பூனைக்கும் நாய்க்கும் ஏன் ஆவதேயில்லை? பூனை மகிழ்ச்சியாக இருந்தால் வாலை செங்குத்தாகத் தூக்கும். நாய் அப்படித்தூக்கினால் அதற்கு கொலைவெறி என்று பொருள். நாய் மகிழ்ச்சியாக இருந்தால் வாலை பக்கவாட்டில் ஆட்டும். பூனை அப்படி ஆட்டினால் பாயப்போகிறது என்று பொருள். மொழிக்குழப்பம்.
இதுதான் நெல்லைக்கு மேலே உள்ள தமிழ்நாட்டுக்கும் குமரிமாவட்டத்துக்கும் உள்ள வேறுபாடு. மலைகளால் சூழப்பட்ட எங்கள் நிலத்தில் எங்களுக்கு மட்டுமேயான நிறைய சொற்கள் உண்டு. இதற்குமேல் மலையாளச் சொற்களை தமிழுக்கும் தமிழ்ச் சொற்களை மலையாளத்துக்கும் கொண்டுபோய் கலந்துபேசுவோம். ஆகவே பிறர் எங்களைப் புரிந்துகொள்வது கஷ்டம். நாங்கள் பிறரைப் புரிந்துகொள்வது அவர்களுக்குக் கஷ்டம்.
எங்கள் பக்கம் ‘வண்ணம்’ என்றால் குண்டு என்று பொருள். மலையாள அர்த்தம் அது. ”பெண்ணு கொறெ வண்ணம் கூடுதலு கேட்டியா? நல்லா தின்னு கெடக்கா”. ஆகவே ”வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகே வந்தாள்” போன்ற வரிகளை எல்லாம் நாங்கள் சொந்தமாக புரிந்து வைத்திருக்கும் விதமே வேறு. ‘கைவண்ணம் அங்கே கண்டேன் கால்வண்ணம் இங்கே கண்டேன்” என்நும் வரிகளைக் கேட்டு தென்குமரி மக்கள் உபரியான கிளர்ச்சி கொள்வதற்குக் காரணம் இதுதான்.
அருண்மொழி கல்யாணமாகி வந்தபோது என் தங்கைவீட்டில் தங்கினோம். ” உணங்குத துணிய எடுத்து வை அருணா ”என்றாள் விஜி. ”மடிச்சு வைக்கட்டா?”என்றாள் இவள்.விஜிக்கு கோபம் வந்துவிட்டது ”என்னத்துக்கு மடிக்கணும்? நம்ம ஜோலிய மடி இல்லாம நாமள்லா செய்யணும்?” மடி என்றால் சோம்பல் என்று நான் இவளுக்கு விளக்கினேன்.
இந்த மலையாள ஊடுருவலே பெரும் சிக்கல். ‘அச்சி ‘ என்றால் வைப்பாட்டி. ‘கண்ணகி ஒரு தமிழச்சி ‘ என்று வாசித்துவிட்டு எங்களூர் வாசகர் கேட்டார் ”மாதவிதானே கோவலனுக்கு அச்சி? இவ கெட்டின பொஞ்சாதியில்லா?”. சொல்லிப்புரியவைப்பது கஷ்டம்.
இதைத்தவிர எங்களுக்கே உரித்தான சொற்கள். இங்கே வேலைக்கு வரும் ஆசிரியர்கள் முள்மேல் நடப்பதுபோல கவனமாக இருக்கவேண்டும். நான் எட்டாம் வகுப்பு படித்தபோது செல்வி என்று ஒரு ஆசிரியை தமிழ் இலக்கணம் பயிற்றுவித்தார். பாடத்தில் வௌவுதல்= பறித்தல் ஆகவே வௌ = பறி என்று ஒரு வரி. ஆசிரியை போர்டில் எழுதி ”வௌ என்ன அர்த்தம்? பறி”’ என்று நடத்த வகுப்பில் ஒரே சிரிப்பு. பெண்கள் வாய்பொத்தி தலைகுனிந்து கண்கள் ஒளிர குலுங்கினர். பறி என்றால் எங்களூரில் ஆண்குறி.
”வௌ, என்ன அர்த்தம் நாகம்மை சொல்லு…” நாகம்மை எழுந்து தலைகுனிந்து நிற்க ”என்ன சிரிப்பு? சைலேன்ஸ்” என்று சீறிய ஆசிரியை ”செல்லம்மா சொல்லு”என்று மொத்த பெண்வரிசையையும் எழுந்து நிற்க வைத்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ”எம்.கணேசன் சொல்லு…” அவன் எழுந்து உச்ச குரலில் ‘பறி!பறி டீச்சர்” என்று சொல்ல வகுப்பே தௌசண்ட் வாலா போல வெடிக்க ஆசிரியை குழம்பி கண்ணீர் மல்கினார்.
