‘வெண்முரசு’ நாவல்தொடரில் 24ஆவது நாவல் ‘களிற்றியானை நிரை’. ‘களிறு’ என்பது, ஆண்யானை. இந்த நாவலில் அது வலிமைக்கும் பெருமைக்கும் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது. மக்கள்திரளே அரசுக்கும் நாட்டுக்கும் முழுமையை அளிக்க வல்லது. ‘நிரை’ என்பது, கூட்டம். மக்கட்பெருங்கூட்டம் ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு நகர்வதும் அங்குத் தங்குவதும் அங்கிருந்தும் சிலர் வேறொரு இடத்திற்குச் செல்வதும் என இந்த நாவல் முழுக்கவே மக்கள் நிரை நிறைந்திருக்கிறது.
குருஷேத்திரப் போரில் பாண்டவர் – கெளரவர் தரப்பில் முற்றழிவு ஏற்பட்ட பின்னர், அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் மக்கள் யாருமின்றி வெறும் நிலங்களாக மாறிவிட்டன. கைவிடப்பட்ட கோட்டை, மிகக் குறைந்த பாதுகாப்பு என அந்த இரண்டு பெருநகரங்களும் பாழ்நிலங்களுக்கு ஒப்பாக மாறிவிட்டன. அவற்றை மீண்டும் பழையநிலைக்கு, பழையநிலையைவிட மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்காகப் பாண்டவர் தரப்பு முனைகிறது. பொதுமக்கள் அற்ற, பொலிவிழந்த பெருநகரைத் தொடக்கத்திலிருந்து மறுகட்டுமானம் செய்வது எப்படி? என்பதை விரிவாக இந்த நாவலில் கூறியுள்ளார் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள்.
மக்கள் இன்றி நாடில்லை. பேரரசுகளுக்கு யானைகளே வலிமையான கோட்டையும் படைக்கலமுமாகும். மக்களும் யானைகளும் இல்லாத அஸ்தினபுரியை எவ்வாறு மீட்டெடுப்பது?. ‘சம்வகை’ என்ற பெண்ணின் நுண்ணறிவால் அது சாத்தியமாகிறது.
‘அணிவலம்’ என்றால், ‘அணியானை நிரை’ என்றே தன் உள்ளம் எண்ணிக் கொள்வதை உணர்ந்தாள். அஸ்தினபுரி யானைகளின் நகர். நிரைநிரையென முகபடாம் மின்ன நின்றிருக்கும் யானைகளின் நிரைகளால்தான் அந்நகர் பொலிவு கொண்டிருக்கிறது. அவ்வெண்ணம் வந்ததும் கடிவாளத்தை இழுத்து நின்றுவிட்டாள். அரண்மனைக் கொட்டிலில் அப்போது முதுமையடைந்த ஓரிரு யானைகள் மட்டுமே இருந்தன. அவள் அரண்மனைக்குச் செல்வதற்குள் செய்யவேண்டுவன என்ன என முடிவெடுத்துவிட்டாள். அரண்மனை பொருள்வைப்பகத்தில் யானைகளுக்குரிய நெற்றிப்பட்டங்களும் புறச் சால்வைகளும் குவிந்துகிடந்தன. அவள் எண்ணியதைவிடப் பலமடங்கு. மிகப் பழைய நெற்றிப் பட்டங்களும் புறச் சால்வைகளும் தூசு மண்டி பழுதடைந்திருந்தன. எடுக்க எடுக்க அவை வந்தபடியே இருந்தன.
“அணியானைகள் உயிர்துறக்கையில் அவற்றின் முகபடாம்களைப் பிற யானைகளுக்குப் பயன்படுத்துவதில்லை, காவலர்தலைவியே. அந்த முகபடாம்களிலும் மணிச்சால்வைகளிலும் அந்த யானையின் அசைவு அதன் ஆத்மா என எஞ்சியிருக்கும். பிறிதொரு யானையுடன் அது இசைவு கொள்வதில்லை. நெற்றிப்பட்டம் மாற்றிக் கட்டப்பட்ட யானைகள் சித்தமழிந்து மதம்கொள்ளும் என்பார்கள். ஆகவே, ஓர் யானை மறையும்போது அதன் அணிகளை மொத்தமாகக் கழற்றி வைப்பறைக்குள் கொண்டுசென்று போட்டுவிடுவார்கள். இவை நாநூறாண்டுகளாக இங்கே குவிந்திருக்கின்றன” என்று கருவூலக்காப்பாளரான சிற்றமைச்சர் சுந்தரர் சொன்னார். சம்வகை தன் தலைக்குமேல் எழுந்திருந்த அந்த அணிகளின் குன்றை நோக்கியபின் “மறைந்த களிறுகள் அனைத்தும் எழுக! அஸ்தினபுரிக்கு இப்போது அவை அனைத்தும் தேவையாகின்றன” என்றாள்.
இருபது ஏவலர்கள் இரவும்பகலும் பணியாற்றி அனைத்து முகப்படாம்களையும் வெளியே எடுத்தனர். “பழுதுநோக்க நமக்கு பொழுதில்லை. புழுதிமட்டுமே களையப்படவேண்டும்” என்று சம்வகை சொன்னாள். ஏவலர் மூக்கில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு அவற்றை அள்ளி நீண்ட கொடிகளில் இட்டு, உலுக்கி, புழுதி களைந்தனர். ஈரத்துணியால் வெண்கலக் குமிழ்களையும் பிறைகளையும் துலக்கி ஒளிபெறச் செய்தனர். கோட்டைமுதல் அரண்மனைவரை அரசப்பாதை முழுக்க நெருக்கமாக மூங்கில்களை நட்டு அவற்றில் குறுக்கே கட்டப்பட்ட கழியில் முகபடாம்களைத் தொங்கவிடும்படி ஆணையிட்டாள். அவள் சொன்னதை ஏவலர் முதல் முகபடாமை அமைத்ததுமே புரிந்துகொண்டனர். காற்றில் அசைந்த முகபடாம் ஒரு கணப்பொழுதில் அங்கே ஒரு யானையை உருவாக்கி நிறுத்தியது. “ஆ! யானை!” என அதைக் கட்டிய ஏவலனே வியந்து பின்னடைந்தான்.
முதற்காலையின் ஒளியில் சாலையைப் பார்க்க வந்த சுரேசர் திகைத்து விழிவிரித்து நின்றுவிட்டார். “யானைகளா!” என்றார். உடனே, புரிந்துகொண்டு “தெய்வங்களே” என்றார். நீள்மூச்செறிந்தபடி நோக்கிக்கொண்டே நின்றார். “அவை எங்கும் செல்லவில்லை. இங்கேயே இருந்திருக்கின்றன. நம் காப்பறையின் இருளுக்குள்” அவர் சம்வகையின் தோளைப் பற்றிக்கொண்டு “நீ அறிந்திருப்பாய், இந்நகரம் மண்ணுக்குள் புதைந்த பல்லாயிரம் யானைகளால் தாங்கப்படுகிறது என்பார்கள். அவை அங்கிருந்து இங்கே எழுந்துவந்துவிட்டதுபோல் தோன்றுகிறது” என்றார். சம்வகை புன்னகைத்தாள். அவர் கைகளைக் கூப்பியபடியே அந்தச் சாலையில் சென்றார். உணர்வெழுச்சியுடன் “இது போதும்… அவரை வரவேற்க மண்ணுக்குள் வாழும் மூதாதை யானைகள் எழுந்துள்ளன. இது போதும்” என்றார்.
இந்தக் காட்சி இந்த நாவலின் தலைப்புக்கு மிகப் பொருத்தமானதாக உள்ளது. ‘களிற்றியானைநிரை’ என்ற சொல் அகநானூற்றை நினைவுபடுத்துகிறது.
சங்க இலக்கிய நூல்களுள் எட்டுத்தொகையில் 400 பாடல்களை உடைய ‘அகநானூறு’ பாடற்தொகுதி இடம்பெற்றுள்ளது. இந்த நூலில் முதல் 120 பாடல்களைக் கொண்ட பகுதிக்குக் ‘களிற்றியானைநிரை’ என்று பெயர். இந்தப் பாடல்கள் ‘யானைக்களிறு போல் பெருமித நடை’யைக் கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன. அதுபோலவே அஸ்தினபுரி, மாமன்னர் ஹஸ்தியின் ஆட்சியின் முதல் பாண்டவர் – கௌரவர்களுக்கு இடையே குருஷேத்திரப் போர் தொடங்கும்வரை ‘பெருமித நடை’ யுடனேயே திகழ்ந்தது. போருக்குப் பின்னர் அது உருக்குழைந்துவிட்டது. மீண்டும் அந்தப் ‘பெருமித நடை’யை மீட்டெடுத்தால் மட்டுமே அஸ்தினபுரி இனிவருங்காலத்தில் பாரதவர்ஷத்தின் அதிகார மையமாகத் திகழ முடியும். இது காலத்தின் கட்டாயமும் கூட. அஸ்தினபுரியை மீட்டமைக்கும் நிகழ்வுகளைக் கூறும் இந்த நாவலுக்குக் ‘களிற்றியானைநிரை’ என்று பெயரிட்டுள்ளமை மிகப் பொருத்தமே!.
நான்காம் குலத்தைச் சார்ந்த சம்வகைக்குப் பெருவாய்ப்பு கிடைக்கிறது. அவள் அஸ்தினபுரி கோட்டைக் காவல் தலைவியாகப் பொறுப்பேற்கிறாள். அஸ்தினபுரிக்குள் நுழையும் தர்மரை எதிர்கொண்டு, வாள்தாழ்த்தி வரவேற்கும் சடங்குக்கு அவளை நியமிக்கின்றனர். அஸ்தினபுரி வரலாற்றில் இந்தச் சடங்கினைச் செய்ய ஷத்ரிய பெண்களுக்குக்கூட அனுமதி அளிக்கப்பட்டதில்லை. அந்த நிலையில், நான்காம் குலத்தைச் சார்ந்த சம்வகைக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படுவது ஒரு வரலாற்றத் தருணமே என்று நினைக்கத் தோன்றுகிறது.
