புதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-1

வேம்படிதாளம்

புதிர்வழிகள்- இளம்பரிதி

மீண்டும் ஒரு பயணம். உண்மையில் நான் வீட்டை விட்டுக் கிளம்பி மலைமலையாக அலைந்து குளிரில் ஒருமாதிரி வெந்தபக்குவத்தில் ஆகியிருந்தேன். அதன்பின் ஈரோடு கிருஷ்ணன் வகுத்த திட்டப்படி பயணம். சோழர்களால் வெல்லப்பட்ட நொளம்ப பேரரசின் ஆலயங்களைப் பார்ப்பது திட்டம். கர்நாடகத்தின் கோலார் வட்டாரம்.

இம்முறை எண்ணிக்கை மிக அதிகம், பதிநான்குபேர். இரண்டு பேர் பெண்கள். ஆகவே எல்லாவற்றையும் அணுவணுவாக திட்டமிட்டார் கிருஷ்ணன். திட்டம் பல நாட்களாக விரிந்து விரிந்து திட்டமிட்ட கிருஷ்ணனுக்கே சரியாகப்புரியாததுபோல் ஆகியது. ஆனால் ஆகஸ்ட் இருபது அதிகாலையில் திட்டத்தின் முதல் நிரல் மீறப்பட்டது. மீறியவர்  கிருஷ்ணனேதான். அதன்பின் கோலாரம்மையின் அருளால் பயணம் நடந்தேற விடப்பட்டது- வழக்கம்போல.

செல்லும் வழியில் ’எதையாவது’ பார்த்துக்கொண்டே போகலாம் என்று எண்ணி தேடியபோது மிகச் சுவாரசியமான ஒன்று அகப்பட்டது. ‘வட்டச்சுழற்பாதைகள்’. உம்பர்ட்டோ எக்கோ, போர்ஹெ முதல் நான் வரை அனைவருமே வட்டச்சுழற்பாதைகளைப் பற்றி எழுதியிருக்கிறோம். மலையாளத்தில் என்ன காரணத்தாலோ இதை ராவணன் கோட்டை என்கிறார்கள்.

உலகம் முழுக்க இந்தவகையான புதிர்ச்சுற்றுப்பாதைகள் உள்ளன. இவற்றில் பல கோட்டைகள் தொன்மையான கற்காலத்தைச் சேர்ந்தவை. அதன்பின் அவை வழிபாடு சார்ந்தவையாக ஆயின. உள்ளத்தை அவதானிக்கவும், உள்ளத்தை கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்தவும் இவை பயன்படுத்தப்பட்டன. ஜென்பௌத்த ஆலயங்களிலும் கிறிஸ்தவ மடாலயங்களிலும் இவை இருக்கின்றன.

இந்தியாவில் பலநூறு புதிர்வளையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. நாட்டார்த்தெய்வங்களின் ஆலயங்களை ஒட்டியே அவை உள்ளன. ஆனால் பெருந்தெய்வ ஆலயங்களிலும் இவை உள்ளன. ஆலயச்சுவர்களிலும் இவை சிற்பங்களாகக் காணக்கிடைக்கின்றன. மகாபாரதத்தில் அபிமன்யூ புகுந்த பத்மவியூகம் அல்லது சக்கரவியூகம் என்பது படைகளால் அமைக்கப்பட்ட ஒரு புதிர்க்கோட்டைதான். பல சிற்பங்களில் இவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

கேரளத்தில் திருவில்வா மலை போன்ற இடங்களில் இயற்கையான மலைக்குகைகளே புதிர்ப்பாதைகளாக உள்ளன. அவற்றினூடாக புகுந்து வெளிவருவது புனர்ஜனி எனப்படுகிறது. பிறப்பிறப்பின் வட்டப்புதிர்ப்பாதையின் வழியாக வந்தால் மறுபிறப்பாகி, பாவங்கள் விலகிவிடுகின்றன என நம்பப்படுகிறது. இன்னும் ஒரு கோணத்தில் நம்முடைய பரமபத விளையாட்டேகூட ஒருவகை புதிர்வழிப்பாதைதான்.

முதலில் தர்மபுரி அருகே உள்ள வேம்படிதாளம் [அல்லது வேம்படி தாவளம்] என்னும் ஊரில் உள்ள புதிர்சுழல்பாதைக்குச் சென்றோம் வேம்படித்தளம் – கோட்டைப்புதுார் என்ற ஊரிலுள்ளது இது. ஏழுசுற்றுக்கோட்டை என்று சொன்னால்தான் ஊரில் தெரியும். 15 மீட்டர் விட்டம், 140 மீட்டர் சுற்றளவு, 700 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த புதிர்நிலை, உலகின் மிகப்பெரிய புதிர்நிலைகளில் ஒன்று என்கிறார்கள்.

இந்தப்புதிர்நிலைக்கு அருகே ஒரு தொன்மையான இடுகாடு உள்ளது. வரலாற்றுக்கு முந்தைய காலம் முதலே அது இடுகாடுதான். அங்கே பெருங்கற்காலத்து நினைவுச்சின்னங்கள் உள்ளன. இங்கே இரண்டு புதிர்நிலைகள் உள்ளன. இவ்விரண்டையும் உள்ளடக்கி பெரிய ஒரு வட்டமும் இருந்திருக்கிறது. இன்று அது கலைந்துள்ளது.

கம்பைநல்லூர்

புதிர்வழியினூடாகச் செல்லும்போது அதை ஒரு கேலியாக, விளையாட்டாக ஆக்கிக்கொள்வது நம் வழக்கம். ஆனால் அதைச் செய்யக்கூடாது. அது உருவாக்கும் எளிய கிளர்ச்சியை ரத்துசெய்து நம் உள்ளம் என்ன செய்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருக்கவேண்டும். இது ஒரு வகை தியானம்

புதிர்வழிகளில் செல்லும்போது நம் அகம் கணக்கு போட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த பயணத்திற்கான அகவரைபடத்தை உருவாக்கிக் கொள்கிறது. புதிர்வழி உடனே அந்த வரைபடத்தைக் கலைத்துவிடுகிறது. நம் அகம் திடுக்கிட்டு மீண்டும் வரைபடத்தை உருவாக்க ஆரம்பிக்கிறது. நம் உள்ளம் செயல்படும் விதத்தை அறிய, அதை ஒருங்கிணைக்க மிகச்சிறந்த வழி இது.

இரண்டாவது புதிர்வழி தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் உள்ளது. கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டியில் 1,600 சதுர அடி பரப்பளவில் உள்ள இந்த புதிர்வழி வேம்படிதாளம் புதிர்வழியை விட கிட்டத்தட்ட 2000 ஆண்டு பழமையானது, இந்த புதிர்நிலை தான் உலகிலேயே பெரியது என ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது.

சதுரவடிவமான புதிர்வழி இது. செருப்பை கழற்றி வைத்துவிட்டு நடந்தோம். காலில் நெருஞ்சி குத்திக்கொண்டிருந்தது. அணுகியதுமே அகன்று தொடங்கிய இடத்துக்கே வந்து மீண்டும் நெருங்கி சுழன்றுகொண்டிருந்தோம். பத்துபேர் அந்தப் பாதைச்சுழலில் மையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். ஆனால் பொதுப்பார்வையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைநோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். வாழ்க்கையின் விந்தையை கண்ணெதிரே காணும் ஒரு நிலை.

[மேலும்]

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம்- லக்ஷ்மி மணிவண்ணன்
அடுத்த கட்டுரைசங்கசித்திரங்கள், மீண்டும்