நாங்கள் அக்கலைச்சொல்லை உடனே கையாள ஆரம்பித்தோம். ”லே மக்கா எனக்க கிட்ட களிக்காதே கேட்டியா? வௌவிலே சவுட்டிப்போடுவேன்”என்ற மட்டில் வசனங்கள். ”அவனுக்க வௌவிலே வைல ஒண்ணு”என்னும் ஆவேசங்கள். ‘பறியிலே சொறியிருந்தால் பாகமான மருந்தைக்கேளு’ என்பதுபோன்ற பழம்பாடல்களை வௌவாக மாற்றி எதுகை அமைக்கும் புலமைத்திறன்விளக்கங்கள்…
ஆசிரியை அன்றே விசாரித்து அறிந்திருப்பார் போல. மறுநாள் வகுப்பில் அந்த வரியை தவளைபோல தாவிச்சென்றார். கழுத்து இறுக்கமாக இருந்தது. பெண்கள் பாதிப்பேர் அப்போதும் சிரித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
இதே கதை திருப்பியும் நடக்கும். குமாரசாமியின் காலில் தடி விழுந்தது.”என்னன்லே விழுந்தது?”என்ற ராஜம்மாள் டீச்சரின் கேள்விக்கு ”பனங்காதல் டீச்சர்” என்றான் அவன் பனையின் உள்ளே உள்ள கருந்தடி என்று பொருள். அவனை அடித்தே தலைமையாசிரியரின் அறைவரை தள்ளிச்சென்றார் கற்பரசி.
எங்களூரில் தூறல் என்று சொன்னால் முகம் சுளிப்பார்கள். பேதி என்று பொருள். ஆகவே ‘கெ.பாக்யராஜின் தூறல் நின்னுபோச்சு’ என்ற வண்ணச்சுவரொட்டி வாசகத்தைப்பார்த்து எங்களூர் கோலப்ப பிள்ளை ”இத ஒரு வலிய காரியமுண்ணு அடிச்சு ஒட்டியிருக்கானே….காலம் கெட்டுல்லா போச்சு” என்று அங்கலாய்த்ததை புரிந்துகொள்ள வேண்டும்.
குமரிமாவட்டத்தமிழுக்கு ‘மெட்டு’ ஈழத்தமிழ் போலிருக்கும். என்னுடன் ஒருமுறை ஈழ வாசக நண்பர் ஆர்.டி.குலசிங்கம் பேருந்தில் சென்னையிலிருந்து நாகர்கோயில்வந்தார். அவர் என்னிடம் பேசிக் கோண்டிருந்ததைக் கேட்டு ஒரு மஞ்சாலுமூட்டுக்காரர் வந்து ”கொலசேகரத்துல மளையில வாளைக்கு நல்ல சேதம்ணு டிவியில சொன்னானே வே … கேட்டுதா…?”என்று சொந்தமாக பேசத்தலைப்பட்டார்
ஆனால் ஈழத்தமிழுக்கும் எங்களுக்கும் அலைகடலின் இடைவெளி. எனக்கு விசர், முசுப்பாத்தி போன்றவறை தாங்கிக் கொள்ள முடியும்.’வந்தனான்’ ‘கேட்டனான்’ என்ற சொல்லாட்சி எப்போதுமே குழப்பம். நண்பர் சுமதி ரூபனிடம் கேட்டேன், ‘பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத்துடித்தேன்’ பாடலை ஈழத்தில் எப்படி பாடுகிறார்கள் என.
மொழி வேறுபாடு கலாச்சார பழக்க மாறுபாடுகளாக மாறுகிறது. குமரியில் நாங்கள் யாரையும் ”வாங்க வாங்க வாங்க! எப்ப? ஏது இந்தப்பக்கம் காணுறதே இல்ல? இப்பதான் வழிதெரிஞ்சுதா? ” என்றெல்லாம் வரவேற்பதில்லை. ஒரு புன்னகையுடன் சரி. அதே புன்னகை கிளம்பும்போதும் கிடைக்கும். வந்ததுமே ”சாய குடிக்கேளா காப்பியா?” என்று கேட்டால் சிந்திக்க வேண்டும். சாயா என்றால் டீ. காப்பி என்று சொன்னால் டிபன். நாலுதோசை டீ குடித்து எழுதலுக்குப் பெயர் காப்பிகுடித்தல்.
கலாச்சாரக் குளறுபடி பல புரிந்தல்பிழைகளுக்கு இட்டுச்செல்கிறது. பல பிழைகள் நாற்பது ஐம்பதுவருடங்களாக அப்படியே தொடர்கின்றன. டீக்கடையில் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் சினிமாப்பாடல்கள் விஷயம். ”என்னா பாட்டு எழுதுகானுகோ? சக்கரவள்ளிகெழங்கு சமைஞ்சுதா? ஊசிபோல ஒடம்பிருந்தா நூலு வேண்டாம்…. மயிரப்பிடுங்கினானுக… பிள்ளை குட்டிகளோட இருந்து கேக்கப்பளுதுண்டா? விருத்திகேடு”என்றார் நமச்சிவாயம்பிள்ளை
”உள்ளதாக்கும் அண்ணா… இருந்து கேக்கப்பளுதில்ல” என்றான் வேலப்பன் ”பின்ன ஒரு உபகாரம், சோலி மெனக்கெட்டு கேக்கணும்ணு கேட்டா மட்டும்தான் பாட்டு கேக்கும். மத்தமாதிரி வெறும் கொட்டுச்சத்தம்தான்”
நாராயணன் ”…இப்பம் இல்லடே மச்சினா அந்தக்காலத்திலேயே இந்த பாட்டு கட்டுத பரதேசிப்பயக்க விருத்திகேடுதான் எளுதிவச்சிருக்காவ” என்றார்.
