விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது-கல்யாண்ஜி கடிதம்

வணக்கம் ஜெயமோகன்.

ரொம்பப் பிந்தி,மத்தியானத்துக்கு மேல் தான் தெரியும். எனக்கு ரொம்ப சந்தோஷம்.  போன தடவை சுரேஷ் குமாருக்குக் கொடுத்த போதும் சந்தோஷப்பட்டேன். இரண்டு பேருமே எனக்கு   ரொம்பப் பிடித்த படைப்பாளிகள். ரொம்பப்பிடித்த மனிதர்களும் கூட.

நம்பி பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் படிக்கும் போது தான், சுப்பு அரங்கநாதனோடு தீபத்தில் ‘வேர்கள்’ கதையைப் படித்த கையோடு வந்தார். அவர் தான் என்னைப்பார்க்க வந்த முதல் வாசகர்.

இன்றைக்கு வரைக்கும் அவர் மனம் அந்தப் பாபநாசம் ஆற்றுத் தண்ணீர் மாதிரி  ஸ்படிகம் தான். காணும் காணாததற்குக் குற்றாலம் அருவித்தண்ணீரும்  சேர்ந்து கொண்டது பகவதி வந்தபிறகு. எனக்கு என்னவோ பகவதி தான் அவருடைய அருவி, குழல்வாய்மொழி அம்மன் என்று தோன்றுகிறது.  உச்சியில் தோளில் விழுந்து சிதறி வழிந்து, நம்பியை இப்படி.  உருப்பளிங்கு ஆகவே வைத்திருக்கிறவள் பகவதி தான்.

சாயுந்தரத்தில் இருந்தே அவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. முகநூலில் கண்ணில் படுகிற அவர் படங்களை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தேன். கணபதி , சேர்மாதேவி சிவன் கோவிலில் வைத்து நம்பியை எடுத்த  கருப்பு வெள்ளைப் படம் ஒன்று அவ்வளவு அம்சமாக  இருக்கும்.அதைத் தரவிறக்கி வைத்தேன்

சமயவேல்  எழுதிய சில வரிகளும், லக்ஷ்மி மணிவண்ணனின் நீண்ட பதிவும் முகநூலில் இருந்து நேரே நம்பியைப். பார்க்கப் புறப்படச் சொல்லியது.

பகவதி நம்பர் தான் என்னிடம் உண்டு. அதில் தான் கூப்பிட்டேன். நம்பியே எடுத்தார். பெயர் பதிவில் இருந்தது போல. அடுக்கடுக்காக ஓங்கூர்சாமியார் மாதிரிச் சிரித்தார். வாழ்க, வாழ்க என்றார். அப்புறம் தான் ‘சொல்லுங்க கல்யாணி’ என்றார்.

வாழ்த்துச் சொன்னேன். என் சமீபத்திய  உடல் நலிவைத் தெரிந்திருப்பார் போல. எடுத்த உடனேயே ‘என்ன நட்சத்திரம், என்ன ராசி கல்யாணி?’ என்று கேட்டார். அப்படியே போயிற்று பேச்சு. பட்டீஸ்வரம் துர்க்கை, மதுரை மீனாட்சி, பழனி மலை, நெல்லையப்பர் கோவில் என்று அவர் பின்னால் போனேன். குற்றால நாதர் கோவில் சித்தேஸ்வரி, அணைக்கரைத் தெருப் பக்கம் இருக்கும் எக்காள தேவி என்ற விஷ்ணு துர்க்கை   வரை வந்து நின்றது.

விஷ்ணுதுர்க்கை இருக்கும் இடம் அனேகமாக விஷ்ணுபுரம் ஆகத்தானே இருக்கும். சரிதான்.விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் சார்ந்து உங்களுக்கும், விக்ரமாதித்யன் ஆகிய நம்பிக்கும்  என் மனப்பூர்வமான மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.

அடுத்த வார வாக்கில் ,வசதிப்படும் போது ஒரு நாள்போய் அவரைப் பார்க்க  வேண்டும். ‘ வாங்க கல்யாணி. நான் இங்கேயே தான் இருப்பேன். ஒரு பக்கமும் போகலை’. என்றார்.

ஒரு பக்கமும் போகாத நம்பி எவ்வளவு பெரிய அபூர்வம்!

கல்யாணி.சி

வண்ணதாசன்

‘Wanderer’ poet Vikramadityan wins Vishnupuram Award

 

முந்தைய கட்டுரைவாசகர் செந்தில், கடிதங்கள்
அடுத்த கட்டுரைசவக்கோட்டை மர்மம் – சிறுகதை