வாசகன் என்னும் நிலை

அன்புள்ள ஜெ

இந்தக் காணொளி உங்கள் பார்வைக்காக. சிலநாட்களுக்கு முன்பு ஒரு அரைவேக்காட்டுப் பெண் இலக்கியவாதிகளைப் பற்றி நக்கலும் நையாண்டியுமாக தன் அறியாமையை வெளிப்படுத்தியபோது ஊடக உலகமே அதைக் கொண்டாடியது. அப்பெண்ணை பாராட்டியது. ஆனால் இப்பேட்டி காட்டுவது அதற்கு எதிரான பெரும் பயணம் ஒன்றை. அடித்தளத்தில் இருந்து எப்படி இலக்கியம் வழியாக ஒருவர் அறிவார்ந்தும் ஆன்மிகமாகவும் மேலெழுந்து வருகிறார் என்பதை.

இலக்கியம் என்ன செய்யும், அது உண்மையில் எவருக்கானது என்பதற்கான பதில் இது. ஆனால் நம் இணைய அரைகுறைகள் இந்தப்பேட்டியைத்தான் கேலிசெய்வார்கள். ஆனால் இது ஓர் ஆவணம் என நினைக்கிறேன். செந்தில் போன்றவர்கள் என்னைப் போன்றவர்களுக்கு பெரும் அறைகூவலை அளிக்கிறார்கள். தமிழில் முனைவர் பட்டம் பெற்றுவிட்டு வெண்முரசு மொழி கடினமாக இருக்கிறது என்று சொல்பவர்களை, புத்தகம் வாசிக்க முடியவில்லை என்று சொல்பவர்களை நாள்தோறும் பார்ப்பவன் நான்.

செந்தில் போற்றுதலுக்குரியவர். இந்த இலக்கிய உலகின் வம்புவழக்குகள் எதையும் அறியாமல், நூல்களின் அழகிய உலகில் இருந்து கொண்டிருக்கிறார். இந்தப்பேட்டி அவரை வம்புபேசும் கீழ்களின் உலகுக்கு கொண்டு வந்துவிடக்கூடாது. அவர் செல்லவேண்டிய தொலைவு மிக அதிகம். அவருக்கு என் அன்பு வணக்கம்.

எம்.பாஸ்கர்

அன்புள்ள பாஸ்கர்,

இந்த காணொளி மிக அரிதானது. ஆனால் மிகவும் திசைதிருப்பும் தலைப்பு கொண்டது. இன்றைய ஊடக உலகில் பரவலான கவனம்பெற அந்த உத்தி தேவையுமாகலாம். ஆனால் எதையுமே முழுக்கக் கவனிக்காமல், உள்ளே செல்லாமல், வழக்கமான வரிகளைச் சொல்லிவிட்டுச் செல்பவர்களே இங்கு மிகுதி. அவர்களால் திசைதிருப்புதல் நிகழலாம்.

இப்பேட்டியில் அவர் கூறுவது, ஓர் எழுத்தாளன் மீது வாசகனுக்கு உருவாகும் தன்னிணைவு நிலையை. இலக்கியத்தின் ஆட்கொள்ளல் வல்லமையை. வெண்முரசில் இருந்து ஒரு வரியை அதற்கு உருவக உதாரணமாகச் சொல்கிறார். வெண்முரசு உருவாக்கும் உருவகமொழியின் தளத்திற்கு வெளியே நின்றிருக்கும், எதையும் ஆழ்ந்து கவனிக்கும் பழக்கமில்லா பாமரர்களுக்கு அச்சொல்லாட்சி நேரடிப்பொருள் அளிக்கக்கூடும். அவர்கள் ஏதாவது சழக்கு பேசவும் கூடும். ஒன்றும் செய்வதற்கில்லை. அச்சழக்கும் இணைந்ததே அறிவியக்கம். அது ஒரு நிழல்.

உண்மையில் இதில் உள்ளது அறிவினூடாக ஏற்றமும் நிறைவும் பெற்ற ஓர் எளிய மனிதனின் கதை. எழுதும் ஒவ்வொருவரும் எழுத்தெனும் செயல்மேல் நம்பிக்கை கொள்ளச் செய்வது அது. இதைக்காண்கையில், “ஆம், அப்பழுக்கற்ற வாசகன் ஒருவன் எங்கோ இருக்கிறான், அவனுடன் எழுத்து அந்தரங்கமாக உரையாடுகிறது!” என்ற பெருமிதமே இலக்கியத்தின்மேல் ஈடுபாடுள்ள எவருக்கும் உருவாகவேண்டும். தன் செயல்பற்றி, தன் உலகு குறித்து நம்பிக்கை பிறக்கவேண்டும்.