”அந்தக்காலத்திலே என்ன எழுதிட்டாங்க?”என்றேன். அதற்குள் கண்ணதாசன், வாலியின் பல வைர வரிகள் வழியாக மனம் கடந்துசென்றதனால் நான் நாணி முகம் சிவந்துவிட்டேன்.
நாராயணன் குரல் தாழ்த்தி திருடவரும் நாய் போல பார்வை சரித்துப் பார்த்து ”…பொம்பிளையாளுக வெளிக்குப்போறதப்பத்தியெல்லாம் பாட்டு எழுதியிருக்கானுக சார்” என்றார்
நான் அதிர்ந்து ”யாரு?” என்றேன். என்னால் முத்துக்குமாரை நம்பினாலும் பா.விஜய்யை நம்ப முடியவில்லை. ”…இப்ப உள்ள சின்னப்பயக்க எவனாம் எழுதியிருப்பானுக”
”இப்ப இல்ல சார் பத்து முப்பதுவருசம் முன்னதான்…”
”அப்டி ஒரு பாட்டா?”
”ஆமா சார்”
என்னால் கொஞ்ச நேரம் சிந்தனையை அசைக்க முடியவில்லை. சுதாரித்து ”என்ன பாட்டு?”என்றேன்
நாராயணன் குரலை தாழ்த்தி எனக்கு மட்டும் கேட்கும்படியாக ”ஏரிக்கரை மேலே ‘போறவளே’ பொன்னுரங்கம்னு ஒரு பாட்டு சார்…” என்றார்
நான் சிரிக்கமுடியாதபடி ஆகியிருந்தேன். உண்மைதான் ஏரிக்கரைக்கு பெண்கள் வேறு எதற்காக வேலைமெனக்கெட்டு போகவேண்டும்? மேலும் நாஞ்சில்நாட்டில் போறது என்றாலே பெரும்பாலும் ஒரே அர்த்தம்தான்
இரண்டுநாள் கழித்துத்தான் என்னால் சிரிக்க முடிந்தது. உடனே நாஞ்சில் நாடனை போனில் கூப்பிட்டேன். நடந்த கதையைச் சொன்னேன்.
தீவிரமான குரலில் நாஞ்சில்நாடன் சொன்னார். ”நம்மள மாதிரி விஷயம் தெரிஞ்சவங்க அதுக்கு பொயட்டிக்கா அர்த்தம் குடுத்து எடுக்கலாம் ஜெயமோகன்.நமக்கு கவிதை வாசிக்குத ஒரு பழக்கம் இருக்கு…. சாதாரண ஆளு என்ன செய்வான்? உள்ள அர்த்தத்த அப்டியேதானே எடுத்துகிடுவான்?”
குமரி மாவட்டத்தில் உள்ள தொன்மையான கல்வெட்டு என்றால் சிதறால் மலையில் உள்ள குறத்தியறையாரின் கல்வெட்டுதான். அது அங்கிருந்த சமணப்பள்ளிக்கு அரசி குறத்தியறையார் அளித்த பொருட்கொடை குறித்தது. வட்டெழுத்தில் அமைந்தது. அதை கைதொட்டு சரளமாக “வாசித்த” நண்பர் இப்படி ஒலித்தார்
“என்னாண்ணு சென்னா இப்பம் இங்கிண இருக்கப்பட்ட சமண மொட்டையளுக்கு ஆளுக்கு தின்னியதுக்கும் பின்ன வல்லதும் மோந்தியதுக்கும் உண்டானப்பட்ட பைதாவ நான் , எண்ணுவச்சா நாஞ்சில்குறவனுக்க கெட்டினவ குறத்தியறையாரு, எனக்க கையிலேந்து குடுக்கியதாட்டு சம்மதிச்சு எளுதியுண்டாக்கின கல்லாக்கும் இது. இதில வல்ல பட்டியும் காலுபொக்கி நீரடிச்சா பேயாட்டு வந்து கம்புல பிடிப்பேன் கேட்டுக்கிடுங்க. மாறி நில்லுலே எரப்பாளி, போட்டோம் புடிக்கான் பாரு. அவனுக்க அம்மைக்க போட்டோ”
மறு பிரசுரம் / முதற்பிரசுரம் Apr 24, 2010