நீங்கள் கேள்விகளுக்கு எழுதும் பதில்களில் ஒரு பேட்டர்ன் இருப்பதைப் பார்க்கிறேன். ஒரு வாசகர் வாழ்க்கையின் அடிப்படைச்சிக்கல், புதிர் பற்றிக் கேள்வி கேட்டால் அதற்கு விரிவான பதிலைச் சொல்கிறீர்கள். அந்த பதில் இரண்டு அடிப்படைகள் கொண்டதாக இருக்கிறது. ஒருபக்கம் அது மரபில் அந்த சிக்கல், கேள்வி எப்படி அணுகப்பட்டுள்ளது என்று பார்க்கிறது. இன்னொரு பக்கம் நீங்கள் உங்கள் அனுபவத்தில் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்று விளக்குகிறீர்கள்.
ஆனால் ஓர் எழுத்தாளர் அந்தக்கேள்வியை கேட்டிருந்தால் நீங்கள் சொல்லும் பதில் வேறாக இருக்கிறது. அந்தக்கேள்வி ஆத்மார்த்தமானதா அல்லது ஏதாவது பாவனையா என்று மட்டும் பார்க்கிறீர்கள். இலக்கியவாதி , தத்துவவாதி என்ற பாவனைகளைக் கடந்து அந்தப்பிரச்சினையை அவர் உண்மையாக எதிர்கொள்ளவேண்டும் என்கிறீர்கள். அதன்பின் அதை அவர் இலக்கியமாக ஆக்கவேண்டும் என்று மட்டுமே சொல்கிறீர்கள். எந்த பதிலையும் உண்மையில் சொல்லவில்லை. எழுதுவது மட்டுமே தீர்வு என்கிறீர்கள்.
சமீபத்தில் சதீஷ்குமார் சீனிவாசனுக்கு நீங்கள் எழுதிய ஆடை களைதல் என்னும் பதிலில் அதையே கண்டேன். என் நண்பர்களிடம் பேசும்போது நான் சொன்னேன். “ஜெமோ சொல்ற பதில் இதுதான். முடிஞ்சா எழுதிப்பாரு. லக் இருந்தா போய்ச்சேரு. இல்லேன்னா உன் தலைவிதி”
ஒரு பிரச்சினைக்கு இப்படி இரண்டு முகம் இருக்க முடியுமா? இரண்டு பதில்களைச் சொல்ல முடியுமா? தத்துவசிந்தனையாளர்களோ ஆன்மீகவாதிகளோ இப்படிச் சொல்வதுண்டா?
ஆர்.எம்.குமார்
***
அன்புள்ள குமார்,
நான் பெரும் கொந்தளிப்புகளுடன் நித்ய சைதன்ய யதியை தேடிச்சென்றேன். அவர் எனக்கு எந்த அறுதியான விடையையும் அளிக்கவில்லை. விடைகளை தேடுவதன் வழிமுறைகளைச் சொல்லித்தந்தார். சொல்லிக்கூட தரவில்லை, அவர் எப்படி சிந்திக்கிறார் என அருகிருந்து நோக்க அனுமதித்தார். நான் என் விடைகளை விஷ்ணுபுரம் முதல் வெண்முரசு வரை எழுதித்தான் அடைந்தேன்.
அதைத்தான் நான் இன்னொரு எழுத்தாளருக்குச் சொல்லமுடியும். ஓர் எழுத்தாளனிடம் அடிப்படை வினாக்கள் எழுவதென்பது அவன் எழுதுவதற்காகத்தான். அவன் எழுதுவதே அதன் தீர்வு. அவன் இன்னொருவரின் விடையை ஏற்று எழுதாமலானால் அவனுக்கோ மொழிக்கோ சிந்தனைக்கோ நன்மை இல்லை. அதை நான் சொல்லமுடியாது. ஒவ்வொரு எழுத்தாளனும் செல்லும் பாதை, அடையும் இடம் வேறுவேறானது. இந்த பன்மைத்தன்மையே இலக்கியம், தத்துவம் ஆகியவற்றால் முன்வைக்கப்படுவது.
ஆனால், இலக்கியவாதியோ தத்துவவாதியோ அல்லாத ஒருவர் அவ்வினாவைக் கேட்டால் அதற்கு இயன்றவரை தெளிவான விடையைச் சொல்வதே முறை. மரபு, தனியனுபவம் என இரு தளங்களில் இருந்தும் அவ்விடையைச் சொல்லுவதே என் வழக்கம்.
அப்போதுகூட அந்த விடையை அவர் அவ்வண்ணமே எடுத்துக்கொள்ளப்போவதில்லை. அவ்விடை அவர் அதுவரை வந்தடைந்த சிந்தனையின் தொடர்ச்சியாகச் சென்றடைகிறது. அங்கே அது பொருந்துமென்றால்தான் அவர் ஏற்றுக்கொள்வார். அவருடைய அனுபவதளத்தைக்கொண்டு அதைப் பரிசீலிப்பார். ஏற்க இயலுமென்றால் மட்டுமே ஏற்பார்.
நான் சொல்வது ‘உபதேசங்கள்’ அல்ல. சிந்தனைகள். அவை கேட்பவரின் சிந்தனைகளுடன் உரையாடுகின்றன. அவரை மேலும் சிந்திக்கச் செய்கின்றன. அச்சிந்தனைகளை தொகுத்துக்கொள்ளவும் தெளிவாக முன்னெடுக்கவும் உதவுகின்றன. உண்மையில் அவருக்கான விடை என்பது அவரே கண்டடைவதுதான்.
ஜெ