வாசகன் என்னும் நிலை இலக்கியத்தில் மிக உன்னதமான ஒன்று. மொத்த அறிவியக்கமும் அப்படி ஓர் உதாரண வாசகனை நோக்கியே செயல்படுகிறது. தன் நெஞ்சை இலக்கியத்துக்கு அளிப்பவன், இலக்கியத்தினூடாக தன்னை நிகழ்த்திக்கொள்பவன்,  தன் ஆழங்களை அதில் கண்டடைபவன் அவ்வாசகன். அவன் இலக்கியத்தை வாழ்க்கையால், வாழ்க்கையை இலக்கியத்தால் நிறைத்துக் கொள்பவன்.இலக்கியத்துடன் வம்புபேசுபவர்கள், இலக்கியத்துக்கு நேராக தன் அகந்தையை முன்வைப்பவர்கள், இலக்கியத்தை தன் அற்பத்தராசில் நிறுத்துப் பார்ப்பதாக எண்ணிக் கொள்பவர்கள் சென்றடைய முடியாத தளம் அது.

மேலோட்டமாகச் சென்று பாருங்கள், நம் சமூக ஊடகங்களில் இலக்கியம் மற்றும் சிந்தனைகளைப் பற்றி எத்தனை வசைகளும் அவமதிப்புகளும் எள்ளல்களும் குவிந்திருக்கின்றன என்று. தோற்றுப்போன எழுத்தாளர்கள், சில்லறை அரசியல்வாதிகள், அறிவியக்கத்தை அஞ்சும் பாமரர்கள் என மூன்று தரப்பினர் அவ்வாறு வசைகளையும் இளக்காரங்களையும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு இரண்டு வகை பாவனைகள் உண்டு. ஒன்று ‘வாசித்துச் சலித்த’ அறிவுஜீவி போல காட்டிக்கொள்வது. இரண்டு, ‘நேர்மையை எதிர்பார்த்து ஏமாந்த’ அதிநேர்மையாளனாக நடிப்பது. பெரும்பாலும் வாசிப்பென ஏதும் இல்லாதவர்களும், மத-இன-சாதி-அரசியல் சார்புக்கு ஏற்ப பேசுபவர்களும்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே போய் சிரிப்பான் போடுபவர்களும் அவர்களே.

அவர்கள் இங்கே நம்பிக்கையுடன் எழுதுபவர்களை நோக்கிச் சொல்லும் ஒரு கருத்து மீளமீள வந்துகொண்டிருக்கிறது. அது இதுதான். இலக்கியம் என்பது வெட்டிவேலை. அதை வாசிப்பவர் எவருமில்லை. இலக்கியவாதிகள் மட்டுமே மாறிமாறி வாசிக்கிறார்கள், சண்டைபோட்டுக் கொள்கிறார்கள். சரி, இவர்கள் சொல்லும் ’உருப்படியான’ வேலை என்ன? அரசியல்கட்சிக்கோ, சாதிக்கோ, மதத்துக்கோ கட்சிசேர்ந்து கூச்சலிடுவதும் கொடிபிடிப்பதும்தான். இன்னொரு கருத்தும் உண்டு. தீவிர இலக்கியம் எவருடனும் பேசுவதில்லை, அதற்கு இலக்கிய வட்டத்துக்கு வெளியே ஆளில்லை, அது ஒரு கூட்டுப்பாவலா என்பது. இதுவும் நல்லிலக்கியம் எழுத முற்படுபவர்களை தளர்த்தும் பொருட்டு இங்கே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.

இவ்வாறு எழுத்தாளனை நோக்கி வரும் ஒவ்வொரு ஏளனத்துக்குமான ஆணித்தரமான பதில் இந்த பேட்டி. வாசகன் இருக்கிறான், அவனுடைய வாழ்க்கையுடன் இலக்கியம் உரையாடுகிறது, அவன் இலக்கியம் வழியாக மேலெழுகிறான் என இது காட்டுகிறது. இவர் என் வாசகர், ஒவ்வொரு தீவிர எழுத்தாளனுக்கும் இத்தகைய வாசகர் எங்கோ இருந்து கொண்டிருக்கிறார். வண்ணதாசன் வழியாக தன்னை அறிந்த ஒருவரின் கடிதம் [செல்வராஜ்] நினைவிருக்குமென நினைக்கிறேன். இதோ, விக்ரமாதித்யனுக்கும் அப்படி ஒரு கடிதம். பலர் இப்படி முன்வந்து பேசுவதில்லை, அற்பர்களின் சழக்குகளை அஞ்சி மறைந்து கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இலக்கியம் பொழுதுபோக்கோ மாற்று உலகமோ அல்ல. அது மேலான வாழ்க்கை நோக்கி இட்டுச்செல்லும் ஊர்தி.