“ஆம், ஆனால் இன்றுவரை பெண்கள் அச்சடங்கைச் செய்ததில்லை” என்றாள் சம்வகை. “மெய். ஆனால், இன்றுவரை இன்றுள்ள நிலைமை இங்கே உருவானதுமில்லை” என்றார் சுரேசர். “ஆனால்…” என்று மீண்டும் தயங்கிய சம்வகை “நான் ஷத்ரிய குலத்தவளும் அல்ல. நான் அவ்வாறு செய்வதற்கான மரபுமுறைமையே இங்கில்லை” என்றாள். “இல்லையென்றால் உருவாகட்டும்…” என்றார் சுரேசர். “நீயே அதைச் செய்யவேண்டும். பழைய வேதம் அகன்றது, புதிய வேதம் எழுந்துள்ளது. இது அனைவருக்கும் வழி தெளிப்பது. ஒவ்வொருவருக்கும் மெய்மையைத் தேடிச்சென்று ஊட்டுவது. அசுரருக்கும் அரக்கருக்கும் நிஷாதருக்கும் கிராதருக்கும் நாகருக்கும் உரியது. பிறகென்ன?” என்றார். சம்வகை மேலும் ஏதோ சொல்ல நாவெடுக்க “இதுவே அறுதி முடிவு. நீ சென்று அரசரை எதிர்கொள். ஊர் அறியட்டும், அனைத்தும் இங்கே மாறிவிட்டிருக்கின்றன என்று…” என்றார்.
சுரேசர் அச்சொற்களால் அவரே ஊக்கம் கொண்டார். “ஆம், நீ முன்னிற்பதை அனைவரும் காணட்டும். அவர்கள் எண்ணுவதைவிடப் பெரிய மாற்றங்கள் வரப் போகின்றன என அவர்கள் அறியட்டும். நேற்றைய முறைமைகள் இனி இல்லை. நேற்றைய தளைகளும் இல்லை. இது புதிய சொல் எழுந்த காலம். போரை மட்டுமே மக்கள் அறிந்திருக்கிறார்கள். போரில் அழிந்தவை பழையவை, மட்கியவை. காட்டெரியில் மண்ணில் புதைந்த விதைகள் அழிவதில்லை. அவை முளைத்தெழுந்து கிளை பரப்புவதற்குரிய வான்வெளியையே நெருப்பு உருவாக்கி அளிக்கிறது… அதை அனைவரும் அறியவேண்டுமென்றால் நீ வாளுடன் முன்னிற்க வேண்டும்.” அவர் திரும்பி அருகே நின்ற ஏவலனிடம் “காவலர்தலைவி கவச ஆடை அணியட்டும். முழுதணிக்கோலத்தில் உடைவாளுடன் அரசரை எதிர்கொண்டு வரவேற்கட்டும்” என்றார்.
சம்வகை “அவ்வாறே ஆகுக!” என்றாள். “உன் உடைவாள் எளிய காவல் படைக்கலம். அரசச் சடங்குகளுக்குரியது அல்ல. எங்கே சாரிகர்?” பல குரல்கள் ஒலிக்க மற்றொரு அறையிலிருந்து சாரிகர் ஓடி வந்தார். “கருவூலத்திற்குச் செல்க! காவலர்தலைவிக்கு அஸ்தினபுரியின் படைத்தலைவர்களுக்குரிய அணிவாட்களில் ஒன்றை எடுத்துக் கொடு.” அவர் மேலும் எண்ணம் ஓட்டி “படைத்தலைவர் வஜ்ரதந்தருக்குரிய நீண்ட அணிவாள் ஒன்று உண்டு. கைப்பிடியில் எழுபத்திரண்டு மணிகள் பொருத்தப்பட்டது. அஸ்தினபுரியின் அமுதகல முத்திரை பொறிக்கப்பட்டது. அதை எடுத்து காவலர்தலைவியிடம் கொடு” என்றார். சாரிகர் சம்வகையை நோக்கி புன்னகைபுரிந்துவிட்டு “ஆணை” என்றார்.
“இது வஜ்ரதந்தரின் வாள். அவர் வாள்திறன்மிக்க வீரர். இரக்கமற்றவர் என்றும் சொல்கிறார்கள்” என்றார் சுந்தரர். “ஷத்ரியப் பெருமிதம் கொண்டவர். போர்களில் ஷத்ரியர் அல்லாத குலத்தவர் பங்கெடுப்பதை விரும்பாதவர். போரில் கைப்பற்றப்படும் ஷத்ரியர் அல்லாதவர்களை அக்கணமே தலைவெட்டி கொன்றுவிட ஆணையிட்டிருக்கிறார். அவர்களை அடிமைகளாகக்கூட வாழவிடலாகாது என்பது அவருடைய கருத்து. படைக்கலம் எடுத்தவன் எப்போதுமே போர்வீரன்தான். படைக்கலமெடுத்த குலமிலிகள் அனைவருமே ஷத்ரியர்களுக்கு எதிரிகள் என்று முன்பு அவையிலேயே அறிவித்திருக்கிறார்.”
சாரிகர் “பெண்கள் படைக்கலம் எடுப்பதை அவர் விரும்பியிருக்க வாய்ப்பில்லை” என்றார். “ஆம், அதுவே எனக்கும் விந்தையாக இருக்கிறது” என்றார் சுந்தரர். “அவர் பணியாற்றியது பேரரசி சத்யவதியின் படையில்” என்றாள் சம்வகை. “ஆம், உண்மை. அதை நான் எண்ணிப்பார்க்கவில்லை” என்றார் சுந்தரர்.
அறிவும் திறனுமே பெண்களுக்கு உயர்த் தகுதியை அளித்து, பிறர் வியந்து நோக்குமளவுக்கு நிமிர்வளிப்பன. பெண்ணுக்கு அழகு ஒருபோதும் எந்த வகையிலும் நிமிர்வை அளிப்பதில்லை. அழகே பெண்ணுக்குப் பெரும் புகழையும் நிமிர்வையும் தரும் என்று நினைப்பதும் அவ்வாறு பெண்களை நினைக்கச் செய்வதும் ஆண்மையவாதிகளின் சிறுமைப் புத்தியின் செயல்பாடுகள்தான்.
காலந்தோறும் வரலாற்றில் பெண்கள் இடம்பெற்றிருப்பது தங்களின் தனித்திறனாலும் தனித்தகுதியாலும்தான். ஒருபோதும் பெண்கள் தங்களின் அழகால் வரலாற்றில் இடம்பெற்றதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மிகச் சிறந்த சான்றாக மெய்யியல் தத்துவ அறிஞர்களாகிய கார்க்கி, மைத்ரேயி ஆகியோரைக் குறிப்பிடலாம். அவர்கள் இருவரும் நுண்ணறிவால் மட்டுமே வரலாற்றில் இடம்பெற்ற தனிப்பெரும் பெண்கள் ஆவர்.
இந்த நாவலில் சம்வகை தன் அழகால் நிமிர்வைப் பெறவில்லை. தன்னுடைய அறிவாலும் ஆளுமைத் திறத்தாலுமே நிமிர்வைப் பெற்று, உயர்ப் பதவியை அடைகிறாள். அவளை யுயுத்ஸு விரும்புவதும் அவளின் இந்த நிமிர்வைப் பார்த்துத்தான்.
சுரேசர் “சம்வகையை கோட்டைக்காவலில் இருந்து மேலெடுத்தாக வேண்டும்” என்றார். “அவள் உள்ளம் அதைவிடப் பெரிதாகிவிட்டது. இனி அப்பொறுப்பிலிருந்தால் அவள் உளத்திறனில் ஒரு பகுதியால் அதை செய்துமுடிப்பாள். மெல்ல சலிப்படைவாள். அப்பொறுப்பை ஆழ்ந்து இயற்ற இயலாதவளாவாள்” என்றார். யுயுத்ஸு “ஆம்” என்றான். அதை ஏன் அப்போது சொல்கிறார் என அவனுக்குப் புரியவில்லை. “ஆனால் அவளை இதற்கு மேலே எப்பொறுப்புக்குக் கொண்டுசெல்வது?” என்று யுயுத்ஸு கேட்டான். சுரேசர் “ஒன்பதுவகைப் படைகளுக்கும் நடுவே ஒருங்கிணைப்பு தேவை. நமக்கு முன்பிருந்தவர்கள் நால்வகைப் படைகளுக்கும் தலைவர்கள். ஒன்பது படைகளுக்கும் தலைமை என ஒரு நிலையை உருவாக்குவோம். அரசர் அவளை அதில் அமர்த்தட்டும்” என்றார். யுயுத்ஸு திகைத்தவன்போல நின்றான். “ஏன்?” என்றார் சுரேசர். “பெண்ணா?” என்று யுயுத்ஸு கேட்டான். “பெண் கோட்டைத்தலைவர் ஆகக்கூடும் என்றால், ஏன் படைத்தலைமை கொள்ளக்கூடாது?” என்று சுரேசர் கேட்டார். யுயுத்ஸு “ஆம், இங்கே அவளை அவ்வண்ணம் நிலைநிறுத்தினால் தடைசொல்ல எவருமில்லை…” என்றான்.
“அஸ்தினபுரியின் தலைமைப்படைப் பொறுப்பில் ஒரு பெண் இருப்பது பேரரசி திரௌபதிக்கு உவப்பானது. அவர்கள் நகர்நுழைகையில் படைமுகப்பில் நின்று வாள்தாழ்த்தி வணங்குபவள் சம்வகை என்றால், அதைவிடப் பெரிய வரவேற்பு பிறிதில்லை” என்றார். யுதிஷ்டிரன் ஒருகணம் தத்தளித்து “ஆகுக!” என்றார்.
