கவிதை எந்த அற்புதத்தையும் நிகழ்த்துவதில்லை.
ஏற்கெனவே நிகழ்ந்துகொண்டிருக்கும்
ஒரு பெரிய அற்புதத்தைக்
கைசூண்டிக் காண்பிக்கிறது
– போகன்
***
அன்பு ஜெ,
கவிஞனுக்கு இவ்விருது வரும் போது சற்று கூடுதல் உற்சாகம் வரும், அதிலும் நம்பி அண்ணாவிற்கு என படித்தவுடன் சில்லென்று உயர பறந்தது ஒரு குருவி.
புதுமைப்பித்தன் பதிப்பக்கம் வெளியிட்ட “விக்ரமாதித்யன் கவிதைகள்” நியூ புக்லேண்டில் 2000 சமயங்களில் வாங்கி படித்தது. அவரின் முகம் அட்டை முழுதும். படித்த பின் மனதிலும்..
வாழ்வின் அலைக்கழிப்புகளில் ஒடுங்கி ஒதுங்கி தொலைந்து விடாமல் எப்போதும் சஞ்சாரத்தில் என ஒரு பேய்க் கவிஞன். அர்த்தமில்லா போக்கையே ஊழ் தன் விதி என கொண்டு செல்லும் பாதைகளில், தன்னை இழுத்துச் செல்ல விட்டபடி வாழ்ந்து கொண்டு இருக்கும் அவரை செலுத்தும் விசை மிக பெரிய பதட்டமும் பயமும் தந்தன – ஏனெனில் என்ன பேசி, எழுதி வாழ்ந்தாலும் ஒரு வட்டத்தில் அல்லது அவர் சொன்னது போல ஒரு சிஸ்டத்தில் அடங்கி கிடப்பாரின் முன், கவிதைகளிலும் தன் சொந்த வாழ்விலும் அவர் செல்லும் தூரம் தரும் கலவரம் என தோன்றுகிறது.
கண்ட கல்கொலுசில், பொற்பாத சித்திரத்தை கற்பனையில் வளர்த்து மறக்க முடியா அவரின் மனம், ஐதீகத்தில் வாழும் தெய்வத்தை பார்ப்பதும், சிவன் இருக்கும் கோவில்களை [கோயிலுக்கு, திருஉத்திரகோசமங்கை] கவிதைகளில் வார்த்து எடுக்கும் கலவையாக ஒருவரின் பக்கங்கள்.
வாழும் தின வாழ்வின் வதைகளில் திணறும் உஷ்ணத்தையும் பதிவு செய்கின்றன இன்னொருவரின் பக்கங்கள் [பொருள்வயின் பிரிவு, காசு பணம் பற்றிய, இருப்பு போன்ற கவிதைகள்]. ஸ்திரஸ்திதி என ஓர் இடத்தில் கால் ஊன்றி வைத்து கொண்டு, பறந்து சென்றபடி மீளும் விதியின்மையை வழி நெடுக காண்கிறோம். குற்றாலம், திருநவேலியின் என இளமையின், இலக்கியத்தின் ஈரம் கொண்ட வாழ்வும், முன் முதிய பருவம் தரும் வதைப்புகளாக பிம்பம் தரும் வாழ்வின் பக்கங்கள் நிரப்பும் ஒருவரும் உண்டு.
இக்கவிதை உள் உலுக்கிய காலம் ஒன்று உண்டு.