நம்புங்கள், உங்கள் சொல்லுக்கு உங்களை அளியுங்கள். அத்தனை எழுத்தாளர்களை நோக்கியும் இந்தப்பேட்டி சொல்வது அதையே. எழுதவருபவர் தலைக்கொள்ள வேண்டிய சொல் இவர் நாவில் எழுவது. இலக்கியத்தை அவர் எங்கே வைத்திருக்கிறார் என்பது முக்கியமான ஒன்று. விடுதலை செய்யும் ஆற்றலாக, தெய்வத்துக்கு நிகரான ஒன்றாக அதைச் சொல்கிறார். எழுதும் ஒவ்வொருவருக்கும் ஒரு மாபெரும் பொறுப்பை அளிக்கிறார்.

எழுத்தறிவில்லாத நிலையில் இருந்து, படக்கதைகளை எழுத்துக்கூட்டி படிக்கும் நிலையில் இருந்து, மொழியைக் கற்று மேலேறி வெண்முரசு தொகுதிகளை வாசிக்கும் நிலைவரை வந்த அவருடைய பரிணாமம் இதில் உள்ளது. நம் நாட்டில் இது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இத்தகைய வாசகர்கள் நூறுபேரையாவது எனக்கு நேரடியாகவே தெரியும். என் இணையதளத்திலேயே வாழ்க்கையின் பல்வேறு அடிநிலைகளில் இருந்து வாசிப்பினூடாக எழுந்துவந்து என்னுடன் உரையாடி, எனக்கு இணையென அமர்ந்திருக்கும் பலரை நீங்கள் காணலாம். இலக்கியத்தின் அந்த ’விடுவிக்கும் பேராற்றலை’யே சரஸ்வதியின் அருள் என செந்தில் சொல்கிறார்.

என்னையும், அவரையும், வாசகர் அனைவரையும் ஒன்றென இணைக்கும் அறிவின் சரடுதான் அவர் சொல்லும் அந்த சரஸ்வதி. அந்தச் சரடு பின்னி உருவாகும் பெரும் கோலத்தில் அவர் ஒரு புள்ளி, நான் இன்னொரு புள்ளி. தல்ஸ்தோயும் ஷேக்ஸ்பியரும், வியாசனும் கம்பனும், பாரதியும் புதுமைப்பித்தனும், சுந்தர ராமசாமியும் தேவதேவனும் வெவ்வேறு புள்ளிகள். ஒவ்வொரு தீவிரவாசகரும் அதில் ஒரு புள்ளி. அவரவரின் பங்களிப்பை ஆற்றுகிறோம். நம்மிலூடாக இந்தக்கோலம் முடிவில்லாது வளர்ந்துகொண்டிருக்கிறது. மானுடம் தழுவி நின்றிருக்கிறது.

நம்மை வந்து ஆட்கொள்கிறது அது. நம்மை தன்னம்பிக்கையும் நிறைவும் கொண்டவர்களாக ஆக்குகிறது. நம் இருப்பின் வெறுமையை, சலிப்பை இல்லாமலாக்குகிறது. நேர்நிலையான ஊக்கத்தால் நம்மை நிறைக்கிறது. அதற்கு நம்மை அளிப்போம். நாம் செய்யக்கூடுவது அதுவே. ‘தலைகொடுத்தல்’ என நான் சொல்வது அந்த முற்றளிப்பைத்தான். செந்தில் உத்தேசிப்பதும் அதையே.

அது ஒருவகை அர்ப்பணிப்பு, சில்லறை அரசியல் கட்சிக்காரர்கள் அல்லது எளிய ரசிகர்கள் சொல்லும் பற்றோ வெறியோ அல்ல. அந்த அர்ப்பணிப்புடன்தான் இங்கே தலைமுறை தலைமுறையாக எழுத்தாளர்களும் வாசகர்களும் உருவாகி வந்திருக்கிறார்கள். சிற்றிதழ்கள் நடத்தியிருக்கிறார்கள். 1985ல் பிரமிள் என்னிடம் கேட்டார் “எழுதுறதுக்காக தேவைன்னா சாக ரெடியா இருப்பியா? ஏன்னா இந்த தேவதை தலைய கேக்குறது” நான் சொன்னேன். “கொல்லவும் சாகவும் ரெடியாத்தான் வந்திருக்கேன்… இது இல்லாம இனி ஒருநாள் கூட வாழ்க்கையில் இல்லை” என் காதைப்பிடித்து உலுக்கி “Do or die” என்று செல்லமாகச் சொன்னார்.