ஒரு பெண் தன்னைச் சமுதாயத்தின் முன்பாகப் ‘பேராற்றல் கொண்டவள்’ என்று நிறுவிக்கொள்ள எத்தனை முயற்சிகள் தேவைப்படுகின்றன! காலமும் சூழலும் கனிந்து அவளுக்கு அருளவேண்டியுள்ளது. அதுவரை பெண் காத்திருக்கத்தான் வேண்டும்தான்போல. அவ்வாறு காத்திருக்கும் பெண்கள் காலத்தோடு இணைந்து காணாமல்போவதும் உண்டு. சம்வகையைப் போல காலவோட்டத்தை எதிர்த்துத் தன்னை நிலைப்படுத்திக்கொள்வதும் உண்டு.
சக்ரர் அவளைச் சீற்றத்துடன் திரும்பித் திரும்பி நோக்கியபடிச் சென்றார். இடைநாழியின் விளிம்பை அடைந்ததும் “இதோ நீயே அதற்குச் சான்று. மாவீரர்கள் அணிந்த கவசத்தையும் வாளையும் சூடி நாணிலாது நின்றிருக்கிறாய். கலியுகத்தில் பெண்கோழி பறக்கும் என்கின்றன பாடல்கள்” என்றார். சக்ரர் வளை சீற்றத்துடன் திரும்பி திரும்பி நோக்கியபடி சென்றார். இடைநாழியின் விளிம்பை அடைந்ததும் “இதோ நீயே அதற்குச் சான்று. மாவீரர்கள் அணிந்த கவசத்தையும் வாளையும் சூடி நாணிலாது நின்றிருக்கிறாய். கலியுகத்தில் பெண்கோழி பறக்கும் என்கின்றன பாடல்கள்” என்றார்.
இத்தகைய ஆயிரம் எள்ளல்களையும் இளிவரல்களையும் தாண்டி நிற்கும் பெண்கோழிகளே பெரும் யானைக் கூட்டத்தை வழிநடத்தும் முதிய பெண்யானையாக மாறுகின்றன. அஸ்தினபுரியைப் புதிதாக ஒருங்கிணைக்கும் பெருஞ்செயலில் முன்னின்று வழிடத்திய பெண்யானையாகச் சம்வகையே இருக்கிறாள்.
இந்த நாவலைப் பொறுத்தவரை சம்வகைதான் ‘நாவல்நாயகி’. எளிய பெண்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பவர் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் என்பதை இந்தச் ‘சம்வகை’ என்ற நாவல்மாந்தரின் வழியாகவும் உணரமுடிகிறது.
ஒரு பெண் தலைமைப் பொறுப்பினை ஏற்கும்போது, அந்தப் பெண் தனக்குக் கீழேயும் தகுதியுடைய பெண்களையே பணியில் அமர்த்தி, பெண்குலத்திற்குப் பெருமை சேர்ப்பார் என்பதைக் காணமுடிகிறது. அதற்காக அந்தப் பெண் ஆண்குலத்தைப் புறக்கணிக்கிறார் என்று கருதவேண்டியதில்லை.
சம்வகை, “நாளை முதல் அஸ்தினபுரியின் கோட்டைத்தலைவியாக நீயே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்” என்றாள். உக்ரை திகைத்து “தலைவி?” என்றாள். “ஆம், சற்று முன்னர் அரசர் என்னிடம் பேசினார். அஸ்தினபுரியின் உருவாகிவரும் படைகளுக்கான தலைமையை என்னை ஏற்கும்படி கூறினார்” என்றாள் சம்வகை. “படைத்தலைவியாகவா?” என்றாள் உக்ரை. “ஆம், நாற்படைக்கும் தலைவியாக” என்று சம்வகை புன்னகைத்தாள். உக்ரை “இன்றுவரை நான்காம் குலத்து உதித்த ஒருவர் அப்பதவியை ஏற்றதில்லை” என்றாள். “நான்காம் குலத்தவர் இங்கு அரசியாகவே முன்னர் அமர்ந்திருக்கிறார். என் குலத்தவர்” என்று சம்வகை சொன்னாள். உக்ரை முகம் மலர்ந்து “நன்று, இதைப்போல் நிறைவளிக்கும் செய்தி பிறிதொன்றில்லை” என்றாள்.
சம்வகை அஸ்தினபுரியின் ஒன்பது படைகளின் தலைவியாக அமர்த்தப்பட்டபோது முதல் ஆணையாகச் சுஷமையை அரண்மனைக் காவல் பொறுப்புக்குக் கொண்டுவந்தாள். சுதமை கோட்டைக் காவல் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டாள். ஒன்பது காவல்படைகளையும் தன் பொறுப்பிலேயே மீண்டும் ஒருங்கிணைக்கலானாள். ஒன்பதில் ஏழு காவல் பொறுப்புகளுக்கு அவள் பெண்களையே நிறுத்தினாள். இரு காவல் பொறுப்புகள் ஆண்களுக்கு வழங்கப்பட்டன.
சம்வகை இந்த வெற்றியின் வழியாக அடையும் உவகையை ஒரு குறியீட்டின் வழியாக எழுத்தாளர் காட்டியுள்ளார்.
சம்வகை ஜலநிபந்தம் என்னும் சிறிய நகர்சதுக்கம் ஒன்றினூடாகச் செல்கையில் சிறுமியர் விளையாடிக்கொண்டிருக்கும் சிரிப்பொலியைக் கேட்டாள். அவர்கள் செம்மண் நிலத்தில் அரங்கு வரைந்து வட்டாடிக் கொண்டிருந்தனர். கண்களை மூடி தலையை அண்ணாந்து நெற்றிமேல் வைத்த பனையோட்டு வட்டுடன் ஒரு பெண் தாவி தாவிச் சென்றாள். ‘அரங்கின் கோடுகளுக்கு மேல் அவள் கால்கள் படுகின்றனவா?’ எனப் பிற சிறுமியர் நோக்கிக் கூச்சலிட்டனர். அவள் தாவி தாவிச் சென்று இறுதிக் கோட்டைக் கடந்து, குதித்து, வட்டை எடுத்தபின் “வென்றுவிட்டேன்! வென்றுவிட்டேன்!” என்று கூச்சலிட்டு குதித்தாள். அவளுடன் இணைந்த சிறுமியரும் கூச்சலிட்டனர். சிறுபறவைகளின் ஓசைபோல அச்சிரிப்புகளும் கூச்சல்களும் கேட்டன. சம்வகை மலர்ந்த முகத்துடன் நோக்கியபடிச் சென்றாள்.
அந்தச் சிறுமி ஒவ்வொரு கட்டமாகத் தாவி தாவி இறுதிக் கோட்டைக் கடந்து இலக்கினை அடைகிறாள். சம்வகையும் தன் வாழ்வில் ஒவ்வொரு பொறுப்புநிலையையும் அடைந்து, வென்று, கடந்து அடுத்த நிலைக்கு முன்னேறி, தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறாள். இங்கு அந்தச் சிறுமி பெறும் உவகையைத்தான் சம்வகையும் தன் அகத்தினுள் பெறுகிறாள். சிறுமியால் அந்த வெற்றியை வெளிப்படையாகக் கொண்டாட முடிகிறது. சம்வகையால் இயலவில்லை. அவள் தன் வெற்றியைப் பகிர்ந்துகொள்ள அவளுக்கென யாரும் இல்லை.
அவள் வெளியே பொழிந்துகொண்டிருந்த இளவெயிலை நோக்கியபடி நின்றாள். அவளுக்குள் எந்த எண்ணமும் எழவில்லை. இத்தருணத்தில் உவகை கொள்ளவேண்டுமா என்ன? இது தன் குலத்தோர் தலைமுறை தலைமுறைகளாகக் காத்திருந்த தருணமாக இருக்கலாம். இப்போது விண்ணுலகில் அவர்கள் மகிழ்ந்து கொண்டாடலாம். காற்றில் அவர்களின் வாழ்த்துகள் நுண்வடிவில் நிறைந்திருக்கலாம். இப்போது தந்தை இருந்திருந்தால் என்ன செய்வார்? அழுது தளர்ந்து விழுவார். மூதாதையரின் இடுகாட்டுக்குச் சென்று மண்படிய விழுந்து வணங்குவார். தன் குடியினர் தெருவெங்கும் நிறைத்து களியாடுவார்கள். ஆனால், எவருமே அஸ்தினபுரியில் எஞ்சியிருக்கவில்லை.
‘தன் வெற்றியைக் கொண்டாட தனக்கென யாரும் இல்லை’ என்ற நிலை, அந்த வெற்றியால் அடைந்த பெருங்களிப்பினை வறண்டுவிடச் செய்கிறது. சம்வகைக்கும் இந்த நிலையே ஏற்படுகிறது. அவளின் தனிப்பெரும் வெற்றிகளைக் கொண்டாட அவளுக்கென யாருமே இல்லை. இது ஒரு முரண்நகைதான். பெரும்பாலும் முரண்நகையால் மட்டுமே முன்னகரும் வாழ்வுதான் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்த்துவிடுகிறது.
சம்வகை தன்னை எவ்வாறு இந்நிலைக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டாள்? அவள் எவ்வாறு தன்னுடைய ஆளுமையை இவ்வாறு வகுத்துக்கொண்டாள்? என்பதற்கான பதில்கள் அவளின் வாய்மொழியின் வழியாகவே இந்த நாவலில் இருந்து அறியமுடிகிறது.