“இன்னமும்
இருக்கிறேன் அப்படியேதான்…
எப்படியென்று விளக்கத்தேவையில்லை
இருக்கிற இருப்பு எல்லோருக்கும் தெரிந்ததே
எப்போதவது நினைத்துப்பார்த்திருப்போமோ
இப்படி இருப்போமென்று
எப்படியும் வாழலாமென்று
இருக்கிற ஜாதியுமில்லை இவ்வளக்கும்
இப்படித்தான் வாழவேண்டுமென்ற லட்சியம்
இப்போதும் இருக்கிறது கனவு போல
அப்படியிருந்துமா இப்படியென்று
அவசரப்பட்டுக்கேட்பது சுலபம்
எப்படி எடுத்துச்சொல்லி புரியவைப்பது
தப்படி விழுந்தவிபத்தையும் தட தட வென்ற சரிவையும்
இப்படியிருந்தாலும் எல்லாம் ஒரு நாள்
எப்படியும் நேராகி விடும்
அப்படியெல்லாம் அற்புதங்கள் நிகழாமலும் இல்லை
ஆறுதல் வார்த்தையில்லை இது
தன்னைப்போல குணமாகும் நோய்
தானே சரியாகும் வாழ்வெல்லாம் இல்லையா என்ன
ஏன் இவரை அதிகம் பிடிக்கிறது? அவரால் கவிதைகளில் நம்மின் வேர்களை தொட முடிகிறது. கருப்பசாமியையும் தட்சிணாமூர்த்தியையும், சிதம்பர சிவகாமியை, மரகதலிங்கசாமியை என தெய்வங்களின் பாதைகளை காண வைக்கிறார். வாழ்வின் அனர்த்தங்களை மற்றும் கவிதை எழுதும் கண்ணுக்கு மட்டுமே தெரியும் இயற்கையின் வண்ணஜால மேகங்களையும். சுட்டிகிறார். எப்போதும் போல குடிப்பதன் துயரை நெடுக சொன்னாலும், தலைப்பில்லா கவிதைகளில் தத்துவ பார்வைகளையும். ஒரிடத்தில் இருப்பதின் ஏக்கத்தையும் பரவி நிறையும் வேட்கையையும். காசில்லா சங்கடத்தின் நாட்களையும், கடவுளின் ஈரம் உணர்த்தும் வாழ்வையையும் என அவரின் கை தொடல்கள் பல இடங்களில். விரட்டும் கால ஒட்டத்தில் தமிழின் பல வடிவ கவிதைகளை எழுதி முடித்த பின்னும் எஞ்சுவது அவரின் அந்த திமிறும் வெறி தான்.
தேவதச்சன் விருது வாங்கும் சமயத்தில் ஒரு ஏக்கம் வந்தது – கால நதியின் விளிம்பு நீர் தொடா கிளிஞ்சல் ஆகி போனாரோ என. மதுவின் நஞ்சை நிரப்பியபடி இன்னமும் இருக்கிறாரா என தெரியாது. ஆனால் எழுதிய கவிதைகளால், ஆழ் தொட்டு கவர்ந்த கவிஞன்.
இருக்கும் வரை இருந்துகொண்டே இரு
எப்படியும்
என முடியும் அக்கவிதையின் முகம் அவரே.
நந்தனுக்காக
விலகி நின்றது
நந்தி
நாவுக்கரசனுக்கு
முத்துப்பந்தல் நிழல்
போட்டன சில கணங்கள்
வெள்ளந்திபாண்டியனுக்காய்
வேறுகால் மாற்றி
வெள்ளியம்பலநடராஜன்
தருமனுக்காகவா
பாஞ்சாலிக்காகவா
பார்த்தனுக்காகவா
பரந்தாமன் தேரோட்டியது
பொய்சொன்ன
பிரம்மனுக்கு
கோயிலே இல்லாமல்
போயிற்று
***
வானவெளி
வயல்வெளி
வெட்டவெளி
கடல்வெளி
காற்றுவெளி
சமவெளி
வெளிகளின்நடுவே
வீடுகளும் மனிதர்களும்
***
நெஞ்சு படபடக்கிறது,
நீர்வீழ்ச்சியென்று
அருவியை
யாரவது சொல்லிவிட்டால்
***
திசைகெட்டுப்போனாலும்
திசைகளுக்குள்தான்
***
நம்பிராஜனை தேடியபடியும், கண்டுகொண்டேயும் இருந்த கவிஞர் விக்ரமாதித்யனுக்கு அன்பு வணக்கங்கள்.