அந்தப் பித்துதான் நான் பிறருக்குச் சொல்வதும். தன் தீராநோய் பற்றி நீண்ட கடிதம் எழுதிய வானவன்மாதேவியிடம் சொன்னேன். “முழுதாக உன்னைக் கொடு, உன் நோயை நீ கடந்துசெல்வாய்”. பின்னர் அவர் எனக்கு எழுதினார் “நான் என் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டேன்”. இப்போது அவரை நினைத்துக் கொள்கிறேன். எத்தனை பெரிய வாழ்க்கை. அதை வாழச்செய்தது இலக்கியம். மதமோ அரசியலோ அல்ல, தூய இலக்கியம் மட்டுமே. மேலும் எத்தனை முகங்கள் அப்படி! இந்த வட்டத்துக்கு வெளியே உள்ள உலகியலாளர்களுக்கு இது வெறும் பைத்தியக்காரத்தனமாகவே தெரியும். ‘பைசாபெறாத’ உணர்ச்சியாக தோன்றும். அவர்களின் உலகம் வேறு. அது காலந்தோறும் அப்படித்தான் இருந்து வந்துள்ளது.

செந்திலிடம் காணும் இதே சமர்ப்பண நிலையை ஷோபனோவர் வாக்னர் இருவரிடமும் அஜிதன் கொண்டிருப்பதை சில ஆண்டுகளாக காண்கிறேன். இது வாசகன் அல்லது கலைப்பயிலுநன் ஒரு சரடைப் பற்றிக்கொண்டு தன்னை மேலேற்றிக்கொள்ளும் தீவிரமான பயணம் மட்டுமே. இசை, தத்துவம் ஆகியவற்றில் இது மிக மிக அவசியமானதாகவே சொல்லப்படுகிறது. இலக்கியத்திலும் இன்றியமையாதது என்பது என் எண்ணம். ஆழ்ந்தறியாமல் வெறுமே தொட்டுத்தொட்டுச் செல்பவர் எளிய ஆணவத்தை அன்றி எதையும் அடைவதில்லை. இது ஓர் ஆசிரியரிலேயே ஈடுபட்டு அதில் நின்றுவிடுவது அல்ல.  அந்த ஆசிரியரிடம் மானசீகமாக உக்கிரமான உரையாடலில் இருப்பது. அதன் வழியாக தன்னை தகுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்து வெளியே பரவுவது.

அவ்வண்ணம் தீவிரமான ஈடுபாட்டுடன், தலைகொடுக்கும் விசையுடன் அணுகினாலொழிய ஓர் ஆசிரியரை முழுதறிய முடியாது. முழுமையாக ஒருவரை அறிவது அனைவரையும் அறிவதற்கான அளவீடுகளை அளித்துவிடும். ஏனென்றால் மொழி, உத்தி, தரிசனம் என இலக்கியத்தின் எல்லா நுட்பங்களையும் அக்கல்வியே அளிக்கும்.

செந்திலின் பேட்டியில் அவர் என் நூல்களில் இருந்து குறிப்பிடுவன ஒவ்வொன்றும் மிகநுட்பமான பகுதிகள் என என் வாசகர்களுக்குத் தெரியும். இங்கே பொதுவெளியில் விமர்சனமும் விவாதமும் புரிபவர்களால் அந்த நுட்பங்களை அறியவே முடிந்ததில்லை என்பதும் தெரியும். முழுமையான ஈடுபாடு என்பது ஒரு பெரும் பயிற்சி. நானும் அவ்வண்ணமே என் ஆசிரியர்களினூடாக மேலே வந்தேன். இன்னும்கூட நித்யசைதன்ய யதியை கற்றுமுடிக்கவில்லை. ஒருநாள்கூட பயிலாமல் கடந்து செல்லவுமில்லை. அர்ப்பணிப்புதான் அறிவதற்கு முன்நிபந்தனை. அறிவதற்கு முன்னரே எழும் தன்முனைப்பு அறியாமை கொள்ளும் அசட்டுப்பாவனை மட்டுமே.

செந்திலின் தேடல், அவருடைய தவம் அவரை மேலும் மேலும் முன்கொண்டு செல்லவேண்டுமென விழைகிறேன். அவரிடம் பேசினேன். நேரில் சந்திப்பேன்.

ஜெ

பிகு :செந்திலின் புத்தக கடை Pycrofts Road, அல்லது பாரதியார் சாலையில், கோஷா ஆஸ்பத்திரி பேருந்துநிலையம் எதிரில் இருக்கிறது.

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 2
அடுத்த கட்டுரைபுதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-3