சம்வகை உக்ரையிடம், “நெருக்கடிகளினூடாகவே நாம் நம்மைக் கண்டுகொள்கிறோம். நம்மை ஒவ்வொரு நாளும் கலைத்து மீண்டும் அடுக்கிக் கொள்கிறோம். ஒருவரின் அகமென்பது அவரே இயற்றிக்கொள்வதே. ஒருவர் சொல் சொல்லெனச் சேர்த்து தன் வாழ்க்கையை ஒரு நூலென யாத்துக் கொள்கிறார் எனத் தோன்றுகிறது. நான் என்னை அவ்வாறு உருவாக்கிக்கொண்டேன்”
ஒருவர் தன்னை இவ்வகையில் அன்றிப் பிறிதெப்படி உருவாக்கிக்கொள்ள முடியும்? இந்த நாவலைப் பொறுத்தவரை சம்வகை ஒரு ‘லட்சியப்பெண்’. சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு ஒரு முன்மாதிரி.
பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சொற்களை, தற்காலத்தில் வழக்கொழிந்துவிட்ட சொற்களைத் தம் நாவல்களில் பயன்படுத்துவதன் வழியாக, அந்த நாவல்களைச் ‘செவ்வியற்தன்மை கொண்டவை’ என்று எழுத்தாளர் பறைசாற்றுகிறாரா? என்று வாசகருக்கு ஐயம் எழலாம். அந்த ஐயம் தவறானது.
‘கப்பரை’ என்ற சொல்லை எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் வெண்முரசு’ தொடர்நாவல்களில் குறிப்பிட்டுள்ளார். ‘கப்பரை’ என்பது, இரப்போர்க்கலம், திருவோடு, பிச்சைக்கலம், மட்கலம், திருநீற்றுக்கலம், கிடாரம் என்றெல்லாம் பொருள்படும்.
அதனூடாக அவருக்கு ஒரு பெயரைச் சூட்டுவார்கள். அப்பெயரில் அவரை அடைத்தபின் அவர் கப்பரையுடன் தெருக்களில் வந்தால் இயல்பாகக் கடந்துசெல்ல முடியும்.
‘கப்பரை’ என்ற சொல் வழக்கொழிந்த சொல்லா? இல்லை. அதற்கு இரண்டு நடைமுறைச் சான்றுகளைக் கூற விரும்புகிறேன்.
ஒன்று – திருப்பரங்குன்றம் அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவில் ‘கப்பரை விழா’ நடைபெறுகிறது.
இரண்டு – காரைக்கால் உஜ்ஜைனி காளியம்மன் கோவிலில் பங்குனி உத்ஸவத்தை முன்னிட்டு, ‘அக்னி கப்பரை வீதியுலா’ இரவில் நடைபெறுவது வழக்கம். அந்தக் கப்பரை பல வீடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு விடியலில் மீண்டும் கோவிலுக்கே கொண்டு வரப்படும். அக்னிக் கப்பரை வீடுகளுக்கு வருவது அம்மனே அக்னி வடிவில் வீட்டுக்கு வருவதாகக் கருதுவர்.
‘வற்கடம்’ என்ற சொல்லினை எழுத்தாளர் வெண்முரசு தொடர் நாவல்களுள் சிலவற்றில் பயன்படுத்தியுள்ளார்.
அரசிழந்து மீண்டும் கானகங்களில் கன்றோட்டும் குடிகளானோம் என்றால், வற்கடமும் காட்டெரியும் நம் குழவியரைப் பலிகொள்ளும். (எழுதழல்).
அந்தணன் அவர்களிடம் வந்தான். வற்கடம் சூழ்ந்த காமரூபத்தின் அரசன் மழைமங்கலம் வேண்டி ஒரு சௌரவேள்வியை நிகழ்த்தும்பொருட்டு பெருஞ்செல்வத்தை அளித்திருப்பதாகவும் அவ்வேள்வியை இளையோர் இருவரும் முன்னின்று நடத்தவேண்டும். (மாமலர்)
‘ஆம்!’ என்கிறது பொறுமையிழந்த தெய்வம். பலிகொள்ளத் தொடங்குகிறது. போரென்றும் பிணியென்றும் வற்கடம் என்றும்… (இருட்கனி)
உண்ணிகளும் உயிர் இழப்பதுபோல் அரசன் லோமபாதனை அந்தணர் தீச்சொல்லிட்டு ஒழிய அங்க நாட்டில் வற்கடம் பரவியபோது அதிபலனும் வறுமையுற்றான். அவன் கருவூலங்களில் இருள் மண்டியது. (இருட்கனி)
அவ்வன்னை அருகிருந்த சிற்றூர் ஒன்றில் வாழ்ந்தவள். வற்கடம் வந்து அவ்வூர் மக்கள் புறப்பட்டுச் சென்றபோது அவள் கருவுற்றிருந்தாள். (களிற்றியானை நிரை).
‘வற்கடம்’ என்றால், வறட்சி, பஞ்சம் என்று பொருள்.
“நீ செல்லும் நீண்டவழியில் வற்கடமான காலத்தை நினைக்கையினாலும்”
(கலித். 3, உரை).
“பாண்டிநன்னாடு பன்னிரு யாண்டு வற்கடஞ் சென்றது “
(இறை.1, உரை, பக். 6).
நாட்டில் பருவகாலங்களில் சரிவர மழை பெய்யா விட்டால் வறட்சி, பஞ்சம் ஏற்படும். அந்த வறட்சியைத்தான் பழங்காலத்தில் ‘வற்கடம்’ என்று குறிப்பிட்டார்கள்.
“வைய மெங்கும் வற்கடமாய்ச்
செல்ல, வுலகோர் வருத்தமுற
நையு நாளிற், பிள்ளையார் தமக்கு
நாவுக் கரசருக்கும்”
என்னும் பாடலில், இந்த உலகத்தில் எல்லா இடங்களிலும் ‘வற்கடம்’ என்னும் பஞ்சம் ஏற்பட்டு மக்களை வருத்துகிறது. அந்த நேரத்தில் திருவீழிமிழலையில் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தங்கி இருக்கிறார்கள். மக்களின் பஞ்சம் இவ்விரு நாயன்மார்களையும் வருத்துகிறது. இவர்களின் வருத்தத்தைப் போக்க, இறைவனே தினமும் இரண்டு பொற்காசுகளைக் கோவிலில் வைப்பதாக, கனவில் வந்து கூறுகிறார். அந்தக் காசுகளின் உதவியால், அடியார்களுக்கு நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் உணவு கொடுத்து பஞ்சம் போக்கியதாக, பெரியபுராணம் கூறுகிறது.
பல்லவ அரசர் நரசிம்ம வர்மன் காலத்தில் (கி.பி.630 முதல் – 668 வரை) பல போர்கள் நடந்தன. சாளுக்கிய அரசரான இரண்டாம் புலிகேசி, பலமுறை பல்லவ நாட்டின் மீது போர்த் தொடுத்தார். அந்தப் போர்களில் அவரை எதிர்த்து நரசிம்ம வர்மன் வெற்றி பெற்றார். நரசிம்மவர்மன் புலிகேசியின் தலைநகரமான வாதாபி நகரைத் தாக்குவதற்குச் சேனையைத் திரட்டிச் சென்று, அந்த நகரைத் தீக்கரையாக்கினார்.
சாளுக்கியருடன் நிகழ்ந்த போர்கள் அன்றி, சோழர், பாண்டியர், சேரர்களுடனும் போர் செய்தார். இப்படி அடிக்கடி பல்லவ நாட்டில் நடைபெற்ற போர்களின் காரணமாகப் பொருள் நெருக்கடி ஏற்பட்டது. அத்துடன் மழையும் பெய்யாமல் ‘வற்கடம்’ உண்டாயிற்று. நரசிம்ம வர்மன் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப் பற்றி,
“தப்பில் வானம் தரணி கம்பிக்கி லென்
ஒப்பில் வே ந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்பமாஞ் சேறை ச் செந்நெறி மேவிய
அப்பனாருளர்; அஞ்சுவ தென்னுக்கே !”
நாட்டில் அரசர்கள் சீறிப் போர் செய்தையும் மழைபெய்யாமல் பஞ்சம் உண்டானதையும் குறிப்பிடுகிறார், தேவாரத்தில் திருநாவுக்கரசர். மா. இராசமாணிக்கம் எழுதிய ‘பல்லவர் வரலாறு’ என்னும் நூலிலும் இராஜசிம்மன் (பல்லவன்) காலத்தில் (கி.பி. 686 முதல் – கி.பி. 689 வரை) மூன்று ஆண்டுகள் கடுமையான பஞ்சம் ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.
இந்தப் பஞ்சத்தை இராஜசிம்மனின் அவைக்களப் புலவர் தண்டி, ‘வற்கடத்தால், கற்றோரும் பிறரும் நாடெங்கும் அலைந்து திரிந்தனர். குடிகள் பெருந்துன்பத்தில் உழன்றனர். சாலைகள் சீர்கெட்டுக் கிடந்தன. குடும்பங்கள் நிலைகெட்டன. அரசியல் நிலை தடுமாறிற்று’ என்று ‘அவந்தி சுந்தரி கதா’ என்னும் நூலில் கூறியுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
பாண்டிய நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் வற்கடம் தோன்றியது. அதனால் தமிழ்ப் புலவர்கள் பாண்டிய நாட்டை விட்டுச் சென்றனர். மழை பெய்து வளமை வந்தவுடன் பாண்டிய அரசன் உக்கிரப்பெருவழுதி, புலவர்களைத் தன் நாட்டிற்குள் அழைத்துக்கொண்டதாகவும் ‘இறையனார் களவியலுரை’ என்னும் நூல் குறிப்பிடுகிறது.
‘பொக்கணம்’ என்ற சொல்லை எழுத்தாளர் இந்த நாவலில் இரண்டு இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.
தெருக்களினூடாக மக்கள் திரள் பொக்கணங்களுடனும் குழந்தைகளுடனும் செல்லும் காட்சியே ‘செல்க! செல்க!’ என்னும் அறைகூவலாக ஒவ்வொருவருக்கும் அமைந்தது.
அவர் தன் கிணைப்பறையையும் சுவடிப்பேழையையும் பொக்கணத்தையும் கழியையும் அருகிலேயே வைத்திருந்தார். அவருடைய குரல் மேடைகளுக்காகத் தீட்டப்பட்டது. எனவே, அனைவரும் அமைதி அடைந்தனர்.
