெளியே வருவதே இல்லை.

நிலப்பகுதியின் விசித்திரமோ அல்லது கோட்டையின் விசித்திரமோ தொடர்ந்து மாற்றி மாற்றி எங்காவது அந்த அமங்கல ஒலி கேட்டுக்கொண்டுதான் இருந்தது. எனவே கோட்டை 888 முறை மாற்றியமைக்கப்பட்டது. (இது ஒருவித நாட்டுப்புறக்கணக்கு என்பதை மறுப்பதற்கு இல்லை. 888 என்பது ஐதீகங்கள் குறிப்பிடும் ஒரு அமங்கல எண் அன்றி வேறல்ல). கோட்டைக்கு வரும் வழி இவ்வாறாகப் பலவிதமாக சிக்கலாக மாறி ,அவிழ்க்க முடியாத புதிராக ஆயிற்று. உள்ளே வருவதும் வெளியே போவதும் வெறும் அதிர்ஷ்டமன்றி வேறல்ல என்று ஆயிற்று. அதை மேலும் மோசமாக்கும்படி மூத்தாசாரி பித்து முற்றிய நிலையில் தனக்குள் சிரித்தபடி சுவர்களைத் தொடர்ந்து மாற்றி மாற்றிக் கட்டிக்கொண்டிருந்தான்.

தன் அமாத்யர்களும் அரைப்பைத்தியமாக  ஆகி, சிரித்தபடியும் அழுதபடியும்  திசை தெரியாமல் சுற்றி வருவதை மகாராஜா மிகவும் தாமதமாகவே உணர்ந்தார். பீதியுடன் வெளியே வர அவர் முயன்றபோது தான் அது எவ்வளவு பெரிய காரியம் என்று புரிந்ததாம். வெளியேறும் வழிக்கான ஒரே வெளியுலக அடையாளமாக அப்போது இருந்தது அப்பால் ஊரிலிருந்து வரும் அந்த ஒலி மட்டுமே. ஆனால் அதை மூத்தாசாரி கண்டபடி சிதறடித்திருந்ததனால் அதை அடையாளம் வைத்து புறப்பட்டு, பலநாட்கள் நடந்து, உடல் ஓய்ந்து விழுந்து கிடக்கும்போது, நேர் எதிர்திசையில் அது கேட்க ஆரம்பிக்கும் நிலை இருந்தது.

காற்றுவழிச் சந்துகளில் அவ்வப்போது அவரைப்போலவே அரைப்பித்து நிலையில் அலைந்து கொண்டிருக்கும் ஏதாவது மந்திரியையோ சேவகனையோ காண்பது தவிர்த்தால் இடைவெளியற்ற அந்த பயணம் எதையும் அடையாததாகவும் எங்கும் சேராததாகவும் தொடர்ந்துகொண்டே இருந்தது. மகாராஜாவைத் தேடி வாரிசுகளும் தளபதிகளும் வந்தனர். அனைவரும் கோட்டைக்குள் நுழைந்து அகப்பட்டுக்கொண்டனர். மகாராஜாவின் இறுதிச்சடங்குகளுக்கு அவர் அஸ்தி கிடைக்காமையினாலும், அதைத் தேடிச்சென்ற எவரும் திரும்பாமையினாலும், இறுதிச்சடங்கு செய்து மூதாதையை கரையேற்றாமல் சாஸ்திரப்படி வாரிசு உரிமை செல்லாது என்பதனாலும், நீண்டநாள் அராஜக நிலைமை நிலவியது.

பிறகு பிராமண சபையின் முடிவுப்படி குமாரபுரம் அம்மவீட்டுக் கோட்டையையே ஒரு அஸ்திக்கலசமாக சங்கல்பம் செய்து முறைப்படி சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்டன. அத்துடன் கோட்டை புனிதமான குலச்சின்னமாக ஆயிற்று. குமாரபுரம் மன்னர்கள் தங்கள் மரணத்தை அதற்குள் தான் நிகழ்த்திக்கொள்ள வேண்டும் என்று மரபு உருவாயிற்று. ஐதீகங்கள் பெருகி இக்கோட்டையின் மையத்தில் மனித வாழ்வின் நான்கு புருஷார்த்தங்களின் சாரம் குடிகொள்வதாகவும், மன்னர்கள் தங்கள் மூதாதையரைப் பின்பற்றி இதற்குள் நுழைந்து அந்த கணிதப்பாதைகளின் ஊடே பயணம் செய்து மூதாதையர் சென்றடைந்த மையத்தை அடைந்து முக்தி பெற வேண்டும் என்றும் வகுக்கப்பட்டது.

தலைமுறை தலைமுறையாக இவ்வம்சத்து மன்னர்கள் வாரிசுகளை ஆட்சிக்கு அமர்த்திவிட்டு வானப்பிரஸ்தம் பூண்டு இந்த மாபெரும் அஸ்திகலசத்தின் உள்ளே சென்று மறைந்து கொண்டிருந்தனர். பற்பல தலைமுறைகளுக்குப் பிறகு ஒரு மகாராஜா மையம் நோக்கி மனம் தளராமல் சென்று கொண்டிருந்த போது வெளியேறும் வழியைத் தேடிக் கொண்டிருந்த தன்னைப்போன்றே இருந்த ஒருவரைச் சந்திக்க நேர்ந்ததாகவும் அறிமுகத்துக்குப் பிறகு இருவரும் திடீரென்று உடைந்து விலாதெறிக்க சிரிக்க ஆரம்பித்ததாகவும் பிரபல அங்கத கவிஞரான மாணி நாராயண  சாக்கியாரின் கூத்துப்பாடலில் குறிப்பிடப்படுகிறது.

1750-ல் திருவிதாங்கூர் தேசத்தை ஒருங்கிணைத்து ஒருகுடைக்கீழ் கொண்டுவந்த மார்த்தாண்ட வர்மா குலசேகரப் பெருமாள் மகாராஜா குமாரபுரம் மாடம்பி வம்சத்தை பூரணமாக அழித்து கோட்டையையும் தகர்த்து அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்ததாக அச்சு மூத்தது குறிப்பிடுகிறார். சவக்கோட்டை என்று இன்று வழங்கும் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கோட்டையின் இடிபாடுகளுக்குள் மண்டிக்கிடந்த எலும்புக்கூடுகளின் காரணமாக இருக்கலாம்.

[மூன்று சரித்திரக்கதைகள்-1, சுபமங்களா 1992. ஜெயமோகன் சிறுகதைகள் நூலில் இருந்து]

புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-1

புதிர்நிலைகள் – இளம்பரிதி

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது-கல்யாண்ஜி கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசில் மகரந்தம் -லோகமாதேவி