ஆடை களைதல் – கடிதம்

ஆடை களைதல்

மெய்நாடுவோர் அனைவரும் செய்வது தங்களைத் தாங்களேசித்தரித்துக்கொள்வதுதான். அதை நடிப்பு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அது பொய் அல்ல. அது ஒருவகை உண்மை. ஒருவன் தன்னை ஒருவகையாக முன்வைத்துக்கொண்டே இருக்கையில் உண்மையாகவே அப்படி தன்னை ஆக்கிக்கொண்டும் இருக்கிறான். அப்படியே திகழ்கிறான்.” (ஆடை களைதல் May 7th ’21)

எளிதாக சொன்ன இந்த உங்கள் கருத்தில் எத்துனை உண்மைகள் பொதித்துள்ளன. என்னுள் பல எண்ண குமிழ்களை தோற்றுவித்தன. பல ஆளுமைகளை படித்த பாத்திரங்களை நிணவிற்கு கொண்டு வந்தன. ஆர்ச்பிஷப் தாமஸ் பெக்கட், சமகாலத்தில் வாழ்ந்த சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி என.  தாமஸ் பெக்கட் ஆர்ச்பிஷப்பான பிறகு – அப்பதவி தன் நண்பன் மன்னன் ஹென்றியால் ராஜவிசுவாசத்துடன் இரு என்ற ஒப்பந்த அடிப்படியில் கொடுக்கப்பட்டாலும் பிஷப்பின் அங்கி அணிந்தவுடன் அதுவாகவே மாறி சர்ச்சுக்கு விசுவாசியாகி ராஜாங்கத்தை பகைத்து  உயிரையும் துறக்கிறார். சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய கட்சி கட்டளையிட்டும் அதனை ஏற்க மறுத்த சோம்நாத் சட்டர்ஜியின் செயலும் இதனை ஒட்டியதே. இந்த பிடிவாதம் – இந்த மறுப்பு –  போராட்டக்காரர்கள் “வந்தே மாதரம் ” என்று கூவச் சொல்லி வற்புறுத்தியும் மறுத்து  நிற்கும் சு.ராவின்  (“ஜெ.ஜெ.சில குறிப்புகள்”) ஒரு பாத்திரத்தின் மெளனம் போன்றவைகள்  ஒரு அறத்தின் வழி உறுதியாக நிற்பதே. அடிபணிய மறுப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை  அறிந்தே இவர்கள் வினையாற்றியுள்ளார்கள்.

நாம் ஏற்றுக் கொண்ட பணிக்கு நியாயம் செய்யவேண்டும். இது அறம்சார்ந்து நிற்பவர்களுக்கே சாத்தியம்.  “மெய்நாடுவோர்” என நீங்கள் ஒற்றை வரியில் அழகாக சொல்லியுள்ளீர்கள்.  இவர்கள் எண்ணிக்கையில் சொற்பானவர்கள். அரிதானவர்கள் என்றாலும் எல்லா இடங்களிலும் ஊருக்கு ஓரரிருவர் இருப்பார்கள் – இருக்கிறார்கள். ஆயினும் பெரும்பான்மையோர் (- நாம் தேர்ந்தெடுக்கும் ஆட்சியாளர்கள் உதாரணம்) வேஷங்களை கலைத்து அதுவாகவே என்றும் மாறுவதில்லை என்பது வேதனைக்குரியதுதான். கால வெளிச்சதில் – சொற்ப  எண்ணிக்கையென்றாலும் வைரங்களே ஜொலித்து நிற்கும். வெறும் கண்ணாடிகள் வெப்பம் உமிழ்ந்து உலர்ந்து காய்ந்து காலாவதியாகிவிடும்.

icf சந்துரு

பிரஸ் காலனி, கோவை-19

***

சதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள்
இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்
பிறிதொன்று கூறல்
முந்தைய கட்டுரைகுழந்தைகளும் நாமும் – கடிதம்
அடுத்த கட்டுரைசுவாமி சகஜானந்தர்- ஸ்டாலின் ராஜாங்கம்