‘பொக்கணம்’ என்றால், ‘சிறுபொதி’ என்று பொருள். மூட்டை, சாக்கு, கஞ்சுளி, பொக்கணந்தூக்கி, போக்கணம், பொட்டலம், பொட்டணம், சோழியப்பை, கஞ்சுளி, பரதேசிகள் பிச்சை ஏற்கும் பை என்றும் இச்சொல் பொருள் கொள்ளப்படுகிறது.
மாணிக்கவாசகர் தமது திருக்கோவையாரில் 242 ஆம் செய்யுளில் இந்தச் சொல்லினைப் பயன்படுத்தியுள்ளார்.
சுத்திய பொக்கணத் தென்பணி
கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி
யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு
மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு
மோவோர் பெருந்தகையே.
நவீனச் செவ்வியல் நடையில் எழுதப்பட்ட இந்த வெண்முரசு’ நாவல் தொடரில், ‘கப்பரை’, ‘வற்கடம்’, ‘பொக்கணம்’ போன்ற சொற்களை எழுத்தாளர் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியதே. பழந்தமிழ்ச் சொற்கள் வாழ்வதும் நிலைகொள்வதும் தலைமுறையினரின் நினைவிலும் நாவிலும் இலக்கியங்களிலுமே! அந்த வகையில் ‘வெண்முரசு’ அவற்றுக்குரிய இலக்கியப் பெருங்களம் என்பேன்.
அஸ்தினபுரியிலிருந்து மக்கள் புலம்பெயர்தலும் பிற நாடுகளிலிருந்தும் ஊர்களிலிருந்தும் அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்துக்கும் மக்கள் குடியேறுதலும் மக்களைக் கட்டாயக் குடியேற்றம் செய்வதும் அவர்களை அந்த நிலத்தில் நிலைத்திருக்கச் செய்ய பல்வேறு திட்டங்களை உருவாக்குதலுமாக நீள்கிறது இந்த நாவல்.
அவற்றின் ஊடாகவே, அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் மீண்டும் பழைய உருவினை அடைகின்றன. மற்றொருபுறம் அவற்றின் பழைய உருவினை முற்றிலும் மாற்றும் வகையிலும் சில திருத்தங்களைச் செய்கின்றனர். குருஷேத்திரப் போர் பற்றிய நினைவுகள் அனைத்தும் மக்களின் ஆழ்மனத்திலிருந்து அழிவதற்குரிய செயல்களையும் செய்கின்றனர்.
புலம்பெயர்தலும் குடியேற்றமும் இந்த நாவலில் அடிப்படைக் கதைத்தளமாக அமைந்துவிட்டன. குறிப்பாக, புலம்பெயர் மக்களின் மனநிலை இந்த நாவலில் விரிவாகக் காணமுடிகிறது. ஆதன் ஊர்முதல்வரான முதுசாத்தனைச் சென்று பார்க்கிறான். அந்தக் காட்சியில் புலம்பெயரா மக்களைப் பற்றி முதுசாத்தன் ஒரு கருத்தினைத் தெரிவிக்கிறார்.
அவர் அவனிடம், “பதியெழு அறியா பழங்குடிகளிலேயே நெறி திகழ முடியும். நிலைக்கோளே நெறி. நிலைகொள்வதே நிலம்.” என்கிறார்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் “பதியெழு வறியாப் பழங்குடி” என்ற சொற்தொடரைப் பயன்படுத்தியுள்ளார்.
“பொதியி லாயினும் இமய மாயினும்
பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்
நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை
ஒடுக்கங் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே!.”
(சிலப்பதிகாரம், மங்கலவாழ்த்துப் பாடல்)
“தான் வாழுகின்ற ஊரிலிருந்து பிழைப்பிற்காக வெளியே செல்வதை அறியாத பழங்குடியினர்’ என்பது அதற்கான பொருள். பிறந்த இடத்திலிருந்து வாழ்வதுதான் வாழ்க்கை; அதுவே உயர்ந்த வாழ்க்கை எனப் போற்றிக் கொண்டாடுகின்ற முறையில் சங்க இலக்கியத்தில் இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது” என்கிறார் க. பஞ்சாங்கம்.
“நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண்டு உருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
பதியெடு அறியாப் பண்புமேம் பட்ட
மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு”
(சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை பாடல்)
என்ற பாடலடிகளில் இளங்கோவடிகள் கோவலனின் கருத்தாகச் சிலவற்றை உரைத்துள்ளார்.
நாட்டுக்குப் பல செல்வத்தைத் தருவதும் மக்களுக்கு நிழலாக விளங்குவதும் ஆகிய அருளாட்சி முறையைக் கடமையாகக் கொண்டு சிறிதும் வழுவாது ஆள்பவர் பாண்டியர். அவர்தம் சிறப்புமிக்க செங்கோலாட்சியும் குடையின் தன்மையும் வேலின் வெற்றியும் உலகெங்கும் புகழுடன் விளங்கும் தன்மையுடையன. பாண்டியரின் தலைநகரமான மதுரையோ எனின் அங்குள்ள மக்கள் பிழைப்புக்காக வேறு ஊர் செல்லுதலையறியாதவாறு செல்வத்தாலும் பிறவற்றாலும் மேம்பட்ட சிறப்புடையது என்கிறான் கோவலன்.
பழந்தமிழகத்தின் எல்கை இந்த நாவலில் சுட்டப்பட்டுள்ளது. அது, புறநானூற்றுப் பாடல் குறிப்பிடும் தமிழக எல்கைக்கு ஒத்துள்ளது.
ஆதன் நகைத்து “எங்கு?” என்றான்.
“பாரதவர்ஷத்திற்கு” என்று அழிசி சொன்னான். “சரி, நீ எங்கிருந்து வருகிறாய்?” என்றான்.
“நான் பாண்டி நாட்டிலிருந்து வருகிறேன்… மதுரைக்குக் கிழக்கே” என்றான்.
“மதுரை எங்கிருக்கிறது?” என்றான் ஆதன்.
“நீர்வழிபாட்டுக்கு நீ கற்ற பழம்பாடல் இருக்குமே, சொல்!”.
அவன் கண்களை மூடி எண்ணி நோக்கி, “வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற்கட்டின் நீர்நிலை நிவப்பின்…” என்று சொல்லி நிறுத்தி “மதுரையும் பாரதவர்ஷமே” என்றான்.
அவர் குறிப்பிடும் இந்தப் பழம்பாடல் புறநானூற்றில் உள்ளது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி யாகசாலைகள் பல நிறுவி, யாகங்கள் செய்தவன். இவனை வாழ்த்தும் சான்றோர் “பஃறுளியாற்று மணலினும் பல யாண்டு வாழ்க” என வாழ்த்துதலால், இவன் குமரிக் கோடும் பஃறுளியாறும் கடல் கொள்ளப்படுதற்கு முன்பே நம் தமிழகத்தில் இருந்தது என்பதை அறிய முடிகிறது. இப்பாண்டியனைப் பாடும் காரிகிழார் காரியென்னும் ஊரினர். இவ்வூர் தொண்டை நாட்டிலுள்ள தென்றும், இப்போது இதற்கு ‘இராமகிரி’ என்று பெயர் வழங்குகிற தென்றும் கூறுவர்.
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற்கட்டின்
நீர்நிலை நிவப்பின் கீழு” (புறநானூறு, 6)
“வடக்கின் கண்ணது பனிதங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்; தெற்கின் கண்ணது உட்குந்திறம்பொருந்திய கன்னியாற்றின் தெற்கும்; கீழ்க்கண்ணது கரையைப் பொருகின்ற சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும்; மேல்கண்ணது பழையதாய் முதிர்ந்த கடலின் மேற்கும்; கீழதாகிய; நிலமும் ஆகாயமும் சுவர்க்கமுமென மூன்றுங் கூடிய புணர்ச்சியாக அடுக்கப்பட்ட அடைவின்கண் முதற்கட்டாகிய; நீர்நிலைக்கண் ஓங்கிய நிலத்தின் கீழும்” என்று பொருள்படும்.
இப் பாடலில், ஆசிரியர் காரிகிழார் பாண்டியனை நோக்கி, “வேந்தே, நினக்கு எல்லா உலகினும் உருவும் புகழும் உண்டாகுக. நின் கோல் ஒருதிறம் பற்றாது நடுநிலை நிற்க. நின் படைகுடி முதலியன சிறக்க. பகைப்புலத்து வென்ற நன்கலங்களைப் பரிசிலர்க்கு வழங்கியுயர்வதோடு முக்கட்செல்வம் நகர்வலம் செய்தற்கண் நின் குடை பணிக. நான்மறை முனிவர் கைகவித்து வாழ்த்துங்கால் நின் சென்னி தாழ்க. பகைப்புலத்துச் சுடுபுகையால் நின் கண்ணி வாடுக. மகளிர் கூட்டத்திற் சினமின்றி மெல்லியனாகுக. மதியமும் ஞாயிறும் போல இந்நிலமிசை மன்னுவாயாக” எனச் சொல்லி வாழ்த்துகின்றார்.
“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணா.அது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்”.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிய புலவர் மாங்குடி மருதனாரும் தம்முடைய மதுரைக் காஞ்சியில் அந்த இரண்டு எல்லைகளையே கூறியுள்ளார் என்பது இங்குக் கருதத்தக்கது.
