விக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 2

அன்புள்ள ஜெ

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது விக்ரமாதித்யன் அண்ணாச்சிக்கு வழங்கப்படவிருக்கும் செய்தி வாசித்தேன். ஒரு பெரும் மனக்கிளர்ச்சி ஏற்பட்டது. தமிழ்நாட்டிலே கவிதைக்காக எந்த அரசு விருதும் அளிக்கப்படவில்லை. தேவதச்சன், தேவதேவன் எல்லாம் விருதே பெறவில்லை. பிரமிள், ஞானக்கூத்தன் எல்லாம் விருதே பெறாமல் மறைந்தனர். அப்படி இருக்க விக்ரமாதித்யனுக்கு விருது கிடைப்பதெல்லாம் வாய்ப்பே இல்லை. மொத்த அமைப்பே அவரைப் போன்றவர்களைத் தூக்கி வீசிவிட்டது. அவருக்கு விருதளிக்கும் எண்ணம் கொண்டவர்கள் இருக்க வாய்ப்பில்லை. அவருக்கும் எவருடனும் தொடர்பில்லை.

ஆனால் அதெல்லாம் பொருட்டே இல்லை, எங்கள் கவிஞரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என அறிவிப்பதுபோல உள்ளது இந்த விருது. இது தமிழுக்கு எவரும் தேவையில்லை என்று தெளிவுபடுத்தும் விருது. விஷ்ணுபுரம் அமைப்பு என்பது தமிழ் வாசகர்களே. வாசகர்கள் அளிக்கும் விருது இது. இப்படிப்பட்ட விருதுகளால்தான் விக்ரமாதித்யன் போன்ற மக்கள் கவிஞர்கள் உண்மையிலேயே கௌரவிக்கப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

விக்ரமாதித்யன் அண்ணாச்சியை வணங்குகிறேன்.

கதிர் அருணகிரி

***

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு பாரதியார் பல்கலைக்கழக நூலகத்தில் ‘போய்ச் சேர்ந்தான் புதுமைப்பித்தன், வந்து நின்றான் விக்ரமாதித்யன்’ என்னும் பின்னட்டைக்குறிப்புடன் அவரின் மொத்தத் தொகுப்பைக் கண்டதும், வாசிப்பில் சிரித்துக்கொண்டிருந்ததும் நினைவுக்கு வருகிறது. பெரும்பாலும் குறுங்கவிதைகள் உள்ள அத்தொகுப்பிலிருந்து ஒன்று:

கோவிலில் தெய்வம் 

சுடுகாட்டில் மோகினிப்பிசாசுகள் 

ஊருக்குள் ரெண்டும்கெட்டான்கள் 

இதைப்படித்தும் நினைத்தும் வெகுகாலம் சிரித்துக் கொண்டிருந்தேன். இப்போது ஊழியம் செய்கிறேன்; இப்போது இதயம் நொறுங்காமல் கவிவாக்கே கடைத்தேற்றுகிறது.

சேற்றுக்காக ஒருவன் பிறந்த மண்ணை விட்டு புலம்பெயரத்தான் வேண்டுமா? என்று ஒரு பேட்டியில் அவர் கேட்ட கேள்வியாகத்தான் பெரும்பாலும் நினைவிருக்கிறார். கூடவே நீங்கள் பாதம் தொட்டு பணம் வழங்கும் மூத்தோனாகவும், மனுஷ்யபுத்திரனுடன் தரையிலமர்ந்திருக்கும் பிரியத்தின் சித்திரமாகவும். இவ்விருது அவரை இன்னும் நெருக்கி அறியத்தரும் என் நம்புகிறேன்.

நன்றி,

விஜயகுமார்.

***

அன்பு ஜெயமோகன்,

இவ்வாண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது, கவிஞர் விக்ரமாதியனுக்கு வழங்கப்படும் செய்தியை அறிந்து அதிகம் மகிழ்ந்தேன். நீண்ட வருடங்களாக நான் எதிர்பார்த்திருந்த ஆளுமை அவர்.