அன்புடன்
லிங்கராஜ்
***
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருது விக்ரமாதித்யனுக்கு அளிக்கப்பட்டிருப்பது தமிழில் கவிதையை வாசிக்கும் எவருக்கும் பெரிய நிறைவை அளிக்குமென நினைக்கிறேன். அவர் ஒரு பாலம் போல. நமக்கு நவீனக்கவிதை மொழிபெயர்ப்பு வழியாகவே அறிமுகம். க.நா.சு [மயன்] கவிதைகளே மொழியாக்கக் கவிதைகளின் நெடி கொண்டவை. அங்கிருந்து பசுவய்யா உட்பட எல்லார் கவிதையுமே மொழியாக்க நெடி கொண்டவைதான். தமிழ் மொழியின் அழகு பிரமிள், தேவதேவன் ஆகியோரின் கவிதைகளிலேயே வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களின் கவிதைகளிலேயே எங்கே அவர்களை மீறி தாளம் அமைகிறதோ அதில்தான் அப்படி நடந்தது.
நவீனக்கவிதை சுருக்கமானது. அந்த ரத்தினச்சுருக்கத்தன்மையை அடைந்தபின்னர் அதிலிருந்து மரபின் அழகை அடைவதுதான் இங்கே பெரிய சவால். அதைச் சந்தித்தவர் விக்ரமாதித்யன். மரபுக்கவிதையை சொற்கள் நிறைந்ததாக ஆக்குவது அணிகள். உவமை முதலியன. அவை கொஞ்சம்கூட இல்லாமல் எழுதப்பட்ட கவிதைகள் வழியாகவே விக்ரமாதித்யன் அந்த சுருக்கமான அழகிய கவிதைகளை அடைந்தார். அவை பெரும்பாலும் மரபிலுள்ள வெண்பாக்களின் வடிவத்தை அடைந்தவை.
கண்துயில் கெடுக்கும்
கனவே
என்ன செய்யப்போகிறாய்
இன்றிரவு நீ
என்று விக்ரமாதித்யனின் ஒரு வரி என் நினைவில் உடனடியாக வருகிறது. நூற்றுக்கணக்கான முறை இரவில் என் வாயில் எழுந்த வரி இது. இந்த தமிழின்பத்தையே நான் அவருடைய கொடையாக நினைக்கிறேன்
தமிழ்வேள் குமரன்
***
அன்புள்ள ஜெ
விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது நிறைவை அளிக்கிறது. ஆனால் நான் பார்த்தவரை இத்தருணத்துக்காக அவரை வாழ்த்தும் எழுத்தாளர்கள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் வாசகர்களாகவே வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கியச் சூழலில் வம்புகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் இதைப்போன்ற நிகழ்வுகளுக்கு கொஞ்சம் கூட இல்லை. இந்த சமூக ஊடகங்கள் வந்த பிறகு மொத்த இலக்கியமும் திண்ணைவம்பாக ஆகிவிட்டது.
விக்ரமாதித்யன் ஒரு சாதனையாளர். பெரியவர். இன்றைக்கு இருக்கும் சூழலில் அவருக்கு இன்னொரு விருது கிடைக்குமா என்பதுகூட சந்தேகம்தான். இன்றைய சந்தர்ப்பத்தில் அவரை வாழ்த்துவதென்பது நாம் இலக்கியத்தை வாழ்த்துவதுதான். இலக்கியத்தின் மீதான நமது நம்பிக்கையை உறுதிசெய்துகொள்கிறோம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நான் 1990ல் அண்ணாச்சியை முதலில் சந்தித்ததை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன். அன்றைக்கு நான் மாணவன். அண்ணாச்சியின் தோற்றம் அப்படி இருந்தது. நாடோடி, கவிஞன். நான் அவரால் ஈர்க்கப்பட்டுதான் வாசிக்க ஆரம்பித்தேன். அன்றைக்கு நான் ஆராதித்த விஐபிக்கள் எல்லாம் தலைக்குமேலே இருந்தனர். அண்ணாச்சி என்னுடனேயே இருந்தார்.
‘நொம்பலப்பட்ட மனுஷன்’ என அவர் ஒரு கவிதையில் தன்னைப்பற்றிச் சொல்கிறார். அதை நான் ஒரு பெரிய வார்த்தையாக எழுத்துக்கொண்டேன். அண்ணாச்சியின் நொம்பலம் சாமானியரின் துக்கம். அதை எழுதிய அண்ணாச்சி சாமானியரில் கடவுள் அருள் பெற்றவர். அவருக்கு வணக்கம்
அ.ராமர்
***