முதியவர் “அவ்வண்ணம் அனைத்தையும் உதறிவிட்டுச் செல்ல நாங்கள் சித்தமாகப் போவதில்லை” என்றார். “நாங்கள் எங்களூரில் இருந்து கிளம்பியது நிலம்கொள்ளத்தான். ஆனால், அதன்பொருட்டு ஆயருக்கும் பாலைநிலத்து நாடோடிகளுக்கும் அடிபணிந்து வாழ எங்களால் இயலாது.” ஆதன் “எவரும் எவருக்கும் அடிபணிய வேண்டியதில்லை” என்றான். “புதிய வேதம் எவரும் எவருக்கும் கீழல்ல என்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பனைத்தும் செய்தொழிலால் மட்டுமே என்கிறது. இளைஞன் “நீர் அதை அறிவீரா? கற்றறிந்தீரா?” என்றான். “இல்லை, ஆனால், அதை என்னால் உணரமுடிகிறது” என்றான் ஆதன்.
இங்கு ஆதன் குறிப்பிடும்,
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
என்ற அடி திருக்குறளில் உள்ளது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (திருக்குறள், 972)
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
திருவள்ளுவர் கொண்டிருந்த அதே மனநிலையை ஆதனும் தன்னுள் கொண்டிருந்தான் என்பதை இதன் வழியாக உணரமுடிகிறது.
இந்த நாவலில் ஆதனும் அழிசியும் நெடும்பயணிகளாக இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு அஸ்தினபுரி ஒரு பெருங்கனவு. அந்தக் கனவு நகருக்குச் செல்லும் அவர்களின் நெடும் பயணத்தின் வழியாக இந்த நாவல் அஸ்தினபுரியின் இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து இணைத்துக் கூறியுள்ளார் எழுத்தாளர்.
‘மக்களுக்காவே அரசு’ என்ற கொள்கையை மக்கள் பேசும் மொழியைக் கொண்டே நிறுவியிருக்கிறார் எழுத்தாளர். மக்களின் மொழியே அரசின் மொழியாக இருக்க முடியும். அரசுக்கும் மக்களுக்குமான பாலமாக ‘மக்களின் மொழி’யே இருக்க இயலும்.
சம்வகை அவர் விழிகளை ஏறிட்டு நோக்கி “இல்லை அரசே, நீங்கள்தான் இவர்களின் மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும்” என்றாள். அவர் அந்த நேர்மொழியில் திகைத்து “ஏன்?” என்றார். “அவர்களைப் புரிந்துகொள்ளும் பொறுப்பு இருப்பது உங்களுக்கே” என்று அவள் சொன்னாள். “இந்த மொழி இந்நகருக்கென உருவாகி வந்தது. இதுவே இனி இந்நகரின் மொழியாகத் திகழப் போகிறது. இதைத் தெய்வங்கள் உருவாக்கியிருக்கின்றன. இத்தருணத்திற்காகப் பிறந்து வந்துள்ளது. இதை அழிக்கவோ, மாற்றவோ மானுடரால் இயலாது.” யுதிஷ்டிரன் அவளைச் சில கணங்கள் உற்று நோக்கிவிட்டு, திரும்பி கீழே பெருகிச்சென்று கொண்டிருந்தவர்களை நோக்கியபடி “மெய்” என்றார். பின்னர் “புதிய வேதம் திகழும் மேடைபோலும் இந்த மொழி” என்றார்.
‘எந்த அரசும் மக்களின் மீது ஒரு மொழியைத் திணிக்க முடியாது’ என்பதை இந்தப் பகுதியின் வழியாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
உவமைகளும் படிமங்களும் கலந்த எழுத்துநடை எப்போதும் பேரழகு கொண்டதே! அது எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களுக்கு எப்போதும் கைக்கொடுக்கிறது. அதற்கு மூன்று சான்றுகளைச் சுட்ட விரும்புகிறேன்.
சான்று – 01
சம்வகை நெடுந்தொலைவில் முதல் கொம்பொலியை மிக மெல்லிய செவித் தீற்றலெனக் கேட்டாள். அது வானில் ஒரு பறவை புகைத் தீற்றலென, ஒளிச்சுழல்கை என வளைந்து செல்லும் அசைவுபோல் அவளுக்குத் தோன்றியது. அவளைத் தவிர அங்குக் காவல்மாடத்தில் நின்றிருந்த எவரும் அதைக் கேட்கவில்லை. அவள் மீண்டுமொரு கொம்பொலி எழுவதற்காக விழியும் செவியும் கூர்ந்தாள். அவ்வொலியைத் தன் விழிகளால் பார்த்ததாக அவளுக்குத் தோன்றியது.
சான்று – 02
அன்னையர் ஆலயங்கள் அனைத்தும் வாயில் திறந்து அகல்சுடர் ஒளியில் தெய்வத் திருவுருக்கள் அலைகொண்டமைய, விழிதொடும் தொலைவுவரை வளைந்து தெரிந்தன. அவற்றின் சிறு குவைமாடத்தின் உச்சியில் அவ்வன்னையரின் அடையாளங்கள் கொண்ட கொடிகள் காற்றில் துடிதுடித்தன. பீதர்நாட்டு நெய்விளக்குகள் அமைந்த கல்தூண்கள் ஒற்றை மலர்சூடிய மரங்கள் என நிரைவகுத்திருந்தன. அப்பால் கிழக்குக் காவல்மாடத்தின் முரசுக்கொட்டில் வானில் மிதந்ததுபோல் செவ்வொளியுடன் தெரிந்தது.
சான்று – 03
தொலைவில் பீதர்நாட்டு எரிமருந்து நிறைக்கப்பட்ட பூத்திரிகள் சீறி எழுந்து வானில் வெடித்து மலர்களென விரிந்து அணைந்தன. அவற்றின் ஓசை சற்று நேரத்திற்குப் பின் வந்து மலர்மொக்கு உடைவதுபோல செவிகளில் விழுந்தது. கோட்டை மேலிருந்த காவல்வீரர்கள் தங்கள் படைக்கலங்களைத் தூக்கி வீசி ஆர்ப்பரித்தனர். பெருமுழவுகள் உறுமத் தொடங்கின. ஒன்று தொட்டு ஒன்றென நகரெங்கும் முரசுகள் ஓசையிட, தெருக்களில் நிறைந்திருந்த மக்கள் உடன் இணைந்து ஒலியெழுப்பினர்.
எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களின் எழுத்துகளில் எப்போதும் ஓரிடத்திலாவது ஒரு புதிய சிந்தனைத் தெறிப்பு இருந்துகொண்டே இருக்கும். இந்த நாவலிலும் அதுபோன்ற தெறிப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. என்னை ஈர்த்த ஒரு தெறிப்பினைப் பின்வருமாறு சுட்டியிருக்கிறேன்.
அவர்கள் அனைவருமே உச்சநிலை கள்மயக்கிலிருந்தனர். “ஒரு தெய்வம் எழுந்து இத்தலையை எடுத்து இவன் உடலில் பின்னோக்கிப் பொருத்தி வைத்தால் என்ன ஆகும்? இவன் விலகிச்செல்லும் இடங்களுக்கே சென்று சேர்வான். நோக்க விரும்பாதவற்றை நோக்குவான். எப்போதும் கடந்துசெல்ல வேண்டிய உலகில் வாழ்வான்” என்று அவன் கூற, சிரிப்பொலி அந்தப் புகைசூழ்ந்த வெம்மையான அறையை நிறைத்தது.
அஸ்தினபுரியை மீட்டெடுக்கவே அஸ்வமேதமும் ராஜசூயமும் தர்மருக்குத் தேவையாக உள்ளன. ஆட்சி, அரசியல் மாற்றங்கள் வணிக, பொருளாதார மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைகின்றன. அவற்றைப் பல்வேறு காட்சிச்சித்தரிப்புகளின் வழியாக எழுத்தாளர் இந்த நாவலில் கட்டியுள்ளார். மிக விரைவாகவே அஸ்தினபுரி மீண்டெழுகிறது.
அத்தனை விரைவாக அந்நகர் மீண்டெழுமென்று அப்பணிகளைத் தொடங்கியபோது அவள் எண்ணவே இல்லை. யுதிஷ்டிரன் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் சினம் கொண்டு விசையூட்டிக்கொண்டே இருந்தார். “அவர் என்ன எதிர்பார்க்கிறார்? ஒரு முழு நகரையும் ஏழெட்டு நாட்களில் திருப்பிக்கட்டுவதா?” என்று அவள் சொன்னாள். “இயலும், மீண்டெழுபவை மிகமிக விரைவாகவே எழுந்திருக்கின்றன” என்று சுரேசர் சொன்னார். “நம்மிடம் செல்வம் உள்ளது. கைகள் உள்ளன. காலம் ஒரு பொருட்டா என்ன?” அவள் எண்ணியதைவிட பலமடங்கு விசையுடன் அப்பணி நடந்தது. ஒவ்வொரு பணிக்கும் பத்துப்பேர் செய்யவேண்டிய இடத்தில் நூறுபேர் வந்தமர்ந்தனர். நூறு பேரும் திறன் மிக்கவர்களாக, அத்துறையில் தேர்ச்சிமுதன்மை கொண்டவர்களாக இருந்தனர். அஸ்தினபுரி தன்னைத் தானே பழைய அஸ்தினபுரியிலிருந்து கீறி, வெளியே எடுத்துக்கொண்டது.
பாரதவர்ஷத்தின் அதிகார மையமாக அஸ்தினபுரியை நிலைநிறுத்துவதே பாண்டவர் தரப்பினருக்கு விடுக்கப்பட்ட முதல் அறைகூவல். அதை நோக்கியே பாண்டவர்கள் முனைப்புடன் செயலாற்றுகிறார்கள். அஸ்வமேத யாகத்தின் பொருட்டு, திசைக்கு ஒருவராக நான்கு திசைகளுக்கும் வேள்விக்குதிரைகளைப் பின்தொடர்ந்து செல்கின்றனர் பாண்டவர்கள். அவர்களின் பயணவெற்றி குறித்துச் சுரேசர் பின்வருமாறு கூறுகிறார்.