விக்ரமாதியன் என்பதை விட அண்ணாச்சி என்றால்தான் அதிகம் பேருக்குத் தெரியும். அவரின் கவிமொழி நவீனக்கவிதைகளுக்கான மிரட்சிப்பாசாங்குகளும் போலிமினுக்குகளும் இல்லாதது. மருளவைக்காத சொல்லாட்சிகள் வழி நெருங்குதற்கு அரிதான தரிசனத்தைச் சாத்தியப்படுத்தி விடும் கைகாரர்.

அன்றாட வாழ்வின் சமூகப்பொருளாதார நெருக்கடிகளால் அதிகம் அலைக்கழிக்கப்பட்டவர் அண்ணாச்சி. ”வியாபாரி அல்ல நான்/வீணாக அலைந்தாலும் கலைஞன்தான்” எனும் வரியே அதற்கான சான்று. அவரின் கவிதைகளில் பொருளாதார வெறுமைகளே பெரிதும் பொங்கி வழியும். வாழ்வின் அர்த்தம் பொருளாதாரப் பெட்டிக்குள் அடைபட்டு விட்ட பொறுமலைத் தொடர்ந்து அவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். விண்மீன்களைத் தொலைத்து விட்டு பொன்மீன்களைத் தேடும் வானத்தின் தோற்றத்தையே அவர் கவிதைகள் உள்ளுறையாகக் கொண்டிருக்கும்.

அன்றாடச் சமூகவாழ்வுக்கும், தனிமனிதனுக்குமான ஊடாட்டங்களைத் துல்லியமாகச் சொல்லிவிடுபவராக அண்ணாச்சி இருக்கிறார். மேலும் மேலும் என்று ஒரு கவிதை இருக்கிறது. அக்கவிதை மேலும் மேலும் என்ன செய்ய என்று முடியும். ஒருகட்டத்தில், அவர் அன்றாட வாழ்வைத் துளியும் பொருட்படுத்தாத குழந்தையாகவே தன்னைக் காட்டுவார். ”தீப்பெட்டி படம் சேகரித்துக் கொண்டிருக்கிறான் என் மகன் / கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன் நான்” என்பது போன்ற கவிதைகள் நிறைய இருக்கின்றன.

அண்ணாச்சியின் கவிதைகள் சமூகத்தைப் பற்றிப் பேசும்போது மட்டுமே கொந்தளிக்கின்றன; இயற்கை என வந்தவுடன் பழகிய யானையாய் அமைதியாகி விடுகின்றன. மரங்களுக்கு வருவதில்லை மனநோய் எனும் வரியின் தீட்சண்யத்தில் அமைதியான அண்ணாச்சியைக் காண முடியும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை குறித்தும் கவிதைகள் எழுதி இருக்கிறார் அண்ணாச்சி.

நம்பமுடியாத அளவுக்கு வாழ்க்கை என்ற அவரின் கவிதையைத்தான் துவக்கத்தில் வாசித்தேன். ஒரு தத்துவப் புலம்பலாக அல்லது இருத்தலியல் விளக்கமாக அல்லது கையறு நிலையைச் சுட்டி நம்மை அவநம்பிக்கையில் தள்ளுவதாகவே அக்கவிதையை அணுகி இருந்தேன். இப்போது, அக்கவிதை புதிர்த்தளமான வாழ்வின் நெருக்கடிகளில் ஆசுவாச மாயம் தருவதாகத் தொனிக்கிறது.

கவிதையை மாயம் என்பதாகப் பார்த்த கவிஞன் அண்ணாச்சி மட்டுமே. எப்படியான மாயம் எனக்கேட்டால் மொழியில் கட்டப்படும் மாயம் என்பார். நல்ல மாயக்காரனே நல்ல கவிஞனாக இருக்க முடியும் என்பதும் அவர் பார்வை. என்னளவில், அண்ணாச்சி ஒரு நல்ல மாயக்காரனாக முயன்றவர். அம்மாயக்காரனின் கரந்தொட்டு நிறைகிறேன்.

வாழ்த்துக்கள், அண்ணாச்சி!

 சத்திவேல்

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரைசந்திப்பு, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவாசகன் என்னும் நிலை