“அரசே, நமது நான்கு படைகள் பாரதவர்ஷத்தை ஊடுருவியிருக்கின்றன. இதுவரை நூற்றிப்பதினேழு நாடுகளை அவை கடந்துள்ளன. ஓர் இடத்தில்கூட போர் என ஏதும் நிகழவில்லை” என்று சுரேசர் சொன்னார். “நம் நகரின் பெயரே ஒரு பெரும் படைக்கலம். நம்மை அஞ்சாதவர்கள் எவரும் இங்கில்லை. இனி, நெடுங்காலம் அது அவ்வண்ணமே இருக்கும்.”
யுதிஷ்டிரன் புன்னகைத்தார். அவருடைய சோர்வு அகன்றதைச் சம்வகை கண்டாள். அவர் “ஆம், அதைத்தான் நான் விந்தையென எண்ணிக் கொண்டிருந்தேன். இளையோர் வென்றவை தொலைநாடுகள். சகதேவன் தெற்கே மலைகளையும் நதிகளையும் காடுகளையும் கடந்து சென்றிருக்கிறான். அங்கெல்லாம்கூட நம் மீதான அச்சம் சென்றடைந்திருக்கிறது” என்றார். “நாம் குருக்ஷேத்ரத்தில் வென்றது பாரதவர்ஷத்தைத்தான்” என்று சுரேசர் சொன்னார். “மெய், அதை இங்கிருக்கையில் ஒவ்வொரு செய்தியிலும் உணர்கிறேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.
வேள்விக்குதிரைகளைப் பின்தொடர்ந்து சென்ற தர்மரின் தம்பியர் நால்வரும் தன் அண்ணன் தர்மருக்கு நான்கு திசைகளிலிருந்தும் அரிய, நான்கு விதமான பரிசுப் பொருட்களைக் கொண்டுவருகிறார்கள். அந்தப் பொருட்கள் தருமரின் அகவயமான அறஊசலாட்டத்தை மேலும் மேலும் மிகுவிக்கின்றன.
பாண்டவர் நால்வரும் நான்கு திசைகள் எனில், முதற்பாண்டவரான தர்மர் அந்த நான்கு திசைகளுக்கும் மையமாகத் திகழ்கிறார் எனலாம். நான்கு திசைகளையும் தன்னை நோக்கி இழுத்து, மையத்திசையாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தர்மர் பெரிதும் பாடுபடுகிறார். தர்மர் படும் இந்த அகத் தடுமாற்றங்கள் அனைத்தும் எதற்காக? அதற்குரிய விடையைத் தர்மரே (யுதிஷ்டிரன்) கூறுகிறார்.
யுதிஷ்டிரன் “உண்மையில் நான் பாரதவர்ஷத்தைத் தொகுக்கிறேன். பாரதவர்ஷம் முழுக்க வணிகம் ஒருங்கிணைய, நெறிகள் முறைமைப்பட, நூல்கள் தொகுக்கப்பட வழிவகுக்கிறேன். பாரதவர்ஷம் விராடவடிவமென எழுந்து நிற்பது என் கோல் வழியாகவே. இது என் கோல் மட்டுமல்ல, இளைய யாதவரின் சொல்லும் கூட. அவருடைய சொல் கூட அல்ல, அவருடைய குருமரபின் சொல். அந்த குருமரபோ காடுகளைக் கொந்தளிக்கச் செய்த வேதமுடிபுக் கொள்கைகளின் விளைகனி. என் வழியாக வேதமுடிபுக்கொள்கையே இந்நிலத்தை வென்று ஆட்கொள்கிறது. வேதம் ஆண்ட நிலத்தை இனி, வேதமுடிபே ஆளும்.”
தர்மர் அஸ்தினபுரி பற்றிப் பிறிதொரு வேளையில்,
“நகரில் நுழைபவர்கள் இந்நகர் தங்களைக் காக்குமென இனி உணரவேண்டியதில்லை. இந்நகரை தாங்கள் காக்கவேண்டும் என உணரட்டும். ஒரு படைக்கலநிலைக்குள் நுழைவதாக அவர்கள் உணரலாகாது, ஒரு கல்விநிலைக்குள் நுழையும் உளநிறைவை அவர்கள் அடையவேண்டும்” என்றார்.
இதே மனவோட்டத்தை நாம் சம்வகையிடமும் காணமுடிகிறது.
சம்வகை உக்ரையிடம், “எந்நகரில் கல்வி சிறக்கிறதோ அதுவே உண்மையில் வெல்லும் நகர். கல்வியினூடாகவே மெய்யான புகழ் நிலைநிறுத்தப்படுகிறது. ஒரு நகர் சுழன்றுகொண்டிருக்கும் மத்துபோல. இப்பாற்கடலில் அது எதை கடைந்தெடுக்கிறது என்பதே அதன் மதிப்பு. அஸ்தினபுரி சொல்லின் நகராக மாற வேண்டும். சொல் திகழவேண்டுமெனில் படைக்கலம் அதற்கு காவலாக இருக்க வேண்டும். அச்சொல் மெய்மையை சென்றடைய வேண்டும் என்றால் அதில் குருதி படிந்திருக்கலாகாது” என்றாள்.
இந்த நாவலில் சத்யபாமையின் ஆளுமை மிகக் கூர்மையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் எடுக்கும் முன்முடிவுகள் அனைத்தும் தேர்ந்த ராஜதந்திரிக்குரியனவாகவே இருக்கின்றன. அபிமன்யூவின் மகனைக் காக்கும் பொறுப்பில் அவர் மேற்கொள்ளும் அனைத்துச் செயல்பாடுகளும் அவரை நம் மனத்தில் உயர்த்தி நிறுத்துகின்றன. அதனால்தான் சாரிகர் நிகரற்ற பேரரசிகளின் வரிசையில் சத்யபாமையை நிறுத்துகிறார்.
சாரிகர், தனக்குள் நினைக்கும்போது,
“அரசியெனப் பிறந்தவர்கள் எனத் தேவயானியை, சத்யவதியை, தமயந்தியை, திரௌபதியைச் சொல்வார்கள். இவளையும் சொல்லியாக வேண்டும்”
என்று சத்யபாமையைக் குறிப்பிடுகிறார்.
துரியோதனனின் பரந்த மனப்பான்மைக்குப் பல சான்றுகளை வெண்முரசின் நாவல் வரிசைகளில் காணமுடியும். துரியோதனனின் மகளும் அத்தகைய பரந்த மனப்பான்மையை உடையவள் என்பதை இந்த நாவலில் எழுத்தாளர் நிறுவியுள்ளார். அந்தக் காட்சியைப் படிக்கும்போது வாசகரின் மனம் கலங்கிவிடுகிறது.
பெருமூச்சுடன், “உங்கள் ஐயமும் அச்சமும் புரிந்துகொள்ளற்குரியதே” என்று சத்யபாமை சொன்னாள். “அவளுடைய வஞ்சம் இயல்பானது, ஏனென்றால் அவள் துரியோதனனின் மகள்.” அவள் முகம் ஒளிகொண்டது. புன்னகை இன்றி ஒரு முகத்தில் ஒளியெழுவதை அப்போதுதான் சாரிகர் கண்டார். “ஆனால், இப்புவியில் எந்தக் குழந்தையையும் ஈன்ற அன்னையிடம் என நம்பி ஒப்படைப்பதென்றால் அது கிருஷ்ணையிடமே. முற்றெதிரியின் குழந்தையே ஆயினும். ஏனென்றால் அவள் துரியோதனனின் மகள்” என்றாள் சத்யபாமை. அவர் மெய்ப்புகொண்டு அறியாமல் கைகூப்பினார். புன்னகையுடன் “செல்க, நன்றே நிகழும்!” என்றாள் சத்யபாமை. சாரிகர் தலைவணங்கினார்.
துரியோதனனின் மகளைப் பற்றித் தர்மரும் அதே நிலைப்பாட்டுடன்தான் இருக்கிறார்.
யுதிஷ்டிரன் அவனிடம் “துவாரகையிலிருந்து செய்தி வந்துள்ளது” என்றார். அவன் அவர் எண்ணியிராமல் அப்பேச்சை எடுத்தமையால் திகைத்தான். அவர் “சாரிகர் அங்கிருக்கிறார். அவர் செய்தி எதையும் அனுப்பவில்லை. அங்கே உடன்சென்ற வீரர்களில் நால்வர் நம் ஒற்றர்கள். அவர்கள் அனுப்பும் செய்திகள் நமக்கு உகந்தவையாகவே உள்ளன. மைந்தன் தேறிக்கொண்டிருக்கிறான். இன்னும் சில நாட்களில் அவன் அந்தச் சிப்பியிலிருந்து வெளிவருவான். துரியோதனனின் மகள் அவனுக்கு அன்னையென கனிந்து சூழ்ந்திருக்கிறாள்” என்றார்.
“அவள் இயல்பு அது” என்று யுயுத்ஸு முகம் மலர்ந்து சொன்னான். “ஆம், அவளிடம் நான் பிறிதொன்று எண்ணவே இல்லை. இங்கிருந்து கான்வாழ்வுக்குச் சென்றபோதுகூட என் மைந்தரை நம்பி விட்டுச்செல்ல துரியோதனன் அன்றிப் பிறர் உண்டு என்னும் எண்ணமே என்னிடம் எழவில்லை. அவனால் வளர்க்கப்பட்ட என் மைந்தரைப் பற்றி நான் எப்போதும் கவலைகொண்டதில்லை” என்றார் யுதிஷ்டிரன்.
துரியோதனனின் மகன் லட்சுமணனும் மகள் கிருஷ்ணையும் தம் தந்தையைப் போலவே பரந்த மனப்பான்மை கொண்டவர்களே! அவர்கள் பெருந்தந்தை திருதராஷ்டிரரின் பெயர்மைந்தர்கள் அல்லவா?
பெண்களுக்கும் அவர்களின் பிறந்த வீட்டுக்கும் இடையே உள்ள பிரிக்கமுடியாத பெரும்பற்றுநிலையை இந்த நாவலில் மிக விரிவாகவும் ஆழமாகவும் காட்டியுள்ளார் எழுத்தாளர். பெண்கள் கணவன் வீட்டுக்குச் சென்ற பின்னர் அவர்களின் பிறந்த வீடு அவர்களுக்கு ஒரு கனவு இல்லமாகவே மனத்தினுள் அமைந்துவிடுகிறது. அவர்களுக்குரி ‘பூலோக சுவர்க்கம்’ என்றே அவர்களின் பிறந்தவீடு அவர்களுக்கு அமைந்துவிடுகிறது. பெண்கள் தங்களின் பிறந்த வீட்டுக்கு வரும்போது அவர்கள் அடையும் மனநிறைவை எழுத்தாளர் இந்த நாவலில் துச்சளையின் வழியாக மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார்.
மெல்லிய தவிப்புடன் “ஆனால், இந்நகரின் முறைமைகள்…” எனத் துச்சளை தொடங்க சம்வகை மறித்து “புகுந்த வீட்டு உறவு ஊழின் தெரிவு. அது ஊழுக்கேற்ப மாறவும் கூடும். பிறந்த வீட்டில் பெண்ணின் இடம் பிறந்தமையாலேயே உருவாகிவிடுகிறது. அது தெய்வத் தெரிவு. அதை எவரும் மாற்ற முடியாது என்று கிருஹ்யகாரிகை சொல்கிறது, அரசி” என்றாள்.
தேர் கோட்டைக்குள் நுழைந்தபோது இருபுறமும் கூடியிருந்த மக்கள் உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். வாழ்த்தொலிகளினூடாகச் சென்றுகொண்டிருந்தபோது, ‘துச்சளை உளம் வருந்தக்கூடுமோ’ என்று சம்வகை எண்ணினாள். கணவனை இழந்த பின் முதல் முறையாக தன் பிறந்தகத்துக்குள் நுழைகிறாள். அவள் உள்ளம் துயருற்றிருக்கும்போது வெளியே என்ன ஏது என்று அறியாது இத்திரள் இவ்வாறு கொந்தளித்துக்கொண்டிருப்பது அவளை ஏளனம் செய்வதுபோல் பொருள்படக்கூடுமோ? ஆனால், ஒருவகையில் அது ஆறுதலாகவும் இருக்கும் என்று தோன்றியது. அங்கிருந்து அவள் செல்கையில் விட்டுச்சென்ற அனைத்தும் அவ்வண்ணமே நீடிக்கின்றன என்பதுபோல. பின்னடி வைத்து இறந்தகாலத்திற்கு திரும்பிவிட முடியும் என்னும் நம்பிக்கையே பெண்களைப் பிறந்தவீடு நோக்கி வரவழைக்கிறது என்று அவள் அன்னை அடிக்கடி சொல்வதுண்டு. அவள் அஸ்தினபுரிக்குள் நுழைந்து ஒவ்வொரு அடிக்கும் தன் அகவையை இழந்துகொண்டே செல்வாள். அரண்மனையை அடைகையில் அங்கு சிறுமியாக மாறிவிட்டிருக்கக் கூடும்.
துச்சளை சம்வகையிடம், “மெய்யாகவே இந்த அரண்மனையை அணுகுந்தோறும் நான் இளமைக்கு மீண்டுகொண்டிருந்தேன். இப்போது சிறுமியாகிவிட்டேன்” என்றாள். அவள் குரல் மிக இளமையானது என்று சம்வகை எண்ணினாள். தன் குரல் மயிலகவல்போல ஆழ்ந்து ஒலிப்பது. துச்சளையின் குரலை மட்டுமே கேட்பவர்கள் அவளை சிறுமி என்றே எண்ணக்கூடும். “எப்போதும் அப்படித்தான். உள்ளே வந்து என் அன்னையை சந்திக்கும்போது இளம் பெண்ணாக இருப்பேன். அதன் பின் தந்தையைச் சென்று சந்திக்கும்போது மகவாகிவிடுவேன். அவருடைய கைகள் என் உடலைத் தொட்டு அலையத் தொடங்கும்போது கைக்குழந்தையாகி அவர் மடியில் கிடப்பேன்.”
துச்சளை “இங்கே வந்தபின் நான் விடுதலை அடைந்தேன் என்பதை உணர்கிறேன். என் அறை இது. என் நீராட்டறை. என் ஆடைகள். முழுமையாகவே மீண்டுவிட்டேன். ஏதோ சில எஞ்சியிருக்கின்றன என்று உணர்கிறேன்.
இந்நகரை நெருங்குவது வரை ஒவ்வொரு முன்னடிக்கும் அரைப் பின்னடி வைத்துக்கொண்டிருந்தது என் உள்ளம். நீ எனக்களித்த அரசமுறையான வரவேற்புதான் என்னை முதல் முறையாக உளம் மலரச் செய்தது. என் நிலத்திற்கு வந்துவிட்டேன் எனும் உணர்வை அளித்தது. இந்நகர் முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது. இதன் சுவர்கள் கருமை அகன்று வெண்மை நிறம் கொண்டிருந்தது எனக்கு முதலில் திகைப்பை அளித்தது. பிறிதொரு நகரத்திற்கு வந்துவிட்டேனா என்று எண்ணினேன். இதன் மாளிகைகள் அனைத்தும் மாறிவிட்டிருந்தன. தெருக்களும் வண்ணங்களும் மாறிவிட்டிருந்தன. இந்த அரண்மனை முற்றிலும் புதிய ஒன்றுபோல் தோன்றியது.
“ஆனால் இம்மாற்றங்கள் எனக்கு உவகையையும் அளித்தன. அந்தப் பழைய நகருக்குள் நான் நுழைய விரும்பவில்லை. அந்நகரில் நிறைந்திருந்த பழைய நினைவுகள் என்னை இங்கு சூழாதென்று தோன்றுகிறது. இங்கென் தமையர்கள் இல்லை. தந்தையர் இல்லை. இது எனக்கென எவரோ கட்டியளித்த புது நகரம். பிறந்தவீட்டிற்குத் திரும்ப விரும்பும் எந்தப் பெண்ணும் இளமையின் நினைவுகளில் ஆட விரும்புவாள். இது நான் பிறந்து வளர்ந்த நகர் அல்ல. ஆனால் அதன் சாயல் கொண்டது. என்னிடம் எஞ்சும் நினைவுகளை கொண்டுவந்து இங்கே வைத்து நான் விளையாட முடியும். நான் இங்கு என் இளமையின் நினைவுகளில் ஒரு துளியுமில்லாமல் வாழ விரும்புகிறேன்.”
துச்சளைக்கும் சம்வகைக்கும் இடையில் நடைபெறும் இந்த உரையாடல், குறிப்பாக இந்தியப் பெண்கள் ஒவ்வொருவரின் மனநிலையையும் வெளிப்படுத்தியிருப்பது போலவே தோன்றுகிறது. பொதுவாகவே, ‘பிறந்த வீடு குறித்த மனப்பதிவு’ இந்தியப் பெண்களிடம் ஒரே மாதிரியாகவே இருப்பதை எவரும் மறுக்கவியலாது.
கங்கையின் மைந்தர் பிதாமகர் பீஷ்மர் வளர்இளம் பருவத்தில் இடம்மாற்றப்பட்டார். பிறந்தவுடன் ஸ்ரீகிருஷ்ணர் (இளைய யாதவர்) இடம்மாற்றப்பட்டார். கர்ணனும் இடம்மாற்றப்பட்டார். அவர்களின் வரிசையில் அபிமன்யூவின் மகன் பரீக்ஷித்தும் பிறந்தவுடன் இடம்மாற்றப்படுகிறான். முதலாமவர் போர்க்களநாயகர். இரண்டாமவர் யுகநாயகர், மூன்றாமவர் கொடைநாயகர், நான்காமவர் அடுத்த தலைமுறையின் நாயகர்.
அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் மெல்ல மெல்ல தன்னுடைய பழைய உருவினை அடைகிறது. அதைப் போலவே இந்த நாவலும் மெல்ல மெல்ல வளர்கிறது. முற்றழிந்த ஒரு நகரை முழுமுற்றாக முதலிலிருந்து மீண்டும் உருவாக்குவதெனில் அதற்கு நீண்ட காலம்தேவை அல்லவா? ஆயிரம் சிந்தனைகளும் மிகப் பெரிய பொறுமையும் வேண்டுமே!. அதுபோலவே இந்த நாவலைப் படித்து முடிக்க மிகப் பெரிய பொறுமையும் நீண்ட காலம் வாசகருக்குத் தேவை.
‘‘எளியகலை படைத்தவனை எளிதில் கைவிடுவதில்லை. துணைவி என உடன்வரும். தந்தை என ஆறுதல்படுத்தும். மைந்தன் எனப் பொறுப் பேற்றுக்கொள்ளும். உயர்கலை தான் நிகழ்ந்ததுமே படைத்தவனை அகற்றி விடுவது. தன் முழுமையால் பிறிதொன்றின் தேவையில்லாமலாவது.”
ஆம்! ‘வெண்முரசு’ நாவல்தொடர் உயர்கலையின் பாற்படும். அது தன்னை உருவாக்கிய எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களை முற்றிலும் அகற்றிவிடும். அது காலத்தின் மையமெனத் தனித்து நிற்கும். எல்லாப் படைப்பெழுத்துகளையும் நோக்கி நிற்கும். உலக இலக்கியப் படைப்புகளை அளவிடும் பேரளவுகோலாக என்றும் நிற்கும்.
- முனைவர் ப. சரவணன், மதுரை
இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
‘திசைதேர்வெள்ளம்’ வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
கார்கடல் வாசிப்பு முனைவர் ப சரவணன்
‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்
கிராதம் முனைவர் முனைவர் ப சரவணன் மதுரை
சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை
‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை
‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்
‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை
‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்